அன்புள்ள ஜெ ,
கொஞ்ச கால இடைவேlளைக்குப்பின் விமர்சகர் ஜெயமோகனை பார்க்க முடித்தது. இரண்டாயிரத்துக்கு பின் நாவல் ஒரு குறிப்பிடத்தகுந்த உரை. உங்களது இவ்வளவு பணிகளுக்கிடையிலும் இவ்வளவு படைப்புகளை உள்வாங்கி அவற்றை இனம் பிரித்து அடிப்படை ஒருமையைக் சுட்டிகாட்டியுள்ளது, மிகுந்த வியப்பை அளிக்கிறது. சமீபத்திய தமிழ் நாவல்களின் வரிசையும் ஒரு தர அடிப்படையிலான தேர்வை காட்டுகிறது.
தனிப்பட்ட முறையில் நிழலின் தனிமை மற்றும் மிளிர்கல் ஆகிய நாவல்கள் உங்கள் பார்வையில் முக்கியமானதாக இருப்பது எனக்கு ஒரு நிறைவைத் தந்தது. நிழலின் தனிமை ஒரு அதன் அனைத்துக் குறைகளுடனும் ஒரு குறிப்பிடத்தகுந்த படைப்பு. அதைப் பற்றி நானும் நண்பர் (ஸ்டீல்ஸ்) சிவாவும், நிறையப் பேசியதுண்டு. அதைப போலவே மிளிர் கல்லும் இதுவரை தமிழ் நாவல்கள் அதிகம் தொடாத ஒரு பகுதியை விவரித்து நல்ல சுவாரசியமான நடையில் எழுதப் பட்ட ஒன்று, இந்நாவல் குறித்த ஒரு பதிவினை நான் ஒரு இணையப் பத்திரிகையில் எழுதியிருந்தேன். இங்கு அந்நாவல் ஒரு வரலாற்றைத் தொன்மமாக்குகிறது என்ற உங்கள் வரி எனக்குப் புரியவில்லை. சற்று விளக்க முடியுமா?
மேலும் பாழி மற்றும் தாண்டவராயன் கதை ,இந்த இரு நாவல்களையும் படிப்பதை நான் மிகுந்த கடின முயற்சிக்குப் பின் பாதியில் கைவிட்டேன். அதானாலேயே பிதிரா பக்கமே போகவில்லை. உண்மையிலேயே
கோணங்கி மற்றும் அவரது வகையிலான நாவல்களை வாசிக்க என்னதான் வழி? நேரமிருப்பின் பதில் அளிக்கவும்.
சுரேஷ் கோவை
அன்புள்ள சுரேஷ்,
என் வாசிப்புலகை தனியாகவே வைத்திருக்கிறேன். அது நான் எழுதும் உலகுடன் தொடர்புள்ளது அல்ல. விமர்சகனாக என் பணியை குறைத்துக்கொள்ளவேண்டும் என எண்ணுவதுண்டு. ஆனால் அவ்வப்போது இப்படி சில பணிகள் வந்துவிடும்
இந்தக்கட்டுரையில் ‘இப்படி பார்க்கலாமே’ என ஒரு கோணத்தை மட்டுமே அறிமுகம் செய்திருக்கிறேன்.சமகால புனைவுலகை நுணுகி அறிய இப்படி பல கோணங்களில் பார்த்துத் தொகுத்துக்கொள்வது உதவும் என்பதனால். படைப்புகளைப்பற்றி தனித்தனியான விமர்சனத்தையும் மதிப்பீட்டையும் பிறகு எப்போதுதான் எழுதவேண்டும்
ஜெ