அன்புள்ள ஜெ,
கடினமான , சிக்கலான நாவலாக நீங்கள் உட்பட பலர் நினைக்கும் விஷ்ணுபுரத்தை படிக்கும் போது, அதன் பாத்திரங்களுடன் வாசகர்கள் அடையாளப்படுத்திகொள்ள முடிகிறது.. ஈடுபாட்டுடன் படிக்க முடிகிறது…
ஆனால் எளிய நாவல் என கருதப்படும் ரப்பர் போன்றவற்றை படிக்கும் போது அதனுடன் அடையாளப்படுத்திக் கொள்ள முடியவில்லை ( நான் அந்த பகுதியை சார்ந்தவன் அல்ல என்பதால் இருக்கலாம் ) சிறப்பான நாவல் என்ற போதிலும் பின் தொடரும் நாவலின் குரலுடனும் ஒன்ற முடியவில்லை ( நான் சோவியத் யூனியன் ரசிகன் என்பதால் இருக்கலாம் ) .. வேறு நாவல்களிலும் இதை போல சொல்ல முடியும்…
ஆனால்,வேறு சிலரை கேட்ட போது, அவர்களும் விஷ்ணுபுரத்தைத்தான் அதில் ஆழ்ந்து படிக்க முடிகிறது என்றார்கள்…( சமகாலத்தில் நடக்கும் கதைகளன் கொண்ட நாவல்களை விட … )
எனக்கு இது விநோதமாக தோன்றியது… சமகாலத்தில் நடக்கும் நாவலை விட , தத்துவ நாவலில் தங்களை அடையாளப் படுத்திக் கொள்ளும் தன்மை எப்படி ஏற்படுகிறது?
இப்படி ஒரு நிலை இருப்பது தங்களுக்கு தெரியுமா ?
அன்புள்ள ரவி
நாம் எப்படி இலக்கியப்படைப்புகளுடன் நம்மை அடையாளப்படுத்திக்கொள்கிறோம்? நாம் வாழும் அன்றாட யாதார்த்தம் அதில் இருப்பதனால் என்றுதான் முதலில் தோன்றுகிறது. ஆனால் அது உண்மையல்ல. நம் அன்றாட யதார்த்தம் ‘அப்படியே’ ஓர் இலக்கிய ஆக்கத்தில் இருந்தால் நமக்கு அது பெரும் சலிப்பையே ஊட்டும். அந்த யதார்த்தத்தை மீறவே நாம் வாசிக்கிறோம்.
யோசித்துப்பாருங்கள், நம்மை சலிப்பில் ஆழ்த்திய எழுத்துக்கள் எப்படிப்பட்டவை. அவை சற்றும் கற்பனை இல்லாமல் ‘அப்படியே’ அனுபவத்தை பதிவுசெய்ய முயன்றவை. சில்லறை எழுத்தாளர்கள் எப்போதும் தங்கள் அனுபவங்களை, தாங்கள் அறிந்தவற்றை நேராக எழுதிக்கொண்டிருப்பார்கள். இலக்கியப்படைப்பாளிகள் புதிய உலகை உருவாக்கிக் காட்டுவார்கள்
அன்றாட யதார்த்தம் என்பது செறிவற்றது, உள்ளார்ந்த ஒருமை இல்லாதது, ஆகவே அர்த்தம் அற்றது. இலக்கியப்படைப்பு அந்த யதார்த்தத்தை செறிவுபடுத்துகிறது. நிகழ்வுகளுக்கு உள்ளார்ந்த ஒருமையை உருவாக்கி காட்டுகிறது. அதன்மூலம் அர்த்த உருவாக்கத்தை நிகழ்த்துகிறது. அன்றாட யதார்த்தத்தில் இருந்து தப்பி அந்த செறிவான, ஒருமை உள்ள, அர்த்தபூர்வமான யதார்த்தத்துக்குள் செல்லவே நாம் இலக்கிய ஆக்கங்களை வாசிக்கிறோம்.
அந்த யதார்த்தம் என்பது புனைவுயதார்த்தம். புனைவு யதார்த்தம் அன்றாட யதார்த்தம் போல இருப்பதென்பது ஒரு தோற்றமே. அதாவது நாம் வாசிக்கும்போது இது உண்மை என அந்த ஆசிரியனால் திறமையாக நம்ப வைக்கப்படுகிறோம். நுண்ணிய தகவல்களை அளிப்பது, கொஞ்சம் மட்டும் சொல்லி நிறைய கற்பனை செய்ய வைப்பது, அன்றாட யதார்த்தத்தின் தகவல்களை புனைவுடன் கலந்துவிடுவது என அதற்கு இலக்கிய ஆசிரியர்கள் கைக்கொள்ளும் உத்திகள் ஏராளமானவை. வட்டார வழக்கு போன்றவையும் அவ்வாறு நம்பவைக்கும் உத்திகள் மட்டுமே.
ஆகவே புனைவுயதார்த்தம் என்று பார்த்தால் அன்றாட யதார்த்ததுக்கு நெருக்கமாக உள்ள ‘கன்யாகுமரி’க்கும் முற்றிலும் கற்பனைவெளியான ‘விஷ்ணுபுர’த்துக்கும் பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை. கன்யாகுமரி உண்மையில் உள்ள ஒரு இடத்தில் சமகாலத்தில் கதை நிகழ்வது போல புனைந்து காட்டுகிறது. விஷ்ணுபுரம் கற்பனையான இடத்தையும் காலத்தையும் புனைந்து காட்டுகிறது, அவ்வளவுதான்
அந்த கற்பனையான இடம் உண்மையானது என்பதைக் காட்ட விஷ்ணுபுரம் பல நுண்ணிய உத்திகளை காட்டுகிறது. ஒன்று அந்நகரின் துல்லியமான வரைபடம் அதில் உள்ளது. அதன் இயற்கையும் பருவகால மாற்றங்களும் உள்ளது. நுண்ணிய தகவல்கள் வந்தபடியே இருக்கின்றன- உதாரணமாக அதில் எத்தனை குட்டிக்குட்டி பிள்ளையார் கோயில்கள் இருக்கின்றன என்று பாருங்கள்.
அதைவிட முக்கியமான உத்தி அது அந்நகரை காட்சி வடிவமாக காட்ட முயல்கிறது என்பதே. காட்சிசார்ந்த விவரணைகள் வந்துகொண்டே இருக்கின்றன. ஒரு சிற்பம் கீழிருந்து பார்த்தால் எப்படி இருக்கும், மேலே நின்றால் எப்படி இருக்கும், தூரத்தில் எப்படி தெரியும், அண்மைக்குச் செல்லச் செல்ல எப்படி மாறும் என அது காட்டிக்கொண்டே இருக்கிறது. இந்த உத்தி காரணமாக கொஞ்சநேரத்தில் வாசகன் விஷ்ணுபுரத்தை ‘பார்க்க’ ஆரம்பித்துவிடுவான். இதுவும் நம்பவைக்கும் உத்தியே
ஆக உண்மையான யதார்த்த உலகுடன் உள்ள தொடர்பல்ல வாச்கனுக்கு படைப்புடன் உள்ள உறவை உருவாக்குவது. எந்த படைப்பும் புனைவுசார்ந்த நம்பகத்தன்மையை உருவாக்கத்தான் செய்கிறது. ஈடுபாடு என்பது அந்த படைப்பின் பேசுபொருள், அது முன்வைக்கப்பட்டிருக்கும் விதம் இரண்டையும் சார்ந்தது. சிலபக்கங்களிலேயே ஓர் இலக்கிய ஆக்கம் எதைப்பற்றிபேசுகிறது என்பது நம்மை வந்தடைகிறது. அதன் பின் அந்த பேசுபொருளே நம்மை ஈர்க்கிறது. மேலே கொண்டுசெல்கிறது
‘பின் தொடரும் நிழலின் குரல்’ அறத்துக்கும் அதிகாரத்துக்கும் இடையேயான உறவைப்பற்றிப் பேசும் அரசியல் நாவல். அந்த நாவலின் அடிப்படைப்பிரச்சினை ஏதோ ஒருவகையில் தன் வாழ்க்கையில் சந்தித்திருக்கும் ஒரு வாசகரை அது ஈர்த்து கொண்டுசெல்கிறது. அந்த வினாவுக்குள் செல்லாத ஒருவருக்கு அது அன்னியமாக இருக்கக் கூடும். அதேபோல கன்யாகுமரி ஒழுக்கத்தின் பொருத்தப்பாடு பற்றி பேசுகிறது.
விஷ்ணுபுரம் ஒப்புநோக்க அதிகமான பேரைச் சென்றடைந்த ஆக்கம். என் ஆக்கங்களில் நான் மிகச்சிறப்பானதாக எண்ணுவது கொற்றவை. ஆனால் அதிகம் பேர் விரும்புவது விஷ்ணுபுரத்தைத்தான். அதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. நாம் அனைவருமே கோயில்களின் சூழலில் பிறந்து வளர்ந்தவர்கள். நம் இறந்தகாலத்தின் சின்னங்களாக கண்முன் எழுந்து நிற்கின்றன அவை.
நம் இறந்தகாலமே நம்முடைய நிகழ்காலத்தின் பல உணர்ச்சிகளை தீர்மானிக்கிறது என்று நாம் அறிகிறோம். நம்முள் இருந்து நம்மை ஆட்டிவைக்கும் அந்த காலம் எத்தகையது, அந்த காலகட்டத்தை தீர்மானித்த உணர்ச்சிகளும் தேடல்களும் என்னென்ன என்ற வினாவை நம்மில் பெரும்பாலானவர்கள் ஆழ்மனதில் கொண்டிருக்கிறார்கள். அந்த சென்றகால உலகை கற்பனைமூலம் சென்று பார்க்கச்செய்கிறது விஷ்ணுபுரம். அதுவே அதன் ஈர்ப்புக்குக் காரணம்
அதாவது இயல்பாகவே விஷ்ணுபுரத்தின் பேசுபொருள் சார்ந்த ஆர்வம் நம்மில் பெரும்பாலானவர்களிடம் இருக்கிறது. மதமே நம் வாழ்க்கைமுறைகளையும் தத்துவத்தையும் ஆழ்படிமங்களையும் உருவாக்கும் விதைநிலம். மதம் சார்ந்து பேசும் விஷ்ணுபுரத்தின் ஈர்ப்புக்குக் காரணம் அதுவே. அந்த முக்கியத்துவம் நம்முள் அரசியலுக்கோ பிறவற்றுக்கோ இல்லை.
ஜெ
விஷ்ணுபுரம்,விவாதம் http://www.jeyamohan.in/?p=7299