கி ரா உடன் ஒரு மாலை….

IMG-20150316-WA0003

இனிய ஜெயம்,

காலம் இதழுக்காக கிரா அவர்களை சந்திக்கவேண்டிய இனிய தருணம் ஒன்று மீண்டும் வாய்த்தது. காலம் இதழுக்காக அவர் வசம் ஒரு கட்டுரை கேட்டிருந்தேன். மாலை ஐந்தரை மணிக்கு வர சொல்லி நேரம் ஒதுக்கித் தந்தார்.

நானும் சிவாத்மாவும் சென்று கதவை தட்டியபோது, உள்ளிருந்து கிராவின் குரல் ‘லேது லேது’ என்று எதையோ மறுத்துக் கொண்டிருந்தது. எதோ ராகத்தை ஆலாபித்தபடியே வந்து கதவை திறந்தார்.

”ஐந்தரைக்கு வரேன்னு சொல்லிட்டு இப்படி ஐந்தே காலுக்கே வந்தால் எப்படி? நான் வாசிக்கறது எழுதறது ரெண்டுலயும் மெது நடைககாரன். நீங்க இருந்தா எழுத ஓடாது. ஆரு மணிக்கு வந்துடுங்களேன் கட்டுரை தயாரா இருக்கும்” என்றார் நரை மீசை எல்லை கட்டிய புன்னகையுடன். கரிசல் நைனாவுக்கு மீசை கொள்ளை அழகு.

ஆறு மணிக்கு மீண்டும் இல்லம் புகுந்தோம். சிறிய வரவேற்பறை. அலமாரியில் வித விதமான விருதுக் கேடயங்கள். மேலே. இளையராஜா உடனான கிராவின் சட்டமிட்ட புகைப்படம். அலமாரியும் சுவரும் சந்திக்கும் மூலையில். சிறிய உலக்கை. இல்லை இல்லை. அந்த அளவு வடிவில் பிரும்மாண்ட பேனா. எதோ விழாவில் கீராவுககான விருது. நான் இதையும் தாங்குவேன் இதுக்கு மேலயும் தாங்குவேன் எனும் தோரணையுடன் , அறைக்குள்ளிருந்து வெளிவந்து வரவேற்றார் கிரா.

”எனக்கு கோயில்பட்டில மாரிஸ்னு ஒரு நண்பர் உண்டு. நீங்க அவர மாதிரி இருக்கீங்க” என்றார் அமர்ந்தபடி.

நான் ”நேத்து ஜெயமோகன் என்னைப்பாத்தா ராஜ மார்த்தாண்டன் மாதிரி இருக்கு அப்டினார்”

அவர் ” குடுத்து வச்சவர் நீங்க ஒவ்வொரு எழுத்தாளருக்கும் ஒவ்வொரு மாதிரி தெரியிறீங்க ”

சிரிப்புடன் உரையாடல் துவங்கியது.

நேற்றைய உப்பு வேலி விழா ராய் வருகை, துவங்கி நாலு ஆட்டின் புதூர் வரை அனைத்தையும் சொல்லி முடித்தேன். கவனம் குவித்து கேட்டவர் ” ஏன் ….வெள்ளைக்காரன் நிலத்த சுத்தி கடலுதாம். பெறவு இங்க இருந்து ஏன் உப்ப கொள்ள அடிச்சான்? ” என்று வினவ, நான் என் பரம்பரை வழக்கப்படி திற்கா பிர்க்கா என விழித்தேன். புன்னகையோடு தொடர்ந்தார் ” ஏன்னா வெயிலு இங்கதான் அடிக்கிது. உப்பு இங்கதான் வெளையும். இங்க ஐஸு எப்படி கிடையாதோ, அப்டி அங்க உப்பு கிடையாது.” தொடர்ந்தவர் ” ஆண் பாத்தில தண்ணி செந்தி … பெண் பாத்திக்கு வடிய விடுவாங்க. பெண் பாத்திலதான் உப்பு பூக்கும்” என தொட்டு தொட்டு உப்பள வாழ்வின் தனித்தன்மைகளை விவசாயம் போலவே சொல்லிக்கொண்டு போனார்,

இடை புகுந்த திருமதி கிராவின் கையிலிருந்த காப்பிக் கோப்பைகளை காவியபடி உரையாடலை தொடர்ந்தோம்.

”எழுத்தாளன் கை நடுங்காத வர எழுதலாம். என்னப் போல கதை சொல்லி , சொல்றத ரெக்காட் பண்ணி எழுதிக்கலாம். பாடகந்தான் பாவம். பாடகனுக்கு குரல் போறது இருக்கே, ஓட்ட வீரன் கால் விளங்காம போறது மாதிரி” இயல்பாக கிட்டப்பா காலத்திற்குள் நுழைந்தார். நாங்கள் உள் நுழைகையில்; அவர் ராகமாக முணுமுணுத்துக் கொண்டிருந்தது ராதே உனக்கு கோபம் ஆகாதடி.

” ஒரு முறை வார வழில எதோ கச்சேரி. குரல் சுண்டி இழுக்குது. தியாகராஜ பாகவதர் ரொம்ப பாப்புலர் இல்லையா… உள்ள நுழைஞ்சா கூட்டம் சலசலத்து பாட்டு தடை படும். ஆக ஒரு ஓரமா நின்னு ரசிச்சார். கச்சேரி தேனா இருந்தது. முடிஞ்சதும், உள்ள நுழைஞ்சார். அட பாகவதர் … பாகவதர் அப்டின்னு ஒரே பரபரப்பு. பாகவதர் நேர மேடை ஏறி, …… நீங்க நினைக்கிற மாதரி அந்தக் காலம் இல்ல. அப்பல்லாம் நல்லா பாடுரவனக் கண்டா, வயசு பாக்காம கால்ல விளுவாங்க… அப்டி ஒரு காலம். இருக்கமா பாடகர கெட்டிப் பிடிச்சுக்கிட்டார். அந்தக் கச்சேரி வழியா எல்லாருக்கும் தெரிஞ்சவர் ஆனவர்தான் கிட்டப்பா”’

” கிட்டப்பா சரிஞ்சதுக்கு பல காரணங்கள். குறிப்பா குடி. சாராயம் ஊறி ஊறி உள்ள பூரா வெந்து போச்சி. எல்லாத்துக்கும் மேல கொரல் போச்சி … ப்ச்… ஆனா எம் எஸ்சுக்கு அப்படி ஆகல. கடேசி வார மேடைல கம்பீரமாத்தான் ஒக்காந்தா.அனுக்கிரகம் உள்ளவ அவ. அதுல ஒரு கத இருக்கு. சில குறிப்பிட்ட ராகங்கள் இருக்கு. மேடைல எம் எஸ் அத தொட்டா, மித்த பாடகங்க எல்லாம் அவளுக்கு கீழதான். ஆரம்ப காலத்து பாடல்கள் மாதிரி எம் எஸ் பிற்காலத்து ரெக்காடுங்க அமையல. காரணம் என்னன்னு கேட்டா… எல்லா பாடகங்களும் கூடி அவ கிட்ட இன்னின்னின்ன ராகங்கள நீ மேடைல பாடுனா, இனிமே நீ மேடையே ஏற முடியாத மாதிரி பண்ணிடுவோம்னு மிரட்டிட்டாங்கன்னு ஒரு பேச்சு உண்டு. .. உண்மையா இருந்தா இது மிகை. பொய்யா இருந்தா இது ஒரு நல்ல கதை இல்லையா ?” புன்னகைத்தவர் முகம் குவிந்து எதோ சிந்தனையில் ஆழ்ந்தார்.

” கொஞ்ச நாள் முந்தி ஒரு தொடர் எழுதினேன். வேதபுரத்தார்க்கு நல்ல குறி சொல்லு அப்டின்னு தலைப்பு. அதுல கிட்டப்பா கம்பீரத்தப் பத்தில்லாம் எழுதிருக்கேன். அதப் படிச்சிட்டு ஒரு பொண்ணு போன் போட்டு தழுதழுக்க பேசினா. சினிமால கோரஸ் பாடுற க்ரூப்புல ஒருத்தி அந்தப் பொண்ணு. ஏம்மா அந்தக் கட்டுரை உனக்கு அவ்ளோ பிடிச்சதுன்னு கேட்டேன். அவா சொன்னா அந்தக் கிட்டப்பா பேத்திதான் நான்…. பாத்தீங்களா காலத்த?”

சட்டென்று உத்வேகம் அடைந்து சொன்னார் ” அப்போ கிட்டப்பாவ மொதோ மொதோ பாத்தப்ப பாகவதர் என்ன சந்தோஷப்பட்டாரோ அதே நான் மொதோ மொறையா ஜெயமோகனோட ரப்பர் நாவலப் படிச்சப்ப அனுபவிச்சேன். கமிட்டில இருந்த நான் அந்த நாவல பரிசுக்கான நாவலா தேர்ந்தெடுத்தேன்”

திரும்புகையில் முகம் எல்லாம் புன்னகையில் மலர கிரா சொன்னதையே மனனம் செய்தபடி பயணித்தேன்.

கிரா குரலை தாழ்த்தி வசீகரிக்கும் குழந்தைப் புன்னகையுடன் சொன்னார் ” நெசத்துல பாத்தா ஆழகுல,கம்பீரத்துல, குரல்ல, பாவத்துல எல்லா நிலைலையும் பாகவதர மிஞ்சுன ஆளு கிட்டப்பாதான் . பாகவதர் வழியா கிட்டப்பா ஊரோட கவனத்துக்கு வந்தது ,,,,,,, வேறென்ன விதி … அவ்ளோதாம்”

முந்தைய கட்டுரைமின் தமிழ் பேட்டி 3
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 51