அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு ,
நான் உங்களுடைய “இன்றைய காந்தி ” படைப்பை தான் முதலில் வாசித்தேன் , சில மாதங்களுக்கு முன் எங்கள் நண்பரின் நினைவாக நாங்கள் நடத்தி வரும் ஒரு trust சார்பாக எங்கள் ஊரில் உள்ள நூலகத்திற்கு புத்தகம் வாங்கி கொடுக்கும் பொழுது இன்றைய காந்தி வாசிக்க நேர்ந்தது .அதன் பின்னர் சுமார் 6 மாதங்களாக உங்களை தொடர்ந்து வாசித்து வருகிறேன் .காந்தி அவர்களை பற்றிய ஒரு புரிதலுக்கு எனக்கு இது துணையாக இருந்தது
நான் ஒரு ஆயுர்வேத மருத்துவர் .எனக்கு உங்களிடம் இதை கேட்கணும் என்று தோன்றியதால் கேட்கிறேன்.ஆயுர்வேதம் நல்ல பழமையான மருத்துவ முறை .அதே போல் யோகமும் இந்திய கலாச்சாரத்தில் பழமையானது . ஒரு சாரார் பதஞ்சலி அவர்கள் தான் மறு பிறப்பாக சரக சம்ஹிதை இயற்றினார் என்று கூறுவதும் உண்டு .ஒரு பெரிய விந்தை என்னவென்றால் சரக ,சுஸ்ருத ,வாக் பட்ட முதல் 19 ம் நூற்றாண்டு வரை எழுத பட்ட எந்த படைப்பிலும் ஹட யோகம் ஆசன பிராணயாம மருத்துவ குணங்கள் பற்றி ஒரு வார்த்தை எழுத படவில்லை .இன்றைக்கு எல்லா நாடுகளிலுமே யோகா ஆசனங்களை ப்ரனயமத்தையும் ஆயுர்வேததுடன் இணைத்து நோய்களை குனபடுத்த பயன்படுத்துகின்றனர் . ஆயுர்வேதமும் யோகத்தை போலவே மொக்ஷதையே முழுமையான இலக்காக சொல்கிறது . தர்ம அர்த்த காம மோக்ஷ எனும் 4 புருஷர்தாங்களை அடைய ஆரோக்கியம் மூலம் என்று சொல்லுகிறது .இருந்தும் என் இந்த பழமையான 2 systems ஒரு நேர்கோட்டில் சந்திக்கவில்லை என்று புரியவில்லை .ஆனால் ஆசனங்களின் மருத்துவ மகிமை அந்த ஆசனத்தின் விவரிப்பில் கிடைக்கிறது . உலக வாழ்க்கைக்கு யோகம் / ஆசனம் தேவை இல்லை என்று பொருள் கொள்ளலாமா ?
மேலும் இன்றைய வணிகமயம் காரணமாக யம நியமங்கள் (அஷ்டாங்க யோகத்தின் முதல் 2 கட்டங்கள்) பின்பற்றதவர்களுகும் கற்று கொடுப்பது சரியா?
Suneelkrishnan
[email protected]
அன்புள்ள சுனில்,
பொதுவாக யோக முறைகளை யம நியமங்களை கடைப்பிடிக்காதவர்களுக்குச் சொல்லிக்கொடுப்பது என்பது பத்தியமில்லாமல் மருந்துண்பது போல. அது பலசமயம் வீண்வேலை. ஓயாத கடல்அலைகளுடன் போராடுவது. ஆனால் யோகம் தியானம் முதலியவை எளியமுறையில் உடலை சமனப்படுத்தவும் இளைப்பாற்றவும் உதவுகின்றன என்று சொல்கிறார்கள். யோகம் என்பது அடிபப்டையில் ஆயுர்வேதம்போல ஒரு மருத்துவ முறை அல்ல அது ஒரு அறிதல்முறை என்ற புரிதல் நமக்கு வேண்டும்
இந்த வினாவை நானே ஒருமுறை நித்யாவிடம் கேட்டது நினைவிருக்கிறது. பொதுவாக இந்திய மருத்துவ மரபை ஆராய்ந்து பார்ப்பவர்களுக்கு இது ஆச்சரியமளிக்கும் தொடக்க வினாவாக எழும். நமது மருத்துவநூல்களில் யோகாசனம்,பிராணயாமம் முதலியவை ஒரு சிகிழ்ச்சை முறையாகச் சொல்லப்படவில்லை. ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உரிய பயிற்சிகளாகவும் சொல்லப்படவில்லை. அவை ஆசனம்,பிராணயாமம் ஆகியவற்றைப் பற்றிப் பேசவே இல்லை.
இதற்கு இவ்வகை விளக்கங்கள். ஒன்று நித்யா சொன்னது. இன்னொன்று அப்போது அங்கிருந்த ஒர் ஆயுர்வேத வைத்தியர் சொன்னது. இரண்டும் இரண்டுவகைகளில் சரி என்றும், ஒன்றுடன் ஒன்று நுட்பமாக இணைந்து நிரப்பிக்கொள்பவை என்றும் நான் நினைக்கிறேன்
நித்யா சொன்னது இவை இரண்டும் முற்றிலும் மாறுபட்ட இரு சிந்தனையமைப்புகளைச் சார்ந்தவை என்றுதான். அவை இரு தனி ஓடைகளாகவே பதினெட்டாம் நூற்றாண்டு வரை ஒழுகி வந்திருக்கின்றன. நம் மரபின்படி ஆயுர்வேதம் வேதங்களின் ஒரு நீட்சியாக , அதாவது உபவேதமாக கருதப்பட்ட ஒன்று. அதாவது அது மையமரபாக அங்கீகரிக்கப்பட்டது.
நூல்களின்படி ஆயுர்வேதம் [மருத்துவக்கலை] தனுர்வேதம் [ஆயுதகலை] கந்தர்வ வேதம் [இசைக்கலை] காரண்யோபவேதம் [தர்க்க கலை] காமவேதம் [இன்பக்கலை] ஆகியவை உபவேதங்கள். சனக முனிவரின் ‘சக்ரானுவேஸம்’ ஆயுர்வேதத்துக்கும் பிரசேதஸின் ‘பிரவேசஸ்ரபிகாரம்’ தனுர்வேதத்துக்கும் நாரதரின் ‘ஸ்வரானுவாதம்’ கந்தர்வ வேதத்துக்கும் அஸ்வினீகுமாரரின் ‘சித்தாந்தோபன்னியாசம்’ காரண்யோபவேதத்துக்கும் புலஸ்த்ய முனிவரின் ‘தேஹிதானுபவம்’ காம வேதத்துக்கும் மூலநூல்கள் எனப்படுகிறது. இவற்றில் பல பெயர்மட்டுமே கிடைக்கும் நூல்கள்.இந்த வரிசையில் யோகம் இல்லை.
ஏனென்றால் யோகம் வேதத்தை மையமாக்கி தொகுக்கப்பட்ட மாபெரும் வைதிக ஞானமரபின் ஒரு பகுதி அல்ல என்பதே. அது அடிப்படையில் அவைதிக மரபான யோக தரிசனத்தின் ஒரு பகுதியாக பின்னாளில் வந்துசேர்ந்தது. சியமன முனிவரின் விருத்யார்ஜிதார்ணவம் என்ற நூல் யோகத்தின் மூலநூல் என்று குறிப்புள்ளது. ஆனால் அப்போது யோகம் என்பது ஒரு தரிசனம் மட்டுமே. ஒரு முறைமையாக இருக்கவில்லை.
யோகம் ஆரம்பத்தில் சாங்கிய தரிசனத்தின் ஒரு பகுதியாக இருந்தது. சாங்கியம் ஆரம்பத்தில் முற்றிலும் பொருள்முதல்வாத நோக்கு கொண்டிருந்தது. அதாவது ஜடவாத நோக்கு. யோக தரிசனத்தில் எப்போது யோகப்பயிற்சிகள் வந்து இணைந்துகொண்டன என்று சொல்ல முடிவதில்லை. அனேகமாக உபநிடதங்களின் காலகட்டத்தில் அது நிகழ்ந்திருக்கலாம்.
அதற்கும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே யோக முறைகள் இந்திய மண்ணில் நிலைபெற்றிருந்தன. சிந்துசமவெளியில் கிடைக்கும் முதல் சிற்பவடிவமே யோகத்தில் அமர்ந்த யோகாருட பசுபதி சின்னம்தான். தென்னகத்தின் முதற்பெரும் தெய்வமான தட்சிணாமூர்த்தி [தென்றிசைமுதல்வன்] யோகத்தில் அமர்ந்தவர்.
யோக தரிசனம் யோக முறைகளுடன் இணைந்தபின்னரே யோகம் என்ற பெயர் அதற்கு கிடைத்திருக்கலாம். யோகம் என்றால் இணைதல், ஒன்றாதல், கூடுதல். இணைதல் என்ற பொருளுள்ள யுஜ் என்ற வேர்ச்சொல்லின் வளர்ச்சி அது. சாங்கிய தரிசனத்தின்படி பிரபஞ்சப்பொருளில் சத்வம், ராஜஸம்,தமஸ் ஆகிய முக்குணங்களும் முழுச்சமநிலையில் இருந்த நிலையே ஆதி நிலை. அச்சமநிலை குலைந்து உருவான ஒரு தொடரியக்கமே இப்பிரபஞ்சம்.
ஆகவே பிரபஞ்ச நிகழ்வின் சாட்சியாக உள்ள பிரக்ஞை அல்லது தன்னிலை என்னும் புருஷன் தானும் அவ்வாறே பிரிந்து இன்றைய மானுட அகமாக உள்ளான். அவன் தன் பிரிவுண்ட சிதறுண்ட நிலையை அகற்றி முழுமையாக இணையும் நிலையே ஞான நிலை. அப்போது பிரபஞ்சத்தின் உண்மை நிலையையை அவன் அறிய முடியும். யோகப்பயிற்சிகள் மூலம் உத்தேசிக்கப்படுவது அதுவே.
பின்பு சாங்கியம் இறைநிலையை ஏற்றுக்கொண்டது. அது சேஸ்வர சாங்கியம் எனப்பட்டது. அப்போது யோகமும் இறைவனை ஏற்றுக்கொண்டது. யோகத்தின் இலக்கு இறைவனை அறிதல் என்றாயிற்று. ஆனால் யோகமரபின் முதல் நூலாக இன்று கிடைக்கும் பதஞ்சலி யோக சூத்திரம் முழுமையான பிரக்ஞை நிலையையே முக்தி என்று சொல்கிறது.
இத்தகைய யோகநிலையை அகப்பயிற்சிகள்மூலம் அடைவதற்கான முயற்சியில் பின்னாளில் உடலையும் மூச்சையும் பயிற்றுவிக்கும் முறைகள் வந்துசேர்ந்தன. அவையே இன்று யோகாசனம் என்றும் பிராணயாமம் என்றும் அறியப்படுகின்றன. இந்த முறைகள் நெடுங்காலம் வேத மரபுக்கு வெளியே இருந்த தாந்த்ரீக மரபுகளிலேயே பயிலப்பட்டன. அங்கிருந்து காலப்போக்கில் இவை பிற தளங்களுக்கு உருமாறி வந்து இணைந்துகொண்டே இருந்தன
நாம் இந்து ஞானமரபு என்று பார்க்கும் இன்றைய பேரமைப்பு என்பது அவ்வாறு பல மாறுபட்ட முறைமைகள், அமைப்புகள், ஞானங்கள் ஒன்றுடன் ஒன்று உரையாடிக் கலந்து தொடர்ச்சியாக வளர்ந்துகொண்டே இருந்த ஒன்றாகும். வேத மரபுக்கு இரு தளங்கள்தான். ஒன்று, கர்ம காண்டம் எனப்படும் வேத வேள்விச் சடங்குகள். இரண்டு, ஞான காண்டம் எனப்படும் அறிவுச்செயல்பாடு. இரண்டிலும் யோகம் முதலிய பயிற்சிகளுக்கு இடமில்லை. ஆறுதரிசனங்களும் இந்து ஞானமரபின் பகுதிகளாக ஆனபோது யோகம் உள்ளே வந்தது.
இன்று நம் சூழலில் நாம் யோகம், தியானம் போன்றவற்றுடன் தொடர்புபடுத்திப் பேசும் பலவிஷயங்கள் பல்வேறு தாந்த்ரீக மரபுகளில் உருவாக்கி எடுக்கப்பட்டவை. அங்கிருந்து பெறப்பட்ட உருவகங்களும் படிமங்களும் பொதுத்தளத்துக்கு வந்து சேர்ந்துள்ளன. நம் சித்தர் மரபுக்கு தாந்த்ரீக மரபுடன் மிகநெருக்கமான உறவுண்டு.
நெடுங்காலம் பக்திமரபு இந்த தாந்த்ரீக மரபை ஒதுக்கித்தான் வைத்திருந்தது. அந்த ஒதுக்குதல் சித்தர்கள் முதலியோரினூடாக பதினேழு, பதினெட்டாம் நூற்றாண்டு வாக்கில்தான் இல்லாமலாகி மெல்ல மெல்ல தாந்த்ரீக வழிமுறைகள் பொதுப்போக்கில் இணைந்தன. யோக, பிராணயாம வழிமுறைகள் இவ்வாறாகவே இந்து மரபின் மைய இடத்துக்கு வந்தன.
யோக முறைகளை ஐரோப்பியர் கண்டு கொண்டு மருத்துவ ரீதியாக சான்றளித்த பின்னரே நாம் இன்று காணும் முக்கியத்துவம் உருவாகி வந்தது. சொல்லப்போனால் நம் மாபெரும் யோக ஆசிரியர்கள் அனைவருமே மேலைநாடுகளுக்காக பேசியவர்களே. இன்று பக்தியை விட யோகமுறைகள் அதிகம் பேசப்படும் காலம் வந்திருக்கிறது.
ஆக, யோகமுறைகள் சென்ற காலங்களில் மைய ஓட்டத்தின் பகுதியாக இருக்கவில்லை. அனைத்து மக்களுக்கும் உரியனவாக இருக்கவேயில்லை. அவை அவைதிக ஞான மரபுகளான தாந்த்ரீக மதங்களுக்குள்தான் அதிகமும் பயின்று கடைப்பிடிக்கப்பட்டன. அவர்களின் சடங்குகள் மற்றும் பயிற்சிகளின் ஒரு பகுதியாகவே அவை இருந்தன. ஆகவே முறையான தீட்சை பெறப்பட்டு ரகசியமாக ஆற்றப்பட வேண்டியவையாக இருந்தன
ஆயுர்வேதம் அப்படி அல்ல. அது உபவேதமாக, மைய ஓட்டத்தின் பிரிக்கமுடியாத பகுதியாக இருந்தது. குருகுலமுறைப்படி பயிலப்பட்டது. அரசர்களால் ஆதரிக்கப்பட்டது. அதில் புறவயமான அமைப்புகள் இருந்தன. அதற்குக் கல்விச்சாலைகள் இருந்தன. ஆகவே ஆயுர்வேதமும் யோகமுறைகளும் எங்குமே ஒன்றுடனொன்று சந்திக்கவில்லை என்றார் நித்யா.
ஆயுர்வேத வைத்தியர் சொன்ன காரணம் இது. ஆயுர்வேதம் சாதாரண வாழ்க்கையில் ஒரு சாதாரண மனிதனின் உடல்நிலையைப்பற்றிப் பேசுகிறது. அதாவது ‘சாமானிய’ தளத்தில் நின்று மனித உடலை பார்க்கிறது. அந்நிலையில் உடலை பயிற்றுவிக்கவோ மேம்படுத்தவோ அது முயல்வதில்லை. உடலை அது இயற்கை போல இயல்பான ஒன்றாகவே பார்க்கிறது. நோயை அந்த இயற்கையின் இன்றியமையாத சமன்பாடு குலையும் நிலையாக மதிப்பிடுகிறது. அந்த சமநிலையை மீண்டும் சரிசெய்வதே ஆயுர்வேதத்தின் வழிமுறை.
ஆயுர்வேதம் வாதமும் பித்தமும் கபமும் சமநிலையில் உள்ள உடலை முழுமையானதாக அணுகுகிறது. அதற்கு மேலதிகமாக எதையும் அளிக்க வேண்டியதில்லை. அதற்கு என்ன வேண்டுமென அதற்கே தெரியும். அதன் விதிகள் அதிலேயே உள்ளன. இயல்பாக அது எதைச்செய்யுமோ அதுவே அதற்கு போதுமானது.
ஆனால் யோகம் ‘விசேஷ’ தளத்தில் வைத்து உடலை அணுகுகிறது. உடலை பயிற்றுவித்து ,மேம்படுத்தி ஓர் உன்னத நிலை நோக்கிக் கொண்டுசெல்ல அது விழைகிறது. அப்போதே உச்சகட்ட பிரக்ஞை நிலை கைகூடும் என நினைக்கிறது. அதாவது யோகம் சாதாரண மக்களுக்குரியதல்ல. அது யோகிகளுக்குரியது. சரியான உடலை அடைதல் அல்ல அதன் இலக்கு, உன்னதமான உடலை அடைவது. அதில் முழுமையான மனதையும் பிரக்ஞையையும் அடைவது.
கடந்த காலத்தில் சாதாரண மக்கள் நல்ல உடலுழைப்பும் தூய சூழலும் சரியான அளவுக்கு உணவும் உண்டு இயல்பான வாழ்க்கை வாழ்ந்தார்கள். மன அழுத்தம் இல்லாமலிருந்தார்கள். ஆகவே ஆயுர்வேதம் பிறழ்வுகளைச் சரிசெய்தால் மட்டுமே போதுமென்ற நிலை இருந்தது. உடலை பயிற்றுவிக்கவேண்டிய அவசியம் இருக்கவில்லை
ஆனால் நவீன காலத்தில் உழைப்பு இல்லாமல், அதிகமாக உணவுண்டு, மன அழுத்தம் மிகுந்து வாழும் மனிதர்களுக்கு உடலை பயிற்றுவிக்க வேண்டியிருக்கிறது. அதற்காகவே சிகிழ்ச்சைக்குள் யோகமுறைகள் வரவேண்டியிருக்கிறது. அவை ஆயுர்வேதத்தின் பகுதிகள் அல்ல, ஆயுர்வேதத்தின் கொள்கையடிப்படைக்கே எதிரானவை அவை. இது வைத்தியரின் கருத்து
இரண்டுமே யோசிக்கத்தக்கவை என்று எனக்குப் பட்டது
ஜெ
யோகம் http://www.jeyamohan.in/?p=7064
இந்துமதம்,நாத்திகம்,ஆத்திகம் http://www.jeyamohan.in/?p=7018
யோகம்,ஞானம் http://www.jeyamohan.in/?p=6789
யோகம், ஒரு கடிதம் http://www.jeyamohan.in/?p=6765