பகுதி 11 : முதற்தூது – 2
அஸ்தினபுரியின் நுழைவாயிலை படகிலிருந்தபடியே சாத்யகி பார்த்தான். அது நீரிலாடிக்கொண்டிருப்பதாகத் தோன்றியது. அதற்கப்பால் மெல்லிய காலையொளி வானில் பரந்திருந்தமையால் தெளிவாக அதன் வடிவம் தெரிந்தது. கிருஷ்ணன் பாய்மரக்கயிற்றை பிடித்துக்கொண்டு கரையை நோக்கி நின்றான். சாத்யகி அவனருகே வந்து நின்று “அதுதான் அஸ்தினபுரியா?” என்றான். “இல்லை, நகரத்திற்கு மேலும் மூன்றுநாழிகைநேரம் சாலைவழியாக செல்லவேண்டும்” என்றான் கிருஷ்ணன்.
சாத்யகி “பெரிய தோரணவாயிலாகத்தான் கட்டப்பட்டபோது கருதப்பட்டிருக்கும்” என்றான். கிருஷ்ணன் “ஆம், மாமன்னர் குருவால் மரத்தால் அமைக்கப்பட்டது அது. பின்னர் பிரதீபரால் கல்லில் சமைக்கப்பட்டது. அமுதவாயில் என அதை சூதர்கள் சொல்வதுண்டு” என்றான். அந்தப்பெருவாயிலின் முகப்பிலிருந்த அமுதகலசத்தை சாத்யகி அப்போதுதான் பார்த்தான். ஒரேகணத்தில் கேட்டிருந்த அத்தனை கதைகளும் நினைவிலெழும் பேருவகையை அடைந்தான்.
படகுத்துறை புதிதாக விரிவாக்கப்பட்டிருந்தது. மரத்திற்கு மாற்றாக கற்களை செதுக்கி அடுக்கி கட்டப்பட்டிருந்த துறைமேடையில் படகுகளின் விசை தாங்கும் சுருள்மூங்கில்கள் செறிந்திருந்தன. அங்கு பன்னிரு படகுகள் பாய்சுருக்கி நின்றிருந்தன. அவற்றில் பலவற்றில் பீதர்நாட்டு பளிங்குக்கல விளக்குகள் அப்போதும் அணைக்கப்படவில்லை. நான்கு படகுகளில் இருந்து சுமைகள் இறக்கப்பட்டுக்கொண்டிருந்தன. இருபக்கமும் பொதிசுமந்த அத்திரிகள் நடைபாலம் வழியாக இறங்கி பண்டகசாலைக்குச்செல்லும் கற்சாலைகளில் குளம்புகள் ஒலிக்க நிரையாக சென்றன. அவற்றை ஓட்டிச்செல்லும் ஏவலர் குரல்களுடன் வணிகர்களின் குரல்கள் கலந்து ஒலித்தன.
காவல்மாடங்களிலும் பந்தங்கள் எரிந்து கொண்டிருந்தன. கிருஷ்ணனின் படகுகளைக் கண்டதும் துறைமுகத்தின் தென்முனைக் காவல்மாடத்தில் இருந்து கொடியசைந்தது. தொடர்ந்து மும்முறை கொம்பு பிளிறியது. முதல்படகு கொடியசைத்து மும்முறை கொம்பூதியதும் படகுத்துறைநோக்கி உள்ளிருந்து வினைவலர் வருவது தெரிந்தது. தோளில் சரியும் மேலாடை என பாய்கள் சுருங்கி கீழிறங்க முதல் காவல்படகு மெல்ல நெருங்கி சுருள்மூங்கில்களில் முட்டி மெல்ல அதிர்ந்து நின்றது. அதன் வடங்களை இழுத்துக்கட்டி அசைவழியச்செய்தனர். அதிலிருந்து துவாரகையின் காவலர்கள் இறங்கி துறைமேடையில் பரவினர்.
துறைமேடையில் வழக்கமான துறைக்காவல்படையினர் அன்றி எவரும் தென்படவில்லை. பந்தங்கள் எரிந்த தூண்களின் அடியில் சில காவலர் துயில்கலையாதவர்கள் போல நின்றிருந்தனர். துவாரகையின் படையினர்தான் படகு அணைவதற்கான இடத்தை அமைத்தனர். கிருஷ்ணனின் அணிப்படகு துறைமேடையை அணுகியதும் அதன் பாய்கள் நடனவிரல்கள் என நுட்பமாக திரும்பிக்கொண்டு எதிர்க்காற்று விசையை அமைத்து விரைவழிந்தது. மிகச்சரியாக துறைமேடையின் அருகே வந்து முட்டாமல் அசைவற்று நின்றது. துறைக்காவலர் திகைப்புடன் அதன் பாய்களையும் கலவிளிம்பையும் வந்து நோக்கினர்.
நடைபாலம் நீட்டப்பட்டபோது அப்பாலிருந்த துறைக்காவலன் “யாதவரே, சற்று பொறுங்கள். அமைச்சர் கனகர் தங்களை வரவேற்க வந்துள்ளார்” என்றான். கிருஷ்ணன் புன்னகையுடன் தலையசைத்தான். “அமைச்சரா? நம்மை வரவேற்க அரசகுலத்தவர் எவரும் இல்லையா?” என்றான் சாத்யகி. கிருஷ்ணன் புன்னகையுடன் ”அதற்குள் காட்டுக்குள் கன்றுமேய்த்த யாதவனை கடந்துவந்துவிட்டீர், நன்று” என்றான். சாத்யகி “அதை புரிந்துகொள்ள இச்சிலநாட்களே போதுமானவை அரசே” என்றான். கிருஷ்ணன் “அமைச்சர் வருகை நமக்கு சொல்வது ஒன்றே. இது அரசமுறைப்பயணம் அல்ல, வெறும் அரசியல்தூது” என்றான்.
கனகர் அரண்மனை நிலையமைச்சருக்குரிய பொற்குறி சூடிய தலைப்பாகையையும் பொன்னூல் பின்னல் செய்த பட்டுச்சால்வையையும் அணிந்தவராக கையில் பொற்கோலுடன் சுங்கமாளிகையில் இருந்து நடந்து வருவது தெரிந்தது. அவருக்கு முன்னால் அஸ்தினபுரியின் அமுதகலசக்கொடியை ஏந்திய கொடிக்காவலன் வந்தான். முகப்பில் முழவுகளும் கொம்புகளும் சங்கும் மணியும் ஒலிக்க ஏழு இசைச்சூதர் மங்கல ஒலியெழுப்பி வந்தனர் . கனகருக்குப் பின்னால் ஏழு மங்கலத் தாலங்ளை ஏந்திய ஏவலர் வந்தனர். அவர்கள் நீண்ட கற்பாதை வழியாக வந்து அத்திரிப்பாதையை கடந்து துறைமேடையில் ஏறி நின்றபின்னர் துறைக்காவலன் கையசைத்தான்.
கிருஷ்ணனின் படகிலிருந்து கொடிகள் வீசப்பட்டன. முரசுகளும் கொம்புகளும் ஒலித்தன. துவாரகையின் கருடக்கொடியுடன் ஒரு காவலன் முன்னால் இறங்கிச்செல்ல ஏழு இசைச்சூதர்கள் மங்கல இசையுடன் தொடர்ந்தனர். சாத்யகி சற்று தயங்கி “மூத்தவர் இன்னமும் சித்தமாகவில்லை அரசே” என்றான். அதற்குள் சிற்றறையில் இருந்து பலராமர் எந்த அணிகலன்களும் இல்லாமல் பட்டுச்சால்வையை அள்ளி தோளில் போட்டபடி துயில் கலையாத கண்களுடன் வந்து கிருஷ்ணன் அருகே நின்றார். “அஸ்தினபுரி இத்தனை விரைவில் வந்துவிட்டதா?” என்று கைகளை தூக்கி சோம்பல்முறித்து ”நீ எழுந்ததுமே என்னை அழைத்திருக்கவேண்டும்…” என்றார்.
“நீங்கள் நேற்று வழியிலேயே படகுகளை அவிழ்த்துவிட்டு மாமரச் சோலையில் இறங்கி அமர்ந்து ஏவலருடனும் காவலருடனும் சேர்ந்து மதுவருந்தினீர்கள். நெடுநேரம் குகர்களுடன் இணைந்து துடுப்பும் வலித்தீர்கள்” என்றான் கிருஷ்ணன். “ஆம், அரிய இரவு. விண்மீன்கள் மிக அருகே இருந்தன” என்றார் பலராமர். “அவன் யார்? ஏன் இவன் கொடியை ஆட்டுகிறான்?” என்று கொட்டாவியுடன் கேட்டார். “அஸ்தினபுரியின் அமைச்சர். நம்மை வரவேற்க வந்திருக்கிறார்.” பலராமர் முகம் மலர்ந்து “நன்று. அமைச்சரையே அனுப்பி வரவேற்கிறார்களா? அப்படியென்றால் அனைத்தும் எளிதில் முடிந்துவிடும்” என்றார். கிருஷ்ணன் புன்னகையுடன் “இறங்குவோம் மூத்தவரே” என்றான்.
நடைபாலம் வழியாக அவர்கள் இறங்கியபோது துவாரகையின் வீரர்களும் கரையில் நின்றிருந்த துறைக்காவலர்களும் உரக்க வாழ்த்தொலி எழுப்பினர். பலராமர் “அஸ்தினபுரிக்கு நான் வரும்போதெல்லாம் சினத்துடன் மட்டுமே வந்திருக்கிறேன். இம்முறை அப்படி அல்ல” என்றார். “சினம் கொள்ளும் தருணங்கள் இனி வரலாமே” என்றான் கிருஷ்ணன். “சினம் கொள்வதை தாங்களும் விரும்புவீர்கள் அல்லவா?” பலராமர் உரக்க நகைத்து “ஆம், நான் முந்துசினம் கொண்டவன் என்கிறார்கள் மூடர்கள்” என்றார். “நான் எப்போதும் உரியமுறையிலேயே சினம் கொள்கிறேன். சினம் கொள்ளாமலிருக்க நானென்ன மூடனா?”
அஸ்தினபுரியின் கொடிவீரன் முன்னால் வந்து கொடிதாழ்த்தி அவர்களை வரவேற்றான். கனகர் தலைவணங்கி “அஸ்தினபுரி யாதவகுலத்து இளம்தலைவர்களை வரவேற்கிறது. முன்பு தங்கள் தந்தையாகிய சூரசேனர் இந்நகரத்திற்கு குலமுறை வருகைதந்திருக்கிறார். அவரது நலமறிய அஸ்தினபுரி விழைகிறது” என்றார். “சூரசேனர் மதுவனத்தில் நலமாக இருக்கிறார். அஸ்தினபுரியின் பேரரசரையும் அரசியையும் நலம் வழுத்த துவாரகைப் பேரரசு விழைகிறது” என்றான் கிருஷ்ணன்.
விழிகளில் எந்த மாறுதலும் இல்லாமல் கனகர் “நலமே” என்றபின் திரும்பி அஸ்தினபுரியின் பெருங்குலத்தவரின் ஏழு மங்கலங்களான யானைத்தந்தம், கூழாங்கல், கங்கைநீர், சுடர், பொன், மணி, நெல் ஆகியவை கொண்ட அணித்தாலம் ஒன்றை வாங்கி கிருஷ்ணனிடம் அளித்தார். கிருஷ்ணன் தன் ஏவலரிடமிருந்து யாதவ குலமங்கலங்களான பால், நெய், சாணி, சுடர், மலர், யமுனை நீர் ஆகியவற்றுடன் பொன், மணி, குறுவாள் ஆகியவை கொண்ட அணித்தாலம் ஒன்றை வாங்கி கனகரிடம் அளித்தான். மங்கல இசை ஓங்கி எழுந்து அமைந்தது.
“தாங்கள் செல்வதற்கு அஸ்தினபுரியின் தேர்கள் சித்தமாக உள்ளன” என்றார் கனகர். “நாங்கள் எங்கள் தேர்களை கொண்டுவந்துள்ளோம் அமைச்சரே” என்றான் கிருஷ்ணன். “இது அரசமுறைப்பயணம் அல்ல என்பதனால் நகர்வலம் தேவையில்லை என்பது பேரமைச்சர் எண்ணம்” என்று கனகர் சொன்னார். “மேலும் தங்கள் வருகை அரசுசூழ்தல் சார்ந்தது. அது மக்களால் அறியப்படவேண்டுமா என்பதும் அமைச்சரின் ஐயம்.” கிருஷ்ணன் “எப்படியானாலும் நாங்கள் அஸ்தினபுரியின் கிழக்கு வாயில் வழியாகத்தானே செல்லமுடியும்? அரசப்பெருவீதிகளை தவிர்க்கவும் முடியாது. அணித்தேர்களில் செல்வதனால் அறியப்படும் மந்தணம் ஏதுமில்லை” என்றான். கனகர் “அவ்வாறெனில் ஆகுக!” என்றார்.
நடைபாதையில் செல்லும்போது சற்று தொலைவில் கங்கையின் ஓரமாக அமைக்கப்பட்டிருந்த சிற்றாலயங்களை கிருஷ்ணன் நோக்கினான். முந்தைய மழைக்காலத்தில் கல்மேல் படர்ந்த பசும்பாசிப்படலம் கருகி முடிப்பரவல் போல தெரிய அவை மேலே எழுந்த ஆலமரத்தின் சருகுகள் பொழிந்து மூடியிருக்க தனித்து நின்றிருந்தன. அம்பை ஆலயத்தின் உள்ளே சிற்றகலின் தனிச்சுடர் அசைந்தது. செம்பட்டாடை சுற்றி வெள்ளியால் ஆன விழிகளும் செவ்விதழ்களுமாக பலிபீடத்திற்கு அப்பால் அம்பாதேவி அமர்ந்திருந்தாள். மறுபக்கம் மேலும் சிறிய ஆலயத்தில் தொழுத கைகளுடன் நிருதனின் சிறிய சிலை. அங்கும் சிறிய விளக்குகள் எரிந்தன.
“அவை அம்பையின் ஆலயமும் அணுக்கனின் ஆலயமும் அல்லவா?” என்றான் சாத்யகி. “கதைகளில் கேட்டிருக்கிறேன்.” கிருஷ்ணன் “ஆம்” என்றான். “நான் சென்று அணுக்கனைத் தொழுது மீள விழைகிறேன்” என்றான் சாத்யகி. “நாம் அரசவிருந்தினர். அரசகுடிகளின் தெய்வங்கள் அல்ல அவை. படகுக்காரர்களின் தெய்வங்கள்” என்று கிருஷ்ணன் சொன்னான். பலராமர் உரக்க “விடிந்துவிட்டதே, நாம் எப்போது உணவுண்போம்?” என்றார். “நமது தேர்கள் விரைவு கூடியவை. ஒன்றரை நாழிகையில் நாம் நகரை அடையமுடியும்” என்று கிருஷ்ணன் சொன்னான். “மேலுமொரு நாழிகையில் நாம் அரண்மனையை அடையலாம்.” பலராமர் “சொல்லியிருந்தால் நான் படகிலேயே சற்று உணவருந்தியிருப்பேன்” என்றபடி தன் தேரில் ஏறிக்கொண்டார்.
தன் தேரில் ஏறிய கிருஷ்ணன் “இளையோனே, நீரும் என்னுடன் வாரும்” என்றான். பொற்தேரில் கிருஷ்ணன் அருகே ஏறி நின்ற சாத்யகி இளவெயில் பரந்துகிடந்த அஸ்தினபுரியின் சாலையை நோக்கி “நாம் சென்று சேர்கையில் அஸ்தினபுரியின் காலை முதிர்ந்திருக்கும். நகர்மக்களனைவரும் தெருக்களில் இருப்பார்கள்” என்றான். “ஆம், அவர்களின் தேரில் சென்றால் உச்சிவெயில் எழுந்தபின்னர்தான் செல்வோம்” என்றான் கிருஷ்ணன். சாத்யகி “நாம் நேற்றிரவே வந்திருக்கலாம். மூத்தவரை மாமரச்சோலையில் இறங்கத் தூண்டியதே தாங்கள்தான். அது ஏன் என இப்போது தெரிகிறது” என்றான்.
அஸ்தினபுரியின் சாலை கருங்கற்பாளங்களால் அமைக்கப்பட்டிருந்தது. அதன்மேல் துடிதாளமென குளம்புகள் ஒலிக்க கிருஷ்ணனின் தேர் விரைந்தது. அதைத் தொடர துவாரகையின் தனிப்புரவிக் காவலர்களாலேயே முடியவில்லை. கனகரின் தேர் சற்று நேரத்திலேயே பிந்திவிட்டது. வெயிலில் தேர்கள் எழுப்பிய புழுதி பொற்திரையென சுருண்டது. சாலையோரக் காடுகளுக்குள் குளம்பொலி எதிரொலித்தது. சாலையைக் கடந்த மான் ஒன்று அம்பு போல துள்ளி மறைந்தது.
கிழக்குக் கோட்டைவாயிலின் நிழல் வெண்ணிற நடைவிரிப்பு போல நீண்டுகிடந்த சாலையினூடாக அவர்களின் தேர்கள் சென்றன. அவர்களை நெடுந்தொலைவிலேயே கண்டுவிட்ட காவல்கோபுரத்து பெருமுரசம் முழங்கியது. கொம்புகளும் சங்குகளும் ஒலித்தன. கோட்டைக்காவலன் தன் வீரர்களுடன் வந்து வாயிலில் நின்றிருந்தான். வாயிலில் விரைவை குறைக்காமல் கோட்டைக்குள் சென்றனர். பொன்வண்டுபோல ரீங்கரித்தபடி பறந்து உள்ளே நுழைவதாக சாத்யகிக்கு தோன்றியது.
அவர்களைக் கண்டு வாள்தாழ்த்திய கோட்டைக்காவலனும் படையும் புழுதியால் மூடப்பட்டனர். அவர்களைக் கடந்து தேர்களும் புரவிகளும் சென்றுகொண்டே இருந்தன. புழுதி விலகியபோது தொலைவில் பிற தேர்கள் வருவதற்கான அறிவிப்புடன் எரியம்பு எழுவது தெரிந்தது. அவன் கோட்டைமேல் ஏறிச்சென்று முரசுகளை முழங்கச்செய்து திரும்பிப்பார்த்தான். பொற்புழுதி சுருண்டு சிறகுகள் போல தெரிய பறப்பது போல கிருஷ்ணனின் பொற்தேர் அஸ்தினபுரியின் மைய அரசச்சாலையில் சென்றது. அதற்குப்பின்னால் வெள்ளியாலான பலராமனின் தேர் தெரிந்தது.
கோட்டைக்குள் நுழைந்ததுமே கிருஷ்ணன் தேரின் விரைவை குறைத்தான். முதலில் தேரைப்பார்த்தவர்கள் அதன் பொன்னிறத்தால் திகைப்புண்டு சிந்தை ஓடாமல் நின்று பின் “யாதவன்! இளையயாதவன்! துவாரகைமன்னன்!” என்று கூச்சலிட்டனர். சிலகணங்களில் சாலையின் இருபக்கமும் அஸ்தினபுரியின் மக்கள் கூடி நெரித்து எம்பி துள்ளிக்குதித்து கூச்சலிட்டனர். “யாதவர் வாழ்க! துவாரகைத் தலைவன் வாழ்க! வெற்றித்தலைவன் வாழ்க!” என்ற ஒலிகள் எழும்தோறும் மாளிகைகளில் இருந்தும் அங்காடிகளில் இருந்தும் மக்கள் சாலைகளை நோக்கி ஓடிவந்தனர். சாலையோரங்களில் முகங்கள் பெருகி நெரிந்தன.
இல்லங்களின் அறைகளுக்குள் இருந்து பெண்கள் குழந்தைகளுடன் பாய்ந்துவந்து உப்பரிகைகளில் நிறைந்தனர். குழந்தைகள் கூவியார்த்தபடி தெருக்களுக்கு ஓடிவந்தன. வாழ்த்தொலிகள் பெருகப்பெருக அவை கரைந்து ஒற்றைப்பெருமுழக்கமாக ஆயின. தலைப்பாகைகளையும் மேலாடைகளையும் தூக்கி வீசி துள்ளிக்குதித்தனர். களிவெறிகொண்ட முகங்களை சாத்யகி நோக்கியபடியே வந்தான். ஒவ்வொன்றும் வெறித்த விழிகளும் திறந்த வாயுமாக கந்தர்வர்களை போலிருந்தன.
மேலும் செல்லச்செல்ல செய்திபரவி பெண்கள் குத்துவிளக்குகளை ஏற்றி வாயிலுக்கு கொண்டுவந்துவிட்டனர். இல்லங்களின் பூசையறைகளில் இருந்து தெய்வங்கள் சூடிய மலர்மாலைகளை பிய்த்து எடுத்துக்கொண்டுவந்து மலர்களாக ஆக்கி உப்பரிகைகளிலிருந்து அவன்மேல் வீசினார்கள். சாலையோர ஆலயக்கருவறைகளுக்குள் புகுந்த சிலர் அங்கே தெய்வங்களுக்கு சூட்டப்பட்டிருந்த மாலைகளை அள்ளி மலர்களாக ஆக்கிக்கொண்டுவந்து வீசினர். சாலைகளில் பூத்து நின்ற மரங்கள் மேல் ஏறி உலுக்கி மலர் உதிரச்செய்தனர்.
முதலில் களிவெறிகொண்டவர்கள் யாதவர்கள் என்பதை சாத்யகி பார்வையிலேயே புரிந்துகொண்டான். ஆனால் பின்னர் அத்தனைபேருக்கும் அந்த அக எழுச்சி பரவியது. தொடக்கத்தில் திகைத்தவர்கள் போல நோக்கி நின்ற காவலர்களும் ஷத்ரியர்களும் கூட பின்னர் முகம் மலர்ந்து படைக்கலங்களைத் தூக்கி வாழ்த்துகூவத் தொடங்கினர். அவன் பொற்தேரில் வராமலிருந்தால் அந்த வரவேற்பு இருக்குமா என்று எண்ணிய சாத்யகி அந்த எண்ணத்தை உடனே கடிந்து விலக்கினான். ஆனால் மீண்டும் அந்தப் பொற்தேர் ஒரு பெரிய அறிவிப்பாக பதாகையாக விளங்குவதாகவே தோன்றியது அவனுக்கு.
கிருஷ்ணன் தன் மேல் விழுந்த மலர்களை எடுத்து திரும்ப பெண்களை நோக்கி வீசினான். அவர்கள் நாணமும் உவகையுமாக கூச்சலிட்டனர். ஒருகணத்தில் தன் சக்கரத்தை எடுத்து வீசினான். அது வெள்ளிமின்னலென சென்று மேலேறி அங்கே நின்றிருந்த இளம்பெண் ஒருத்தியின் கூந்தலில் இருந்த மலரைக் கொய்து அவனிடம் திரும்பி வந்தது. பெண்கள் கூச்சலிட்டு துள்ளிக்குதித்தனர். மீண்டும் மீண்டும் என்றனர். மீண்டும் சக்கரம் சென்று ஒருத்தியின் மேலாடை நுனியை வெட்டிக்கொண்டு வந்தது. சிறுவர்கள் கைநீட்டி கூச்சலிட்டு துள்ளிக்குதிக்க ஒரு சிறுவனின் தலைமயிரை கொய்து வந்தது.
சாத்யகி உடல் கூச சற்றே பின்னகர்ந்தான். அது நாணிலாமை என்றே அவனுக்குத் தோன்றியது. அத்தனை வெளிப்படையாக பெருவீதியில் நின்று பெண்களுடன் குலவுகிறான். அவர்களுக்காக கழைக்கூத்தாடி போல் வித்தை காட்டுகிறான். முதிரா சிறுவனைப்போல் விளையாடுகிறான். ஆனால் அப்படி நாணத்தை இழந்த ஆண்களைத்தான் பெண்கள் விரும்புகிறார்கள் போல. ஆனால் அதுவும் உண்மை அல்ல. நாணிலாதவனை குலப்பெண்கள் அருவருக்கிறார்கள். அந்த அருவருப்பு எழாமல் நாணத்தை இழக்க முடிந்தவன் அவர்களின் அரசன். சாத்யகி அவ்வெண்ணங்களை நோக்கி புன்னகை செய்துகொண்டான்.
அவன் பெண்முகங்களையே நோக்கிக்கொண்டு சென்றான். நாணிலாதவையாகவே அவையும் இருந்தன. சிவந்த விழிகள். குருதி கொப்பளித்து துடித்த முகங்கள். செவ்விதழ்கள் நீர்கொண்டு மலர்ந்திருந்தன. கைகள் வீசி அலையடித்தன. முலைக்கச்சைகள் நெகிழ்ந்து மென்தசைவிளிம்புகள் ததும்பின. அங்கே பிற ஆண்களென எவருமில்லாததுபோல. அவனுடன் ஒவ்வொருவரும் தனித்திருப்பதுபோல. பெண்களின் நாணமென்பது ஓர் ஆடை. ஆடையென்பது கழற்றப்படுகையில் மேலும் பொருள்கொள்வது. என்ன வீண் எண்ணங்கள் இவை!
பாரதவர்ஷம் முழுக்க பெண்களின் அகக்காதலனாக ஒருவன் ஆனதெப்படி? வெற்றி எனலாம். கல்வி எனலாம். நிகரற்ற கலைத்திறன் எனலாம். சூதர்சொற்கள் எனலாம். அவற்றுக்கும் அப்பாலுள்ளது பிறிதொன்று. இக்கருமணி ஒளியுடல். இந்த நீள்முகம். குழந்தையுடையவைபோன்ற நீலச்சுடர்விழிகள். வாடாமலரெனும் புன்னகை. அவற்றுக்கு அப்பால் ஒன்று. இதோ என்னருகே நிற்பவனுக்கு வயதாவதே இல்லை. இவன் முதிரா சிறுவன். அனைத்தறிந்தும் ஒன்றுமறியாதவனாகும் கலையறிந்தவன். அன்னையரும் கன்னியரும் சிறுமியரும் விழையும் தோழன். இதோ அத்தனை முதிரா சிறுவர்களும் அவனை தங்களில் ஒருவராகவே காண்கிறார்கள்.
அந்த அகஎழுச்சி சற்றே அணைந்தபோது சாத்யகி மேலும் தெளிவான சொல்முறையடுக்கை அடைந்தான். இளமையிலேயே சூதர் பாடலெனும் யானைமேல் ஏறிக்கொண்டவன். கம்சரைக் கொன்று மதுராவை அவன் வென்றது ஒரு பெரிய தொடக்கம். அதன்பின் அவனுக்கும் ராதைக்குமான கதைகள் பெருக்கெடுத்தன. இளவேனிலும் இளங்குளிரும் வாழும் நறுமணமலர்ச்சோலை. நிலவு. விழியொளி. குழலிசை. அழியாக்காதலன் ஒருவன். அவன் இசையையும் இதழ்மலர்ந்த நகைப்பையும் கேட்டு பிச்சியான பேரழகி ஒருத்தி. பாடிப்பாடியே மண்ணில் வாழும் காமனாக இசையுருவான கந்தர்வனாக அவனை ஆக்கிவிட்டனர் சூதர். இனி அவன் சக்கரம் இலக்குபிழைக்க முடியாது. இனி அவன் பொருளில்லாத சொற்களை சொல்லமுடியாது. இனி எங்கும் அவன் தோற்கமுடியாது.
அணுவணுவாகவே தேர் முன்னகர முடிந்தது. இருபக்கமிருந்தும் தேருக்கு முன்னால் மக்கள் பிதுங்கி வந்து விழுந்துகொண்டிருந்தனர். காவலர் அவர்களை அள்ளி விலக்கி வழியமைத்தனர். அரண்மனை முகப்பை அவர்கள் அடைந்தபோது அவர்களுக்குப்பின்னால் திரண்ட மக்கள்நிரை கிழக்குக் கோட்டைவரை நீண்டிருந்தது. வாழ்த்தொலிகளின் பெருமுழக்கம் எழுந்து அலையலையாக சூழ்ந்திருக்க அரண்மனை முகப்பின் காவல்மாடத்தின் பெருமுரச ஒலி அதில் மூழ்கி மறைந்தது. உள்கோட்டை வாயிலில் காவலர்கள் இருபக்கமும் நிரைவகுத்து நின்று வாள்தாழ்த்தி வணங்கினர்.
முகப்பில் நின்ற காவலர்தலைவன் “அரசே, மீண்டும் தங்களருகே நிற்கும் பேறுபெற்றேன்” என்றான். “சக்ரரே, தங்கள் தோள்புண் வடுவாகிவிட்டதல்லவா?” என்றான் கிருஷ்ணன். திரும்பி சாத்யகியிடம் “என்னுடன் மதுராவுக்கு வந்த படையில் இருந்தார். நாங்கள் தட்சிண கூர்ஜரத்தை சேர்ந்து தாக்கினோம்” என்றான். சக்ரன் “நான் அங்கே புண்பட்டேன். அதை பதக்கமாக என் தோளில் அணிந்திருக்கிறேன்” என்றான். “அரசே, போர் என்றால் என்ன என்று அன்று அறிந்தேன். அடுத்த போரில் தங்கள் காலடியில் நின்றிருக்க அருளவேண்டும்.” கிருஷ்ணன் “நாம் தோளிணைவோம் சக்ரரே” என்றான்.
கோட்டைக்காவலரால் கிருஷ்ணனைத் தொடர்ந்து வந்த பெருங்கூட்டம் நிறுத்தப்பட்டது. அங்கிருந்து வாழ்த்தொலிகள் எழுந்து கொண்டிருந்தன. அரண்மனையின் பெருமுற்றத்தின் மறுஎல்லையில் பேரமைச்சர் சௌனகரும் இசைச்சூதரும் அணிச்சேவகரும் அஸ்தினபுரியின் அமுதகலசக்கொடியுடன் நின்றிருந்தனர். கிருஷ்ணன் தேரை நிறுத்தி இறங்கியதும் மங்கல இசை முழங்கியதென்றாலும் குரல்முழக்கத்தில் அது ஒலிக்கவில்லை. சௌனகரின் பின்னால் நின்றவர்கள் கைகள் தூக்கி வாழ்த்தொலி எழுப்பினர்.
பின்னால் வந்து நின்ற தேரில் இருந்து இறங்கிய பலராமர் உடலை நீட்டி கைகளை நெளித்து “என்ன ஓசை! பேச்சு எதுவுமே கேட்கவில்லை” என்றபின் “கரியவனே, நான் இன்னமும் காலையுணவு அருந்தவில்லை. விரைவில் வந்துவிடலாம் என்று நீ சொன்னாய்” என்றார். “வந்துவிட்டோம் மூத்தவரே” என்றான் கிருஷ்ணன். “அதை நானும் அறிவேன்” என்றார் பலராமர். “அவர் யார்?” கிருஷ்ணன் “பேரமைச்சர் சௌனகர்” என்றான். ”நன்று” என்றார் பலராமர்.
சௌனகர் தலைமையில் வரவேற்பு அணியினர் அவர்களை அணுகினர். சௌனகர் சொன்ன முகமன் சொற்களும் உதட்டசைவாகவே இருந்தன. கிருஷ்ணன் “அஸ்தினபுரியின் மண் என் அன்னையின் மடி” என்று சொன்னான். சௌனகர் பலராமர், கிருஷ்ணன் இருவர் நெற்றியிலும் மங்கலக்குறியிட்டு வரவேற்றார். அணித்தாலங்களை கைமாற்றிக்கொண்டனர். “தாங்கள் நேற்று இரவே வருவீர்கள் என நினைத்தோம்” என்றார் சௌனகர். அதை வாயசைவால் புரிந்துகொண்ட கிருஷ்ணன் “படகு மெதுவாகவே வந்தது” என்றான். “இளைப்பாறி நீராடி உணவருந்த மாளிகைகள் சித்தமாக உள்ளன” என்றார் சௌனகர்.
பலராமர் உரக்க “எங்கே துரியோதனன்?” என்றார். “இளவரசர் அங்கே படகுத்துறைக்கே வர விழைந்தார் யாதவரே. ஆனால் அரசமுறைமைப்படி…” என சௌனகர் சொன்னதும் பலராமர் உரக்க “அரசமுறைமை எனக்கு பொருட்டல்ல. அவன் உடனே என்னை வந்து பார்க்கவேண்டும்” என்று திரும்பி சௌனகரின் பின்னால் நின்றிருந்த ஏவலனிடம் “இப்போதே அவன் என் முன் வந்தாகவேண்டும். இல்லையேல் அவன் மண்டையை உடைப்பேன் என்று போய் சொல்” என ஆணையிட்டார். அவன் சௌனகரை அரைக்கண்ணால் நோக்கியபின் அவரது விழி அசைந்ததும் திரும்பி விரைந்தான்.
”நான் அவனை அங்கேயே எதிர்பார்த்தேன்… மூடன்” என்று பலராமர் சொன்னார். “உணவு அருந்தியதும் சற்று கதைமுட்ட விழைகிறேன். இந்நகரில் அவனன்றி வேறு எவர் எனக்கு இணையாக?” பெரியகைகளை ஒன்றுடன் ஒன்று இணைத்து தசை திரள முறுக்கியபடி “காம்பில்யத்தில் பீமனுடன் கதைமுட்டினேன். அது நல்ல ஆட்டமாக அமைந்தது. அவனையும் கூட்டிவந்திருக்கலாம்” என்றார். “அவர்கள் விரைவில் இங்கே வந்துவிடுவார்கள் மூத்தவரே” என்றான் கிருஷ்ணன். சாத்யகி புன்னகை செய்தான்.
சௌனகர் “இவர் பெயர் சுநீதர். முன்பு இங்கு அமைச்சராக இருந்த பலபத்ரரின் மைந்தர். இப்போது அவையமைச்சராக இருக்கிறார். தங்களுக்கு இவர் ஆவன செய்வார்” என்றார். ”எனக்கு உடனே உணவு தேவை. ஊனுணவை மட்டுமே நான் உண்பது” என்று பலராமர் சொன்னார். ”காம்பில்யத்தின் உண்டாட்டை நான் தவறவிட்டுவிட்டேன். பெரிய உண்டாட்டு. அவர்கள் ஊனுணவு சமைப்பதில் திறம் கொண்டவர்கள். இங்கு உண்டாட்டு உண்டல்லவா?” சுநீதர் “ஆம், உண்டு யாதவரே, வருக” என்றார்.
அவர்கள் அரண்மனையின் இடைநாழி வழியாக அழைத்துச்செல்லப்பட்டனர். “என்னுடன் வந்துள்ள தேர்களை ஒருங்கு செய்யுங்கள். அவற்றில் நான் அரசருக்கு கொண்டு வந்திருக்கும் பரிசில்கள் உள்ளன” என்றான் கிருஷ்ணன். ”மதுராவிலிருந்து நான் கொண்டுவந்தவை அவை. உங்கள் பேரரசரே திகைக்கும் அரும்பொருட்கள்” என்று பலராமர் உரக்க சொன்னார். “இன்று துவாரகைக்கு வரும் பொருட்களை பாரதவர்ஷத்தில் எங்கும் காணமுடியாது அமைச்சரே.”
சாத்யகி உடல்பதறினான். பலராமரை தடுத்து பின்னால் அழைக்க விரும்பினான். ஆனால் கிருஷ்ணன் அவரை ஊக்குவிப்பதுபோல தோன்றியது. “உங்கள் அஸ்தினபுரிக்கு ஒரு விலை சொல்லுவீர்கள் என்றால் யாதவர்கள் வாங்கிக்கொள்கிறோம்” என்றபின் கைகளை தட்டிக்கொண்டு பலராமர் உரக்க சிரித்தார். சுநீதரும் பிறரும் தயங்கியபடி சிரிக்க பலராமர் திரும்பி “என்ன சொல்கிறாய் இளையோனே? ஒரு விலை? என்ன?” என்றார். கிருஷ்ணன் புன்னகை செய்தான்.
அப்போதும் வெளியே வாழ்த்தொலிகள் எழுந்துகொண்டிருந்தன. அரண்மனையின் அறைகளுக்குள் அந்த முழக்கம் நிறைந்திருந்தது. கிருஷ்ணன் ”பேரரசரின் உடல்நிலை எப்படி உள்ளது?” என்றான். “நலமாக இருக்கிறார்” என்றார் சுநீதர். ”காந்தார இளவரசரும் நலமென எண்ணுகிறேன்” என்றான் கிருஷ்ணன். சுநீதரின் விழிகளில் சிறிய மாறுதல் வந்துசென்றது. “அவருக்கும் ஓர் அரிய பரிசை வைத்திருக்கிறேன். அவரை நான் இன்று பின்மதியம் பார்க்க விழைகிறேன்.”
சுநீதர் தயங்கி “மாலையில் அரசருடன் முகம்காட்டல். சிற்றவையில் சந்திக்கலாமென அமைச்சரின் ஆணை” என்றார். “ஆம், அதற்கு முன் நான் காந்தாரரை சந்திக்கவேண்டும். வெறும் முறைமை சந்திப்புதான்” என்றான் கிருஷ்ணன். “அவ்வண்ணமே” என்றார் சுநீதர். “நீ சென்று அந்த பாலைவன ஓநாயை சந்தித்துக்கொள் இளையவனே. நான் என் மாணவன் உடல் எப்படி இருக்கிறது என்று பார்க்கிறேன்” என்றார் பலராமர். கிருஷ்ணன் “காந்தாரருக்கு செய்தி அனுப்பிவிடுங்கள் சுநீதரே” என்றான்.