பகுதி 10 : சொற்களம் – 6
திரௌபதியின் வருகையை அறிவிக்கும் பெருமுரசு ஒலி எழுந்தது. அரசமுறைமையில்லாமல் அவள் எங்கும் செல்வதில்லை. எங்கும் மறைந்துசெல்லக் கூடிய தோற்றமோ இயல்போ அவளுக்கு இருக்கவுமில்லை. அவள் அரண்மனையில் இருந்து கிளம்பியதுமே பறவைச்செய்தி ஆதுரசாலைக்கு வந்தது. அண்மையில் உள்ள காவல்மாடத்தை அணுகியதும் அங்கே பெருமுரசு ஒலித்தது. ஆதுரசாலைக்குள் வந்ததும் வரவேற்பொலி எழுப்பி முகப்பு முரசு கொம்போசையுடன் இணைந்து அதிர்ந்தது.
அவன் அங்கு வந்து சேர்ந்ததை அறிந்த பின்னரே அவள் கிளம்புவாள் என கிருஷ்ணன் அறிந்திருந்தான். அவன் ரிஷபனிடம் பேசுவதை அறிந்தமையால் மேலும் சற்று பிந்துகிறாள். அவன் மருத்துவர் தபதரிடம் திருஷ்டத்யும்னன் உடல்நிலைபற்றி பேசுவதுபோல காலம் கடத்தினான். திருஷ்டத்யும்னன் நெஞ்சில்புகுந்த வாத்துமுக வாளி இரண்டு விலாவெலும்புகளை உடைத்து அவன் ஈரலை கிழித்துவிட்டிருந்தது. களத்தில் விழுந்த அவன் மூச்சுப்பைகள் கிழிந்து மூச்சு வெளியேறிக்கொண்டிருந்தது. பீமன் அதை உணர்ந்ததும் பறை ஒன்றைக்கிழித்து அதன் மெல்லிய தோலை அந்தப் புண்ணின் துளைமேல் வைத்து அழுத்தி உதிரபந்தனத்துக்கான வலைத்துணியால் அழுத்தி சுற்றிக்கட்டி ஆதுரசாலைக்கு கொண்டுவந்தான்.
“அதை உடனே செய்தமையால் பிழைத்துக்கொண்டார். இல்லையேல் அப்போதே மூச்சில்லாமல் இறந்திருப்பார். இங்கு வரும்போதே ஜீவப்பிராணன் அகன்று உபப்பிராணன் மட்டுமே எஞ்சியிருந்தது. மூச்சுப்பையை தைத்துவிட்டு தோல்துருத்தியை மூக்கில் பொருத்தி பன்னிரு நாட்கள் தொடர்ந்து மூச்சை உள்ளே அனுப்பினோம்” என்றார் தபதர். அவனுடைய ஆறு பெரும்புண்களையும் குதிரைவால்முடியால் தைத்து தேன்மெழுகுக் கட்டுபோட்டனர். உள்ளே உடைந்திருந்த விலா எலும்புகள் சூடான தங்கக் கம்பிகளால் சேர்த்து இறுக்கிக் கட்டப்பட்டன. ஊன் அழுகுவதைத் தடுக்கும் தைலங்கள் பூசப்பட்டு தேன்கலந்த மரப்பட்டைத்தொட்டியில் அவனை வைத்திருந்தனர். பதினெட்டு நாட்களுக்குப்பின்னர்தான் உயிர் உடலில் தங்குமென்பதும் புண்கள் வாய்மூடும் என்பதும் உறுதியாயிற்று.
“பீதர்கள் புண்களை கந்தக நீரால் கழுவும் மருத்துவமுறை ஒன்றை கொண்டிருக்கிறார்கள்” என்றான் கிருஷ்ணன். அப்போது வெளியே திரௌபதி வந்திறங்கும் ஒலி கேட்டது. தபதர் அமைதியிழந்தார். “ஆம், அது சிறிய புண்களுக்கு நன்று. கந்தகம் குருதியில் கலக்கக் கூடாது” என்றார். “தேன் மிகச்சிறந்த ஊன்காப்பு மருந்து என சோனகர்களும் அறிந்திருக்கிறார்கள்” என கிருஷ்ணன் பேச்சை தொடர்ந்தான். தபதர் “உண்மை… கரியசோனகர்களான காப்தியர்கள் முன்பு இறந்த உடல்களைக்கூட தேனிட்டு பாதுகாத்திருக்கிறார்கள்” என்றார். “ஆம், அவர்கள் அந்த உடல்களை மிகப்பெரிய கல்மாடங்களுக்குள் புதைக்கிறார்கள். நமது கோட்டைகளை விட உயரமானவை அந்த மாடங்கள். முக்கோணச்சதுர வடிவத்தில் கல்லால் அமைக்கப்பட்டவை.”
வெளியே சூத்ரகன் “ஐங்குலத்துச் செல்வி பாஞ்சால இளவரசி திரௌபதி வருகை” என அறிவித்தான். தபதர் எழுந்து கைகூப்பி உடல்பதற நின்றார். கிருஷ்ணன் அவர் எழுந்ததை அறியாதவன் போல “அவர்கள் இறப்பதில்லை, அந்த கற்கூடுகளுக்குள் வாழ்வதாக காப்தியர்கள் நம்புகிறார்கள்” என்றான். திரௌபதி உள்ளே வந்ததும் தபதர் “இளவரசியை வணங்குகிறேன். இங்கு யாதவ அரசர் இருந்தமையால்…” என தழுதழுத்த குரலில் சொல்ல கிருஷ்ணன் திரும்பி அமர்ந்தவாறே “அஸ்தினபுரியின் சிற்றரசிக்கு வணக்கம். தங்களை சந்திப்பது மகிழ்வளிக்கிறது” என எளிய முகமன் சொன்னான்.
திரௌபதியின் விழிகளில் இருந்த புன்னகை மறையவில்லை. அவள் “துவாரகையின் அரசரை வணங்குகிறேன். இங்கு தாங்களிருப்பதை எதிர்பார்க்கவில்லை” என்றாள். “இளவரசர் நோயுற்றிருக்கிறார் என்றார்கள். நலம் நோக்கிச்செல்லவேண்டியது முறைமை. ஆகவே வந்தேன். நலம் பெறுகிறார் என்பது நிறைவளிக்கிறது” என்றான். திரௌபதி “ஆம், இரண்டுமாதகாலம் இறப்பின் விளிம்பில் நின்றிருந்தார். இப்போது உடல்நலம் தேறிவருகிறது. இன்னமும் ஆறுமாதங்களில் எழுந்துவிடுவார் என்றார்கள்” என்றாள். திரௌபதி மெல்ல தலையை அசைத்ததைக் கண்டு தபதர் வெளியேறினார். பிறரும் வெளியேற அறைக் கதவு மெல்ல மூடியது.
கிருஷ்ணன் “நான் சென்றதும் துவாரகையின் மருத்துவர்களை அனுப்புகிறேன். அவர்கள் பீதர்களின் மருத்துவக்கலையையும் கற்றவர்கள். இறந்தவர்களையும் எழுப்புவார்கள் என்று அணிச்சொல் சொல்லப்படுவதுண்டு” என்றான். திரௌபதி “தங்கள் கருணை மகிழ்வளிக்கிறது” என்றாள். கிருஷ்ணன் “அவர்களில் நால்வரை அஸ்தினபுரிக்கும் அனுப்பினேன். அங்கமன்னர் நோயுற்று இறப்பின் விளிம்பில் இருந்தார். எழமாட்டார் என்றே சூதர்கள் சொன்னார்கள். எங்கள் மருத்துவர்கள் சென்றபின்னர் மெல்லமெல்ல எழுந்துவிட்டார். இப்போது ஊன்சாறும் அப்பமும் உண்கிறார். கண்களில் குருதியோட்டம் வந்துவிட்டது. கைகால்களில் நடுக்கம் மட்டும் எஞ்சியிருக்கிறது. ஓரிரு மாதங்களில் புரவியேறவும் பயிற்சிக்களம் புகவும் இயலும் என்றனர்” என்றான்.
திரௌபதி “நன்று. அவர் நலம்பெற்றாகவேண்டும். மாவீரர்கள் அப்படி நோயில் இறப்பது நல்லதல்ல” என்றாள். “அதுவும் ஒரு களப்பலியே என்றனர் சூதர். காம்பில்ய வாயிலில் இருந்து கொண்டுசெல்லப்பட்டது அவரது வெற்றுடலே என்று அறிந்தேன்.” முகத்திலும் கண்களிலும் எந்த மாறுதலும் இல்லாமல் “ஆம், மாவீரர்களால் களத்தோல்வியை ஏற்க முடிவதில்லை. அவர் பார்த்தரை மிக எளிமையாக மதிப்பிட்டிருக்கவேண்டும். மேலும் அந்தப்போரில் அவர் தோற்றது அவரது குறைவீரத்தாலும் அல்ல. அச்சூழல் அவ்வண்ணம் ஆகியது” என்றாள்.
கிருஷ்ணன் புன்னகையுடன் “போரில் வெற்றியும் தோல்வியும் பகடைப்புரளலின் நெறிகளை ஒத்தவை” என்றான். “பகடைகளை ஆடுபவர்கள் களத்திற்கு வெளியே நின்றிருக்கிறார்கள்.” திரௌபதி சில கணங்கள் அவனை விழி தொட்டு நோக்கியபின் விலக்கிக்கொண்டு “ஆம், நான் விளையாடினேன்” என்றாள். “அஸ்தினபுரியின் படகுகளில் பன்னிரு படகுகளே எரிந்தன. ஆனால் நீரில் சென்றவை நாற்பதுக்கும் மேற்பட்ட படகுகள். ஜயத்ரதனின் படைகளின் பின்பக்க அணி தெற்கே வளைந்துசென்ற கங்கையின் கரையில் இருந்தது. அஸ்தினபுரியின் அனைத்துப்படகுகளும் எரிந்துகொண்டு செல்வதைக் கண்டதும் அவர்கள் கர்ணன் தோற்றுவிட்டதாக எண்ணிவிட்டனர்” என்றான் கிருஷ்ணன்.
“கங்கைக்கரையில் சித்ரபதம் என்ற படகு சீரமைக்கும் இடம் எங்களுக்குண்டு. அங்கிருந்த அனைத்துப் படகுகளையும் எரியூட்டி நீரில் ஒழுக்க நான் ஆணையிட்டேன்” என்றாள் திரௌபதி. ”அப்படி அஸ்தினபுரியின் படகுகள் செல்வதை ஜயத்ரதனுக்கு சுட்டிக்காட்டிய படைத்தலைவனிடம் என் ஒற்றன் அணுக்கச்சேவகனாக பணிபுரிகிறான்.” கிருஷ்ணன் “அவன் பெயரையும் நான் கேட்டு அறிந்துகொண்டேன்” என்றான். “இந்தப்போரில் காம்பில்யம் தோற்றதென்றால் அதன்பின் ஐங்குலத்திற்கும் நிலமில்லாமலாகும். தோற்பதற்குரிய சூழலே இருந்தது. அதை ஐங்குலத்தவளாகிய நான் ஒப்ப முடியாது.”
“பிழையில்லை” என்றான் கிருஷ்ணன். “மேலும் இப்போரில் தோற்றிருந்தால் அனைத்து இலக்குகளையும் நீங்கள் இழக்கவேண்டியிருக்கும்.” அவர்களின் விழிகள் மீண்டும் சந்தித்தன. சில கணங்கள் அவை நிகர்வல்லமையுடன் அசைவற்று நின்றன. கிருஷ்ணன் விழிகளை விலக்கிக்கொண்டான். திரௌபதி “ஆம், என் இலக்கு முதலில் அஸ்தினபுரி. பின்னர் கங்காவர்த்தம். இறுதியாக பாரதவர்ஷம். நான் அதற்கென்றே பிறந்தவள்” என்றாள். கிருஷ்ணன் சாளரத்தை நோக்கியபடி “இளவரசி, அங்கே துரியோதனனையும் அவ்வாறு சொல்லியே வளர்த்திருக்கிறார்கள்” என்றான்.
“ஆம், ஆகவே என்றேனும் ஒருநாள் அவரை களத்தில் வென்றாகவேண்டும்” என்றாள் திரௌபதி. “அவரை வெல்வதென்பது கொல்வதுதான்” என்றான் கிருஷ்ணன். திரௌபதி ஒன்றும் சொல்லவில்லை. “அவரைக்கொல்வதற்குமுன் அங்கநாட்டரசரையும் கொல்லவேண்டியிருக்கும்.” திரௌபதியின் விழிகளை மீண்டும் அவன் விழிகள் தொட்டன. “ஆம், அதுவும் தேவையாகும்” என்றாள். “யாதவரே, பாரதவர்ஷத்தை ஆளும் கனவில்லாதவர் எவர்? ஜராசந்தன் அவையில் புலவர்கள் அவரை பாரதவர்ஷத்தின் தலைவன் என்றே அழைக்கிறார்காள். விராடனின் மைத்துனன் கீசகனும் அவ்வாறே அழைக்கப்படுகிறான். ஏன், ஜயத்ரதனின் கனவும் அதுவே.”
“அத்தனைபேரின் குருதி வழியாகவே உங்கள் கனவு நிகழ முடியும் இல்லையா?” என்றான் கிருஷ்ணன். “அவர்களுக்கு தோல்வியை ஏற்பது என்னும் வழி உள்ளதே” என்றாள் திரௌபதி. கிருஷ்ணன் புன்னகைத்து “இறப்பு அல்லது அதைவிட இழிவான வாழ்வு… சரிதான்” என்றான். திரௌபதி கால்கள் மேல் கால் ஏற்றிவைத்து கைகளை மார்பில் கட்டிக்கொண்டு தலை திருப்பி சாளரம் நோக்கி அமர்ந்தாள். அந்த அசைவின் உடையொலியை கேட்டபடி அவன் இன்னொரு சாளரம் நோக்கி அமர்ந்தான். இருவருக்கும் நடுவே காற்று கடந்து சென்றது.
“அரசி, இவ்வினாவுக்காக என்னை பொறுத்தருள்க” என்றான் கிருஷ்ணன். “பாரதவர்ஷத்தை ஆள தாங்கள் விழைவது எதற்காக?” திரௌபதி “முக்தியை நாடும் முனிவரிடம் இப்படியொரு வினாவை கேட்டால் அவர் என்ன சொல்வார்?” என்றாள். “அது அவரது இயல்பு என்று. அவர் எய்யப்பட்டுவிட்ட அம்பு என்று. அதுதான் என் மறுமொழியும். யாதவரே, கருவறைக்குள் பார்த்திவப்பரமாணுவாக எழுவதென்பது அம்பு ஒன்று நாணேற்றப்படுவதே. அம்பின் இலக்கை தொடுக்கும் கைகள் முடிவுசெய்துவிட்டன.”
“நான் அதுவன்றி அமைய முடியாது. பிறிதென எதை அடைந்தாலும் என் அகம் நிறைவை அறியாது. அது வெளியே இருந்து எனக்கு அளிக்கப்பட்ட பணி அல்ல. நான் இவ்வுடலுக்குள் ஆன்மாவுக்கு நிகராக அணிந்து வந்தது” என்று திரௌபதி சொன்னாள். “அதை நான் எய்துவேன் என தெளிவாகவே அறிகிறேன். தந்தை தமையர்கள் கொழுநர் மைந்தர் எவரும் எனக்கு முதன்மையானவர்கள் அல்ல. முறைமைகள், அறங்கள், தெய்வங்கள் எவையும் என்னை கட்டுப்படுத்துவதுமில்லை.”
மீண்டும் அவர்களிடையே அந்த ஆழ்ந்த அமைதி உருவாகியது. கிருஷ்ணன் தன் கைகளை ஒன்றுடன் ஒன்று சேர்த்து கால்களை நீட்டினான். மரத்தரையில் அந்த உரசலின் ஓசை எழுந்தது. அவள் இதழ்கள் மெல்ல பிரியும் ஒலி கேட்டது. அவன் நிமிர்ந்து அவளை நோக்கினான். கரிய வட்டமுகத்தில் விழிகள் ஓரம் நோக்க செறிந்த பீலிகளுடன் பெரிய இமைகள் சரிந்திருந்தன. மெல்லெனெ எழுந்து வளைந்த மேலுதடு. உள்ளே செம்மை தெரிய குவிந்த கீழுதடு. சிறிய குமிழ்மூக்கின் கீழே பொன்னிறப்பூமயிர். கன்னத்தில் பொன்பொடியென ஒழுகிய மென்மயிர். தன் நிழல்வளையத்தை தொட்டுத்தொட்டு ஆடிய குழல்சுருள். அவன் விழிகளை விலக்கிக்கொண்டான். தன் நெஞ்சுக்குள் ஆழத்து இருளில் இருந்த படைக்கலத்தின் கூர்முனையின் கருக்கைத் தொட்டு மெல்ல வருடினான்.
“துரியோதனனை நீங்கள் மணம்புரிந்திருந்தால் இருவர் கனவுகளும் இணைந்திருக்குமே என எண்ணினேன் அரசி” என்றான். அவள் இதழ்கள் சற்று மடிந்தன. இயல்பாக “அவரால் உங்களை வெல்ல முடியாது” என்றாள். கிருஷ்ணன் அந்த நேரடி மறுமொழியை எதிர்நோக்காததனால் தத்தளித்து பின் மீண்டு “ஆம், உண்மை” என்று நகைத்தான். “நீங்கள் பாரதவர்ஷத்தை ஆளவிரும்பவுமில்லை” என்றாள். “வெல்லலாம், ஆளமுடியாது அரசி. யாதவர்கள் ஷத்ரியர்களாக ஆக மேலும் சில தலைமுறைகள் தேவை. மண உறவுகள் வழியாகவும் வேள்விகளினூடாகவும் அவர்கள் அதை அடைவதுவரை காத்திருக்கவேண்டியதுதான்.”
திரௌபதி ”பாண்டவர்கள் வெல்வது யாதவர்களின் வெற்றி என்றே நீங்கள் எண்ணுகிறீர்கள்” என்றாள். கிருஷ்ணன் “பார்த்தன் என் நண்பன். அஸ்தினபுரி என் அத்தையின் மண்” என்றான். “உண்மை. ஆனால் துவாரகை பாரதவர்ஷத்தை கொள்ள நினைத்தால் மிக எளிதாக அஸ்தினபுரியை உரிமைகொள்ளமுடியும்” என்றாள். “அது நிகழாது” என்றான் கிருஷ்ணன். சற்றுதிகைப்புடன் “ஏன்?” என்றாள். “அவ்வண்ணம் நிகழாது என்பதே ஊழ்” என்ற கிருஷ்ணன் ”நான் நாளை அஸ்தினபுரிக்கு செல்கிறேன். அறிந்திருப்பீர்கள்” என்றான்.
“அதன்பொருட்டே உங்களை பார்க்க விழைந்தேன்” என்றாள் திரௌபதி. ”உங்களிடம் யாதவப்பேரரசி என்ன சொன்னார்கள் என்பதை அறிவதொன்றும் கடினமானதல்ல. அவர்கள் ஏங்குவது அஸ்தினபுரியின் மணிமுடிக்காக மட்டுமே. அது அவர்கள் இளமையில் என்றோ கொண்ட கனவு. மதுவனத்தில் கன்றுமேய்க்கும் எளிய யாதவப்பெண்ணாக இருக்கையில் அவர்கள் அதை கேள்விப்பட்டிருக்கலாம். அவர் அரசு சூழ்வதெல்லாம் அந்த ஒற்றை இலக்குக்காக மட்டுமே.” கிருஷ்ணன் “அது இயல்புதானே? அவருக்குரிய மணிமுடி அது என அவர் எண்ணுகிறார்” என்றான்.
“நான் அந்த மணிமுடியை விரும்பவில்லை” என்றாள் திரௌபதி. “அங்கு நீங்கள் பங்குபேசுகையில் சொல்லாடல் எத்திசையில் சென்றாலும் இறுதியில் அது பாதி நாட்டை அடைவதை நோக்கித்தான் வரும் என அறிவேன். எனக்கு அஸ்தினபுரி வேண்டியதில்லை. மறுபக்கம் யமுனைக்கரையில் யாதவர் சூழ்ந்த நிலத்தை கேட்டுப்பெறுக! அங்கே நானே எனக்கென ஒரு நகரத்தை அமைக்கவிழைகிறேன்.” கிருஷ்ணன் ”அஸ்தினபுரியின் மணிமுடி என்பது ஓர் அடையாளம். ஒரு பெருமரபு…” என்றான்.
“ஆனால் அதுவே எனக்கு தளையாகத் தெரிகிறது. ஒவ்வொருவரும் அதை தேவயானியின் மணிமுடி என்கிறார்கள். நான் இரண்டாம் தேவயானியாக அறியப்பட விழையவில்லை. என்ன இருந்தாலும் அவள் அசுரகுல குருவின் மகள். நெருப்பில் எழுந்து வந்த தபதியுடன் என்பெயர் இணைக்கப்படுவதையும் விரும்பவில்லை. நான் முதலாமவள். நிகரற்றவள். குடிகளிடையே நான் அவ்வாறுதான் அறியப்படவேண்டும்” என்றாள் திரௌபதி.
கிருஷ்ணன் புன்னகையுடன் “புரிந்துகொள்கிறேன்” என்றான். “அஸ்தினபுரி இனிமேல் வளரமுடியாது. நூற்றாண்டுகளுக்கு முன் ஹஸ்தி அதை அமைக்கையில் அங்கே கங்கை ஓடியது. இன்று அது முழுக்கமுழுக்க வண்டிப்பாதையால் மட்டுமே இணைக்கப்படுகிறது. ஹஸ்தியின் பெயருக்காகவே அங்கே அந்நகரை வைத்திருக்கின்றனர். யாதவரே, இனிமேல் பெருநகராக ஆகக்கூடியவை வணிகநிலைகளே. ஏனெனில் இனிமேல் போர்க்களங்கள் அல்ல அங்காடிகளே அரசியலை இயற்றப்போகின்றன. யமுனைக்கரையில் நான் அமைக்கவிருக்கும் தலைநகர் பெருந்துறைமுகமாகவே இருக்கும். அங்கே அங்காடிகளே முதன்மையாக திகழும்.”
“மேலும் மக்கள் புதியனவற்றை விழைகிறார்கள். புதிய நிகழ்வுகள் புதிய இடங்கள் புதிய கதைகள்… அவற்றை அவர்களுக்கு அளிக்கவிழைகிறேன். இனிமேல் சிலகாலம் பாரதவர்ஷம் அந்தப்புதிய நகர்குறித்து மட்டுமே பேசவேண்டும். சூதர்கள் வழியாக பாரதவர்ஷம் முழுக்க அதன் புகழ் சென்றுசேரவேண்டும். அதனூடாக நான் பாரதவர்ஷத்தை ஆளத்தகுதியானவள் என அனைவரும் அறியட்டும். அதன் பின்னர் என் படைகள் எழுகையில் ஒவ்வொரு இடத்திலும் மக்கள் என்னை வாழ்த்துவார்கள்” என்ற திரௌபதி இருமுறை காலால் தரையை தட்டினாள். வாயில் திறந்து ஏவலன் எட்டிப்பார்த்தான். அவள் தலையை அசைத்தாளா விழியை மட்டும் அசைத்தாளா என்று கிருஷ்ணன் ஐயுற்றான்.
ஏவலன் கொண்டுவந்த இரு வெள்ளிக்குழாய்களில் ஒன்றைத் திறந்து உள்ளிருந்து சுருட்டப்பட்ட பட்டுத்துணிச்சுருள் ஒன்றை எடுத்து அவனிடம் நீட்டினாள். ”நகர் அமைய நான் கோரும் இடம் இது யாதவரே. சூழ இருக்கும் நிலங்களை மஞ்சள்நிறத்தில் குறித்திருக்கிறேன். தட்சிணகுருநிலமாக அவை அமையட்டும்.” கிருஷ்ணன் அந்த வரைபடத்தை கூர்ந்து நோக்கினான். “சூழ நாநூற்றி எழுபத்தாறு யாதவர் ஊர்கள் உள்ளன. பன்னிரு படித்துறைகள். மையமாக அமையும் இடம் இது. இங்கிருந்து கங்கைக்கு யமுனை வழியாக எட்டுநாழிகையில் சென்றடைய முடியும்” என திரௌபதி சொன்னாள்.
“ஆனால் இந்த இடத்தை நான் அறிவேன். இது யமுனைக்கரையின் மிகப்பெரிய மண்மேடு. நீர்விளிம்பில் இருந்து நூற்றைம்பது வாரைக்குமேல் உயரமுள்ளது.” என்றான் கிருஷ்ணன். “நூற்றி எழுபத்தெட்டு வாரை” என்றாள் திரௌபதி. “ஆனால் நீர்விளிம்பை ஒட்டி இருபது துறைமேடைகள் அமைக்கவும் முந்நூறு வாரை அகலமும் அறுநூறுவாரை நீளமும் கொண்ட அங்காடிமுற்றம் ஒருக்கவும் இடமிருக்கிறது. இருபக்கமும் இரு பெரும் சாலைகளை அமைத்தால் குன்றுக்குப்பின்னால் உள்ள பெரிய செம்மண் நிலம் நோக்கி செல்லமுடியும். அங்கே பண்டகசாலைகளை அமைக்கலாம்” என்று திரௌபதி சொன்னாள்.
“நகரம் குன்றின்மேல் அமையும் போலும்” என்றான் கிருஷ்ணன். அவள் இன்னொரு வெள்ளிக்குழாயைத் திறந்து பட்டுச்சுருளை எடுத்து அவனிடம் நீட்டினாள். அவன் அதை வாங்கி விரித்து நோக்கி “ஆம், எண்ணியவாறே” என்றான். “கலிங்கச் சிற்பியான கூர்மர் அமைத்த வாஸ்துபுனிதமண்டலம்” என்றாள் திரௌபதி. ”என் விழைவுகள் அனைத்தையும் உள்ளடக்கியது. கருங்கல்பாறைகள் அல்ல என்பதனால் குன்றின் அமைப்பை சீராக்குவது எளிது. ஏழு அடுக்குகளாக நகர் அமைந்திருக்கும். ஒவ்வொரு அடுக்கும் தனித்தனிக் கோட்டைகளால் சூழப்பட்டிருக்கும்.”
வரைவை கூர்ந்து நோக்கியபடி கிருஷ்ணன் “நன்று… மிக நுண்மையானது” என்றான். “கற்களை மேலே கொண்டுசெல்லவேண்டியதில்லை” என்றாள் திரௌபதி. “இக்குன்றின்மேல் உள்ளவை செந்நிறமான மென்பாறைகள். முந்தைய மகாயுகத்தில் சேறாக இருந்து அழுந்தி பாறையானவை. செஞ்சதுரமாக வெட்டி எடுக்க ஏற்றவை, கட்டடங்களுக்கு மிக உறுதியானவை என்றார் கூர்மர். சில இடங்களில் பாறையைக் குடைந்தே கோட்டைவழிகளையும் கட்டடங்களையும் அமைக்க முடியும்.”
கிருஷ்ணன் வரைபடத்தை சுருட்டியபடி புன்னகையுடன் “அதை பார்க்கமுடிகிறது. செந்நிற நகரம்” என்றான். அவள் முகம் மலர்ந்து ”ஆம், எங்கும் செந்நிறக்கற்கள் மட்டுமே பதிக்கப்படவேண்டும் என்று ஆணையிட்டிருக்கிறேன்” என்றாள். முதல்முறையாக அவளிடமிருந்த நிமிர்வு அகன்று சிறுமிக்குரிய துள்ளல் உடலில் கூடியது. அதை மீண்டும் விரித்து அவனிடம் காட்டி சுட்டுவிரலால் சுட்டி “இங்கு நான்கு பெரிய காவல்மாடங்கள். நான்கும் செந்நிறக்கற்களால் ஆனவை. இங்கே படிகள் மேலேறும். படிகளுக்கு வலப்பக்கம் தேர்ப்பாதை. இடப்பக்கம் யானைப்பாதை. வளைந்து செல்லும் பாதைகள் ஒன்றுடன் ஒன்று முட்டிக்கொள்ளும் இடங்களில் அவை ஒன்றுக்கு அடியில் ஒன்றென செல்லும்படி பாறையைக் குடைந்து அமைக்க முடியும். ஒவ்வொரு உட்கோட்டைவாயிலிலும் காவல்கோட்டங்களும் வீரர் தங்குமிடங்களும் உண்டு” என்றாள்.
அவளுடைய எழுச்சியை நோக்கி அவன் புன்னகைசெய்தான். “மாடங்கள் குவைமுகடுகள் கொண்டவை. ஆனால் மரத்தாலானவை அல்ல. அனைத்தும் செந்நிறமான கல்லாலும் செந்நிற ஓடுகளாலும் ஆனவை. பீதர்களின் செந்நிற ஓடுகள் சிறந்தவை என்கிறார்கள். துவாரகையில் அவையே முகடுகளாக உள்ளன என்று அறிந்தேன்” என்றாள். “ஆம், நானே சிறந்தவற்றை அனுப்புகிறேன்” என்றான் கிருஷ்ணன். “செந்நிறச் சுவர்களுக்கு பொன்னிறமான கதவுகள் சிறந்தவை. ஆகவே மரத்தாலான கோட்டைக்கதவுகள் முழுக்க வெண்கலக் காப்புறை போடப்படவேண்டும். இந்தக்குன்றின் செறிந்த செம்மண்ணில் சிறந்து வளர்பவை வேம்பும் புங்கமும் மட்டுமே. அவற்றை பல்லாயிரக்கணக்காக கொண்டு வந்து நட்டு வளர்க்கவேண்டும்” என்றாள்.
“ஆம், அவை சிறப்பான தோற்றம் கொண்டிருக்கும்” என்று அவன் அவள் முகத்தை பக்கவாட்டில் நோக்கியபடி சொன்னான். அவள் முகம் கருமைக்குள் செம்மை கொண்டிருந்தது. நாணம் கொண்டவள் போல. “இந்த வழியாகத்தான் அரண்மனைப்பெண்கள் ஆற்றிலிறங்கும் சிறியதேர்ச்சாலை” என்று தன் விரலை வைத்து சுட்டிக்காட்டினாள். காகத்தின் அலகு போல கருமையும் மெருகும் கொண்ட நீண்ட விரல். “இங்கு சில கலவறைகளை அமைக்கலாம். இங்குள்ள பாறை கடினமானது. வெட்டி அமைக்கும் கலவறைகளுக்குள் நீர் செல்லாது என்றார்கள்.”
கிருஷ்ணன் அவள் முகத்தை அத்தனை அண்மையில் பார்ப்பதன் கிளர்ச்சியால் எண்ணங்கள் அழிந்தவனாக இருந்தான். அவளுடைய உடலில் இருந்து இளம்சந்தனமும் செம்பஞ்சும் மணத்தன. கூந்தலில் அகிலும் மல்லிகையும் கலந்த மணம். வியர்வையின் மென்மணம். அதற்கும் அப்பால் மெல்லிய எரிமணம். ”அரசி, தாங்கள் இந்த நிலத்திற்கு நேரில் சென்றீர்களா?” என்றான் கிருஷ்ணன். “இல்லை. ஆனால் இருநூறுமுறைக்கு மேல் சிற்பிகளையும் ஒற்றர்களையும் அனுப்பினேன்.” கிருஷ்ணன் “எப்போது?” என்றான். “நான்காண்டுகளாக” என்றாள் திரௌபதி. “இந்த இடம்தான் குன்றின் உச்சி. இந்தக்குன்று இந்திரகிரி என அழைக்கப்படுகிறது. நெடுங்காலமாக இங்கே உள்ள உச்சிப்பாறையில் இந்திரனுக்கு வருடம்தோறும் வெண்பசுவை பலிகொடுத்து வணங்கியிருக்கின்றனர் யாதவர். யாதவர்களின் அவ்வழக்கத்தை இளமையில் நீங்கள்தான் நிறுத்தியதாக சொல்கிறார்கள்.”
கிருஷ்ணன் “ஆம், ஆனால் பலியின்றி இந்திரவிழா இன்னமும் நிகழ்கிறது” என்றான். திரௌபதி “அதை நாமும் கொண்டாடவேண்டும். இந்த மலைமுடியின் உச்சிப்பாறையில் இந்திரனுக்கு ஓர் ஆலயம் அமைக்கவேண்டும். செந்நிறமான ஆலயம்” என்றாள். “ஏழடுக்குகளாக அது அமையும். அதன் உச்சியில் பறக்கும் கொடியை யமுனையில் வரும் கலங்கள் அனைத்தும் நெடுந்தொலைவிலேயே பார்க்கமுடியும்.”
“அரசி, இதில் உள்ள சிறிய இடர் என்பது குன்றின்மேல் அமைக்கப்படும் நகர்களுக்கு குடிநீர் கொண்டுசெல்வதுதான்” என்று கிருஷ்ணன் சொன்னான். ”துவாரகைக்கும் குடிநீர் போதவில்லை. ஆகவே கோமதிநதியை திசைதிருப்பி கொண்டுவர சிற்பிகளை செலுத்திவிட்டு வந்தேன்.” திரௌபதி எழுச்சியால் உரத்து ஒலித்த குரலில் “ஆம், அதையும் நான் அறிந்தேன். அந்த இடர் இங்கில்லை. இப்பகுதியிலேயே மிகைமழை பெய்யும் இடம் இக்குன்றுதான். முகில்சூழ்ந்த இடம் இது என்பதனால்தான் இதை இந்திரகிரி என அழைத்தார்கள். இங்கே குன்றின் மேல் இந்திரனின் வில்லின் கீழ்நுனி பதிவதாக சொல்கிறார்கள். நூறுமுறைக்குமேல் இங்கே இந்திரவில்லை எங்கள் சிற்பிகளே கண்டிருக்கிறார்கள். இங்கு பெய்யும் மழையை குன்றின்மேல் வெட்டப்படும் நூற்றிப்பன்னிரண்டு சிறிய குளங்களில் தேக்கினாலே போதும். ஒருமுறை அவை நிறைந்தன என்றால் மூன்றாண்டுகாலம் மழை பெய்யாமலிருந்தாலும் மேலே வாழமுடியும்” என்றாள்.
“எங்கள் சிற்பிகள் அங்கே சென்றபோது செந்நிற மண்பாறையின் இடுக்குகள் அனைத்தும் ஊற்றெடுத்து சிற்றோடைகளாக ஆகி யமுனை நோக்கி வழிந்துகொண்டிருந்தன. நூற்றுக்கும் மேற்பட்ட ஓடைகள். அந்த ஓடைகளை முழுமையாகவே வரைந்திருக்கிறார்கள். அவை சென்று இணையும் முடிச்சுகளில் இந்த சிறுகுளங்கள் அமையும்…” திரௌபதி அதை சுருட்டி தன் கைகளில் வைத்துக்கொண்டாள். “நகர் அமையும் இடத்தை காணச்சென்ற அனைவருமே சொன்னது ஒன்றே. முகில்கள்மூடிய குன்று அது. குன்றின் உச்சியை முகில்களில் மிதந்து நிற்பதாகவே அவர்கள் விவரித்தார்கள். அவ்வண்ணமென்றால் இந்நகரமும் வெண்முகில்களின் மேல் அமைந்ததாகவே தெரியும். ஆகவே நகருக்கு நான் பெயரிட்டுவிட்டேன். இந்திரப்பிரஸ்தம்.”
கிருஷ்ணன் “உகந்த பெயர். அப்பெயரையே நானும் எண்ணினேன்” என்றான். “பாரதவர்ஷத்தில் இந்திரனுக்குரிய பெருநகர் இதுவே” என்றாள் திரௌபதி. “இங்குள்ள ஒவ்வொருவரும் அரசன் என்றால் எண்ணுவது இந்திரனின் பெயரை மட்டுமே. இந்திரனின் நகர் என்பது அவர்களை ஆளும் இடம் என்ற எண்ணமே அவர்கள் ஒவ்வொருவரின் எண்ணத்திலும் எழும்.” அவள் விழிகளின் கனவை நோக்கியபடி கிருஷ்ணன் “உண்மை” என்றான். அவள் “நகரின் தோரணப்பெருவாயில் யமுனை நோக்கி அமைந்திருக்கும். வலப்பக்கம் காமதேனுவும் இடப்பக்கம் ஐராவதமும் அதை ஏந்தி நிற்கும். உச்சி வளைவின் இடப்பக்கம் அஸ்தினபுரியின் அமுதகலசமும் வலப்பக்கம் பாஞ்சாலத்தின் வில்லும் அணிசெய்ய நடுவே இந்திரனின் மின்னல்படையின் வடிவம் இருக்கும். தட்சிணகுருநாட்டின் முத்திரை அதுவே” என்றாள்.
“அரசி, இதற்கான செல்வத்தையும் குறித்துவிட்டீர்களா?” என்றான். “ஆம், அத்துடன் இந்நகரை மிக விரைவாக அமைக்க எண்ணுகிறேன். விரைவென்பது மும்மடங்கு செலவுகளை கோருகிறது. பாஞ்சாலம் எனக்களிக்கும் பெண்செல்வம் என்னிடம் உள்ளது. அஸ்தினபுரியின் கருவூலத்தில் பாதியை அடையமுடியும். அவையே நகருக்கு போதுமானவை. விஞ்சும் எனில் துவாரகை அதை கடனாக அளிக்கட்டும். பத்துவருடத்தில் அதை திருப்பி அளிக்க முடியும்.”
“மொத்தச்செல்வத்தையும் ஒரு நகரை அமைக்கச் செலவிடுவதை அரசர்கள் செய்வதில்லை” என்றான் கிருஷ்ணன். அவள் சொல்லப்போவதை அறிந்திருந்தான். “இப்போது பாண்டவர்களுக்கு படைகள் தேவையில்லை யாதவரே. முதியமன்னரும் பிதாமகரும் உயிருடன் இருப்பதுவரை போர் நிகழாது. இந்நகரை நான் மூன்றாண்டுகளில் கட்டி முடிக்கவேண்டும். எத்தனை விரைவாக அமைக்கிறேனோ அத்தனை நன்று. பிந்தும்தோறும் இதை அமைக்கும் வாய்ப்பு குறைகிறது…” என்றாள் திரௌபதி. “இது யாதவர்களின் இன்னொரு பெருமிதக்குறியீடு. எனவே அவர்களிடமிருந்தும் செல்வத்தை திரட்டமுடியும்.”
“பங்குச்செல்வத்தைக்கொண்டு படைதிரட்டாமல் நகர் அமைப்பதை என் வீண் ஆணவம் என்றே துரியோதனர் எண்ணுவார். அந்நகரை எப்படியானாலும் அவர்தான் அடையப்போகிறார் என கற்பனைசெய்வார். இந்நகரத்துக்கான செல்வம் செலவல்ல, முதலீடு. இதன் புகழே இதைநோக்கி வணிகர்களை ஈர்க்கும். உண்மையில் வணிகர்கள் எவரும் ஒரு துறைநகரின் நல்வாய்ப்புகளை எண்ணிக்கணக்கிட்டு அங்கே செல்வதில்லை. அதன் புகழே அவர்களை ஈர்க்கிறது. அது வணிகமையமாக ஆகிவிட்டால் அதுவே ஈர்ப்பாக ஆகும். அதன்பின் வாய்ப்புகள் இயல்பாகவே பெருகும். வணிகச்செல்வத்தால் பத்தாண்டுகளில் நகரை அமைக்கும் செலவை மீட்டுவிடமுடியும். அதைக்கொண்டு படைகளையும் அமைக்கமுடியும். அப்போது உண்மையில் படைகள் தேவைப்படும்.”
கிருஷ்ணன் புன்னகையுடன் “நன்று. மெல்ல துவாரகையின் சங்குசக்கரத்தையும் கருடனையும் மக்கள் மறக்கக் கூடும்” என்றான். இருவர் விழிகளும் ஒன்றை ஒன்று சந்தித்தன. கிருஷ்ணன் எழுந்தபடி “உண்மையில் அது யாதவர்களுக்கு நன்றே என்பேன். இந்திரன் யாதவர்களின் ஆழ்நெஞ்சில் வாழும் பண்டைப்பெருந்தெய்வம். இந்திரன் மைந்தனால் காக்கப்படும் இந்நகரம் மக்களால் விரும்பப்படும். அதை சூரியனும் வாழ்த்தட்டும்” என்றான்.
திரௌபதி மிக இயல்பாக “சூரியன் விண்ணுக்குக் கட்டுப்பட்டவன் அல்லவா?” என்றபடி தானும் எழுந்து “நான் விழைவதை சொல்லிவிட்டேன் யாதவரே. தங்களிடம் இதையே கோருகிறேன்” என்றாள். “அவ்வண்ணமே ஆகட்டும்” என்று கிருஷ்ணன் தலைவணங்கி “நான் விடைகொள்கிறேன்” என்றான். அவன் நடந்து சென்றபோது ”துவாரகையில் இந்திரனுக்குரிய ஆலயங்கள் எத்தனை உள்ளன?” என்றபடி திரௌபதி பின்னால் வந்தாள். “ஏதுமில்லை. இந்திரன் அங்கே ஆலயங்களின் திசைத்தேவன் மட்டுமே” என்றபடி கிருஷ்ணன் வெளியே சென்றான். அவளும் தொடர்ந்தாள்.