செவ்வியல்,ஒருகடிதம்

அன்புள்ள ஜெ,

செவ்வியல் என்பதே மானுட மனத்தின், வரலாற்றின் இருட்டையும் கசப்பையும் அதிகமாகச் சொல்லக்கூடியதாகவே இருக்கும். அங்கதமே அதன் மையச்சுவையாக திரண்டு வரும்

அப்படியா? நீங்கள் முன்பு எழுதியிருந்த ஒரு கட்டுரையில் வேறுமாதிரி சொல்லியிருந்தீர்கள்.. நவீனத்துவம் மானிட அகத்தின் இருட்டறைகளுக்குள்ளேயே சஞ்சரிக்கிறது, அதையே திருப்பித் திருப்பிப் பேசுகிறது. ஆனால் காம,குரோத,மோகங்களாகிய இந்தத் திரைகளை விலக்கி உள்ளே சென்றால் அதன் சாரமாக இருப்பது ஆனந்தம் மட்டுமே. நவீனத்துவம், பின்நவீனத்துவம் போன்ற கோட்பாடுகளையெல்லாம் தாண்டி இந்திய தத்துவ ஞானத்தின் முடிபும், இந்திய இலக்கியத்தின் சாரமான விஷயமும் இது தான் என்று சொல்லியிருந்தீர்கள் (பிரேம்சந்தின் லட்டு சிறுகதையையும் அதில் குறிப்பிட்டிருந்ததாக ஞாபகம்).

நீங்கள் இப்போது சொல்வது அதற்கு முற்றிலும் எதிரிடையாக இருக்கிறது.

அன்புடன்,
ஜடாயு

அன்புள்ள ஜடாயு,

முற்றிலும் எதிர்டையாக அல்ல, பொதுப்படையாக. இது உலகச்செவ்விலக்கியங்களை கருத்தில்கொண்டு நான் சொன்னது. உலகளாவிய தளத்தில் எழுதப்பட்ட செவ்விலக்கியங்களில் மானுட வாழ்க்கையின் மீது திறக்கும் உயர்தர அங்கதமே மையமாக திரண்டுவருகிறது- கிரேக்கநாடகங்கள் முதல் ஷேக்ஸ்பியர் வரை அப்படித்தான்

ஆனால் இந்திய செவ்விலக்கியங்களை அப்படிச் செல்ல்ல முடிவதில்லை. அதையே இன்னொரு சந்தர்ப்பத்தில் சொல்லியிருப்பேன். மகாபாரதம் கம்பராமாயணம் போன்ற பேரிலக்கியங்களில் உயர் அங்கதம் முக்கியமான இடத்தை வகிக்கிறது. ஆனால் அதற்கப்பாலும் செல்லும் ஓர் அம்சம் உண்டு. அது ஆன்மதரிசனம் அளிக்கும் ஆனந்தம். நாம் நம்மை முழுமையாக அறிவதன் நிறைவு

காவிய இலட்சணத்தில் இது இவ்வாறு சொல்லப்படுகிறது. நவரசங்களும் ஒரு பேரிலக்கியத்தில் முறையாக முயங்கி வரும். ஆனால் அவை முழுமையாகச் சமன்செய்யப்படும்போது சாந்தமே சாரமாக மேலோங்கி நிற்கும். அந்த சாந்தமே ஆனந்தம் என்பது

பொதுவாக செவ்விலக்கியம் என்ற சொல்லை பயன்படுத்தும்போது அவற்றுக்குரிய பொதுவான அர்த்தத்தையே கொள்கிறோம், அதற்குள் இந்தியச் செவ்விலக்கியங்களுக்கு தனியான ஒரு தளம் உண்டு என்ற புரிதலும் இருப்பது நல்லது

ஜெ

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம்,விவாதம்
அடுத்த கட்டுரைசாதி பேசலாமா?