”இன்று எத்தனை ஆயிரம் மக்கள் இந்த விஷ்ணுபுரத்து சன்னிதியில் நின்று கண்ணீர் மல்கி உடல் புல்லரித்து பரவசம் அடைகின்றனர். அந்தக் கணங்களில் அங்கிருந்த மனங்கள் எல்லாம் உன்னதமான உணர்வுகளால் நிரம்பி இருந்தன. ஆனால் அது சில கணங்களுக்கு மட்டும்தான். அவர்கள் உடனடியாக மீண்டு விடுவார்கள். தங்கள் ஆழ்மனதின் இருட்டால் வழிநடத்தப்படும் உலகுக்குத் திரும்பிச் செல்வார்கள். அப்படியானால் அந்த கணநேரததுப் பரவசத்திற்கு என்ன அர்த்தம்? தன்மீது அதிருப்தியும் அருவருப்பும் கொண்டவர்கள் மனிதர்கள் அவர்கள் தங்களையே விரும்ப விழைகிறார்கள். அதற்காக அவர்கள் உருவாக்கிக் கொண்ட மாய வித்தைகள்தான் கலையும் காவியங்களும். அவற்றின் மூர்த்திகரணமே இந்தப் பேராலயம்”
(சோமரிடம் பிங்கலனின் பகிர்தல்)
அன்பு ஜெயமோகன்,
மனிதகுலத்திற்கு இன்றுவரை புதிராக இருக்கும் சொல் கடவுள். கடவுளை நம்பும், நம்பாத குழுவினர்களுக்கு இடையே பந்தாடப்பட்டுக் கொண்டே இருக்கிறார் அவர். கடவுளைத் தீவிரமாக வலியுறுத்த முயலும் குழுக்களுக்கு அவர் புனிதமாக இருக்க, எதிர்க்குழுக்களுக்கோ அவர் அபுனிதமாக இருக்கிறார். கடவுளை நம்பும் குழுக்களிலும் பல்வேறு உபகுழுக்கள். ஒரு உபகுழுவின் கருத்தை மற்றொரு உபகுழு ஒப்புக்கொள்வதில்லை. கடவுளை நம்பாத குழுக்களிலும் அத்தகைய போக்கைக் காணலாம். எப்படியோ, நவீனத்தொழில்நுட்பத்தின் உச்சத்தை நாம் அனுபவித்துக்கொண்டிருக்கும் இவ்வேளையிலும் அச்சொல்லின் மீதான ஈர்ப்பு குறையாமலேயே இருக்கிறது. ”கடவுள் இருக்கிறாரா, இல்லையா” எனும் கேள்விக்கான பதிலைக் கூட்டம் கூட்டமாக நாம் தேடிக்கொண்டுதான் இருக்கிறோம்.
கடவுள் என்பவர் யார், அவர் எப்படிப்பட்டவர் என உண்மையில் அறிய விரும்புவதில்லை நாம். சொல்லித் தரப்பட்டிருக்கும் அனுபவங்களை நம் அனுபவங்கள் என போலியாகப் பாவித்துக் கொண்டோ அல்லது அவ்வனுபவங்களை அறிவுகொண்டு முற்றிலுமாக நிராகரித்தோ நம் தரப்பை முன்வைக்கிறோம். இரண்டு நிலைகளிலும் நம்முடைய பார்வை என்பது நமக்கு முன்பே தரப்பட்டிருக்கும் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டே அமைந்திருக்கிறது. கடவுள் எனும் சொல் குறித்த நம் தனிப்பட்ட அனுபவத்தைப் பற்றிக் கவலைப்படுவதே இல்லை நாம். மேலும், அச்சொல் குறித்து நம் ஆய்வைத் தனியாக மேற்கொள்ளவும் துணிவதில்லை.
ஆத்திகர்கள் கடவுள் என்று ஒருவர் இருப்பதாகவும் அவர்தான் எல்லாவற்றையும் தீர்மானிப்பதாகவும் நம்புவார்கள். ஆனால், அந்நம்பிக்கையில் நூறுசதவீதம் உறுதியாய் இருக்க மாட்டார்கள். எப்படி என்றால், கடவுள்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது என நம்பும் அவர்கள்தான் சோதிடம், பரிகாரம், வாஸ்து, எண்கணிதம், செய்வினை போன்றவற்றிலும் தீவிரமாக இருப்பர். உண்மையாக கடவுளிடத்தில் நம்பிக்கை கொண்டிருக்கும் ஒருவர் எக்காலத்தும் அவரைத்தவிர வேறு எதையும் நம்பக்கூடாது. ஆக, ஆத்திகர்களில் பெரும்பாலானோர் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாய் இல்லை என்பது புரிகிறது.
நாத்திகர்களுக்கு வருவோம். கடவுள் என ஒருவர் இல்லை, அவர் எதையும் தீர்மானிப்பதில்லை எனத் தொடர்ந்து பேசும் அவர்கள் முழுக்க முழுக்க ஆத்திகத்தை எதிர்ப்பதையே தங்கள் கடமையாகக் கொண்டவர்கள். ஆத்திகர்களின் செயல்பாடுகள் எதுவாய் இருப்பினும், அதற்கு எதிரான ஒன்றை முன்வைப்பதே நாத்திகம் என்பதாக பார்வையை இன்றளவும் அவர்களில் பெரும்பாலானோர் முன்வைத்து வருகின்றனர். ஆக, நாத்திகர்களின் கருத்தியலும் ஆத்திகத்தைச் சார்ந்தே அமைகிறது. எச்சூழலிலும் ஆத்திகத்தை எதிர்ப்பதே அவர்களின் பணியாக இருக்கிறது.
இங்கு நமக்கு ஒரு கேள்வி எழுகிறது. நாம் ஆத்திகனாக இருப்பதா அல்லது நாத்திகனாக இருப்பதா? ஏதாவது ஒரு கருத்தியலுக்குள் நம்மை முடக்கிக் கொள்ளாவிட்டால் பைத்தியம் பிடித்த மாதிரியும் இருக்கிறது. மண்டைக்குள் கூச்சல் அதிகரிக்கவும் செய்கிறது. இங்குதான் நாம் விலகிநின்று யோசிக்க வேண்டிய தேவை எழுகிறது. முதலில் ஆத்திகர்களின் தரப்பைக் கவனிப்போம். ஆத்திகம் தொடர்ந்து ’கடவுளை’ நம்புவதாகச் சொல்லிக் கொண்டும், ’ஒழுக்க வாழ்வியலை’ வலியுறுத்திக் கொண்டும் புனித அடையாளங்களை வேண்டி நிற்கிறது. அவ்வடையாளங்களுக்காக எது வேண்டுமானாலும் செய்யலாம் எனவும் நம்மைத் தூண்டுகிறது. ’அடையாளங்களே’ முக்கியம் எனவும் அது வலியுறுத்திக் கொண்டு இருக்கிறது. நாத்திகத்தின் பக்கம் வருவோம். அது தொடர்ந்து ‘கடவுளை நம்பாதே’ எனச் சொல்லிக்கொண்டும், ‘ஒழுக்க வாழ்வியலை மீறுவதை’ வலியுறுத்திக் கொண்டும் அபுனித அடையாளங்களை வேண்டி நிற்கிறது. அபுனித அடையாளங்களுக்காக எந்நிலைவரை வேண்டுமானாலும் செல்லலாம் எனவும் நம்மை வற்புறுத்துகிறது. ’புனித அடையாளங்களை நிர்மூலமாக்கலே’ முக்கியம் எனவும் அது திரும்பத் திரும்ப கோரிக்கை வைக்கிறது. இப்போது யோசிப்போம். எது சரியானது ஆத்திகமா, நாத்திகமா? மறுபேச்சே தேவையில்லை. இரண்டுமே நம்மைக் குழப்பி திசைமாற்றி விடுவதோடு கடவுள் எனும் சொல்லின் உண்மையான பொருளில் இருந்து வெகுதூரம் கூட்டிச்சென்று விடுகின்றன. இங்கு நாம் என்ன செய்ய? கடவுள் எனும் சொல்லைக் குறித்து தனியே சிந்திப்போம். அதுவே நம்மை ஓரளவு தெளிவாக்கும்.
கடவுள் எனச் சொல்லப்படும் குறியீட்டுக்கான பொருளை அறிய விரும்பும் ஒருவன் தனியேதான் பயணிக்க வேண்டும். இங்கு குறியீடு முக்கியமே அன்று; குறியீடு உணர்த்தும் அர்த்தமே முக்கியம். துவக்கத்திலேயே இன்னொன்றையும் புரிந்து கொள்வது முக்கியம். குறியீடு பொதுவாக இருந்தாலும் அதை அணுகுபவரின் மனநிலைக்குத் தகுந்தாற்போல அதன் ’அர்த்தங்கள்’ மாறுபடும். உதாரணமாக, பூ என்பது பொதுவான குறியீடு. பூ என்றவுடன் ஒருவனுக்கு வாசனை ஞாபகம் வரலாம், இன்னொருவனுக்கு அழகான இதழ்கள் ஞாபகம் வரலாம், மற்றவனுக்கு மயக்கும் நிறம் ஞாபகம் வரலாம். ’பூ’ எனும் குறியீடு இங்கு ‘வாசனை’, ‘அழகிய இதழ்கள்’, ‘மயக்கும் நிறம்’ போன்ற அர்த்தங்களைக் தூண்டி இருக்கிறது; இவ்வளவுதான் அர்த்தங்கள் என்றில்லை, அவை இன்னும் அதிகரிக்கலாம். மாறாக, பொதுவான நிலையான அர்த்தத்தை பூவுக்கு நாம் அளித்துவிடவே முடியாது. அப்படி அளித்தாலும் அது நிலைக்காது. கடவுளைத் தேடுகிறவன் அக்குறியீட்டை ஒட்டி ’பொதுவான அர்த்தத்தை’த் தர முயலவே கூடாது. வேண்டுமானால் குறியீட்டையும், அதனுடனான தனது அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளலாம். அதைவிடுத்து, தனது அனுபவங்களை மற்றவர் மேல் திணிப்பது அறிவுடைமை ஆகாது. காலங்காலமாக கடவுள் அறிதலில் இப்புள்ளியில்தான் நாம் விழிபிதுங்கிக் கொண்டிருக்கிறோம். ”தன்னந்தனி நின்றது தானறிய”, “யாமோதிய கல்வியும் எம் அறிவும் / தாமே பெற வேலவர் தந்ததினால்” போன்ற தொடர்களில் அருணகிரிநாதர் தனித்துத் தேடுவதையே முன்வைக்கிறார்.
கடவுள், கோவில், வழிபாடு என எல்லாமே குறியீடுகள்தான். அவை பற்றி நமக்களிக்கப்பட்டிருக்கும் ‘பொது அர்த்தங்கள்’ கொண்டு மட்டுமே அவற்றை அணுகினால் மாபெருஞ்சிக்கலில் மாட்டிக்கொள்ள நேரிடும். கடவுள், கோவில், வழிபாடு போன்றவை நமக்களிக்கும் ‘அர்த்தங்களை’க் கண்டடைவதே நமக்கான அடிப்படை. இங்கு சிலர் அக்குறியீடுகளைப் பற்றி எனக்கு அக்கறையில்லை என விலகிக்கொள்ளவும் செய்யலாம். சமயம் என்கிற சொல் கடவுள், கோவில், வழிபாடு போன்ற குறியீடுகளை உள்ளடக்கியது மட்டுமன்று; அவை கடந்தும் நிற்பதுதான். சைவத்தில் நாற்பதங்கள் என சரியை, கிரியை, யோகம் மற்றும் ஞானத்தைச் சொல்வார்கள். சரியை மற்றும் கிரியை இரண்டுமே புறத்துக்கு(குறியீடுகளை மட்டுமே முன்வைப்பவை) முக்கியத்துவம் கொடுப்பவை. யோகம், ஞானம் இரண்டுமே அகத்துக்கு(குறியீடுகளைக் கொண்டு நாம் பெறும் அனுபவங்களுக்கு) முக்கியத்துவம் கொடுப்பவை. சரியை, கிரியைகளுக்கு நேர்மாறான யோகம், ஞானத்தை இணைத்திருப்பதே சமயம். சமயம் எதையும் விலக்குவதில்லை; எல்லாவற்றையும் உள்ளடக்கியே அது இருக்கிறது. திரும்பவும் நாம் நினைவில் கொள்வோம். குறியீடுகள் முக்கியமே அன்று. அவற்றின் வழியாக நாம் பெறும் ’அர்த்தங்களே’ முக்கியமானவை.
என்னைப் பொறுத்தவரை விஷ்ணுபுரம் என்பது நாவல் அன்று. புறக்கருத்தியல்களில் சலித்துச் சோர்வுற்ற உங்களின் தனிப்பட்ட அகப்பயணம். அப்பயணத்தில் நீங்கள் பெற்ற அனுபவங்கள் எங்களுக்கானவை அன்று. என்றாலும், அவ்வனுபவங்களைக் காணும்போதுதான் எங்களின் அகமும் தூண்டப்படுகிறது. தனக்குள் வாசகனைச் சிறைபடுத்திவிடும் படைப்புகளுக்கு மத்தியில் தன்னிடமிருந்து அவனை விடுவிக்கிறது விஷ்ணுபுரம். அவ்விடுதலையில் தனக்கான அகப்பயணத்திற்குத் தயாராகி விடுகிறான் வாசகன். அதுவே அந்நாவலின் வெற்றி.
முருகவேலன்,
படைவீடு பண்பாட்டு அறக்கட்டளை,
கோபிசெட்டிபாளையம்.