விஷ்ணுபுரம்,விவாதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு…

தங்களின் விஷ்ணுபுரம நாவல் படித்தேன்…

மூன்று நாட்களில் படித்து முடித்தேன்…

நல்ல அனுபவத்தை தந்தது நாவல்… அதை பற்றிய என் கருத்தை இந்த இணைப்பில் காணலாம்..

http://pichaikaaran.blogspot.com/2010/07/matrix-chaos.html

மீண்டும் இன்னொரு முறை படித்து விட்டு விரிவாக எழுதுவேன்..

தங்கள் முன் சில கேள்விகள்..

1 விஷ்ணு புரம் என்ற தலைப்பு, இது மத ரீதியான நூல் என்ற அடையாளத்தை தருவதால், என்னை போல பல வாசகர்களை நெருங்க முடியாமல் போகிறது … ஒரு தத்துவ நூலான இதற்கு, பின் தொடரும் நிழலின் குரல் என்பது போல செகுலர் பெயரை வைத்து இருப்பதுதான் பொருத்தமாக இருந்துஇருக்கும்..உங்கள் கருத்து என்ன ?

2 பின் தொடரும் குரல் நாவலில் இருந்த அளவுக்கு வடிவ அமைப்பு நேர்த்தி இதில் இல்லை என தோன்றுகிறது… உதாரணமாக பி தொ குரலில் இருந்த குறுநாடகம் நன்றாக இருந்தது..இது தட்டையாகஇருக்கிறதே?

3 மன்னர்கள், ஆழவார்கள், வைதீகர்கள் என அனைவரையுமே எதிர்மறையாக காட்டி இருப்பது நெருடலாக இருக்கிறது..

4 ஞான சபை விவாதத்தில் தமிழ் மரபான சித்தர் மரபு சார்ந்த விவாதம் இல்லாததது ஒரு குறை. ஏன் விட்டு போனது ?

5 அத்வைதம், த்வைதம் , விஷிஷ்டத்வைதம் போன்ற வார்த்தைகளியே காணவில்லை … மருபிரப்ப்பு, ஊழ் போன்றவற்றை விரிவாக அலசவில்லையே .ஏன் ?

அன்புடன்,
ரவி

அன்புள்ள ரவி

ஒரு நாவல் எழுதி முடித்ததுமே எழுத்தாளன் வேலை முடிந்துவிட்டது. நான் ஒரு வாசகனாக ,வேண்டுமானால் விமர்சகனாக அதற்குள் நுழைய முடியும். அவ்வளவே. அவ்வாறாக என் பதில்கள் இவை.

1. பொதுவாக நான் எழுத்தாளன் அரசியல்சரிநிலைகளைப் பற்றி கவலைப்படக்கூடாது என்ற கருத்து உள்ளவன். சமகாலத்தில் எவையெல்லாம் மனிதாபிமானம், முற்போக்கு ஒழுக்கம் என்று கருதப்படுன்றனவோ அவற்றை ஏற்று அவற்றுக்கேற்ப சிந்திப்பவன் அசல் சிந்தனையாளனும் அல்ல. அசல் படைப்பாளியும் அல்ல. படைப்பாளிக்கு அவனுடைய அனுபவங்களும், அகத்தேடலும் மட்டுமே வழிகாட்ட வேண்டும். அப்போதுதான் அது உண்மையான வாசகனின் அந்தரங்கத்தைச் சென்று தொட முடியும். அப்படி இல்லாமல் காற்றுக்கேற்ப பாய்விரிக்கும் எழுத்துக்கள் மேலோட்டமான சமகால முக்கியத்துவத்தை மட்டுமே அடைய முடியும். விஷ்ணுபுரம் வந்து 13 வருடங்கள் ஆகின்றன. அன்றுள்ள அரசியலே இன்றில்லை. இன்னும் ஐம்பது வருடத்தில் இன்றுள்ள அரசியலின் சுவடே இருக்காது. நூறு வருடத்தில் இக்காலகட்டத்தின் வரலாறுகூட எப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது. இலக்கியங்கள் அப்போதும் இருக்கும் – விஷ்ணுபுரம் போன்ற செவ்வியல் ஆக்கங்கள்

நீங்கள் சொல்வது சரி, மேலோட்டமான வாசகர்களில் கணிசமானோர் அந்த தலைப்பை மட்டுமே வைத்து ஓர் அபிப்பிராயத்தை உருவாக்கி அதை மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதற்கு நான் ஒன்றும் செய்யமுடியாது, அவர்கள் என் வாசகர்கள் அல்ல அல்லவா? வாசிக்காவிட்டால் இழப்பு அவர்களுக்கு மட்டுமே.

2 என் நோக்கில் பின்தொடரும் நிழலின் குரலை விட கச்சிதமான வடிவ நேர்த்தி – ஒரு சொல்கூட மிகாத தன்மை- உடையது விஷ்ணுபுரம். அடுத்து அந்த கச்சிதம் கொற்றைவையில் மட்டும்தான் சாத்தியமாகியது. விஷ்ணுபுரத்தின் எல்லா உறுப்புகளும் பிற உறுப்புகளுடன் ஒரே வலையாக பின்னியுள்ளன. தட்டையான, பொதுவான சித்தரிப்புகள் ஏதுமில்லை. காரணம் அதன் வடிவம் புராணங்களின் வடிவம். அதன் அழகியல் செவ்வியலின் அழகியல்

3 முழுமையாக எதிர்மறையாக காட்டவில்லை. ஆனால் பொதுவாக ஒன்றுண்டு செவ்வியல் என்பதே மானுட மனத்தின், வரலாற்றின் இருட்டையும் கசப்பையும் அதிகமாகச் சொல்லக்கூடியதாகவே இருக்கும். அங்கதமே அதன் மையச்சுவையாக திரண்டு வரும். விஷ்ணுபுரமும் அப்படித்தான். அப்படி அது நிகழ்ந்தது. அது எனக்கே ஆச்சரியம். அதை முன்னுரையிலேயே சொல்லியிருந்தேன்.

3 கவனித்து படியுங்கள். விஷ்ணுபுர ஞானசபை விவாதங்களின்போது அனைத்து ஞானத்திற்கும் உச்சமாகக் காட்டப்படுவது சித்தர்களின் ஞானமே.

4 அத்வைதம் 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. விஷிஷ்டாத்வைதம் 13 ஆம் நூற்றாண்டு. துவைதம் 14 ஆம் நூற்றாண்டு. இந்தவிவாதங்கல் கிபி 5 ஆம் நூற்றாண்டில் நிகழ்கின்றன

5. ஞானசபை விவாதம் பிரபஞ்ச உற்பத்தி குறித்த அடிப்படை வினாவைச்சுற்றி மட்டுமே எழுகிறது. அதாவது ரிக்வேதத்தின் சிருஷ்டி கீதம் எழுப்பும் கேள்விகளைப்பற்றி மட்டும்

நன்றி

ஜெ

விஷ்ணுபுரம் விவாதங்கள்…

காடு,பின் தொடரும் நிழலின் குரல், விஷ்ணுபுரம்:கடிதங்கள்

விஷ்ணுபுரம்,மண்,கடிதங்கள்

விஷ்ணுபுரம்,காடு,ரப்பர்,பரிணாமம்,பத்மவியூகம்:கடிதங்கள்

விஷ்ணுபுரம், கொற்றவை…கடிதங்கள்

விஷ்ணுபுரம்:கடிதங்கள்

விஷ்ணுபுரம்,ஏழாம் உலகம்:கடிதங்கள்

விஷ்ணுபுரம்,ஊமைசெந்நாய்:கடிதங்கள்

விஷ்ணுபுரம்: கடிதங்கள்

விஷ்ணுபுரம்:மீண்டும் ஒரு கடிதம்

தேடல்,விஷ்ணுபுரம்–ஒரு கடிதம்.

முந்தைய கட்டுரைஅனல் காற்று – விமரிசனம்
அடுத்த கட்டுரைசெவ்வியல்,ஒருகடிதம்