‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 44

பகுதி 10 : சொற்களம் – 2

மாலை இருளத்தொடங்கியபின்னர்தான் அரசவை கூடுவதற்கான முரசுகள் ஒலித்தன. அரண்மனையிலிருந்து அமைச்சர் கருணரும் சுமித்ரனும் வந்து கிருஷ்ணனை அவைமன்றுக்கு அழைத்துச்சென்றனர். அவர்கள் தங்கள் மாளிகையிலிருந்து அரண்மனைக்குச் செல்லும் பாதை முழுக்க மலர்த்தோரணங்களாலும் பட்டுப்பாவட்டாக்களாலும் வண்ணத்திரைச்சீலைகளாலும் அணிசெய்யப்பட்டிருந்தது. அகன்ற வழியின் இருபக்கமும் பாஞ்சாலத்தின் ஐங்குடியினரும் நின்று கிருஷ்ணனை வாழ்த்தி மலர்தூவி குரலெழுப்பினர். அவர்கள் வீசிய மலர்களில் பெரும்பகுதி சாத்யகியின் உடலில்தான் விழுந்தது. அரண்மனைமுகப்பை அடைந்தபோது அவன் உடலை மலர்ப்பொடி மூடியிருந்தது.

அணிமுற்றத்தில் மங்கலச்சேடியரும் இசைச்சூதரும் வைதிகரும் நின்றிருந்தனர். வைதிகர் வந்து நிறைகுடத்து கங்கைநீரை மாவிலையில் தொட்டு அவர்கள் மேல் தூவி வேதம்ஓதி வாழ்த்தினர். கொம்பரக்கு, கோரோசனை, புனுகு, குங்கிலியம், வைரம், சந்தனம், அகில், யானைத்தந்தம், புலிப்பல், கூழாங்கல், மலைச்சுனை நீர், தேன் என பன்னிரண்டு மலைமங்கலப்பொருட்களையும் அரிசி, மலர், சுடர், ஆடி, நிறைகலம், மணி, பட்டு எனும் ஏழு மனைமங்கலங்களையும் ஏந்திய சேடிகள் அவர்களை எதிர்கொண்டழைத்து வாழ்த்தினர்.

தொடர்ந்து வெண்குடை, கவரி, செங்கோல், வாள், மணிமுடி என்னும் ஐந்து அரசமங்கலங்களை ஏந்திய ஏவலர் துணைவர ஐம்பேராயத்தின் தலைவர்கள் சூழ்ந்துவர துருபதன் தன் அரசியரான அகலிகையும் பிருஷதியும் இருபக்கமும் துணைவர எதிர்வந்து வரவேற்றார். கிருஷ்ணனை எதிர்கொண்டதும் மணிமுடி சரிய தலைவணங்கி “யாதவகுலத்தலைவரை பாஞ்சாலம் வணங்கி வரவேற்கிறது. இன்று என் மன்றமர்ந்து எங்களுக்கு நல்வழிகாட்டுக!” என்றார். கிருஷ்ணன் “பாஞ்சாலத் தொல்குடியின் அனைத்து மூதாதையரையும் அடிபணிகிறேன்” என்று மறுவணக்கம் புரிந்தான்.

நால்வேதமோதும் நான்கு குலங்களைச் சேர்ந்த வைதிகர்களும், செல்வம் செய்தி முறைமை என முத்தொழிலாற்றும் மூன்று அமைச்சர்களும், பாஞ்சாலப்பழங்குடியின் ஐந்து குலத்தலைவர்களும், தேர் யானை காலாள் புரவி எனும் நால்வகைப்படையின் நான்குதலைவர்களும், உளவு கணிப்பு காவல் என்னும் முத்தொழிலாற்றும் மூன்று ஒற்றர்குழுக்களின் தலைவர்களும் என ஐம்பேராயமும் அவனை முறைமைப்படி வணங்கி அரசவைக்குள் அழைத்துச்சென்றனர். அவை வாயிலில் பாஞ்சால இளவரசர்களான சுமித்ரன். ரிஷபன், யுதாமன்யு, விரிகன், பாஞ்சால்யன், சுரதன், உத்தமௌஜன், சத்ருஞ்ஜயன், ஜனமேஜயன், துவஜசேனன் ஆகியோர் நின்று அவனை வணங்கி வரவேற்றனர்.

பாஞ்சாலத்தின் பேரவைக்கூடம் நிறைந்திருந்தது. கிருஷ்ணன் உள்ளே நுழைந்ததும் முரசுகளும் கொம்புகளும் முழங்க அனைவரும் எழுந்து நின்று வாழ்த்தி குரலெழுப்பினர். அவையில் இருந்த துருபதனின் அரியணையை இருபக்கமும் காத்து நின்றிருந்த சத்யஜித்தும் சித்ரகேதுவும் கிருஷ்ணனை வாழ்த்தி வரவேற்று அவனுக்கென போடப்பட்டிருந்த பெரிய பொற்பீடத்தில் அமரச்செய்தனர். கிருஷ்ணன் அமர்ந்தபின்னர் துருபதன் தன் அரியணையில் அமர்ந்தார். அவையினர் மன்னனையும் விருந்தினரையும் வாழ்த்தி குரல் பெருக்கினர்.

சாத்யகி பாண்டவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று நோக்கினான். அவைநோக்கிய அரைவட்ட வளைவான பீடநிரையில் நடுவே அரசனின் வெண்குடை சூடிய அரியணையும் அதற்கு வலப்பக்கமாக சத்யஜித்தும் சித்ரகேதுவும் பிற இளவரசர்களும் அமரும் பீடங்களும் போடப்பட்டிருந்தன. மறுபக்கம் அரசியரின் அரியணையும் இளவரசிக்குரிய பீடமும் இருந்தன. அவ்வரிசைக்குப் பின்னால் ஏவலரும் அடைப்பக்காரர்களும் நின்றிருந்தனர். கீழே வலப்பக்கம் இசைச்சூதரும் இடப்பக்கம் அணிப்பரத்தையரும் சென்று அமைந்தனர்.

அரசபீடங்களால் ஆன வில்லுக்கு முன்னால் விரிந்திருந்த பெரிய நீள்வட்ட அரங்கின் வலப்பக்கமாக ஐங்குலத்தலைவர்களும் தங்கள் மைந்தர்களுடன் பீடங்களில் அமர்ந்திருந்தனர். நடுவே முதுவைதிகர், நால்வகை குடித்தலைவர்கள் இருந்தனர். இடப்பக்கமாக பிறநாட்டு விருந்தினர்களுக்குரிய பீடங்களில் பாண்டவர்கள் ஐவரும் அமர்ந்திருந்தனர். அவர்களைச் சூழ்ந்து வெவ்வேறுநாடுகளில் இருந்து செய்தியும் பரிசுகளுமாக வந்த தூதர்கள் தங்கள் நாட்டுக் கொடிக்குறிகள் பதிக்கப்பட்ட பீடங்களில் அமர்ந்திருந்தனர். பாண்டவர்களின் பீடங்களுக்குப்பின்னால் அஸ்தினபுரியின் அமுதகலசக் குறி பொறிக்கப்பட்டிருந்தது.

அரசகுழுவினர் அமர்ந்திருந்த வளைவின் வலப்பக்கத்தின் நீட்சியில் அரண்மனைப்பெண்களுக்கான பீடங்கள் இருந்தன. அதனருகே இருந்த வெண்திரைக்கு அப்பால் குந்தி இருக்கிறாள் என சாத்யகி உய்த்தறிந்தான். அவன் கிருஷ்ணனின் வலப்பக்கம் போடப்பட்ட பெரிய பொற்பீடத்தில் அமர்ந்தான். இடப்பக்கம் சுதாமர் அமர்ந்தார். அவர்களுக்குமேல் செம்பட்டுப் பூக்குலைகள் தொங்கிய மூங்கிலால் ஆன பெரிய தொங்குவிசிறி பட்டுச்சரடால் இழுக்கப்பட்டு ஆடி காற்றை அசைத்துக்கொண்டிருந்தது. அதன் வண்ணத்தால் அவை அலையடிப்பதுபோல தெரிந்தது. துருபதன் தன்னருகே நின்ற ஒற்றர்தலைவர் சிம்மரிடம் மெல்ல ஏதோ சொல்ல அவர் ஓடிச்சென்று கையசைத்தார். அவையெங்கும் மெல்லிய உடலசைவுகள் உடைகளின் வண்ண ஒளிமாற்றமாகத் தெரிந்தன.

நிமித்திகன் எழுந்து சங்கொலி எழுப்ப முரசுகளும் கொம்புகளும் மணிகளும் முழங்கின. அவைக்கு வலப்பக்கத்தில் தொங்கிய சித்திரப்பணிகள் செறிந்த பெருந்திரை அசைந்து விலக மங்கலச்சேடியர் தாலமேந்தி முன்னால் வந்தனர். தொடர்ந்து அணிச்சேடியர் இரு பக்கமும் சாமரங்கள் வீசி வர முழுதணிக்கோலத்தில் திரௌபதி உள்ளே வந்தாள். அவையிலிருந்தவர்கள் அனைவரும் எழுந்து நின்று வாழ்த்தொலி எழுப்பினர். பாண்டவர்களும் எழுந்து வாழ்த்தி நிற்பதைக் கண்டதும் சாத்யகி திரும்பி கிருஷ்ணனை நோக்கினான். கிருஷ்ணனின் கண்கள் சித்திரத்தின் விழிகளில் நீலக்கற்கள் பதிக்கப்பட்டிருப்பதுபோல பொருளற்ற ஒளியுடன் தெரிந்தன.

சாத்யகி திரௌபதியை முதல்முறையாக மணத்தன்னேற்பு அரங்கில் பார்த்தபோது அடைந்த அதே அகஎழுச்சியை அடைந்தான். விழிகளை அவளிலிருந்து சிலகணங்களுக்கு விலக்க முடியவில்லை. தன்னுணர்வுகொண்டதும் விழிகளை விலக்கி அவையை நோக்கியபோது அத்தனை பேரும் அந்நிலையில்தான் இருக்கிறார்கள் என்பதை கண்டான். மீண்டும் அவளை நோக்கி விழிதூக்க அவன் துணியவில்லை. இமைகளைச் சரித்து இருக்கையின் இடப்பக்கம் தொங்குவிசிறியின் காற்றில் ஆடிய ஒரு பட்டுநூலையே நோக்கிக்கொண்டிருந்தான். அது நெளிந்தது. குழைந்தது. மரவுரியின் பின்னல்களில் இருந்து விடுபட்டு எழப்போவதுபோல தவித்தது.

திரௌபதி அமர்ந்ததும் அவையும் அமர்ந்தது. நிமித்திகன் முன்னால் வந்து கோல்தூக்கி பாஞ்சாலத்தின் குலவரிசையைச் சொல்லி துருபதனை வாழ்த்தினான். கிருஷ்ணனை குலவரிசை சொல்லி வாழ்த்தி பாஞ்சாலத்தின் அரசரின் சொல்லாலும் ஐங்குலத்தலைவர்களின் சொல்லாலும் அவனை வரவேற்றான். அவன் கோல்தாழ்த்தி விலகியதும் மீண்டும் மங்கலஇசை எழுந்து விரிந்து அமைந்தது.

துருபதன் எழுந்து அவையை வணங்கி “வெல்லற்கரிய ஐங்குலத்தால் வாழ்த்தப்பட்டது இக்குடி. இங்கு நூறாண்டுகளுக்கு முன் வந்த குருகுலத்து மாமன்னர் பிரதீபருக்கு சூட்டப்பட்ட அதே பொன்மணி அணிமுடி எங்கள் கலவறையில் இதுநாள் வரை பூசனை ஏற்று அமர்ந்திருந்தது. இன்று இந்நகருக்குள் தன் தூயபாதங்களை வைத்துள்ள துவாரகையின் தலைவரை வணங்கி அவருக்கு அதை அணிவிக்க இந்த ஐங்குலத்தவர் அவை ஒப்புதலளிக்கவேண்டும்” என்றார்.

ஐந்துகுலத்தலைவர்களும் தங்கள் கைக்கோல்களைத் தூக்கி ”ஆம் ஆம் ஆம்” என்று ஒப்புதலை அளித்தனர். சத்யஜித் கைகாட்ட பெரிய பொற்தாலத்தில் மூன்று அடுக்குகளாக பொன்னிதழ்களால் செய்யப்பட்டு சுற்றிலும் செம்மணிக்கற்கள் பதிக்கப்பட்ட அணிமுடி வந்தது. மங்கல இசை எழ அணிப்பரத்தையர் குரவையோசை எழுப்ப வைதிகரின் வேதக்குரலும் அவையினரின் வாழ்த்தொலிகளும் இணைந்துகொள்ள அதை துருபதன் தன் கைகளால் எடுத்து கிருஷ்ணனின் தலையில் அணிவித்தார். வைதிகர் கங்கைநீரை தெளித்து வேதமோதி அவனை வாழ்த்தினர். அவையினர் மஞ்சளரிசியும் மலரும்தூவி ஏத்தினர்.

”இன்றுமுதல் பாஞ்சாலம் யாதவப்பேரரசரின் நாடுமாகும். அவரது கையின் செங்கோலுக்கு இம்மக்களும் கடன்பட்டவர்கள். எங்கள் ஐவகைச் செல்வங்களும் அவருக்குரியவை. எங்கள் குலங்கள் உள்ளவரை அவருடைய சொல் இங்கு திகழும்” என்றார் துருபதன். “அவரது புகழ் இந்நாள் என எந்நாளும் வளர பாஞ்சாலத்தைக் காத்தருளும் பேரன்னையரை தொழுகிறேன். ஆம் அவ்வாறே ஆகுக!”

சாத்யகி மீண்டும் திரௌபதியை பார்த்தான். அனைத்தையும் அறிந்தவளாகவும், எதையும் பாராதவளாகவும் அமர்ந்திருக்கும் அவளுடைய தோரணையை அவன் மணத்தன்னேற்பு அறையிலேயே கண்டிருந்தான். அது கருவறைகளில் அமர்ந்திருக்கும் தெய்வங்களின் தோரணை. அவளுடைய மூக்கின் கோணலே இல்லாத துல்லியமான நேர்வளைவும் தோள்களின் முழுநிகர்நிலையும்தான் அவளை தெய்வச்சிலையென எண்ணத் தூண்டுகின்றனவா? அந்த கன்னங்கரிய நிறமா? அவன் மீண்டும் அவளைப்பார்ப்பதில் ஆழ்ந்துவிட்டதை உணர்ந்து தன்னை மீட்டுக்கொண்டான். உடலை அசைத்து தன் உள்ளத்தைக் கலைத்தவன் அவ்வசைவாலேயே உள்ளம் வெளிப்பட்டுவிட்டதை உணர்ந்து திரும்பி நோக்கினான். அவையிலிருந்த அனைவரும் அணிமுடி சூடிய கிருஷ்ணனை நோக்கிக்கொண்டிருந்தனர்.

கிருஷ்ணன் எழுந்து அவையை நோக்கி கைகூப்பி முகமன்களைச் சொல்லி “பாஞ்சாலத்தின் மண்ணை என் மண்ணாகவும் ஐந்துகுலங்களை என் குலமாகவும் கொள்கிறேன். இங்குள்ள அத்தனை அன்னையரின் நற்சொற்களும் என்னைத் தொடர்வதாக! அவர்கள் தங்கள் மைந்தர்களுக்கு அள்ளி வைக்கும் நல்லுணவில் ஒரு துளியை எனக்கெனவும் அளிக்கட்டும். இங்குள்ள தந்தையர் தங்கள் மைந்தரை நல்வழிப்படுத்தும் சொற்களில் ஒன்றை எனக்கெனவும் கருதட்டும். என் தலை என்றும் இந்நிலம் நோக்கி வணங்கியிருக்கட்டும். அருள்க விசும்புநிலம் நிறைத்து நின்றாளும் நெடுமாலின் பெரும்புகழ்!” என்றான். அவையினர் கைதூக்கி வாழ்த்தொலி எழுப்பினர்.

சாத்யகி திடீரென்று அனைத்திலும் ஆர்வமிழந்தான். அங்கிருந்து உடனே எழுந்து விலகிச்செல்லவேண்டுமென்று தோன்றியது. அது ஏன் என்று தனக்குத்தானே கேட்டுக்கொண்டான். அவனைப்போன்ற எளிய யாதவன் கனவுகாணுமிடத்தில் இருந்துகொண்டிருக்கிறான். பாரதவர்ஷத்தின் தொன்மையான ஷத்ரியர் அவையில் பொன்னணிந்த இருக்கையில் அரசுமுறைமைகளை ஏற்றுக்கொண்டு. ஆனால் அவனுடைய சலிப்பு மேலும் மேலும் ஏறிவந்தது. ஏன்?

ஏனென்றால், அங்கு பேசிய அனைத்துமே வெறும் அணிச்சொற்கள். அவற்றிலிருந்தவை உணர்ச்சிகளல்ல, வெறும் அரசுசூழ்ச்சிகள். நெஞ்சிலிருந்து வரும் சொற்கள் மலர்கள். இவை பொன்மலர்கள். பெருமதிப்புள்ளவை, உயிரற்றவை. நான் உயிர்ததும்பும் பெரும்புல்வெளிகளில் வாழ்ந்தவன். பொன்னணிகள் சூடியதில்லை. ஆனால் என்றும் என் குடுமியில் புதுமலர்கள் இருந்தன. இளவேனிலில் என் நெஞ்சை தளிர்மாலைகள் அணிசெய்தன. அணிகளைப்போல பொருளற்றவை எவை? அணிகள்சூடுவதைப்போல மலர்களை ஆக்கிய தெய்வங்கள் வெறுக்கும் செயல் பிறிது எது?

கிருஷ்ணன் அவன் கொண்டுவந்திருந்த பரிசில்களை துருபதனுக்கும் பாஞ்சாலத்தின் ஐங்குடித்தலைவர்களுக்கும் அளித்தான். காப்பிரிநாட்டு மணிகள், ஆடகப்பொன் அணிகள். பீதர்நாட்டுப் பட்டாடைகள், உடைவாட்கள். யவனர்களின் நறுமணப்புட்டிகள், நீலநிறமான மதுக்குடுவைகள். தென்தமிழ்நாட்டு முத்துக்கள். ஒவ்வொன்றும் அரியவை. ஒவ்வொன்றும் முற்றிலும் பயனற்றவை. அவன் எழுந்து விலக விழைந்தான். இது என் இடமல்ல. இந்த அவையில் எந்த இடத்திலும் நான் இருக்கமுடியாது. எழுந்தே விட்டான் என ஒருகணத்தில் உணர்ந்து எழவில்லை என அறிந்து ஆறுதல்கொண்டான்.

நான் ஏன் இதையெல்லாம் கேட்கவேண்டும்? என் கண்களையும் காதுகளையும் மூடிக்கொள்ளலாம். நான் பார்க்கவேண்டியது இப்பாதங்களை மட்டுமே. நான் கேட்கவேண்டியது இவன் சொற்கள். நான் சூடவேண்டியவை இவன் எண்ணங்கள். பிறிது எவையும் எனக்கு அயலவையே. நான் இங்கிருக்கிறேன், அவன் அணிந்திருக்கும் உடைவாள் போல. அவன் பாதங்கள் பதிந்திருக்கும் காலணிகள் போல. அதற்கப்பால் எதுவுமல்ல நான். அவன் நெஞ்சு எளிதானது. அவ்விடுதலையை அவன் அடைந்ததுமே இறுகிநின்ற அவன் தோள்கள் தளர்ந்தன.

சொற்களும் மறுசொற்களும் முறைமைகளும் மறுமுறைமைகளுமாக நிகழ்வுகள் சென்றுகொண்டிருந்தன. சரிந்த மேலாடையை இழுத்து அமைத்தபடி சற்று திரும்பிய சாத்யகி அப்பால் பீமனை கண்டான். ஒருகணம் விழிதொட்டு விலகிக்கொண்டாலும் பீமனின் விழிகளில் இருந்தவை தான் எண்ணிய அனைத்துமே என அறிந்து புன்னகை செய்தான். எத்தனை அவைகளில் முற்றிலும் இல்லாதவராக அவர் இருந்திருப்பார் என எண்ணிக்கொண்டான். பாண்டவர்களின் வல்லமையே அந்தபெருந்தோள்கள் என்று சொல்வார்கள். ஆனால் அவை ஏந்தும் அந்த பெரிய இரும்புக் கதை அறிந்ததையே அவரும் அறிந்திருக்கிறார்.

பாஞ்சாலத்தின் ஐங்குடித்தலைவர்களும் தங்கள் மைந்தர்களுடன் நிரையாக வந்து கிருஷ்ணனுக்கு பரிசில்களை வழங்கி வாழ்த்தினர். மலைநிலத்தின் குத்துவாட்கள், சந்தனமரம் கடைந்த சிற்பங்கள், தந்தச்சிலைகள், மலைமணிகள், புலிக்குருளைகள். அதன்பின் பாஞ்சாலத்து வணிகர்களும் குடித்தலைவர்களும் பரிசில்களை அளித்தனர். அவர்கள் வாழ்த்தி முடிந்ததும் அவன் காம்பில்யத்தில் சவிதாவை வாழ்த்தி ஒரு பெருவேள்விசெய்வதற்கான பொன்னை வைதிகர்தலைவருக்கு வழங்கி வணங்கினான்.

நிமித்திகர் எழுந்து வணங்கி அவைநிறைவை அறிவித்ததும் பீமனின் உடலில் வந்த விரைவான அசைவை விழிதிருப்பாமலேயே சாத்யகி கண்டான். அவனால் புன்னகையை அடக்கமுடியவில்லை. பெருவிருந்துக்குச் செல்வதற்காக துருபதனின் சார்பில் அனைவரையும் சத்யஜித் அழைத்தார். மீண்டும் முரசுகள் முழங்கியதும் அனைவரும் எழுந்தனர். துருபதன் கிருஷ்ணனை கைகாட்டி அழைத்து உண்டாட்டகத்திற்கு கூட்டிச்சென்றார். சாத்யகி கருணரால் அழைக்கப்பட்டு அவர்களுடன் சென்றான்.

பேரவைக்கூடத்திற்கு அப்பால் விரிவான இடைநாழியால் இணைக்கப்பட்டதாக இரு உண்டாட்டகங்கள் இருந்தன. ஆண்களுக்கான உண்டாட்டகம் வலப்பக்கமாகச் சென்றது. பெண்களுக்கான சற்று சிறிய உண்டாட்டகம் இடப்பக்க இடைநாழிக்கு அப்பாலிருந்தது. அரசியரும் திரௌபதியும் முதியசேடியால் வழிகாட்டப்பட்டு பெண்களுக்கான உண்டாட்டகம் நோக்கி விலகிச் சென்றனர். அவையைச் சூழ்ந்திருந்த மான்கண் சாளரங்களுக்கு அப்பால் அரண்மனைப் பெண்டிர் இருந்தனர் என சாத்யகி அறிந்திருந்தான். வெண்பட்டுத்திரைச்சீலைக்கு அப்பாலிருந்து அரண்மனைப் பெருஞ்சேடியால் குந்தி உண்டாட்டறைக்கு கூட்டிச்செல்லப்படுவதை அவன் கண்டான்.

ஆயிரம் பேர் உணவுண்ணக்கூடிய அளவுக்கு பெரிய கூடம். நடுவே இரண்டு நிரைகளாகச் சென்ற மரத்தூண்களால் தாங்கப்பட்ட உயரமான மரப்பட்டைக்கூரைக்குக் கீழே வெண்ணிறத் துணியாலான பந்தல் இழுத்துக்கட்டப்பட்டிருந்தது. தொலைவில் சுவர்களில் பெரிய நெய்விளக்குக்கொத்துக்கள் பதிக்கப்பட்டு சுடரேற்றப்பட்டிருந்தன. அவற்றுக்கு அருகே பலகோணங்களில் அமைக்கப்பட்டிருந்த பெரிய உலோக ஆடிகள் அவ்வொளியை வாங்கி அந்தத் திரைச்சீலைகளில் வீழ்த்திச் சிதறடித்து மென்மையாக கூடமெங்கும் பரப்பின. கூடமெங்கும் சீரான ஒளியிருந்தாலும் சுடர்கள் மிகத்தொலைவில் இருந்தமையால் பூச்சிகள் பறக்கவில்லை.

கூடத்திலிருந்த சாளரங்களில் எல்லாமே மரவுரிநாராலான வலைகள் போடப்பட்டிருந்தன. தென்மேற்குமூலையில் ஐந்து அன்னையரும் மேலே சண்டிகையும் அமர்ந்த சிற்பம் நிறுவப்பட்ட மரத்தாலான சிறிய ஆலயம் இருந்தது. அன்னையருக்குக் கீழே ஐந்து சிறிய உருளைக்கற்களாக மூதாதையர் நிறுவப்பட்டிருந்தனர். மறுஎல்லையில் அடுமனை நோக்கியதிறப்பில் அடுமடையர்கள் இடையில் கச்சைகளை இறுக்கியபடி உணவை விளம்புவதற்குச் சித்தமாக நின்றனர்.

மரத்தாலான உணவுப்பீடங்கள் நீண்ட நான்கு நிரைகளாகப்போடப்பட்டு அமர்வதற்கு இளஞ்சிவப்பு வண்ணமேற்றப்பட்ட ஈச்சையோலைப்பாய்கள் நீளமாக விரிக்கப்பட்டிருந்தன. அடுமனைத்தலைவரான முதியசூதர் வந்து துருபதனையும் கிருஷ்ணனையும் வரவேற்று முகமன் சொல்லி அழைத்துச்சென்று உண்டாட்டகத்தின் மையத்தில் இருந்த தந்தத்தாலான கால்கள் கொண்ட பீடத்தின் அருகே விரிக்கப்பட்ட புலித்தோலில் அமரச்செய்தார். முறைப்படி வலக்கால் இடக்கால்மேல் மடித்து இருவரும் அமர்ந்துகொண்டதும் பிறரை அழைத்து அமரச்செய்தனர் அடுமனையாளர்கள்.

சாத்யகி கிருஷ்ணனின் வலப்பக்கம் அமர்ந்தான். தொடர்ந்து சுதாமர் அமர்ந்தார். அதன்பின் சத்யஜித்தும் பாஞ்சால இளவரசர்களும் அமர்ந்தனர். பாஞ்சாலஅரசகுலத்தவர் அனைவரும் அமர்ந்தபின் கருணர் ஐங்குலத்தலைவர்களையும் குடிமூத்தாரையும் அழைத்து அமரச்செய்தார். ஒவ்வொருவரையும் அவர்களின் குலம், இடம், நிலை என்னும் மூவகை இயல்புகளையும் சொல்லி முறைப்படி அழைத்து வலக்கை பிடித்து கொண்டுவந்து முறைமைப்படி அமரச்செய்தனர். பாண்டவர்கள் அயல்நாட்டினர் வரிசையில் அமர்ந்தனர். அங்கே ஒரு சிரிப்பொலி கேட்பதை சாத்யகி அறிந்தான். அது பீமன் உண்ணப்போவதைப்பற்றியது என சொற்களில்லாமலேயே அவனுக்குப் புரிந்தது.

அடுமடையர்கள் கங்கைநீரில் வீசப்படும் வலைபோல ஒருபுள்ளியிலிருந்து நாற்புறமும் விரிந்து கூடத்தில் பரவினர். களிமண்ணால் செய்யப்பட்ட ஊண்கலங்கள் அனைவருக்கும் வைக்கப்பட்டன. அருகே மண்குடுவையில் இன்னீர் விளம்பப்பட்டது. அடுமனைத்தலைவர் அவரது கைகளால் முதல்துளி உப்பை துருபதனுக்கு வைத்ததும் அடுமடையர்கள் அனைவருக்கும் உப்பை வைத்தனர். அதன்பின் அக்காரக்கரைசலில் வறுக்கப்பட்ட பழத்துண்டு. அதன்பின் வேம்பின் கொழுந்தை உப்புடன் அரைத்த துவையல். இன்புளிக்காய்த் துண்டுகள். துவர்க்கும் நெல்லிக்காய். இறுதியாக வறுக்கப்பட்ட பாகற்காய்த்துண்டுகள்.

அறுசுவையும் பரிமாறப்பட்டதும் நிமித்திகன் எழுந்து உரத்தகுரலில் போஜன மந்திரத்தை சொன்னான். அனைவரும் வணங்க  சாந்திமந்திரத்தைச் சொல்லி வணங்கியபின் நிமித்திகன் அமர்ந்தான்.

அடுமனைத்தலைவர் அரிசிமாவில் செய்யப்பட்ட சிறிய மான் உருவம் ஒன்றை கொண்டுசென்று மூத்த குலத்தலைவரின் முன்வைத்தார். அவர் அதை தொன்மையான மலைமொழியில் நுண்சொல் ஒன்றை வாய்க்குள் சொன்னபடி தன் சிறிய கத்தியால் ஏழாக வெட்டினார். முதல்துண்டை அடுமனைத்தலைவர் கொண்டுசென்று அந்த உண்டாட்டறையின் தென்மேற்கு எல்லையில் நிறுவப்பட்டிருந்த சின்னஞ்சிறிய அன்னையர் ஆலயத்தின் முன் பலிபீடத்தின் மேல் வைத்தார்.

இரண்டாவது துண்டு துருபதனுக்கு படைக்கப்பட்டது. மூன்றாவது துண்டு கிருஷ்ணனுக்கும் நான்காவது துண்டு ஐங்குலத்தின் முதுதலைவருக்கும் ஐந்தாவது துண்டு குடித்தலைவருக்கும் ஆறாவது துண்டு விருந்தினருக்கும் படைக்கப்பட்டபின் ஏழாவது துண்டு பறவைகளுக்கும் விலங்குகளுக்குமாக வெளியே கொண்டுசெல்லப்பட்டது.

“ஓம், இனிய உணவாக வந்த அன்னையரே!
உங்கள் முலைகளை உண்கிறோம்.
உங்கள் குருதி எங்களில் நிறைக!
உங்கள் வாழ்த்துக்களால் நாங்கள் பொலிக!
எங்கள் வழியாக உங்கள் வழித்தோன்றல்களுக்கு
சென்றுசேருங்கள்
ஆம் அவ்வாறே ஆகுக!”

என முதுகுலத்தலைவர் சொன்னதும் அனைவரும் வலக்கையை எடுத்தனர். சாத்யகி உண்ணப்போனபின்னர்தான் அனைவரும் காத்திருப்பதைக் கண்டான். துருபதன் முதலில் உப்பைத் தொட்டு நாவில் வைத்து “ஓம்” என்றார். அதன்பின் அறுசுவைகளையும் ஒவ்வொன்றாகத் தொட்டு நாவில் வைத்தார். அதன்பின் அனைவரும் அதையே செய்ய அவ்வரிசையை ஓரக்கண்ணால் நோக்கியபடி சாத்யகி அதையே செய்தான். துருபதனில் தொடங்கி அனைவருக்கும் அரிசியாலான அப்பங்கள் விளம்பப்பட்டன. தொடர்ந்து மூங்கில்குவளைகளில் ஈச்சமரத்துக் கள் இனிய கடும் மணத்துடன் நுரைக்க நுரைக்க ஊற்றப்பட்டது.

சங்கின் ஓசையில் தொடங்கும் மங்கலப்பேரிசை போன்றிருந்தது உணவு. கள்ளுடன் உண்பதற்காக மண்தட்டுகளில் உப்பும் மிளகும் புளிங்காய்விழுதும் பூசப்பட்டு தீயில் புரட்டிச் சுடப்பட்டு நீளமான சிறிய துண்டுகளாக வெட்டப்பட்ட இளங்கன்றின் ஊன் வந்தது. மானிறைச்சியும் முயலிறைச்சியும் அவற்றின் தழைமணம் எழாமலிருக்கும் பொருட்டு சுக்கும் கிராம்பும் இட்டு மண்சட்டியில் கரிச்சூட்டில் வறுக்கப்பட்டிருந்தன. ஆட்டின் இறைச்சி நீளமான நார்களைப்போல கீறி கடுகெண்ணையில் பொரித்து மிளகிட்டுச் சுருட்டப்பட்டிருந்தது. பன்றியிறைச்சி உப்பும் காரமுமாக இலைகளில் சுருட்டி சூளையடுப்பில் சுடப்பட்டு நெய் ஒழுகும் இலைப்பொதிகளாக கொண்டுவந்து வைக்கப்பட்டது.

அரிசி புளித்த கள், அக்காரம் புளித்த கள், மலைக்கிழங்கு புளித்த கள், மலைக்குளவிகளை தேனிலிட்டு ஊறவைத்து எடுக்கப்பட்ட மதுகரம் என்னும் மது, மஹுவா மலர்நீர், அகிபீனத்தின் இலையிட்டு காய்ச்சப்பட்ட புல்சாறு, ஊனைப் புதைத்துவைத்து மூன்றுமாதகாலம் நொதிக்கவிட்டு எடுக்கப்பட்ட துர்வாசம் என ஏழுவகை மதுக்கள் விளம்பப்பட்டன. களிமண்ணால் மூடப்பட்டிருந்த துர்வாசத்தின் கலம் உண்டாட்டுப் பந்தியின் நடுவே கொண்டுவந்து உடைக்கப்பட்டபோது அதன் கடும்நாற்றம் சாத்யகியின் குடலை அதிரச்செய்தது. ஆனால் கூடவே நாவில் நீரும் ஊறியது.

உணவுண்ணும் ஒலிகள் மட்டும் உண்டாட்டறையில் எழுந்துகொண்டிருந்தன. விளம்பர்களை அழைப்பதற்காக கையசைவுகள் மட்டுமே எழுப்பப்பட்டன. மூன்றாமவர் கேட்காமல் இதழசைவால் உணவை கேட்டனர். இதழ்விரியாமல் ஊனை மென்றனர். ஒலியெழுப்பாமல் மதுவை குடித்தனர். மேலாடையால் மூடி நீள்மூச்சை எழுப்பினர். ஒவ்வொருவரும் தனித்தனியாக உண்டு குடித்துக்கொண்டிருப்பதாக ஒருகணமும் அத்தனைபேரும் இணைந்து ஓருடலாக உண்பதாக மறுகணமும் தோன்றியது.

ஷத்ரியர்களின் உண்டாட்டுகளில் உணவை இடக்கையால் தொடலாகாது, விரல்கள் வாயைத் தொடலாகாது, கட்டைவிரலில் உணவு படக்கூடாது, உண்ணும்போது உடலோசைகள் எதுவும் எழலாகாது, உணவை முறைமை மீறி ஒன்றுடன் ஒன்று கலந்துகொள்ளலாகாது, உணவுப்பொருள் கலத்துக்கு வெளியே சிந்தலாகாது, கலங்கள் ஒன்றுடன் ஒன்று முட்டலாகாது, ஊனுணவுக்குப்பின் கள்ளருந்தலாகாது, பிறிதொருவர் கலத்தை நோக்கலாகாது என்னும் ஒன்பது ஒடுக்குநெறிகளும் அனைவரும் ஒரே உணவையே உண்ணவேண்டும், உணவை ஏழுமுறை மெல்லவேண்டும், அனைவரும் இணைந்து எழவேண்டும் என்னும் மூன்று செலுத்துநெறிகளும் உண்டு என சாத்யகி அறிந்திருந்தான்.

அவற்றை முழுக்க நினைவு வைத்திருந்து உண்பதென்பது உண்டாட்டு அல்ல பிறிதொரு அரசச்சடங்கு மட்டுமே என்று தோன்றியது. யாதவர் குலவிழவுகளின் உண்டாட்டு என்பது யானையை வீழ்த்திய நரிகளின் கொண்டாட்டம்போலத்தான் இருக்கும். களியாட்டும் கூச்சலும் உண்பதும் குடிப்பதும் பூசலும் கூடலும் சிரிப்பும் அழுகையும் என அங்கே ஒரு முழுவாழ்க்கையும் நிகழ்ந்து முடியும். விழிகளைத் திருப்பாமல் ஓரக்கண்ணால் நோக்கியபடி அருகே அமர்ந்திருந்தவர் செய்ததையே அவனும் செய்தான். ஒவ்வொருவரும் உண்டு முடித்த கலங்களையும் தொன்னைகளையும் குடுவைகளையும் அடுமடையர்கள் அவ்வப்போது வந்து எடுத்துச்சென்றனர்.

உப்புகோள் என்னும் முதற்சடங்குக்குப்பின் ஊன்கோள் என்னும் இரண்டாவது ஊண்முறை. அதன்பின் அன்னவரிசை என்னும் மூன்றாவது ஊண்முறை. அரிசி, கோதுமை, வஜ்ரதானியம், சோளம், கேழ்வரகு, வால்வரகு, தினை என்னும் ஏழு கூலமணிகளால் ஆன அப்பங்கள் வந்தன. அவற்றுடன் பாசிப்பயறு, துவரை, மொச்சை, எள், கொள்ளு, உளுந்து, கடலை என்னும் ஏழு பருப்புகளால் ஆன கூட்டுகள், பசலி, கொடுப்பை, மணத்தக்காளி, அகத்தி, செங்கீரை எனும் ஐவகைக்கீரைகளுடன் கலந்து சமைக்கப்பட்டு வந்தன. வழுதுணை, பூசணி, கும்பளை, புடலை, சுரை என்னும் ஐந்து நீர்க்காய்களைக்கொண்டு சமைக்கப்பட்ட களிக்கூட்டுகள். வெண்டைக்காய், பாகற்காய், அவரைக்காய், பயறுக்காய், கோவைக்காய் என்னும் ஐந்து நார்க்காய்களை சிறுதுண்டுகளாக்கி எள்ளெண்ணையில் வறுத்தெடுத்த உலர்கூட்டுகள் தொடர்ந்தன.

கருணைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, வள்ளிக்கிழங்கு, முக்கிழங்கு, நனைகிழங்கு என ஐவகைக் கிழங்குகள் வேகவைக்கப்பட்டு வெண்ணையிட்டு மாவுக்கூட்டுகளாக வந்தன. மாங்காய், தேம்புளிங்காய், நெல்லிக்காய் என மூவகை அமிலக்காய்களை மோருடன் சேர்த்து சமைத்தெடுத்த புளிக்கறிகள் அவற்றுடன் இணைந்துகொண்டன. மேலும் மேலும் என உணவுவகைகள் வந்தபடியே இருந்தன.

நான்காவதாக அக்காரவரிசை வரத்தொடங்கியதும் பந்தியெங்கும் உண்ணும் விரைவு மிகவும் குறைந்துவிட்டதை சாத்யகி கண்டான். நான்கு நிரையாக இனிப்புகள் வந்தன. முதலில் இன்சோறுகள். அரிசியும் கோதுமையும் பாசிப்பயறு, துவரையுடனும் கலந்து நெய்யிட்டுச் செய்யபப்ட்டவை. பசும்பாலுடன் வஜ்ரதானியம் கலந்து சமைக்கப்பட்ட வெண்கஞ்சி. அடுத்து இன்னுருளைகள். சோளத்துடன் ஈசலை இட்டு வெல்லம் சேர்த்து இடித்து உருட்டியவை. தேனுடன் கலந்து பிசையப்பட்ட தினையுருளைகள். வஜ்ரதானியப்பொடியுடன் மலைக்கிழங்குகளைக் கலந்து இடித்து உருட்டி வெல்லப்பாகிலிட்டு உலரச்செய்த மாவுக்காய்கள்.

பின்னர் இன்களிகள். கேழ்வரகுப்பொடியுடன் அக்காரமிட்டுக் காய்ச்சி வற்றச்செய்து அறுத்து அடுக்கிக் கொணரப்பட்ட களித்துண்டுகள். இன்வள்ளிக்கிழங்குடன் அக்காரமிட்டு காய்ச்சப்பட்ட கூழ். பச்சரிசிமாவை வாழையிலையில் வைத்து சுட்டு அடைத்துண்டுகளாக்கி வெல்லம் கலந்த பாலில் இட்டு வற்றவைத்து எடுக்கப்பட்ட அடைக்கூழ். இறுதியாக இன்பழக்கூழ்கள். மாம்பழ விழுதுடன் வெல்லமிட்டு இறுக்கி எடுத்தவை. அக்காரவிழுதில் ஊறவைத்து ஆவியில் வேகவைக்கப்பட்ட பலாச்சுளைகள். அக்காரமும் பருப்பும் கலந்து உள்ளே வைத்து தீயில் சுடப்பட்ட வாழைப்பழங்கள். புளிப்புக்காய்களுடன் வெல்லம் கலந்து சமைத்த விழுது. ஈச்சங்கள்ளிட்டுக் காய்ச்சி எடுக்கப்பட்ட தினைக்கூழ். பேரீச்சைப்பழத்தை நெய்யிலிட்டு வறுத்து மாவுடன் சேர்த்துச்செய்த நெடுங்கூழ்.

இறுதியாக மூன்றுவகையான இன்கடுநீர் விளம்பப்பட்டது. சுக்கும் மிளகும் திப்பிலியும் வறுத்துப் போடப்பட்டு கொதிக்கவிடப்பட்ட நீர். நெல்லிக்காய் தானிக்காய் கடுக்காய் கலந்து கொதிக்கவிடப்பட்ட முக்காய்நீர். மோருடன் சுக்கும் பசுமிளகாயும் காயமும் போட்டு குளிரச்செய்யப்பட்ட நீர்.

அனைத்து உணவுகளும் முடிந்ததும் மூத்தகுலத்தலைவர் கைகூப்பி

“ஐங்குலத்து அன்னையரே,
ஐந்து பருப்பொருட்களாக வந்தீர்.
எங்களுக்கு அன்னமாக ஆனீர்.
இதோ எங்கள் உடலாக மாறினீர்.
எங்கள் ஆன்மாவாக ஆகுக!
எங்கள் மைந்தர்களில் உயிராக எழுக!
எங்கள் குலமாகப் பெருகிச் சென்று
காலத்தை வெல்க!
உங்கள் வற்றாமுலைகளை வணங்குகிறோம்.
ஊழி கருக்கொள்ளும்
உங்கள் கருவறைகளை வணங்குகிறோம்.
மங்கலம் ஊறும் யோனிகளை வணங்குகிறோம்.
உங்கள் மலர்ப்பாதங்களை
எங்கள் எளிய தலைகளில் சூடுகிறோம்.
உங்கள் கருணை என்றுமிருப்பதாக!
ஆம், அவ்வாறே ஆகுக!”

என்று வணங்கினார்.

‘ஓம் ஓம் ஓம்’ என அவை முழங்கியது. குலமூத்தவர் முதலில் எழுந்து உண்டாட்டகத்தின் நிலத்தைத் தொட்டு வணங்கி இடப்பக்கம் திரும்பி நீரறை நோக்கி சென்றார். அதன்பின் துருபதனும் கிருஷ்ணனும் எழுந்தனர். சீரான வரிசையாக ஒருவர் மேல் ஒருவர் தொடாமல் அவர்கள் கைகழுவச்சென்றனர். அத்தனைபேரும் மதுமயக்கில் கால்கள் தளர்ந்து ஆடிக்கொண்டிருந்தாலும் சீராக அடிவைத்து நிரைவகுத்து முன் சென்றனர்.

சாத்யகி எழுந்து அவர்களைப்போலவே சீரான அடிகள் வைத்து நடந்தான். கீழே பரவியிருந்த கலங்கள் எதிலும் கால்படலாகாதென்ற எச்சரிக்கையே அவனில் நிறைந்திருந்தது. பெருமூச்சுடன் உண்டாட்டறை விட்டு அகலும்போது முடிந்துவிட்டது என்ற ஆறுதலையும் எதையுமே உண்ணவில்லை என்ற நிறைவின்மையையும் அடைந்தான். அறைக்குச் சென்றதும் சேவகனிடம் உணவுகொண்டுவரச்சொல்லி ஓசையுடன் கடித்து இழுத்து மென்று தின்னவேண்டுமெனத் தோன்றியது.

முந்தைய கட்டுரைராய் மாக்ஸம் – தினகரனில்
அடுத்த கட்டுரைநிலம் ஒரு கடிதம்