இலக்கிய வாசிப்பின் பயன் என்ன?

மதிப்பிற்குரிய ஜெமோ,

ஒரு அடிப்படையான கேள்வி. இலக்கிய வாசிப்பின் பயன் என்ன?

உங்கள் திறமைக்கு நீங்கள் IAS முயன்று படித்திருந்தீர்களானால்கூட எளிதில் தேறிவிட்டிருப்பீர்கள் என்று நம்புபவன் நான். ஆனால், மிதிவண்டிகூட கற்றுக்கொள்ளாத அளவுக்கு(உங்கள் தளத்தில் எப்போதோ படித்த நினைவு) சிறுவயதிலிருந்து (இலக்கிய) வாசிப்புள்ளவர் நீங்கள். எழுத்தாளராகும் உங்கள் மற்றும் உங்களின் அம்மாவின் லட்சியத்தை நிறைவுகண்டுவிட்டீர்கள்.எனவே, உங்கள் விசயத்தில் பரவாயில்லை.இப்போது திரைத்துறையிலும் இடம்பெற்று பணம் சம்பாதிப்பது ஆறுதலான, மகிழ்ச்சியான சங்கதிதான்.

நான் கடந்த மூன்று வருடங்களாக இணையம் மற்றும் புத்தகங்கள் படித்துக்கொண்டிருக்கிறேன். .இப்போதெல்லாம் புத்தகங்கள்தான் அதிகமாகப் படிக்கமுடிகிறது.காரணம் கண் பிரச்னை.( நீங்களும் புத்தகங்கள் படிக்கவே அறிவுறுத்துகிறீர்கள்.) கண்கள் உலர்ந்துபோகிற பிரச்னை ஏற்பட்டுவிட்டது.முன்பெல்லாம் கண்கள் உலரத்தொடங்குகிற கால அளவிலிருந்து இப்போது மிகவும் குறைந்துவிட்டது.இந்தளவுக்கான வாசிப்பை வேறு ஏதாவது சார்ந்து படித்தால் நேரடியாக வாழ்வில் உயரலாம், பயனடையலாம். பணியில் உயர் நிலையடைய மேல்படிப்பு, அல்லது ஒரு மொழியை புதிதாக கற்றுக்கொள்ளுதல், பொது அறிவு இப்படி எத்தனையோ. இலக்கியம் படிப்பதனால் என்ன நேர்கிறது? வாசிக்கிற அனைவருமே படைப்பாளீகள் ஆகிவிடமுடியுமா? ஆகத்தான் வேண்டுமா?

வாசிப்பின் மூலம் நிறைய இழக்க நேருகிறது என்பதை நீங்கள் நன்றாகவே அறிவீர்கள். நண்பர்கள், குடும்பம், பணி , உடல் நலம் என்று நிறைய. யாராவது எதாவது எழுதிவிட்டுப் போகட்டுமே. அதையெதற்கு படித்துக்கொண்டிருக்கவேண்டும். நான் அதைப் படித்துவிட்டேன், இதைப் படித்துவிட்டேன் என்று பெருமையடித்துக்கொள்வதற்கா? எல்லோரிடமும்கூட பெருமையடித்துக்கொள்ளவும் முடியாதே.

ஒரு விவாதத்திற்காகவும், என் மன சஞ்சலமாகவுமே இதைக் கேட்கிறேன். வாசிப்பை நேசிக்கிற, நியாயப்படுத்துகிற கட்சிதான் நான் என்றாலும், பொட்டில் அடித்தமாதிரியான ஏதோவொரு அறிவுரை, ஆலோசனை அல்லது விளக்கத்தை எதிர்பார்த்துக் கேட்கிறேன்.எனக்கு உங்களிடத்தில் அந்த நம்பிக்கையை என் மனம் கொண்டுள்ளது.

கடைசிப்பக்கத்திலிருந்து

கடைசிப்பக்கத்திலிருந்து
புத்தகங்களை வாசிப்பதிலும்
சில வசதிகள் இருக்கத்தான் செய்கின்றன

எப்போது முடிப்பது
என்கிற கவலையில்லை
எப்போது துவங்குவது
என்பதுதான் கவலை

இன்னும் படிக்கவேண்டிய
பக்கங்களை கூட்டிக்
கழித்துக்கொண்டிருக்க வேண்டியதில்லை
கடைசியாக விட்ட பக்கத்திலேயே
அது அச்சிடப்பட்டிருக்கும்

சொல்லப்பட்ட
கோணம், பிரதியிலிருந்தே
முற்றிலும் வேறான
கோணம், பிரதி
கிடைக்கப்பெறலாம்

புத்தகங்களை வாசிப்பதால்
பெறுவதிலும், இழப்பதிலும்
மட்டும்
எந்த மாற்றமும் இருக்கப்போவதில்லை.

ச.முத்துவேல்

அன்புள்ள முத்துவேல்,

இந்தக்கேள்வி நம் சமூகச்சூழலில் இருந்து எப்போதும் எழுந்து எந்த நல்ல வாசகன் மேலும் மோதிக்கொண்டே இருப்பது. வெற்றி என்பது எப்போதும் லௌகீக வெற்றியே என்றும் மகிழ்ச்சி என்பது எந்நிலையிலும் லௌகீக மகிழ்ச்சியே என்றும் எண்ணும் சராசரி இந்திய உளவியலின் விளைவு இக்கேள்வி. அதை நம் மீண்டும் மீண்டும் எதிர்கொள்கிறோம். பலசமயம் சலிப்படைகிறோம்.

நான் இக்கேள்விக்கு மீண்டும் மீண்டும் பதில் சொல்லியிருக்கிறேன். ‘நவீன இலக்கிய அறிமுகம்’ [உயிர்மை பதிப்பகம்] நூலின் முன்னுரையிலும் பதில்ச் சொல்லியிருக்கிறேன்

பழைய பதில்களை மீண்டும் அளிக்கிறேன்

பார்க்க

http://www.jeyamohan.in/?p=2365

http://www.jeyamohan.in/?p=46

முந்தைய கட்டுரைஒரு வரி
அடுத்த கட்டுரைஇன்றைய காந்தி -கடிதம்