‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 43

பகுதி 10 : சொற்களம் – 1

கிருஷ்ணனின் திருமுகப்படைகள் துவாரகையிலிருந்து கடல்வழியாக தேவபாலபுரம் சென்று சிந்துவின் எதிர்ப்பெருக்கில் நுழைந்து மூலத்தானநகரி வந்து அங்கே ஒருநாள் ஓய்வெடுத்தபின் வண்டிச்சாலை வழியாக சப்தசிந்துவைக் கடந்து காம்பில்யத்தை பன்னிரண்டு நாட்களில் சென்றடைந்தன. தெற்கிலிருந்து மழைக்காற்று வடக்குநோக்கி வீசத்தொடங்கியகாலம் என்பதனால் பாய்களை விரித்ததுமே கலங்கள் சிந்துவின் எதிரொழுக்கின் அலைகள் மேல் தாவித்தாவி ஏறி முன்னால் சென்றன. கலங்களுக்குள் இருந்த அனைத்துப்பொருட்களையும் கட்டிவைக்கவேண்டியிருந்தது.

“நூற்றுக்கணக்கான முறை நான் சிந்துவுடன் இணைந்து நடனமிட்டிருக்கிறேன்… அவள் கட்டற்றவள்” என்று கிருஷ்ணன் நகைத்தபடி சொன்னான். சாத்யகி “சிந்துவை எளிதில் நீந்திக்கடக்க முடியாதென்று கேள்விப்பட்டிருக்கிறேன்” என்றான். கிருஷ்ணன் “ஆம், ஆனால் கடந்துவிடலாம். நீந்திக்கடக்க முடியாதது கிழக்கே காமரூபத்தில் ஓடும் பிரம்மவாகினிதான். அதைக்கடந்தாகவேண்டுமென நான் அதன் கரையில் தங்கியிருந்து பயிற்சி எடுத்தேன். ஒருவருடம் தவம்செய்து அதை வென்றபின்னரே ஊர்திரும்பினேன்” என்றான்.

நான்கேநாட்களில் அவர்கள் மூலத்தான நகரியை சென்றடைந்தனர். தேவபாலநகரி கூர்ஜரத்தின் சக்ரதனுஸாலும் மூலத்தானநகரி சிந்துமன்னன் ஜயத்ரதனாலும் ஆளப்பட்டு வந்தன. அவர்கள் யாதவர்களின் எதிரிகள் என்றாலும் வணிகப்பாதைகளை அரசுகள் பகையின்றி பொதுவாகப் பேணவேண்டுமென்ற பொதுப்புரிதல் ஷத்ரியர்களுக்குள் இருந்தது. அவர்கள் நுழையும் நாடுகளனைத்திற்கும் முன்னரே செய்திகள் அனுப்பப்பட்டிருந்தன. தேவபாலபுரியின் துறைமுகப்பில் சக்ரதனுஸின் வணிக அமைச்சர் பிரசீதர் மங்கலப்பொருட்களுடன் வந்து துவாரகையின் அரசனை வணங்கி வரவேற்றார்.

சிந்துவழியாக பருஷ்னிக்குள் சென்று மூலத்தானநகரியின் துறைமுகத்தை அடைந்தபோது ஜயத்ரதனின் மாதுலரும் அமைச்சருமாகிய ஜயசேனர் வந்து வரவேற்று நதிக்கரையிலேயே அமைக்கப்பட்டிருந்த இளவேனில் மாளிகையில் தங்கச்செய்தார். அங்கே ஒருநாள் ஓய்வெடுத்தபின்னர் கலங்களை அங்கேயே விட்டுவிட்டு சப்தசிந்துவையும் கடந்துசெல்லும் பெரிய வண்டிச்சாலையான சிந்துபதத்தினூடாக அவர்களின் அணி கிளம்பியது.

ஏழு புரவிவீரர்கள் ஏற்றப்பட்ட விற்களுடன் துவாரகையின் கொடிகளை ஏந்தி முன்னால் செல்ல இரண்டுபுரவிகள் பூட்டப்பட்டு சிறிய ஆவசக்கரங்கள் ஏற்றப்பட்ட மூன்று விரைவுத்தேர்களில் காவலர்கள் தொடர்ந்தனர். கிருஷ்ணனும் அமைச்சர் சுதாமரும் அமர்ந்திருந்த தேர் அதைத் தொடர்ந்து சென்றது. அடுத்த தேரில் அரண்மனைப்பெண்கள் எழுவர் சென்றனர். தொடர்ந்து சாத்யகியும் மூன்று படைத்தலைவர்களும் ஒரு தேரில்சென்றனர். உணவுப்பொதிகளையும் படைக்கலங்களையும் சுமந்த நான்கு வண்டிகள் அதைத் தொடர்ந்து சென்றன. அவற்றின் பின் காம்பில்யத்திற்கான வணக்கச்செல்வங்கள் அடங்கிய பெட்டிகளுடன் ஏழு வண்டிகள் சென்றன. குதிரைகளுக்கான புல்சுமைகளுடன் இருபது அத்திரிகளும் கூடாரப்பொருட்களைச் சுமந்த முப்பது கழுதைகளும் பின்னால் நடந்தன. இறுதியாக இருபத்தைந்து குதிரைகளில் வேல்களும் விற்களும் ஏந்திய வீரர்கள் சென்றனர்.

இளவேனிற்காலம் முதல் முதுவேனிற்காலம் வரையிலான பருவம்தான் சிந்துவில் செல்லும் வணிகர்களுக்குரியது. வேனில் முதிர்ந்து மழைக்காலம் தொடங்கியபின்னர் சப்தசிந்துவின் வழியாக வண்டிகள் பயணம்செய்ய முடியாது. வண்டல்மண்ணால் ஆன ஊர்களும் பாதைகளுமெல்லாம் சேறாகி நுரைத்து புதையும். நதிகளிலெல்லாம் செந்நிறமான மழைப்பெருக்கு சுழித்தோடும். தெப்பங்களும் படகுகளும் நிறுத்தப்பட்டிருக்கும். சிந்துவின் மழைக்காலம் புகழ்பெற்றது. வானத்தின் திரையால் ஊர்கள் முழுமையாகவே மூடப்பட்டுவிடும். வயல்களும் குளங்களும் நதிகளுமெல்லாம் இணைந்து ஒன்றாகி செந்நிறநீர்ப்பரப்பே எங்கும் தெரியும். ஊர்கள் நாவாய்கள் போல தங்கள் நீர்ப்பாவைகள் தலைகீழாகத் தொங்கிக்கிடக்க தனித்து விடப்பட்டிருக்கும். ஊற்றிக்கொண்டிருக்கும் புற்கூரைகளுக்கு அடியில் மீனையும் ஊனையும் சுட்டுத்தின்றபடி உழவர்கள் மழைமுடிவதற்காக தவமிருப்பார்கள்.

சாலைகள் முழுக்க வண்டிகளின் பின்பக்கங்கள் முன்பக்கங்களுடன் தொட்டுக்கொண்டு வணிகக்குழுக்கள் சென்றுகொண்டிருந்தன. அவர்களுடன் சென்ற சூதப்பாடகர்கள் பாடிச்சென்ற பாடல்கள் ஒன்றுடன் ஒன்று கலந்து ஒலித்தன. சுமைவண்டிகளும் பொதிவிலங்குகளுமாக சிந்துவில் இருந்து எழுந்த வணிகக்குழுக்கள் யமுனையிலும் கங்கையிலும் மீண்டும் படகுகளில் ஏறிக்கொண்டு கங்காவர்த்தத்தின் ஊர்களை நோக்கி செல்லத்தொடங்கின.

சாலை முழுக்க சுட்டசெங்கற்களும் கற்பாளங்களும் பரப்பப்பட்டிருந்தமையால் விரைவாகவே செல்லமுடிந்தது. எட்டு காதத்திற்கு ஒருமுறை வணிகச்சாவடிகளும் சுமைவிலங்குகளுக்கான நீர்த்தேக்கங்களும் அமைக்கப்பட்டிருந்தன. இளவேனில் முடிந்த காலமென்பதனால் விடியும்போதே கிளம்பி வெயிலேறுவது வரை சென்றபின் சோலைகளில் இளைப்பாறி மீண்டும் மாலையில் கிளம்பி இரவு அடர்வதுவரை பயணம்செய்தனர். சுதுத்ரியையும் திருஷ்டாவதியையும் பெரிய மரக்குடைவுத் தெப்பங்களில் ஏறிக்கடந்தனர். அசோகவனி என்னுமிடத்தில் யமுனையைக் கடந்து பிரமாணகோடியில் கங்கையைக் கடந்து உசிநாரர்களின் காடுகளை வகுந்துசென்ற பாதைவழியாக காம்பில்யத்தை சென்றடைந்தனர்.

காம்பில்யத்தின் எல்லையிலேயே பாஞ்சால இளவரசர்களான சுமித்ரன், ரிஷபன், யுதாமன்யு, விரிகன், பாஞ்சால்யன், சுரதன், உத்தமௌஜன், சத்ருஞ்ஜயன், ஜனமேஜயன், துவஜசேனன் ஆகியோர் வந்திருந்தனர். அமைச்சர் கருணரும் படைத்தலைவர் ரிஷபரும் துணைவந்தனர். பாண்டவர்களில் நகுலனும் சகதேவனும் வந்திருந்தனர். வெயில் முறுகி வந்த பிற்பகலில் கிருஷ்ணனின் படைகள் குறுங்காடுகளுக்குள் சென்றதுமே பறவைகளை விண்ணில் அனுப்பி வந்துகொண்டிருப்பதை செய்தியறிவித்தனர்.

குறுங்காட்டைக் கடப்பதற்குள்ளேயே தொலைவில் எரியம்பு எழுந்து அவர்களை வரவேற்றது. அவர்களும் எரியம்பு எய்து வருகையறிவித்தனர். துவாரகையின் கொடி தட்சிணபாஞ்சாலத்தின் எல்லையாக அமைந்த முதற் காவல்கோட்டத்தை அடைந்ததும் பெருமுரசம் முழங்கத்தொடங்கியது. தொடர்ந்து யானைநிரை போல காவல்கோட்டங்கள் ஒலியெழுப்பின. இறுதியில் காம்பில்யத்தின் கோட்டைவாயிலின் பெருமுரசம் முழங்கியது.

கிருஷ்ணனை எதிர்கொண்டழைத்த சுமித்ரன் வணங்கி “துவாரகை அதிபராகிய இளையயாதவரை காம்பில்யம் தலைவணங்கி வரவேற்கிறது. பேரரசர் துருபதரும் இளையமன்னர் சத்யஜித்தும் பட்டத்து இளவரசர் சித்ரகேதுவும் தங்கள் முன் பணிகிறார்கள். தங்கள் தூயகால்களால் எங்கள் நிலம் வளம்பெறட்டும். தங்கள் நிறைசொற்களால் எங்கள் குலம் மேன்மை பெறட்டும். தங்கள் வணக்கங்களால் எங்கள் மூதாதையர் மகிழ்வுறட்டும். தங்களைத் தொட்டு எங்கள் தெய்வங்கள் வாழ்த்தட்டும். ஆம், அவ்வாறே ஆகுக!” என்று சொல்லி தன் வெள்ளிக்கோலை தாழ்த்தினான். அவனுடன் வந்த மங்கலச்சூதர் இசைமுழக்கினர்.

நகுலனும் சகதேவனும் வந்து முகமன் சொல்லி வணங்கியபோது கிருஷ்ணன் முகம் கனிந்து “பார்த்தன் நலம்பெற்றுவிட்டானா?” என்றான். “ஆம் யாதவரே. அவரது புண் சற்று பெரியதாக இருந்தாலும் காம்பில்யத்தின் சிறந்த மருத்துவர்கள் அதை ஆற்றிவிட்டனர்” என்றான் நகுலன். கிருஷ்ணன் சகதேவனின் தோளை தன் கையால் வளைத்து சாத்யகியை நோக்கித் திரும்பி “இவன் என் மருகன் சாத்யகி. உங்கள் அன்னைவழியில் உங்களுக்கு இளையோன். என்றும் உங்களுடன் இவனும் இருப்பான்” என்றான்.

நகுலன் சாத்யகியின் கைகளைப்பற்றிக்கொண்டு “வருக யாதவரே. தங்களால் எங்கள் குடி மகிழ்வடையட்டும்” என்றான். சாத்யகி “நான் அன்னையை இதுவரை பார்த்ததில்லை. அவர்களைப்பற்றிய கதைகளைத்தான் இளமையிலேயே கேட்டிருக்கிறேன்” என்றான். “இங்குதான் இருக்கிறார்கள். தங்களைச் சந்திப்பது அவர்களுக்கு மகிழ்வளிக்கும்” என்ற நகுலன் “யாதவர்கள் எவராயினும் அவர்கள் மகிழ்வு கொள்கிறார்கள்” என்றான். சாத்யகி சிரித்து “யாதவர்களின் பேரன்னை இன்று அவர்களல்லவா?” என்றான்.

படைத்தலைவர் ரிஷபர் தன் வாளை உருவி கிருஷ்ணன் முன் தலைவணங்கினார். கருணர் மலர்கொண்டு அவனை வாழ்த்தி காம்பில்யத்திற்குள் அழைத்துச்சென்றார். உருவிய வாளுடன் சுமித்ரன் முன்னால் செல்ல அவனுக்குப்பின்னால் அவன் தம்பியர் சென்றனர். தொடர்ந்து கிருஷ்ணனும் படைகளும் சென்றனர். செல்லும் வழிமுழுக்க காவல்கோட்டங்களில் இருந்து முரசுகள் அவர்களை வரவேற்றன.

காம்பில்யத்தின் கோட்டைவாயிலில் பொன்முகபடாமணிந்த ஏழு களிறுகள் அவர்களை வரவேற்க நின்றிருந்தன. கோட்டைமேலிருந்து மலர்க்குவைகள் கிருஷ்ணன் மேல் பொழிந்தன. களிறுகள் நிரையாக அசைந்தாடி நின்றன. அவற்றுக்குப்பின்னால் நின்றிருந்த மங்கலப்பரத்தையர் தாலங்களுடன் முன்னால் வர மங்கல இசை முழக்கி சூதர்கள் தொடர்ந்தனர். பொன்னாலான சிறிய யானைச்சிலை ஒன்றை நான்கு வைதிகர்கள் எடுத்துவந்தனர். அதை கிருஷ்ணன் முன் காட்டி அவனுக்கு மஞ்சள்விழுதால் நெற்றிக்குறியிட்டு நீரும் மலரும் அரிசியும் இட்டு வாழ்த்தி வரவேற்றனர்.

“ஏழரைப்பொன் யானை எழுந்தருளல் என்று இச்சடங்கை சொல்கிறார்கள். பாஞ்சாலர்களின் தொன்மையான வரவேற்பு இது. முழுமங்கலம் நிகழும்போது மட்டுமே இவ்வரவேற்பளிக்க வேண்டுமென சொல்வார்கள். கல்யாணகோலத்தில் விண்ணளந்தோன் எழுந்தருள்கையிலும் சத்ரமும் சாமரமும் சூடி உலகாளும் பெருமன்னர் வருகையின்போதும் மட்டுமே இவ்வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதற்கு முன்னர் அஸ்தினபுரியின் பிரதீபர் காம்பில்யத்திற்கு வருகையளித்தபோது இந்த வரவேற்பு அளிக்கப்பட்டது” என்றார் கருணர்.

அவர்கள் கோட்டைக்குள் நுழைந்தபோது நகர்வீதிகளில் நிறைந்திருந்த குடிகளின் வாழ்த்தொலி பெருமழை என ஒலித்து சூழ்ந்துகொண்டது. பாஞ்சாலத்தின் திறந்த பொற்தேரில் கிருஷ்ணன் ஏறிக்கொண்டதும் திரும்பி “மருகரே, நீரும் ஏறிக்கொள்ளும்” என்றான். சாத்யகி தயங்க “விரைவாக!” என ஆணையிட்டான். சாத்யகி கால்கள் நடுங்க பொற்படிகளில் கால்வைத்து ஏறி நின்றான். அவன் மேல் மலர்மழை பொழிந்து பார்வையை மறைத்தது.

சிலமாதங்களுக்கு முன்னர்தான் அவன் தன் தந்தையுடனும் இளையோராகிய சம்விரதன், சம்பிரதீகன், உத்தவன் ஆகியோருடனும் காம்பில்யத்திற்குள் முதல்முறையாக நுழைந்தான். அவர்கள் பிலக்‌ஷவனம் வந்து யமுனையைக் கடந்து பிரமாணகோடி வந்து அங்கிருந்து படகில் காம்பில்யத்தை அடைந்தனர். அவன் பார்த்த முதல் பெருந்துறைமுகம் அது. முதல்பெருநகரமும் அதுவே. துறைமேடையருகே ஒரேசமயம் நின்ற ஏழு நாவாய்களை அவன் கட்டடங்கள் என்றுதான் எண்ணினான். அவற்றில் ஒன்றின்மேல் பாய்கள் ஒவ்வொன்றாகப்புடைத்து ஏறக்கண்டபோதுதான் அவை கலங்களெனத் தெளிந்தான்.

யானைகள் போலிருந்தன அக்கலங்கள். அவற்றில் சுமையேற்றும் யானைக்கூட்டங்களையும் நேரடியாகவே கலங்களுக்குள் சென்ற பாலங்களையும் கோட்டைச்சுவர் இடிந்து பரவியது போல விழிதொடும் தொலைவுவரை கிடந்த பொதிகளையும் கண்டு அவன் விழிமயங்கி நின்றிருக்க காம்பில்யத்தின் சிற்றமைச்சர் ஒருவர் புன்னகையுடன் அவர்களை வரவேற்று சிற்றரசர்கள் தங்குவதற்காக கங்கைக்கரையில் அமைக்கப்பட்டிருந்த மரவீடுகளில் ஒன்றுக்கு இட்டுச்சென்றார். அங்கே அவர்களுக்கு உதவ ஒற்றை ஏவலாள் மட்டும் பணிக்கப்பட்டிருந்தான்.

அன்றுமாலை அவன் நீராடி நல்லுடை அணிந்து நகர்நோக்குக்காக சாலைக்கு சென்றான். பலவண்ண உடைகளும் ஒளிவிடும் அணிகளுமாக மக்கள் நெரிந்த காம்பில்யத்தின் தெருக்களில் மக்களின் தோள்களில் முட்டிமோதித் தவித்துக்கொண்டிருந்தபோது புரவியில் சென்ற வீரன் ஒருவன் “யாதவரே. சாலையோரமாகச் சென்று நில்லுங்கள். மகதமன்னரின் அணிகள் செல்கின்றன…” என்று கூவினான். அவன் விலகி சாலையோரத்து மாளிகை முகப்பின் முன்னால் ஏறி நின்றான். அவனைச்சூழ்ந்து காம்பில்யத்தின் மக்கள் நின்று எட்டிநோக்கி “மகதர்! மகத மன்னர் ஜராசந்தர்” என்று கூவினர்.

ஏழு யானைகள் பட்டுப்போர்வையும் முகபடாமும் பொன்னணிகளும் தந்தக்கூரும் ஒளிர மாபெரும் பொன்வண்டுகள் என அசைந்து நடந்து வந்தன. முதல் யானையின்மேல் முரசுடன் கோல்காரன் அமர்ந்திருந்தான். அடுத்த யானையில் மகதத்தின் துதிக்கை தூக்கிய யானைக்கொடியுடன் கொடிக்காரன் அமர்ந்திருந்தான். தொடர்ந்து வந்த மூன்று யானைகளில் பொன்னகையும் பட்டுமாக அணிப்பரத்தையர் கோல்களுடன் அமர்ந்திருந்தனர்.

ஆறாவது யானையில் மகதமன்னன் ஜராசந்தன் திறந்த பெருந்தோள்களில் வைரங்கள் பதிக்கப்பட்ட ஆரங்களும் மணிக்குண்டலங்களும் வைரச்சரங்கள் சுற்றப்பட்ட பட்டுத்தலைப்பாகையும் கதாயுதமுமாக அமர்ந்து இருபக்கங்களையும் நோக்கி தன்னை வாழ்த்திய மக்களை வணங்கியபடி சென்றார். அவருக்குப்பின்னால் வந்த யானையில் அவர் ஆலயத்திற்கு அளிக்கப்போகும் வணக்கச்செல்வம் பெரிய மரப்பெட்டிகளில் கொண்டுசெல்லப்பட்டது.

“ஆயிரம் பொற்கலங்களை அவர் இன்று துர்க்கையன்னைக்கு அளிக்கவிருக்கிறார்” என்று ஒருவன் சொன்னான். “ஒவ்வொன்றும் எருதுத்தலையளவு பெரியவை. அவற்றை அவர்கள் எடுத்துவைப்பதை என் மருகன் தன் விழிகளால் கண்டான்.” எருதுத்தலையளவுள்ள பொற்கலன்கள்! அவன் அந்த மணத்தன்னேற்புக்குக் கிளம்பும்போது அவனுடைய தந்தை தங்கள் மரவீட்டின் அடித்தளத்தில் இருந்த கருவூலத்தில் இருந்து எடுத்துவந்து புளிப்புச்சாறும் பின்னர் சுண்ணக்குழம்பும் இட்டு துலக்கி அளித்த சிறிய பொன்னணிகளை எண்ணிக்கொண்டான்.

அவன் அதுவரை காதுகளில் வெள்ளிக்குண்டலங்கள்தான் அணிந்திருந்தான். பொற்குண்டலங்கள் எடையற்றவையாக வேப்பம்பழங்கள்போலிருந்தன. மெல்லிய நீளாரம் ஒன்றை அவன் கழுத்திலணிவித்த அவன் அன்னை “அங்கே அத்தனை அரசகுலத்தவரும் பொன்னணிந்துதான் வருவார்கள். நாம் எவ்வகையிலும் தாழ்ந்துபோகக்கூடாது” என்றாள். அன்று அதை எண்ணி அந்தச் சாலையோரத்தில் நின்று அவன் புன்னகைசெய்தான்.

அணிவலம் நகர்மையத்திலிருந்த காம்பில்யத்தின் அரண்மனைத் தொகுதியை நோக்கி சென்றது. சாலைகளின் இருபக்கமும் கூடியிருந்தவர்களில் பெண்கள்தான் கூடுதல் என அவன் கண்டான். பாரதவர்ஷம் முழுக்க பெண்கள் இளைய யாதவனைப்பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தனர் என அவன் அறிவான். அவர்களின் விழைவுகளே ஒருங்கு திரண்டு அவராக மாறியது என சூதர்கள் பாடுவதுண்டு. நூறுதலைமுறைக்காலம் கன்னியர் கனவில் வாழ்ந்த கந்தர்வர்களனைவரும் நீர்ப்பாவைகளாக மாறி இமயத்தின் பிரம்மமானசம் என்னும் சுனையில் விழுந்தனர். அதன் ஆழத்தின் சுழியில் அவர்கள் சுழன்று கரைந்து ஒன்றாகி ஒற்றைப்பாவையாக ஆயினர். குனிந்து அவ்வுருவைக் கண்ட பிரம்மன் ‘அதுவே ஆகுக!’ என்றார். அச்சொல்லே அன்னை தேவகியின் வயிற்றில் கருவாகியது என்றார் சூதர்.

அன்று அவையில் கதைகேட்டு அமர்ந்திருந்த அன்னையரும் கன்னியரும் சிறுமியருமான அத்தனை பெண்களும் விழிமின்ன மெல்ல உடல் ஒசிவதை அவன் கண்டான். அவனைச்சுற்றி பெண்விழிகள் மலர்ந்த பெரும் தோட்டம் இருந்தது. மணிச்சரங்களாக நீளும் விழிகள். வண்ணத்துப்பூச்சிகளாக சிறகடிக்கும் விழிகள். விழிகளில் எரிவது காமமா? இல்லை முலைசுரக்கும் அன்னையின் கனிவா? களித்தோழனைக் கண்ட சிறுமியின் சிரிப்பா?

அரண்மனைக்கோட்டை வாயிலில் சத்யஜித்தும் சித்ரகேதுவும் கிருஷ்ணனை எதிர்கொண்டு வரவேற்றனர். சத்யஜித் அவனை மார்புறத்தழுவி “இன்றுதான் பாஞ்சாலம் தன் அச்சத்தை வென்றது. இனி பாரதவர்ஷத்தில் எங்கும் யாதவர்களின் கொடியுடன் எங்கள் கொடிகளும் பறக்கும்” என்றார். “அவ்வண்ணமே ஆகுக!” என்று கிருஷ்ணன் சொன்னான். சித்ரகேது “தாங்கள் தங்கி இளைப்பாற அரண்மனை ஒருக்கப்பட்டுள்ளது யாதவரே. ஓய்வெடுத்து வருக! மாலையில் அரண்மனையின் அணியவையில் தங்களுக்கு அரசரும் ஐங்குலத்தவரும் அரசவையினரும் முறைவணக்கம் செய்கிறார்கள். ஏற்றருள்க!” என்றான்.

காம்பில்யத்தின் பெரிய அரண்மனையை அவர்களுக்காக அணிசெய்திருந்தனர். துவாரகையின் கருடக்கொடியும் பாஞ்சாலத்தின் விற்கொடியும் முகப்பில் பறந்தன. பெரிய மரத்தூண்களில் செம்பொன்னிற நூல்பின்னல்கள் செய்யப்பட்ட பாவட்டாக்கள் தொங்கின. ”நூறாண்டுகளுக்கு முன் இங்குதான் மாமன்னர் பிரதீபர் தங்கிய அரண்மனை இருந்தது. அவர் நினைவாக அதை விரிவாக்கிக் கட்டப்பட்ட இம்மாளிகைக்கு பிரதீபம் என்று பெயர்” என்றார் கருணர்.

மங்கலப்பரத்தையர் மஞ்சள் நீர்காட்டி அவர்களை எதிரேற்றனர். அவர்களுக்குப் பணிசெய்ய நிறுத்தப்பட்ட ஏவலர்களும் சமையர்களும் மருத்துவர்களும் அடுமனையர்களும் காவலர்களும் அவர்களின் தலைவராகிய கருடருடன் வந்து வணங்கி நின்றனர். கருடர் “தங்கள் பணிக்கென இங்குள்ளோம் அரசே” என்று சொல்லி வணங்கி அவர்களை உள்ளே அழைத்துச் சென்றார்.

சாத்யகி தனக்கென அளிக்கப்பட்ட அறைக்குச் சென்று அமர்ந்தபோது எங்கிருக்கிறோம் என்ற மயக்கத்தை அடைந்தான். பழையநினைவுகளும் புதியநிகழ்வுகளும் ஒன்றுடனொன்று கூடிக்கலந்து சித்தத்தை தேனீக்கூடு என ரீங்கரிக்கச்செய்தன. கண்களை மூடியபடி அப்படியே மஞ்சத்தில் படுத்துவிட்டான். மெல்ல துயில்வந்து எண்ணம் குழைந்தபோது ரிஷபவனத்தில் காட்டுமாடத்தில் மரவுரித்தூளியில் கிடப்பதுபோல தோன்றியது. கீழே கன்றுகளின் குரல்கள். அவர்களுக்கு பன்னிரண்டாயிரம் பசுக்களிருந்தன. அவனுடைய மாதுலர்கள் மேய்த்துவந்த மந்தை நான்காயிரம் மாடுகள் கொண்டது. நான்காயிரம் காதடி ஓசைகள். குளம்போசைகள்.

எழுந்தபோது அந்த ஓசை அரண்மனைமுற்றத்தின் ஓசை என உணர்ந்தான். அங்கே தேர்கள் வந்து நின்றன, கிளம்பிச்சென்றன. வீரர்கள் புரவிகளில் கடந்துசென்றனர். பல்லக்கு பொறுத்தோர் உரக்கக் கூவியபடி ஓடும் ஓசை. காம்பில்யத்தின் அரண்மனையில் அவன் இருப்பதை உணர்ந்ததும் எழுந்து விரைந்து நீராட்டறைக்குச் சென்றான். பிறரால் நீராட்டப்படுவதற்கு துவாரகையிலேயே பழகியிருந்தான். ரிஷபவனத்தில் அச்செய்தியை அறிந்தால் ஒவ்வொருவரும் முகம் சுளிப்பார்கள்.

உடையணிந்து வெளியே வந்து ஏவலனிடம் “மன்னர் என்ன செய்கிறார்?” என்று கேட்டான். “சற்றுநேரம் ஓய்வெடுத்தார். நீராடி உணவருந்திவந்து செய்திகளை கேட்டறிந்தபடி சிறுகூடத்தில் அமர்ந்திருக்கிறார்” என்றான். சாத்யகி சிறுகூடத்திற்குச் சென்று வாயிலில் நின்றான். கிருஷ்ணனின் அணுக்கப் பணியாளாகிய மாருதன் உள்ளே சென்று அவன் வருகையை அறிவித்தான். அவன் உள்ளே சென்று வணங்கினான். சுதாமர் கிருஷ்ணன் முன் அமர்ந்து அவன் சொல்வதை ஏட்டில் குறித்துக்கொண்டிருந்தார். கிருஷ்ணன் விழிதூக்காமலேயே அமரும்படி கைகாட்டினான்.

சாத்யகி அமர்ந்து கொண்டு அவர்கள் எழுதுவதை கூர்ந்தான். காம்பில்யத்திற்கு வந்துசேர்ந்ததைப்பற்றிய வழக்கமான அரசாணை என்று முதலில் தோன்றியது. ஆனால் தொடர்ச்சியான சுழலும் சொற்களிலிருந்து அவனறியாத மந்தணம் ஏதோ அதிலிருப்பதை உணர்ந்தான். ஓலையை முடித்ததும் சுதாமர் எழுந்து “நான் இதை இன்றே அனுப்பிவிடுகிறேன். அஸ்தினபுரியிலிருந்தும் தசசக்கரத்திலிருந்தும் வந்துள்ள ஓலைகளைத் தொகுத்து இரவு தங்களிடம் செய்தியறிவிக்கிறேன்” என்றபின் வெளியே சென்றார்.

கிருஷ்ணன் கால்களை நீட்டியபடி சாத்யகியிடம் “இங்கு இனிமேலும் பாண்டவர்கள் இருக்கமுடியாத நிலை அணுகிவிட்டது இளையோனே” என்றான். சாத்யகி நிமிர்ந்து நோக்க “என்னைப் பார்க்க அர்ஜுனன் எல்லைக்கு வந்திருக்கவேண்டும். இது அஸ்தினபுரியாக இருந்திருந்தால் அவன் வந்துமிருப்பான். இங்குள்ள முறைமைகளுக்குக் கட்டுப்பட்டுதான் வராமலிருக்கிறான்” என்ற பின்னர் பெருமூச்சுடன் “வராமலிருந்ததும் நன்றே” என்றான். சாத்யகி “ஏன்?” என்றான். ”வந்திருந்தால் நான் அவனை முதலில் நோக்கியிருப்பேன். அது பாஞ்சால இளவரசர்களின் முறைமூப்பை மீறியதாக ஆகும்” என்றான் கிருஷ்ணன்.

சாத்யகி பாஞ்சால இளவரசர்களின் முகங்கள் ஒவ்வொன்றாக நினைவில் மீட்டெடுத்தான். அப்போது அந்த ஒவ்வொரு முகமும் பாண்டவர்கள் வரவில்லை என்பதைக் காட்டுவதாகவே தோன்றியது. “திறல்வீரர்கள் பிறரை எளியவர்களாக ஆக்குகிறார்கள் இளையோனே. பார்த்தனையும் பீமனையும் இங்குள்ள இளவரசர் எவரும் விரும்ப வழியில்லை” என்றான்.

“அவர்கள் இங்கு வரவும் தடைகள் இருக்குமோ?” என்று சாத்யகி கேட்டான். “ஆம், அவர்கள் முறைமைப்படி இந்நாட்டின் விருந்தினர்கள். நானும் விருந்தினனே. அரசரிடமும் அவையிடமும் முறைப்படி ஒப்புதல் பெறாது நாங்கள் சந்தித்துக்கொள்ளமுடியாது” என்று கிருஷ்ணன் சொன்னான். “இன்றுமாலை அரசவையில் முகமன் சொல்லி தழுவிக்கொள்ள மட்டுமே முறைமை ஒப்புகிறது. அதன்பின் அந்த அவையிலேயே நாங்கள் மேலும் சந்திக்க அரசரிடம் சொல் பெறலாம். அதற்கும் உரிய வழமைகளும் சொற்றொடர்களும் வகுக்கப்பட்டிருக்கும்.”

“ஆனால் இங்கிருக்கையில் அவர்கள் இதற்கெல்லாம் கட்டுப்பட்டுதானே ஆகவேண்டும்?” என்று சாத்யகி கேட்டான். கிருஷ்ணன் “ஆம். கௌரவப்படைகளை வென்றபின்னர் இங்கே அவர்களின் மதிப்பு பெருகியிருக்கும். ஆனால் அரசமுறைமையில் அவர்களுக்கென எந்த இடமும் இல்லை. பெண்கொண்டவர்கள் தொடர்ந்து இங்கேயே தங்கும் நிகழ்வு இதற்கு முன்னர் நிகழ்ந்திருக்காது” என்றான். “இவர்கள் தொல்குடியினர். ஐங்குலம் ஒன்றானவர்கள். குலங்களை இணைத்திருப்பது முறைமை. அதை சற்றும் மீறமாட்டார்கள். மீறாமலிருப்பதும் நன்று. ஆனால் அம்முறைமையில் எந்த இடமும் இல்லாமல் இங்கிருப்பதென்பது இல்லாமலிருப்பதேயாகும்” என்றான்.

சாத்யகி அவன் சொல்வதைப்புரிந்துகொள்ளாமல் வெறுமனே நோக்கியிருந்தான். “இன்றுமாலை அரசவையில் யுதிஷ்டிரன் எங்கிருப்பான் என்று நோக்கும். அரசருக்கு நிகரான முகமன்கள் அவருக்கு சொல்லப்படும். ஆனால் இளவரசர்களுக்கும் ஐங்குலத்தலைவர்களுக்கும் அவர்களின் மைந்தர்களுக்கும் பின்னரே அவர் அவை நுழையமுடியும், மன்றமரமுடியும். அவரது சொற்கள் கேட்கப்படும், எந்தக்கருத்தும் குலங்களால் ஏற்கப்படாது” என்று கிருஷ்ணன் சொன்னான்.

சாத்யகி “அவர்கள் துவாரகைக்கு வரட்டும்” என்றான். கிருஷ்ணன் புன்னகைத்து “குலங்களை இணைப்பவர் எவரும் முறைமைகளை மீறமுடியாது இளையோனே” என்றான். சாத்யகி “அவர்களும் யாதவர்களல்லவா?” என்றான். கிருஷ்ணன் “இல்லை, நம்மவர் விழிகளில் அவர்கள் ஷத்ரியர்களே. யாதவர்களுக்குரிய எந்தக் குலச்சடங்கும் செய்யப்படாதவர்கள் அவர்கள்” என்றான்.

சாத்யகி வெறுமனே நோக்க “வேறுவழியே இல்லை, அவர்கள் தங்கள் நாட்டை அடைந்தாகவேண்டும். அஸ்தினபுரியின்மேல் படைகொண்டுசெல்வதாக இருப்பினும் அது முறையே. நாடற்ற ஷத்ரியன் நீரை இழந்த முதலையைப் போன்றவன் என்கின்றது பராசரநீதி” என்றான் கிருஷ்ணன். சாத்யகி “ஆம், நானும் அதையே எண்ணுகிறேன். அவர்கள் கௌரவப்படைகளை வென்றிருக்கிறார்கள். ஆகவே இன்று அவர்கள் கோரிப்பெறும் இடத்தில் இருக்கிறார்கள்” என்றான். கிருஷ்ணன் தனக்குள் என “அது எளிதாக இருக்கப்போவதில்லை” என்றான்.

சாத்யகி “நாம் பாண்டவர்களை பார்க்க விழைவதை அரசருக்கு தெரிவித்தாலென்ன?” என்றான். “எப்படியும் இன்னும் மூன்றுநாழிகைக்குள் பார்க்கப்போகிறோம். அப்போது தெரிவிப்போம்…” என்ற கிருஷ்ணன் சற்று அசைந்தமர்ந்து “துவாரகையிலிருந்து கிளம்பும்போதே அவன் நினைவாகத்தான் இருந்தேன் இளையோனே” என்றான்.

மாருதன் உள்ளே வந்து “இளையபாண்டவர் பார்த்தர்” என்றபோது சாத்யகி தன் உள்ளம் அதை எதிர்நோக்கியிருந்ததை உணர்ந்தான். கிருஷ்ணன் முகம் மலர்ந்து எழுந்து வாயிலை நோக்கி விரைவதை சாத்யகி சற்று திகைப்புடன் நோக்கினான். அவன் கதவைத்திறந்து வெளியே சென்றதை நோக்கியபின் மாருதன் திரும்பி அவனை நோக்கி புன்னகைசெய்தான். சாத்யகி எழுந்து கதவைத்திறந்து வெளியே நோக்க கிருஷ்ணன் நீண்ட இடைநாழியைக் கடந்து படிகளில் இறங்கி பெருங்கூடம் நோக்கி சென்றான். சாத்யகி தயக்கமான காலடிகளுடன் தொடர்ந்து சென்றான்.

பெருங்கூடத்தில் பீடமொன்றில் அமர்ந்திருந்த அர்ஜுனன் ஓசை கேட்டு விரைந்து எழுந்து திரும்பினான். காலடியோசையிலேயே கிருஷ்ணனை அர்ஜுனன் அறிந்துவிட்டதை முகத்தின் மலர்வு காட்டியது. கிருஷ்ணன் கூச்சலிட்டபடி இரு கைகளையும் விரித்தபடி ஓடிச்சென்று அர்ஜுனனை தழுவிக்கொண்டான். இருவரும் சிறுவர்களைப்போல பற்கள் தெரிய ஓசையிட்டுச் சிரித்தபடி தோள்களில் அறைந்துகொண்டு மீண்டும் மீண்டும் தழுவிக்கொண்டனர். சாத்யகி விலகிநின்று அதை நோக்கினான்.

கிருஷ்ணன் “அவள் பெயரென்ன, பிரீதையா? அவளைத்தான் நான் பார்க்க விழைகிறேன்” என்றான். அர்ஜுனன் “உன்னைக்கொண்டுபோய் அவளிடம் காட்டுமளவுக்கு நான் மூடனல்ல” என்றான். கிருஷ்ணன் ”அவளைக் கண்டுபிடிப்பதொன்றும் பெரிய வேலை அல்ல. என்னால் விழிகளை மட்டும் பார்த்தே சொல்லிவிடமுடியும்” என்றான். “போ, போ, போய்ப்பார்… இங்குள்ள பெண்களுக்கு தோளைச்சுற்றி கைகள்” என்றான். கிருஷ்ணன் சிரித்தபடி மெல்லிய குரலில் ஏதோ கேட்க ”போடா” என்று சொல்லி அர்ஜுனன் அவன் தோளில் அறைந்தான். கிருஷ்ணன் அவன் தோளில் கிடந்த சால்வையைப் பிடித்து இழுத்து “நில், சொல்லிவிடு” என்றான். “போடா” என்று அர்ஜுனன் ஓங்கி மீண்டும் குத்தினான். பின் இருவரும் இணைந்து வெடித்துச் சிரித்தனர்.

படிகளுக்குமேல் நின்ற சாத்யகி அவர்கள் பார்வையில் படவேண்டியதில்லை என சற்று பின்னகர்ந்தபோது மாருதன் அங்கே நிற்பதைக் கண்டான். “பிரீதை என்பவள் யார்?” என்று கேட்டான். “காம்பில்யத்தின் அணிப்பரத்தையரில் ஒருத்தியாக இருப்பாள். இருவரும் வேறென்ன பேசிக்கொள்ளப்போகிறார்கள்?” என்றான் மாருதன். சாத்யகி “அவர்…” என்று வாய்திறந்து பின் சொல்லடக்கி புன்னகைத்தான். “அவர்கள் பேசிமுடிக்கையில் எனக்கு சொல்லியனுப்புங்கள் மாருதரே. நான் அரசருடன் அவைபுக விழைகிறேன்” என்றபின் திரும்பிநடந்தான்.

முந்தைய கட்டுரைசெட்டியரும் பிரிட்டியரும்- ராய் காரைக்குடியில்: சுனீல் கிருஷ்ணன்
அடுத்த கட்டுரைஉச்சவழு-கடிதம்