பகுதி 9 : பெருவாயில்புரம் – 5
விடியற்காலையில் துவாரகையின் விண்ணளந்தானின் பேராலயத்தில் இருந்து தர்மகண்டம் என்னும் பெருமணியின் ஓசை முழங்கியபோது சாத்யகி ஆடையும் அணிகளும் பூண்டு பயணத்துக்கு சித்தமாகியிருந்தான். பதினெட்டுமுறை தர்மகண்டம் ஓம் ஓம் என்று முழங்கி ஓய்ந்ததும் சிம்மக்குரல்போல துறைமுகப்பின் பெருமுரசம் முழங்கத்தொடங்கியது. தொடர்ந்து அனைத்துக் காவல்கோட்டங்களிலும் முரசுகள் ஒலித்தன. நகரின் மரக்கூட்டங்களில் சேக்கேறியிருந்த பறவைகள் கலைந்தெழுந்து காற்றில் சிறகடித்துச் சுழன்று குரலெழுப்பின. வடக்கு எல்லைக்கு அப்பாலிருந்த ஆநிலைகளில் இருந்து பசுக்களின் குரல்கள் எழுந்தன.
ஏவலன் வந்து பணிந்து “படைத்தலைவர் துறைமுகத்திற்கு சென்றுவிட்டார்” என்றான். சாத்யகி தன் கச்சையை இறுக்கி அதில் பொற்பூணிட்ட தந்தப்பிடிகொண்ட குத்துவாளைச் செருகி தலைப்பாகையை சீரமைத்துக்கொண்டு அவனுடன் வெளியே நடந்தான். அரண்மனையின் விரிந்த இடைநாழிகளிலும் உப்பரிகைமுகப்புகளிலும் நெய்ப்பந்த ஒளியில் யவனக்காவலர்கள் ஒளிவிடும் வேல்களுடன் இரும்புக்குறடுகள் ஒலிக்க நடந்தபடி காவல்காத்தனர். அவனைக் கண்டதும் தலைவணங்கி விலகினர்.
அரண்மனை முற்றத்தில் அவனுடைய வெண்புரவி உடல்நீவப்பட்டு அணிகள் பூட்டப்பட்டு மெருகேறிய தோலைச் சிலிர்த்தபடி நின்றுகொண்டிருந்தது. அவனுடைய மணம் கிடைத்ததும் மூக்கைச்சுளித்தபடி தலையை ஆட்டி மெல்ல கனைத்தது. அவன் அருகே சென்றதும் அதன் செந்நீலநாக்கு வெளியே வந்து சுழன்றது. சாத்யகி அதன் நீண்டமுகத்தின் இருநரம்புகளிலும் கழுத்திலும் கையால் வருடிவிட்டு சேணத்தை ஒருமுறை தட்டிவிட்டு ஏறிக்கொண்டான். அது வாலைச்சுழற்றி காலால் கருங்கல்தரையை தட்டியது.
கூழாங்கற்கள் உதிரும் ஒலியெழுப்பி அவன் கற்தரையில் குதிரையில் விரைந்தான். சுழன்று இறங்கிய பாதையில் இருபக்கமும் இருந்த மாளிகைகளின் பந்தவெளிச்சங்கள் நீள்சதுரங்களாக செம்பட்டுவிரித்தது போல விழுந்துகிடந்தன. அவன் அவற்றைக் கடந்து சென்றபோது அவன் நிழல் எழுந்து சுவர்களின் மேல் பரவி சுழன்றது. மாளிகைமுகப்பில் நின்றிருந்த யவனவீரர்கள் அவனுக்கு தலைவணங்கினர். முதற்கோட்டை வாயிலை அணுகியதும் அங்கு நின்றிருந்த நூற்றுவனிடம் “நான் துறைமுகப்பில் இருக்கிறேன் என்று அமைச்சரிடம் சொல்க!” என்றபின் கடந்துசென்றான்.
பன்னிருநாட்களில் அவனுக்கு துவாரகையின் பதினெட்டு அரசப்பெருஞ்சாலைகளும் அச்சாலைகளை ஒன்றுடன் ஒன்று இணைத்த நூற்றுக்கணக்கான ஊடுபாதைகளும் அங்காடியின் வழிகளின் வலைப்பின்னலும் தெரிந்துவிட்டிருந்தன. பதினெட்டு அரசபாதைகளையும் சுற்றி இறங்கி வெளிக்கோட்டையை ஒட்டி இடப்பக்கமாக வளைந்து சென்ற கணிகர்சாலையைக் கடந்து சிறிய குறுக்குப்பாதை வழியாக உணவுப்பொருட்களும் கள்ளும் விற்கும் சிற்றங்காடிக்குள் நுழைந்தான்.
அங்காடியின் அத்தனை கடைகளும் பெரிய மரவுரிகளாலும் மரப்பட்டைகளாலும் மூடப்பட்டிருந்தன. கற்பாளங்களிட்ட சாலைமுழுக்க இரவெல்லாம் நிகழ்ந்த வணிகத்தின் எச்சமாக பொதியிலைகளும் இலைத்தொன்னைகளும் கூலச்சிதறல்களும் பலவகையான உணவுமிச்சிலும் இறைந்து கிடந்தன. அவிழ்த்துவிடப்பட்ட கழுதைகள் வால்சுழல மேய்ந்துகொண்டிருக்க இரண்டு அத்திரிகள் ஒற்றைக்காலைத் தூக்கியபடி தலைதாழ்த்தி நின்று துயின்றன. கடைகளின் ஓரமாக ஆடையவிழ்ந்த களிமகன்கள் படுத்துத் துயின்றனர். யவனர் சோனகர் காப்பிரிகள் பீதர் தென்னாட்டார் கலிங்கர் என அத்தனை பேரையும் அதில் காணமுடியும் என அவன் நினைத்துக்கொண்டான்.
அப்பால் மட்கிய மாவின் மணத்துடன் கூலக்கடைவீதியும் உலர்ந்த மீன் நெடி அடித்த மீன்கடைவீதியும் வந்தன. கூலக்கடைவீதியில் வாலை வளைத்து கையூன்றி நிமிர்ந்து கண்மூடி அமர்ந்திருந்த பூனைகளை காணமுடிந்தது. கூலவணிகர்கள் அவற்றை நூற்றுக்கணக்கில் கொண்டுவந்து வளர்த்தனர். அத்தனை பூனைகளிருந்தும் சாலைகளிலிருந்து பெருச்சாளிகள் பாய்ந்து ஓரங்களை நோக்கி ஓடுவதை தடுக்கமுடியவில்லை.
அவற்றைக்கடந்த சங்குவீதியில்தான் அனைத்துக் கடற்பொருட்களும் விற்கப்பட்டன. தூண்டில்கள், மீன்வேட்டைக்கருவிகள் முதல் சிப்பிகளிலும் சங்குகளிலும் செய்யப்பட்ட பொருட்கள் வரை விற்கும் சிறியகடைகள் அனைத்தும் மூடிக்கிடந்தன. இரவில் அப்பகுதியில் தோளோடு தோள் முட்டாமல் நடக்கமுடியாது. உச்சக்குரலில் கூவாமல் அருகே நிற்பவர்களிடம் பேசமுடியாது.
அங்கு வந்த முதல்நாள் சாத்யகி மீன்முள்ளால் ஆன பீதர்களுக்கான கொண்டை ஊசி ஒன்றை வாங்கினான். அதன் சிறிய பரப்புக்குள் நுணுகி நோக்கினால் மட்டுமே தெரியும்படி ஏழு சிம்மங்கள் செதுக்கப்பட்டிருந்தன. “இதை கொண்டையில் செருகிக்கொண்டால் சிம்மங்கள் தெரியாதே?” என்று அவன் கேட்டான். பீதன் செம்மொழியில் “இளவரசே, சிம்மங்களைச் சூடியவனை தீயூழ் அஞ்சும்” என்றான். அவன் அதை மறுப்பதற்குள் மரப்பெட்டிக்குள் வைத்து அவனிடம் அளித்து மூன்று பொற்காசுகளை பெற்றுக்கொண்டான்.
கொண்டையூசியுடன் வந்தவனைக் கண்டு ஶ்ரீதமர் நகைத்தார். “இந்த எலும்புக்கு மூன்று பொற்காசுகளா? இப்படி வாங்கப்போனால் துவாரகையின் செல்வம் போதாது” என்றார். சாத்யகி “அழகாக இருந்தது” என்றான். “இந்த நகரின் அங்காடிகளில் விற்கப்படும் பொருட்களில் மிகச்சிலவே பயனுள்ளவை. பெரும்பாலானவை அகம் மயக்கும் அழகு மட்டுமே கொண்டவை” என்றார் ஶ்ரீதமர். “பெண்கள் அங்கே சென்றால் அணங்குகளால் ஆட்கொள்ளப்படுகிறார்கள். கணவனின் செல்வத்தை அங்கே அள்ளி இறைக்காமல் மீளமாட்டார்கள்.”
சாத்யகி அங்கே ஒவ்வொருநாளும் சென்று அதை உணர்ந்துகொண்டிருந்தான். குதிரைவாலால் ஆன பொய்முடிகள். கொம்புகளில் நுணுக்கமாக செதுக்குவேலைகள் செய்யப்பட்ட குறுவாளுறைகள். சந்தனத்திலும் வெண்கலத்திலும் மரத்திலும் செய்யப்பட்ட காலணிகள். எத்தனை தள்ளினாலும் படுக்க மறுத்து தலையாட்டிக்கொண்டிருக்கும் பீதர்களின் வெண்களிமண் பாவைகள். கவிழ்த்தாலும் சிந்தாத யவனநாட்டு மதுச்சிமிழ்கள். கைகளைப்பிடித்து சுழற்றினால் இசையெழுப்பிப் பாடும்படியாக மரத்தில் செதுக்கப்பட்ட பாவைகள்.
துதிக்கையைத் தூக்கி பிளிறும் காப்பிரிநாட்டு யானைப்பாவையை அவன் வாங்கியபோது ஶ்ரீதமர் சற்று சினத்துடன் “இவற்றை வாங்கி என்ன செய்யவிருக்கிறாய்? வீண் விளையாட்டுப் பொருட்கள்” என்றார். “விளையாடும்போது மட்டுமே மானுடன் பொருள்பொதிந்த ஒன்றை செய்கிறான் ஶ்ரீதமரே” என்றான் சாத்யகி. “நான் விளையாடவே விழைகிறேன். ஏனென்றால் என் தலைவனும் விளையாடிக்கொண்டிருப்பவனே.” ஶ்ரீதமர் தலையில் அடித்தபடி திரும்பிச்சென்றார்.
துறைமுகத்தை ஒட்டி இருந்த பன்னிரு பெருவீதிகளும் பெருங்கடல் வணிகர்களுக்குரியவை. பீதர்களும் யவனர்களும் சோனகர்களும் காப்பிரிகளும் தென்னவர்களும் கலிங்கர்களும் வேசரத்தவர்களும் தனித்தனியான வணிகவீதிகளை கொண்டிருந்தனர். ஒவ்வொரு கடைவீதியின் நுழைவிலும் அவர்களுக்குரிய தெய்வங்களின் ஆலயங்கள் இருந்தன. பீதர்களின் தெய்வமான பறக்கும் நாகம் உடல்வளைத்துச் சுருண்டிருந்த ஆலயமுகப்பின் இருபக்கமும் இரு சிம்மங்கள் பிடரிச்சுருள்கள் உடலின் பாதியை மறைத்திருக்க வாய்திறந்து நின்றன. ஆண்சிம்மம் வலக்கையால் ஓர் உருண்டையை பற்றியிருந்தது. பெண்சிம்மம் அமுதகலசத்தை வைத்திருந்தது.
யவனர்களின் செல்வதேவனாகிய புளூட்டகனின் கோயில் அவர்களின் சாலையின் முகப்பில் இடப்பக்கமாக நகரை நோக்கியவடிவில் இருந்தது. அதனுள் கருவறையில் அமைந்திருந்த வெண்கலச் சிற்பத்தை சாத்யகி பார்த்திருந்தான். விழியற்றவனும் முடவனுமான புளூட்டகன் சுருண்டு தோளில் தழைந்த கூந்தலுடன் மண்டியிட்டு கையில் பொற்குடுவையுடன் அமர்ந்திருந்தான். அவன் தோளின் இருபக்கமும் விரிந்த சிறகுகள் அறையை நிறைத்திருந்தன. யவனர்களின் ஆலயங்கள் பின்மதியம்வரை மூடியே இருக்கும்.
பாண்டியர்களின் தெய்வமான குமரியன்னை வலக்கையில் அமுதகலசமும் இடக்கையில் முப்பிரிவேலுமாக வெண்கழல்களணிந்த கால்களுடன் நின்றிருந்த கருங்கல் ஆலயமும் கலிங்கர்களின் சிம்மமுகத்தெய்வம் யானைமேல் அமர்ந்திருக்கும் செந்நிறக்கல் ஆலயமும் வங்கர்களின் பதினாறுகைகள் கொண்ட கொற்றவை ஆலயமும் தொடர்ச்சியாக இருந்தன. காலையில் அவ்வாலயங்களில் நெய்ச்சுடர் ஏற்றப்பட்டு பூசனைகள் தொடங்கிவிட்டிருந்தன. மணிகளும் முழவுகளும் முழக்கும் துணைப்பூசகர்களும் பூசகர்களுமன்றி வழிபடுவோர் எவரும் அங்கே தென்படவில்லை.
கடல்வணிகர்களின் நிலைக்களஞ்சியங்கள் நகருக்கு மேற்கில் கடலை ஒட்டி விரிந்து மேலேறிச்சென்ற பாலைநிலத்தில் பிறிதொரு நகர் என பதினெட்டு அடுக்குகளாக அமைந்திருந்தன. அது குபேரம் என அழைக்கப்பட்டது. துறைமுகப்பிலிருந்து அங்கே செல்ல கற்பாளங்களிடப்பட்ட பெரிய சாலைகள் அமைக்கப்பட்டிருந்தன. பெருங்கலங்களில் இருந்து படகுகளில் கொண்டுசெல்லப்படும் பொதிகளை இறக்குவதற்கென கல்லால் ஆன நூற்றெட்டு துறைமேடைகள் அங்கிருந்தன.
அங்காடியில் நின்று நோக்கியபோது கடலலைகள் மேல் பளிங்குக்குழாய் விளக்குகள் எரிய மிதந்துசென்ற நூற்றுக்கணக்கான சுமைப்படகுகள் விளக்குகளின் நீர்ப்பாவைகளுடன் இணைந்து செம்மலர் ஆரம் போல வளைந்தாடின. களஞ்சியத் துறைமேடைகள் அனைத்திலும் நெய்ப்பந்தங்கள் எரிய பல்லாயிரம் வினைவலரும் விலங்குகளும் பணியாற்றிக்கொண்டிருந்தனர். வெயிலெழுந்ததும் சுமைப்பணியாளரும் பொதிப்படகுகளும் ஓய்ந்து விலக பண்டசாலைகளிலிருந்து பொருள்கொள்ளச்செல்லும் சிறுவணிகர்களின் படகுகள் நீரில் அணிவகுக்கத் தொடங்கும்.
பெருங்கலங்களில் வந்திறங்கிய பொருட்களை பண்டசாலைகளில் இருந்து வாங்கி வண்டிகளிலும் விலங்குகளிலும் ஏற்றிக்கொண்டு செல்லும் வணிகர்கள் நகருக்குள் நுழைவதில்லை. கூர்ஜரத்திற்கும் சப்தசிந்துவுக்கும் மாளவத்திற்கும் செல்லும் மூன்று பெரிய சாலைகள் பண்டசாலை முகப்பிலிருந்தே கிளம்பின. இரவெழுந்ததும் அனலுருகி வழிவதுபோல அவர்களின் விளக்குகளின் ஒளிவரிசை செல்லத்தொடங்கும். இருளில் மூன்று கிளைகளாகப்பிரிந்து அவை வானிலெழுந்த விண்மீன்களை நோக்கி ஏறிச்செல்வதுபோல விழிமயக்கு தோன்றும்.
கலங்களில் வந்த அயல்நிலத்து மாலுமிகள் தங்கள் கூலியை பொருட்களாகப் பெற்று தங்கள் சந்தைகளில் கொண்டு வைத்து விற்றனர். பெரும்பாலும் மதுவும், துணிகளும், படைக்கலக்கருவிகளும், வெண்களிமண் கலங்களும்தான் யவனர்களாலும் சோனகர்களாலும் விற்கப்பட்டன. காப்பிரிகள் கொண்டுவந்த நால்வகைப்பொன்னும் கலங்களிலேயே யாதவ அரசால் பொருள்கொடுத்து கொள்ளப்பட்டன. எஞ்சியவற்றை வணிகர்கள் பெற்றுக்கொண்டனர். சோனகர்கள் கொண்டுவந்த புரவிகள் நகருக்குக் கிழக்காக கடலை ஒட்டி இருந்த புரவிநிலைக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கே வணிகம் செய்யப்பட்டன.
பொற்குடுவைகளும் மணிநகைகளும் விற்கும் யவனர்கடைகளும் பாண்டிய முத்துக்கள் விற்கும் கடைகளும் படைக்கலமேந்திய வீரர்களால் காக்கப்பட்டன. கோல்விழும் முரசென ஒலிக்கும் அங்காடி நடுவே அந்தத்தெருக்களில் மட்டும் அமைதி நிறைந்திருக்கும். அங்கிருக்கும் வணிகர்களும் அரசர்களைப்போல அகம்படியும் ஏவலரும் கொண்டிருப்பார்கள். பட்டாடை அணிந்து தலைப்பாகையில் தங்கள் குடியின் குறிபொறிக்கப்பட்ட மணிமலரை சூடியிருப்பார்கள். அவர்களின் வண்ணப்பல்லக்குகள் பொன்னூல் ஒளிரும் பட்டுத்திரைச்சீலைகளுடன் நின்றிருக்கும்.
சாத்யகி மேற்குப்பக்கத்து துறைமேடையை அடைந்தபோது அங்கே துவாரகையின் நான்கு அணிநாவாய்கள் சித்தமாகி நின்றிருப்பதை கண்டான். கருடனின் சிறகுவிரித்த வடிவம் நாவாய்களின் விலாவில் வரையப்பட்டிருந்தது. நாவாய்களின் கீழுதடுகள் போல நீண்டிருந்த நடைப்பாலங்கள் வழியாக அத்திரிகளும் கழுதைகளும் பொதிகளை உள்ளே கொண்டுசென்றன. சிறிய சகடங்களில் ஏற்றப்பட்ட தேர்களும் வண்டிகளும் வினைவலரால் தள்ளி உள்ளே கொண்டுசெல்லப்பட்டன. அவர்களின் பணிக்கூவல்களும் பணிமேலாளர்களின் ஆணைகளும் உரக்க எழுந்துகொண்டிருந்தன.
மேற்குப்பக்கத்தில் இரண்டு பாண்டியநாட்டு நாவாய்களில் இருந்து பொதிகள் இறங்கிக்கொண்டிருந்தன. துவாரகையில் பொதிகளை ஏற்றவும் இறக்கவும் காற்றையே பயன்படுத்தியிருந்தனர். கரையில் அச்சுத்தூண்களின் மேல் அமைக்கப்பட்டிருந்த துலாமரங்களின் முனை சுழன்று கலங்களுக்குள் சென்று இறங்கும்போது அவற்றில் பொதிகளை வடங்களால் இணைத்துக் கட்டினர். மறுமுனையில் கட்டப்பட்ட நீண்ட வடம் கடலில் நின்றிருக்கும் ஏழுபாய்கள் கொண்ட அம்பிகளுடன் பிணைக்கப்பட்டிருக்கும். அவை பாய் விரித்து காற்றில் செல்கையில் துலாக்கோல் மேலே எழுந்து பொதியை தூக்க வினைவலர் அச்சைச்சுழற்றி பொதியை கரைக்குக் கொண்டுவந்து இறக்குவார்கள்.
துறைமுனம்பில் பீதர்களின் மூன்று பெருநாவாய்கள் நின்றிருந்தன. அவற்றிலிருந்து பொதியிறக்கும் துலாத்தடிகளும் பாய்மரக் கலங்களும் மிகப்பெரியவை. அங்கிருந்து வினைவலரின் கூச்சல்கள் வெடித்து வெடித்து எழுந்தமைந்தன. சாத்யகி புரவியை நிறுத்தி இறங்கி அதை அமைதிப்படுத்த முதுகில் இருமுறை தட்டினான். அவனை நோக்கி வந்த முதன்மை மாலுமி “பொதிகளனைத்தையும் ஏற்றிவிட்டோம் இளவரசே. படைவீரர்கள் அணிவகுத்துவிட்டனர் என்றனர். அரசர் எழுந்தருளும்போது கிளம்பவேண்டியதுதான்” என்றான்.
துறைமேடையின் நான்கு மூலைகளிலும் கல்லால் ஆன பெரிய காவல்மாடங்கள் எழுந்து நின்றன. அவற்றின் உச்சியில் எரிந்த பெரிய நெய்விளக்குகள் பீதர்நாட்டு பளிங்குப்பலகைகளால் மூடப்பட்டு கடற்காற்றிலிருந்து காக்கப்பட்டன. கீழே கற்தூண்களுக்கு நடுவே குவளைமலர் கவிழ்ந்தது போன்ற வடிவில் கண்டாமணிகள் தொங்கின. நீண்ட உலக்கைகளை அசைத்து அவற்றில் ஒலியெழுப்பினர். காவல்மாடங்களின் மேல் பெருமுரசுகள் காத்திருந்தன.
சாத்யகி நாவாய்களை நோக்கி சென்றான். ஒப்புநோக்க துவாரகையின் கலங்கள் சிறியவையாக இருந்தன. துவாரகை கடல்கடந்து வணிகமேதும் செய்யவில்லை. பொருட்களை தேவபாலபுரிக்கும் சிந்துவழியாக உத்தரகூர்ஜரத்திற்கும் காந்தாரத்திற்கும் கொண்டுசெல்வதற்காக மட்டுமே கலங்களை பயன்படுத்தியது. ஆற்றில் செல்வதற்குரிய அடிப்பக்கம் தட்டையான கலங்கள் அவை. நீருக்குள் அவை ஆழமாக இறங்குவதில்லை என்பதனாலேயே நீருக்குமேல் நிலைகள் குறைவாக இருந்தன. கொடிமரங்களின் நீளமும் பாய்களின் எண்ணிக்கையும் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. அவற்றை அகலமாக்குவதும் உகந்ததல்ல. சிந்து மேலேறிச்செல்லும்தோறும் ஒடுங்கியபடி வரும் நதி.
முதல் நாவாயில் அரசரும் அகம்படியினரும் அமைச்சரும் செல்வதற்கான அனைத்தும் ஒருக்கப்பட்டிருந்தன. துயிலறையில் வெண்பட்டு விரிக்கப்பட்ட இறகுச்சேக்கைகளும் சாளரங்களில் செந்நிறத் திரைசீலைகளும் இருந்தன. யவனநாட்டு புல்நாரால் ஆன திரைச்சீலைகள் குதிரையின் முடிப்பரப்பு போல மென்மையான பளபளப்புடன் காற்றில் படபடக்காமல் மெல்ல நெளிந்தன. யானைத்தந்தங்களால் கால்கள் அமைக்கப்பட்ட பீதர்நாட்டு குறுபீடங்கள். புலித்தோல் போடப்பட்ட சாய்வுப்பீடங்கள். செம்மையும் நீலமும் மஞ்சளும் கலந்து நீரரமகளிரின் சித்திரங்கள் வரையப்பட்ட பீதர்நாட்டு பளிங்குக்கலங்கள். வெண்ணிற ஆடையும் செந்நிறக் கச்சையும் அணிந்த ஏவலர் பளபளக்கும் பொன்னால் ஆன சுட்டியை தலைப்பாகை முகப்பில் அணிந்தபடி நிரைவகுத்து நின்றனர்.
இரண்டாவது நாவாயில் வினைவலரும் ஏவலரும் தங்கும் அறைகளும் ஏழு அடுமனைகளும் இருந்தன. அனலடுப்புக்குரிய விறகும் கரியும் கூலமும் உலர்ஊனும் அடித்தளத்திலிருந்த களஞ்சியங்களில் நிறைக்கப்பட்டிருந்தன. நெய்யும் அக்காரமும் பிறவும் மேலடுக்கின் அறைகளில் இருந்தன. ஒவ்வொரு அறைக்கும் கொள்வதை குறித்துக்கொள்ள ஒரு கணிநாயகம் இருந்தார். அடுமடையர்களும் விளம்பர்களும் மஞ்சள்நிறமான ஆடைகள் அணிந்திருந்தனர்.
மூன்றாவது நாவாய் பெரியது. அதில் அடித்தளத்தில் தேர்களும் வண்டிகளும் நடுத்தளத்தில் அவற்றை இழுக்கும் புரவிகளும் எருதுகளும் அத்திரிகளும் கழுதைகளும் ஏற்றப்பட்டிருக்க மேல்தளத்தில் அவற்றுக்கான உலர்புல்லும், கொள், கம்பு முதலிய கூலங்களும் நிறைக்கப்பட்டிருந்தன. வண்டியோட்டிகளும் புரவிக்காரர்களும் பெரும்பாலும் யவனர்களாக இருந்தனர். அத்திரியோட்டுபவர்கள் மட்டும் மலைமகன்கள்.
நான்காவது நாவாயின் அமரமுகப்பில் பெரிய ஆவசக்கரம் நிறுவப்பட்டிருந்தது. அதன் இருவிலாக்களிலும் இரு ஆவசக்கரங்களும் பின்பக்கம் மூன்று சதக்னிகளும் இருந்தன. ஐநூறு படைவீரர்கள் தங்கள் படைக்கலங்களுடன் தங்க அங்கே இடமிருந்தது. ஒவ்வொருவருக்குமான படுக்கையும் உணவுக்கலமும் ஆடைகளை வைக்கும் சிறிய புரையும் எண்ணிடப்பட்டு வகுக்கப்பட்டிருப்பதை சாத்யகி பார்த்தான்.
சாத்யகி வெளியே வந்தபோது ஸ்ரீதமர் புரவியில் வந்து இறங்கியபடி “இளையோனே, அனைத்தையும் சீர்நோக்கினாயல்லவா? பிழையென ஏதும் நிகழலாகாது” என்றார். “இங்கு பிழையென எதையுமே நான் கண்டதில்லை அமைச்சரே” என்றான் சாத்யகி. “பிழை என்பது தெய்வங்களின் ஆடல். நாம் இந்நாற்களத்தில் எப்போதும் தோற்பவர்கள்தான்…” என்றார் ஸ்ரீதமர். “நான் அனைத்துக்கும் ஆணைகளையிட்டுவிட்டு நேற்று பின்னிரவில்தான் என் மாளிகைக்குச் சென்றேன். எதற்கும் பிறிதொருமுறை அனைத்தையும் சீர்நோக்கிவிடுகிறேன்” என்றபின் உள்ளே சென்றார்.
விரிந்த கல்முற்றத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் நடமாடிக்கொண்டிருந்தபோதிலும் அது தன் விரிவினாலேயே ஒழிந்துகிடப்பதாக விழிமயக்கு அளித்தது. கடலில் இருந்து எழுந்த காற்று வந்து அவன் சால்வையை பறக்கச்செய்தது. ஆனால் கடலில் அலைகளே இல்லை. ஏரியைப்போல சிற்றலைகள் மட்டும் எழுந்து பெரிய கற்பாளங்களால் கட்டப்பட்ட துறைவிளிம்பை மோதிக்கொண்டிருந்தன. துவாரகையில் கடல் மாலையானதும் சீறத்தொடங்கும். பின்னிரவில் உச்சத்தை அடைந்து மெல்ல அடங்கி காலையில் அமைதிகொண்டிருக்கும்.
அன்றுடன் வளர்பிறை தொடங்கிவிட்டது என சாத்யகி எண்ணிக்கொண்டான். முழுநிலவு நாளில் அலைகள் எழுந்து துறைமேடையின் மேல் பரவி மறுபக்கம் செல்லும் என்று சொன்னார்கள். கடலில் நிற்கும் மரக்கலங்களின் உயர்ந்த விளிம்புக்குமேலேகூட அலைகள் கொந்தளித்து எழும். “அன்னைப்பறவை குஞ்சுகளை சிறகுகளால் பொதிவதுபோலிருக்கும்” என்றார் ஸ்ரீதமர். அவன் அதை தன் அகக்கண்ணில் கண்டுவிட்டான். “அலைகள் நாவாய்களை ஒன்றும் செய்வதில்லை. ஏனென்றால் யுகயுகங்களாக அலைகளுடன் ஆடி உருவான வடிவம் கொண்டவை அவை” ஸ்ரீதமர் சொன்னார்.
சாத்யகி நிமிர்ந்து துறைமுகமேடைக்கு மேல் எழுந்திருந்த பெரிய ஒற்றைக்கல் மலைமுடியின் உச்சியில் நின்ற பெருவாயிலை நோக்கினான். துவாரகையில் எங்கு நின்றாலும் அதை முழுக்க காணமுடியாது. பாலைவனப்பாதையில் வரும்போது மிகச்சிறியதாகத் தெரியும் அது தோரணவாயிலை அணுகும்போது முழுமையாகவே மறைந்துவிடும். நகரின் எந்தச்சாலையிலும் அங்கிருக்கும் மாளிகை முகடுகள்தான் பார்வையை நிறைக்கும். அரண்மனைமுற்றத்தில் நின்றால் கிழக்குப்பக்கம் இணையாக எழுந்த குன்றின் மேல் அவ்வாயிலின் அடித்தளத்தின் மேற்குக்கால் மட்டும் தெரியும்.
அதைப்பார்க்கவேண்டுமென்றால் துறைமுகப்புக்குத்தான் வரவேண்டும். அங்கு நின்றிருக்கையில்தான் துவாரகையின் உண்மையான அமைப்பே கண்ணில்தோன்றும். கடலை நோக்கி எழுந்து நின்றிருந்த ஒன்றுடன் ஒன்று இணைந்த இரு குன்றுகளால் ஆனது துவாரகை. சங்கம் என அழைக்கப்பட்ட மேற்குப்பக்கத்துக் குன்று மண்ணால் ஆனது. அதில்தான் துவாரகைநகரம் அமைந்திருந்தது. பெரியபாறைகளின் குவியலாக எழுந்து உச்சியில் கரிய உருளைப்பாறையுடன் நின்றிருந்த குன்று சக்கரம் என்றழைக்கப்பட்டது. அதன் உச்சிப்பாறைமேல் அந்த பெரிய அணிவாயில் கட்டி எழுப்பப்பட்டிருந்தது.
இரு குன்றுகளுக்கு நடுவே எழுந்து கடலுக்குள் நீண்டிருந்த பாறைநிலமே துறைமுகப்பு. அதை அஸ்வமுகம் என்று சூதர்கள் சொன்னார்கள். குதிரையின் இரு காதுகளே சங்கமும் சக்கரமும். அஸ்வமுகத்தில் கடற்பாறைகளைத் தூக்கி அமைத்து சீரான விளிம்பை கட்டியிருந்தனர். அஸ்வமுகம் கடலுக்குள் சென்றிருந்த ஒரு பெரிய மலையின் உச்சி. அவ்விளிம்புக்கு அருகே கடல் ஆயிரம் வாரைக்குமேல் ஆழமிருந்தது. எனவே சீனத்துப்பெருநாவாய்கள் கூட மிக அண்மையில் வந்து நிற்கவும் அவற்றிலிருந்து நேரடியாகவே பொதிகளை கரையிறக்கவும் முடிந்தது.
பாரதவர்ஷத்தில் சீனப்பெருநாவாய்கள் நேரடியாக அணையும் துறைமுகங்கள் தென்மதுரையும் துவாரகையும் மட்டுமே என்றார் ஸ்ரீதமர். ”தென்மதுரை இதைப்போலவே கடலுக்குள் நீண்டிருக்கும் பெரும்பாறைநீட்சியால் ஆனது. அதை கன்யாபாதம் என்கிறார்கள். கரையெனும் கன்னிஅன்னை தன் கால் ஒன்றை கடலுக்குள் நீட்டியிருக்கிறாள் என்று தென்னகத்துப் பாணர்கள் பாடுகிறார்கள். அவ்வன்னையை அவர்கள் குமரித்தெய்வமாக அங்கே பெரும்பாறை ஒன்றின்மேல் நிறுவியிருக்கிறார்கள். அச்சிலையை விடப் பெரியது இங்குள்ள அணிவாயில்.”
சாத்யகி “அதனூடாக காற்று மட்டுமே செல்கின்றது” என்றான். “ஆம், துவாரகையின் தெய்வம் காற்றே. வடபுலத்துக் காற்றுகளால் அள்ளிக்கொண்டு வரப்படும் மரக்கலங்களே இங்கு பொன்னையும் பொருளையும் கொண்டுவந்து சேர்க்கின்றன. காற்றன்றி பிறிது எதுவும் நுழையமுடியாததாக அவ்வாயில் இருப்பதனாலேயே அது தெய்வ வடிவமாக இங்கே வணங்கப்படுகிறது.”
கீழிருந்து நோக்கியபோது அந்த வாயில் கரும்பாறை சூடிய மணிமுடி போல தோன்றியது. சற்றுதொலைவுக்கு நடந்து பக்கவாட்டில் நோக்கினால் யானைமேல் அமைந்த அம்பாரிமாடம் போலிருக்கும். அதன் சிற்பங்களில் இருபக்கமும் அமர்ந்திருக்கும் விஸ்வகர்மனும் குபேரனும் மட்டுமே கீழிருந்து நோக்கினால் தெளிவாகத் தெரிபவர்கள். மேல் வளைவின் இருபக்கமும் பறந்த நிலையில் நின்றிருக்கும் வருணனும் வாயுவும் மிகச்சிறிய பாவைகள் போல தெரிவார்கள். பருத்த அகிடுகளும் விரித்த சிறகுகளும் கொண்டு நின்றிருந்த இரண்டு பசுக்களின் நடுவே யாதவர்களின் குலக்குறியான பன்னிரு ஆரங்கள் கொண்ட வெண்சக்கரம் அமைந்திருக்கும்.
மாலையில் வெயில் அமைந்து இருள் எழுவதற்கு முன்பு வானம் குளிர்ந்திருக்கும் சிறுபொழுதில் மட்டுமே அவ்வாயிலை நன்கு பார்க்கமுடியும். துவாரகையின் வானம் வெள்ளிவெளியென ஒளிகொண்டிருப்பது. “மழைக்காலத்தின் மணிவெளிச்சத்தில் ஒவ்வொரு சிற்பத்தையும் தொட்டுவிடலாமென்பதுபோல மிக அண்மையில் பார்க்கலாம். விழிகள் நம் விழிகளை சந்திக்கும்” என்றார் ஸ்ரீதமர். “இந்த மழைக்காலத்தில் நான் இதைப்பார்ப்பதற்கென்றே இங்கு வருவேன்” என்று சாத்யகி சொன்னான்.
அணிவாயிலுக்கு அப்பால் வானத்தில் ஒளிபரவத் தொடங்கியது. அதன் வளைந்த முகடுக்குமேலிருந்து புறாக்கள் எழுந்து வானில் வட்டமிட்டுச் சுழன்றன. முகில்களற்ற வானில் ஒளி வெண்பட்டாடையில் எண்ணை ஊறுவதுபோல பரவியது. ஸ்ரீதமர் வெளியே வந்து “மணியோசை எழட்டும்… அரசர் கிளம்பலாம்” என்றார். அவருக்குப்பின்னால் நின்ற ஏவலன் ஓடிச்சென்று கைகாட்ட மணி இரட்டை ஒலிகளாக முழங்கத் தொடங்கியது. தொடர்ந்து முதற்காவல்மாடத்தின் மேலிருந்த பெருமுரசமும் இரட்டையொலி எழுப்பியது. அதைக்கேட்டு துவாரகையின் காவல்மாடங்களில் இருந்து பெருமுரசுகள் ஒலித்தன.
சற்றுநேரம் கழித்து அரண்மனை முகடில் இருந்து எரியம்பு எழுந்து வானில் வெடித்தது. அங்கே எழுந்த கொம்பொலி சிறிய பறவை ஒன்றின் குரல் என கேட்டது. ஸ்ரீதமர் “அரசர் கிளம்பிவிட்டார்” என்றார். அவர் கைதூக்கியதும் அனைத்து நாவாய்களிலும் கொம்பொலிகளும் முரசொலிகளும் எழுந்தன. வீரர்களும் வினைவலர்களும் சீரமைந்து காத்து நின்றனர். ஸ்ரீதமர் “இங்கு அரசர் இல்லை என்பதைப்போல பதற்றமளிப்பது பிறிதில்லை. ஒவ்வொன்றுக்கும் முடிவுகளெடுக்கவேண்டியிருக்கிறது” என்றார்.
“அரசர் முடிவுகளை எடுப்பதில்லை என்றார்களே?” என்றான் சாத்யகி. “ஆம், அவர் முடிவுகளை சொல்வதில்லை. ஆனால் அவரது முடிவுகளை நோக்கி நம் உள்ளங்கள் செல்வதை அவர் இருக்கையில் உணரமுடியும்” என்றார் ஸ்ரீதமர். குன்றின் மேலே இருந்த அரண்மனைமுற்றத்திலிருந்து கிருஷ்ணனின் அணிமுகப்பினரும் அகம்படியினரும் படைகளும் கிளம்பி வருவதை அங்கிருந்தபடியே ஓசைகள் வழியாக அறியமுடிந்தது. “முதற்காவல்மாடத்தை கடந்துவிட்டனர்” என்ற ஸ்ரீதமர் திரும்பி நாவாய்களை பார்த்தார். “அனைத்தும் பிழையில்லாமல் அமைக்கப்பட்டிருக்கின்றன என்றே நம்புகிறேன்” என்றார்.
அரசரின் அணிப்படையினரின் வண்ணங்களை தொலைவில் சாத்யகி பார்த்தான். பொன்னிறத்தில் சங்குசக்கரக் குறிகள் எழுதப்பட்ட இளஞ்சிவப்புக் கொடிகளை ஏந்தியபடி ஏழு வெண்புரவி வீரர்கள் சீரான விரைவில் வந்தனர். அவர்களுக்குப்பின்னால் மங்கலஇசை கேட்டது. மேலும் ஒளிபெற்ற கீழ்வானத்தின் பின்னணியில் பெருவாயிலின் சிற்பங்கள் புடைத்தெழுந்து வந்தன.