அன்புள்ள ஜெயமோகன்,
வணக்கம். நேற்று ( 9 ஜூன், புதன்) சென்னை, தி. நகர் தக்கர் பாபா வித்யாலயாவில் இயங்கிவரும் காந்தி கல்வி மையத்தில் உங்களது “இன்றைய காந்தி” புத்தக விமர்சன நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடந்தது. வழக்கத்தை விட நிகழ்ச்சிக்கு அதிக எண்ணிக்கையில் வாசகர்கள் வந்திருந்தார்கள். இளைஞர் சிவகுமார், “இந்தப் புத்தகத்தை நான் விமர்சனம் செய்யப்போவதில்லை; நான் படித்தபோது எனக்கு ஏற்பட்ட உணர்வுகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ளப்போகிறேன்” என்று குறிப்பிட்டார்.
வழக்கமாக இந்த புத்தக விமர்சன நிகழ்ச்சியில் விமர்சகர், புத்தகத்தின் பல பகுதிகளிலிருந்தும் சிற்சில வரிகளை வாசித்துக் காட்டி, தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வார்கள்; அல்லது ஒரு கருத்தைச் சொன்ன கையோடு, புத்தகத்திலிருந்து குறிப்பிட்ட பகுதியை வாசிப்பார்கள். ஆனால் சிவகுமார் அபூர்வமாகவே மேற்கொள் காட்டினார். மற்றபடி ஆத்மார்த்தமான நெகிழ்வுடன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.
சுமார் 40 நிமிடம் நடைபெற்ற நிகழ்ச்சியில் குமரி அனந்தன், பாரத மணி ஆசிரியர் ஸ்ரீனிவாசன் போன்றவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். “இன்றைய காந்தி”யை இதுவரை படிக்காதவர்களை உடனடியாகப் படிக்கத்தூண்டும் விதமாக நிகழ்ச்சி அமைந்தது குறிப்பிடத்தக்கது.
இன்றைய காந்தி புத்தகத்தை இந்தியில் சிவகுமாரின் சித்தப்பா மொழி பெயர்த்துக் கொண்டிருக்கிறார் என்ற தகவலையும், காந்தி கல்வி நிலையத்தின் அண்ணமலை தெரிவித்தார்.
நான் அமர்ந்த்ருந்த இடத்தில் இருந்தபடியே என்னுடைய எம்பி3 ரெக்கார்டரில் சிவகுமாரின் விமர்சனத்தைப் பதிவு செய்தேன். அதை இரண்டொரு நாட்களில் அனுப்பி வைக்கிறேன்.
அன்புடன்
எஸ். சந்திர மௌலி
பத்திரிகையாளர்
சென்னை 17