அன்பின் ஜெ..
முதல் புள்ளியில், எனது ஆதங்கத்தைப் புரிந்து கொண்டதற்கு ஒத்திசைவுக்கு நன்றி.
எனது வாதத்துக்கு, பங்கர் ராயை முன்னிறுத்தவில்லையெனில், ராஜேந்திர சிங் அவர்களைத்தான் முன்னிறுத்தி இருப்பேன். அவரை இவ்விவாதத்துக்குள் அழைத்து வந்ததற்கு நன்றி. நீர் மேலாண்மையில் அதுவும் ராஜஸ்தானில், அவர்களின் பணி முதன்மையானது. (சென்னையில் ஒரு முறை பேசிய போது, சென்னையில் நீர் தட்டுப் பாடு என்ற வாதத்தையே கிண்டல் செய்தார். உண்மையில், உங்களுக்கு இயற்கை தரும் 1100 மிமி தேவைக்கு அதிகமானது. 500-600 மி.மி யே போதுமானது. உங்களுக்கு இயற்கை தரும் நீரை, எப்படி உபயோகிப்பது எனத் தெரியவில்லை என்று சொன்னது அச்சு அசலான காந்தியம். – எனது சொந்த அனுபவத்தில், மழை நீர் சேகரிப்பு செய்து, 120 ஃப்ளாட்டுகள் இருக்கும் இடத்தில் ஒரு கிணறு வெட்டி, சென்னையில், 15 அடியில் நீர் கிடைக்கும் அற்புதம் நிகழ்ந்திருக்கிறது. நீரின் அப்போஸ்தலர் ராஜேந்திர சிங்- ஒரு மாபெரும் வாழ்வனுபவம் – அடுத்த முறை சென்னை வரும் போது, காட்டுகிறேன்)
ஆனால், அவர்களும் பல பன்னாட்டு நிறுவனங்களோடு இணைந்திருக்கிறார்கள் என்பதே உண்மை – அவர்கள் தளத்திலேயே அதற்கான acknowledgements இருக்கின்றன. இவ்விவாதத்தில் பந்தாடப்படும் ஃபோர்ட் ஃபவுண்டேஷன் உள்பட.
நிற்க. விவாதத்தின் நடு செண்டருக்கு வருகிறேன்.
உலகெங்கும், சமூக தளத்தில் இயங்கும் பல நிறுவனங்கள் உள்ளன. அவற்றின் நிதி மற்றும் பொருள் ஆதாரங்களைப் பயன்படுத்திக் கொள்வதில் எந்தத் தவறுமில்லை என்பதே என் வாதம். அதே போல், இங்கே வெற்றிகரமாக, இத்தளத்தில் இயங்கும் பல நிறுவனங்களும் மற்ற வளரும் நாடுகளில் தம் பணியை ஆற்றி வருகிறார்கள். இது எல்லைகள் தாண்டி, மனித முன்னேற்றத்துக்கான ஒரு தொடர்பு.
உலகில் உள்ள சமூக முன்னேற்றத்துக்கான நிதி / பொருள் ஆதாரங்களைத் தரும் நிறுவனங்கள் போல், இங்கும் பெரிதளவில் உருவாகி வரவேண்டும் என்பதும் ஆசை.
ஏனெனில், சந்தைப் பொருளாதாரம் என்னும் ஆழிப் பேரலையில், ஒரு பெரும் சதவீத மக்கள் அதனால் தள்ளப் பட்டு, விளிம்பில் வாழ்கிறார்கள் / வாழ்வார்கள் – அமெரிக்க நாடுகள் உள்பட. உலகெங்கும் அவர்களுக்காக உழைக்கும் நிறுவனங்கள் இருப்பதும், அவற்றுக்கான அரசு தவிர்த்த நிதி / பொருள் / தொழிநுட்ப ஆதார நிறுவனங்கள் இருப்பதும் மிக அவசியம்
இதில் உள்ள பதர்களைக் களைவது, அரசின் காவல் நிறுவனங்களின் வேலை. இத்துறையில் பதர்கள் யார் என்று அக்காவல் நிறுவனங்களுக்கு மிக நன்றாகத் தெரியும்
ஆனால், அன்னிய நிதியே வரக்கூடாது என்று சொல்வது, சமூக முன்னேற்ற தளத்தில் உண்மையாக உழைக்கும் பல நூறு நிறுவனங்களைப் பாதிக்கும். அதனால், blanket ban வேண்டாம் என்கிறேன்.
இத்துடன் எனது வாதத்தை முடித்துக் கொள்கிறேன் யுவர் ஹானர்.
பாலா
பி.கு: மது கிஷ்வரைப் பற்றிச் சொன்னதற்கு, உணர்ச்சி வசப்படும் ஒத்திசைவு, போகிற போக்கில், தன் IAS வேலையை விட்டு, 40 ஆண்டுகளுக்கும் மேலாக, ஒரு கிராமத்தில், அடிப்படை உரிமைகளுக்காகப் போராடி, RTI, NREGA, RTE போன்ற பெரும் சட்டங்களின் பிண்ணனியில் உழைத்துக் கொண்டிருக்கும் பெரும் சாதனையாளாரான அருணா ராயை – செக்யூலர் சாயம் என்று கிண்டலடிப்பதை – இது இருவரின் தனிப்பட்ட கருத்து என்றளவில், விவாதத்தின் வெளியே வைக்கிறேன்.
நீங்கள் பலமுறை எழுதியிருந்த decentralised நீர் மேலாண்மை – மீட்டெடுக்கப் பட்ட சாதனை.
பாலா