இன்றும் கல்லறையைக் காணச் செல்கிறோம், ஆனால் அதில் ஏதோ ஒரு சுவாரசியமான கதை உள்ளது. முழுவிவரம் தெரியவில்லை. ராயிடம் மீண்டும் கேட்கவேண்டும் என எண்ணிக் கொண்டே காலையில் 9.30 மணிக்கு செண்ட்ரல் வந்துவிட்டேன். அங்கிர்இருந்து பார்க் ஸ்டேசனிற்கு செல்பவர்கள் சாலையைக் கடப்பதற்கு உதவியாக அமைக்கப்பட்டுள்ள நடைமேம்பாலத்தின் கீழ் இரைச்சலான சாலையின் ஓரத்தில் நிழலில் நின்று கொண்டு செங்கல் நிறத்தில் அமைந்த உய்ரமான விக்டோரியா பில்டிங்கை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். சென்னையின் பாரம்பரிய கட்டிடங்களில் ஒன்று. சிறில், ராயுடன் அப்போது தான் வீட்டில் இருந்து கிளம்பியிருந்ததால் அவர் வருவதற்குள் விக்டோரியாவை ஒரு சுற்று பார்த்துவிட்டு வரலாம் என நடந்தேன்.
இங்குதான் ’உப்புவேலி’ நூல் விழாவை நடத்த வேண்டும் என முன்னரே முடிவெடுத்து விசாரித்தோம். ஆனால் அனுமதி மறுத்து விட்டார்கள். சரி. பரவாயில்லை, சென்னையின் ஏதாவதொரு பழைய ஆங்கிலேயே பாணி கட்டிடத்தில் நடத்தலாம் என மியூசியம் தியேட்டர், கன்னிமாரா நூலகம், அரசு கவின் கலைக் கல்லூரி, ஹிக்கின் பாதம்ஸ், விக்டோரியா ஹால் என அனைத்து இடங்களையும் அணுகினோம். வெண்முரசு விழா நடந்த மியூசியம் தியேட்டர் ஏற்கனவே புக் ஆகியிருந்தது. அரசுக் கலைக் கல்லூரி, ஹிக்கின் பாதம்ஸில் வெளி நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இல்லை. கன்னிமாராவில் பராமரிப்பு பணிகள் நடக்கின்றன.
விக்டோரியா அரங்கில் பொது நிகழ்ச்சிகளுக்கு வழங்கப்படும் என இணையத்தில் எங்கோ படித்திருந்தேன், ஆனாலும் அனுமதி மறுத்துவிட்டனர். தொலைவில் இருந்து பார்க்கையில் கம்பீரமாகத் தெரிந்த கட்டிடம் அருகில் சென்றவுடன் ஐயோ பாவம் எனத் தோன்றியது. மெட்ரோ ரயிலுக்காக குழிதோண்டி முன்புற வாசலையே மறைத்துவிட்டார்கள்.
செண்ட்லுக்கு வருபவர்கள் பார்க்கிங்கிற்கு செல்லும் சாலைவழியாக பக்கவாட்டில் நுழைந்தால் வெளிப்புறசுவர் சிதைந்து செங்கற்கள் சரிந்து கிடந்தன. ஆமைவேகத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறும் அறிகுறிகள் தெரிந்தது. “விக்டோரியா ஹாலையே வாடகைக்கு கேட்ட முதல் ஆள் நீங்கதாண்டா” என ஜெயகாந்தனை அவர் அலுவலகத்தில் ஏன் பாராட்டினார்கள் என அப்போது தான் புரிந்தது.
10 மணி அளவில், சிறில் “எங்கமா இருக்க? ஓ அங்கயா, அந்த ரோட்டில் டிராபிக் அதிகம், நிறுத்த முடியாது, கார் வந்தவுடன் ஏறிக்கொள்ளுமாறு ரோட்டின் ஓரத்திலேயே இரு” என்றார். சில நிமிடங்களில் சிவப்பு நிற ஐ10 மெதுவாக என்னை நோக்கி வந்தது. சிறில் தனது லண்டன் ’ஆன்சைட்’ உறுதியான சந்தோசத்தில் இன்னொருநாள் விடுமுறை எடுத்துக் கொண்டு வந்துவிட்டார். ராய் முன் சீட்டில் கறுப்புக் கண்ணாடியுடன் அமர்ந்திருந்தார்.
Hello Roy, Gud Morning, how are you doing..
கல்லறையைத் தேடி செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்கு செல்வதாகத் திட்டம். செண்ட்ரல் போக்குவரத்து நெரிசலைக் கடந்து கடற்கரைச் சாலையில் மெதுவாக, மெரினாவையும் அங்குள்ள சிலைகளையும் விளக்கிக் கொண்டு சென்றோம். சிறில், கண்ணகி சிலையைக் காட்டி, She is our cultural Icon, you know? எனத் தொடங்கி சிலப்பதிகாரக் கதையை சுருக்கமாக சொன்னார்.
Oh, a female revenge story?
இல்லை, இது அதற்கும் மேல், இது தமிழின் பழைமையான காப்பியம் என்றேன். சிறில் இன்னும் விரிவாக விளக்கினார். கண்ணகி சிலைதாண்டி இன்னும் சிறிது தூரம் செல்கையில் வலதுபுறம் இருந்த ப்ரசிடண்சி கல்லூரியைக் காட்டி, இது ஒரு ப்ரிட்டிஷ் பாரம்பரிய கட்டிடம், இங்கு விழா நடத்த அனுமதி கேட்டிருந்தோம், கிடைக்கவில்லை என்றேன்.
ஓ, சரி இப்போது எங்கு விழா நடக்கவிருக்கிறது, நிகழ்ச்சி நிரல் என்ன? என்றார். யாரெல்லாம் பேசுகிறார்கள் என்றார். மூன்று எழுத்தாளர்கள், ஒரு களப்பணியாளர், ஒரு வரலாற்று ஆய்வாளர் என்றேன்.
ஓ,ஓ,ஓ,ஓ வரலாற்று ஆய்வாளரா, ஓஓஓஓ, டெரிபிள் , எனக்கு இந்த பிஎச்டி, டாக்டரேட் பெற்ற வரலாற்று ஆய்வாளர்களைக் கண்டாலே ஆகாது. நீ என்ன படித்திருக்கிறாய், எங்கு பி.எச்டி வாங்கினாய் என்றுதான் பேசவே ஆரம்பிப்பார்கள். லண்டனிலும் அப்படித்தான், ஆனால்,பார், நான் லண்டன் பலகலையில் எம்.ஏ ஆங்கில மாணவர்களுக்கு புத்தகங்களின் வரலாறு குறித்து நான் வகுப்பு எடுத்திருக்கிறேன். ஆனால் நான் டிகிரி கூட வாங்கியதில்லை. அங்கு பல்கலைக்கழக பட்டத்தை விட உனக்கு என்ன விசயம் தெரியும் என்பதற்கு தான் மரியாதை என்றார்.
ராய், கவலையே படாதீர்கள், ”நாங்கல்லாம் வேறமாதிரி, இவர் ஒரு சுயேட்சை ஆய்வாளர். மேலும் இது தமிழ் இலக்கிய விழா, இங்கு பல்கலைக் கழக பட்டத்திற்கெல்லாம் வேலையே இல்லை, ஏன், எங்கள் ஜெ கூட கல்லூரியை பாதியில் விட்டவர்தான்” என்றேன்.
எவ்வளவு நேரம் பேசவேண்டும், பவர்பாயிண்டில் படங்கள் காட்ட வசதியுள்ளதா, தான் பேசுவதைப் புரிந்து கொள்வார்களா என விழாபற்றி விவரமாகக் கேட்டுக் கொண்டார்.
10.30க்கு சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டை எதிரில் சாலையின் மறுபுரம் காரை நிறுத்தி, சாலையைக் கடந்து கோட்டைக்குள் செல்லவேண்டும். ராய் மிக மெதுவாக அடி எடுத்து நடப்பவர். பாதசாரிகளுக்கான சிக்னல் இருக்கும் போதே மோட்டார் பைக்குகள் எங்களுக்கு குறுக்காக சென்றன.
கோட்டை வாசலில் பெயரை பதிவு செய்துவிட்டு, செக்கியூரிட்டி செக்கிங் முடித்து, அகழியைத் தாண்டி உள்ளே சென்றோம்.
”ஒரு வரலாற்று நினைவுச் சின்னத்தை பார்வையிட எதற்கு இவ்வளவு கெடுபிடிகள்?” என்றார்.
”நோ நோ, இது கோட்டைக்கான பாதுகாப்பெல்லாம் இல்லை. இங்கதான் எங்க முதலமைச்சர் வேலைபார்க்கிறார். அவருக்கான பாதுகாப்பு”
செயிண்ட் ஜார்ஜ் கோட்டை வளாகம் ஒரு சிறு ஊரையே உள்ளடக்கியது. அன்றைய பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் அதிகாரிகளின் நகர். புனித மேரி சர்ச், கிளைவ் மாளிகை, மியூசியம் , வாலஸ்லி அரங்கம் போன்ற வரலாற்று நினைவிடங்களுடன், மாநில அரசின் தலைமைச் செயலகம், பல்வேறு துறைகளின் தலைமை அலுவலகங்கள், தமிழகசட்டசபை, ராணுவ அலுவலகம், மிலிட்டரி கேண்டீன், பணியாளர்கள் இல்லம், விளையாட்டு மைதானம், என பல கட்டிடங்களை உள்ளடக்கியது.
முதலில் கோட்டைக்குள் உள்ள மியூசியத்திற்கு செல்லலாம் என்றேன். இல்லை அங்கு நான் ஏற்கனவே போயிருக்கிறேன். இப்போது நான் இங்குள்ள சர்ச்சில் உள்ள கல்லறையை மட்டும் தான் பார்க்க விரும்புகிறேன், என்றார்.
சரி, வாருங்கள் போகலாம் என அழைத்துச் சென்றேன். செயிண்ட் மேரி சர்ச், சட்டசபையின் பின்புறம் உள்ளது. பின்புறமாக சுற்றிச் செல்லவேண்டும். நல்ல வெயில். பாதிதூரம் செல்கையிலேயே வியர்த்துக் கொட்டத் துவங்கியது.
சிறில் ”யோவ், எப்படியா இதுக்குள்ள இருக்க இடத்திற்கெல்லாம் ரூட் தெரிஞ்சு வைச்சிருக்க” என்றார். வெள்ளையானை தந்த மனஎழுச்சியில், போனவருடம் ஐஐடியில் ஒரு தோழியை அழைத்துக் கொண்டு எய்டன் பார்த்த இடங்களை சுற்றிப் பார்க்கலாம் என வந்திருந்தேன் என்றேன். மேலும் கீழுமாக பார்த்தவர், நக்கலாக கண்ணடித்து சிரித்தார்!
செல்லும் வழியெங்கும், அரசியல் போஸ்டர்களும், கட் அவுட்களும் பாதையை மறித்தன. யாருக்கு என தமிழகத்தில் சிறு குழந்தைளும் அறியூம்.
திங்கள் அன்றே ராய் சொல்லியிருந்தார். அன்றிரவு இருந்த அவசரத்தில் அரைகுறையாகவே கவனித்திருந்தேன். தெளிவுபடுத்திக் கொள்வதற்காக சர்ச்சுக்குப் போகும் வழியில் மீண்டும் ஒருமுறை கேட்டேன். ”ராய் அங்கு எதற்காகப் போகவிரும்புகிறீர்கள், கடந்த முறை பார்க்கவில்லையா?”
No, because ‘I got interested in this lady only very recently’.
அவர் கூறிய பெண்மணி Laurence hope என்ற ஆண் புனைப்பெயரில் எழுதிய பிரிட்டிஷ் ஆட்சிக்கால கவிதாயினி. பெரும்பாலும் காதல் துயரக் கவிதைகள். ராய் அவரது கவிதைகளை படித்து ஆர்வமடைந்து அவரது வரலாற்றைத் தேடியிருக்கிறார். அடெலா மிக ஆர்வமூட்டும் ஆளுமை.
24 வயதில் 50 வயதிலிருந்த ’ஜெனரல்’ நிக்கோல்சனை காதலித்து மணந்திருக்கிறார். காதல் கவிதைகள் எழுதிக் குவித்திருக்கிறார். காதல் மிகுதியில் மிலிட்டரி கேம்ப்பிற்குள் பெண்கள் செல்ல அனுமதியில்லாத காலத்தில் படான் பையனைப்போல் ஆண்வேடமிட்டு சென்று ஆஃப்கான் எல்லையில் இருந்த கணவனை சந்தித்திருக்கிறார். இந்திய உணவு மற்றும் இந்திய வாழ்வு முறைகளிலும், ஆர்வமுடைய கணவரால், இவருக்கும் இவற்றில் ஆர்வம் இருந்துள்ளது. கணவன் இறந்ததும் துயரம் தாளாமல், மன அழுத்ததில் விஷமருந்தி தன் 39 வயதிலேயே தற்கொலை செய்துகொண்டார்.
பின்னாளில் இவரது வெளிவராத கவிதைகளை இவரது மகன் ”Garden of Kama” என்ற பெயரில் தொகுப்பாக வெளியிட அது நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
”1904 இல் மறைந்த ‘Adela Florence Nicolson’ என்ற அந்தப் பெண்மணியின் கல்லறையைத் தேடிதான் போய்க் கொண்டிருக்கிறோம்” என்றார். ராய், கல்லறைகளை பற்றி விஷயமறிந்தவர் என முன்னரே சொல்லியிருந்தேன். இந்தக் கவிதாயினியைக் குறித்து மேலும் படித்தறிந்து, அவரது கல்லறை செயிண்ட்.மேரி சர்ச்சில் புதைக்கப்பட்டுள்ளது என்பதை பல இடங்களில் தேடி இறுதியில் “Oxford Dictionary of National Geography”யில் உறுதி செய்துகொண்டு கிளம்பி வந்திருக்கிறார். வாவ், இதுபோதாதா, ”இன்னிக்கு கட்டுரைக்கு மேட்டர் ரெடி” என எண்ணிக் கொண்டேன்.
தூரத்தில் செல்லும் போதே செயிண்ட் மேரி சர்ச்சின் மாபெரும் கோபுரம் தெரிந்தது. கிளைவ் மாளிகையின் எதிரில் தந்த நிறம் பூசிய உயரமான கூம்புவடிவம் கொண்ட பிரம்மாண்டமான கோபுரத்தின் உச்சியில் சிலுவை தெரிந்தது. 1680 இல் கட்டப்பட்டசர்ச். கிழக்கிந்திய கம்பெனியின் ஊழியர்களிடம் சந்தா வாங்கி கட்டப்பட்டது. மேலும் இந்தியாவில் பிரிட்டிஷாரால் கட்டப்பட்ட முதல் கட்டிடமும் கூட. கட்டப்பட்ட காலத்தில் பீரங்கி குண்டுகள் துளைக்காத மேற்கூரையுடன் அமைக்கப்பட்ட சிறப்புடையது.
வாசலில் தொல்லியல் துறையின் அறிவிப்புப் பலகையின் அருகிலேயே மற்றொரு அறிவிப்பு வெளியே செருப்பைக் கழற்றிவிட சொல்லியது. ராய் ”பார், இது இந்துக்களின் வழக்கம். இங்கிலாந்தில் எந்த சர்ச்சிலும் இப்படி ஒரு வழக்கம் இருக்க முடியாது” என்றார்.
சர்ச்சின் நுழைவாயிலை ஒட்டி, புத்தக கையேடுகள் விற்கும் பணியாளர் ஓடிவந்து, ”மன்னிக்கவும், இங்கு, பேச அனுமதியில்லை, அமைதி காக்கவேண்டும்” என்றார்.
சரியென்று, , சர்ச்சுக்குள் நாங்கள் தேடி வந்த கல்லறையின் விவரங்களை சொல்லி தேடிப்பார்க்க வேண்டும் என்றேன். பெயர், ஆண்டு விவரங்களைக் கேட்டுக் கொண்டு சரி வாருங்கள், ஒவ்வொன்றாகக் காட்டுகிறேன் பாருங்கள், என்றார். சிறில், அவரைப் பின் தொடந்து உள்ளே சென்றார். நான் ராய்க்கு என்ன பேசினோம் என விளக்கினேன். குட் குட் என்றார்.
சர்ச்சின் உள்புறம், இயற்கையான, சூரிய வெளிச்சம் நிறம்பிய பழங்கால ஆங்கிலேயே பாணியில் அமைக்கப்பட்ட உயரமான வளைவான மேற்சுவரும், தூண்களின் இடையே அமைக்கப்பட்ட அலங்கார வளைவுகளுமாய் பழைமைக்கே உரிய தனி அழகுடன் இருந்தது. சர்ச்சின் நான்கு மூலைகளிலும், நடுவே உள்ள நடைபாதையிலும், முன் பகுதியில் பாதிரியாரின் மேடைக்கு முன்பும் கல்லறைகள் இருந்தன. கல்லறைகள் மேல் பீடம் அமைக்காமல் தரைமட்டத்திலேயே இறந்தவரின் பெயர்க்குறிப்புகள் பொறித்த கல்வெட்டுக்களைப் பொதிந்திருந்தனர்.
சிறிலும் ராயும் கல்லறையைத் தேடிக் கொண்டிருக்க, நான் சர்ச்சை சுற்றிப் பார்த்து போட்டோ எடுத்துக் கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில் அங்குள்ள அத்தனை கல்லறையும் பார்த்தாயிற்று, கல்லறை அங்கில்லை என்றனர். ராய் ஏமாற்றமடையவில்லை. அதெப்படி இல்லாமல் போகும். நிக்கோல்சன் ஒரு ராணுவ ஜெனரல், மிகப்பெரிய பதவி அது, அவர் மனைவியும் அவருடன் தான் புதைக்கப்பட்டிருப்பார், கண்டிப்பாக இருக்கும் என்றார்
சரி, இன்னும் வேறெதேனும் கல்லறை இருக்கிறதா என சர்ச் பொறுப்பாளரிடம் விசாரித்தோம். சர்ச்சுக்குள்ள பத்து கல்லறைதான் சார் இருக்கு. வெளியே கொஞ்சம் இருக்கு அங்கவேணா வந்து பாருங்க என்றார். சர்ச்சுக்கு வெளியே வரிசையாக கல்லறைகளால் அமைந்த ஒரு முகப்பை சென்று பார்த்தோம். அங்கும் இல்லை.
ராய் அங்கு வந்து அவற்றை பார்வையிட்டபடி இங்குள்ள கல்வெட்டுக்கள் அனைத்தும் காலத்தால் மிகப்பழைமையானவை. ஆயிரத்து அறுநூறுகளைச் சேர்ந்தவை. நான் தேடுவது ஆயிரத்து தொள்ளாயிரத்து நாலைச் சேர்ந்தது, ஒப்பு நோக்க நாம் தேடுவது மிகப் புதிய கல்லறைகள் என்றார். வரலாற்றில் நூறு வருட பழைமை என்பது எவ்வளவு சிறிய, எவ்வளவு புதிய காலம் என எண்ணிக் கொண்டேன்.
இன்னும் வேறு கல்லறைகள் உள்ளதா, என எங்களுக்கு உதவியவரிடம் கேட்டேன். இங்க இவ்வளவுதான், இந்த சர்ச்சின் சிமெட்ரி வேறொரு இடத்தில் இருக்கு, அங்க வேணா தேடிப்பாருங்க, அதற்கு முன்னாடி நீங்க எங்க மேடத்திடம் பேசிடுங்க என்றவர், சர்ச்சை நிர்வகிக்கும் மூத்த கன்னியாஸ்திரியின் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார்.
தூய வெள்ளாடையில் மத்திய வயதுடைய கன்னியாஸ்திரி ராயை வரவேற்று, அமரச் சொல்லி என்ன வேண்டுமென விசாரித்தார். ராய், தன் தேடி வந்த கல்லறையை விவரித்தார்.
கன்னியாஸ்திரி, இந்த சர்ச் கட்டப்பட்ட புதிதில் அமைக்கப்பட்ட பழைய கல்லறைகள் மட்டுமே இங்குள்ளன. விரைவிலேயே இடப் பற்றாக்குறை ஏற்பட்டதால் சர்ச்சின் சிமெட்ரி பல்லவன் சாலைக்கு மாற்றப்பட்டது., அங்கு போனால் நீங்கள் தேடலாம் என்றார்.
அது தவிர வேறு எங்காவது கல்லறைகள் உள்ளாதா? இல்லை அது மட்டுமே சர்ச்சுக்குரிய ப்ரிட்டிஷ் கால கல்லறை, என்றார். சரி அங்குபோய் தேடினால் கிடைக்கலாம் என ஒரு நம்பிக்கை வந்தது.
அப்போது நான் ராயை விரிவாக அறிமுகப்படுத்தினேன். ராயின் நூல் குறித்தும் அவரது தேடல்கள் குறித்தும். ராயின் ஆறடி உயரமும், உறுதியான குரலும், கண்ணாடியும், ஜோல்னா பையும், முதுமையும் அவருக்கு ஒரு எமிரெட்டஸ் பேராசிரியரின் தோரணையை அளிக்கிறது. பார்த்தவுடன் யாருக்கும் ஒரு மரியாதை வரும்.
ராய் தான் அரிய பழைய புத்தகங்களை செப்பனிடும் நிபுணர் என்றார், கன்னியாஸ்திரி, அப்படியா, இங்குதான் பிரிட்டிஷ் இந்தியாவின் முதன்முதல் புத்தகம் உள்ளது எனவும், அது அந்த சர்ச்சில் நடைபெற்ற முதல் திருமணப் பதிவு புத்தகம், நானூறு ஆண்டுகள் பழைமையானது, Elihu Yale என்பவரின் திருமண நிகழ்வு என்றார்.
ராய், ஓ…. யே….ல்!!!, வெரி இண்டிரஸ்டிங், அவரது பெயரால் தான் அமெரிக்காவில் ’யேல் பல்கலைக் கழகம்’ அமைக்கப்பட்டுள்ளது எனக் கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். மேலும் ராய் மிக ஆர்வமூட்டும் உரையாடல்காரர். லாரன்ஸ் ஹோப்பின் கதையை தனது நீளமான கைகளை முழுவதும் விரித்து, மேலும் கீழும் ஆட்டி விலாவரியாக விவரித்தார். கன்னியாஸ்திரிக்கே கல்லறையை தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் என ஆர்வம் வந்துவிட்டது.
ராய் அப்போது கதையின் கடைசியாக, நிக்கோல்சன் தன் கணவர் இறந்ததும் தற்கொலை செய்துகொண்டதைத் தெரிவித்தார். கூர்ந்து கவனித்த கன்னியாஸ்திரி, சாரி சார், “உங்கள் கல்லறை கிடைக்குமா என இப்போது எனக்கு சந்தேகமாக இருக்கிறது, ஏனென்றால் தற்கொலை செய்துகொண்டவர்களுக்கு சர்ச்சின் கல்லறை வளாகத்தில் இடமளிப்பதில்லை” என்றார். நகத்தைக் கடித்துக் கொண்டு கவனித்துக் கொண்டிருந்த எனக்கு, ’வட போச்சா’ என்றிருந்தது.
ராய் தனக்கும் அந்த சந்தேகம் இருப்பதாகவும், இருந்தாலும் விடுவதில்லை, இல்லையென்றாலும் ஜெனரல் நிக்கோல்ஸனின் கல்லறையாவது இருக்கா எனத் தேடிப் பார்த்துச் செல்ல விரும்பினார்.
தனது உதவியாளரை அழைத்து, கல்லறை வளாகத்தில் உள்ள காப்பளரை அழைத்து விவரம் கூறி உடனே தேடச் சொல்லச் சொன்னார். அதிர்ஷ்ட வசமாக அவரே சர்ச்சுக்கு வேறு வேலையாக வந்துகொண்டிருந்தார். வர ஒரு மணிநேரம் ஆகலாம். அவர் வந்த உடன் உங்களை போனில் அழைக்கிறேன்.
அவர் தேடி வைக்கட்டும் நீங்கள் வேறு ஏதேனும் வேலை இருந்தால் பார்த்துவிட்டு மதியம் அங்கு சென்று பாருங்கள் என்றார்.
சந்தோசமாக நாங்கள், நன்றி தெரிவித்து விட்டு, கிளைவ் மாளிகயை சுற்றிப் பார்க்க சென்றோம். ம்யூசியம் பூட்டப் பட்டிருந்ததால் மாளிகையின் மேலே சென்று அவர்கள் அலுவலகத்தை தொடர்பு கொண்டு ராபர்ட் க்ளைவ் வசித்த அறையையும், அங்கிருந்த அரங்கத்தையும் சுற்றிப் பார்த்தோம். இந்திய பாணி பழைய அறைகள், கூடங்கள், மரச்சட்டம் போட்டு கண்ணாடியிட்ட ஜன்னல்கள், பெரிய கதவுகள், மாபெரும் தூண்களுடன் அரங்கம் காலியாக் கிடந்தது, இங்குதான் கிளைவின் அலுவலக சந்திப்புகள் நடந்திருக்கின்றன. மாபெரும் சதித்திட்டங்கள் தீட்டப்பட்டிருக்கலாம், வெற்றிக் கொண்டாட்டங்களும், ஐஸ் ஹவுசின் பனிக்கட்டிகளுடன் கேளிக்கை விருந்துகளும் நடந்திருக்கலாம்.
உதவியாளர் கீழிறங்கி வந்து புகைப்பட கேலரியை திறந்து காட்டினார். ராய், அந்த சிறிய காலரியில் வைக்கப்பட்டிருந்த ராபர்ட் க்ளைவின் புகழ் மாலைகளைக் கண்டு, ”பார், இவந்தான் உண்மையான பாஸ்டர்ட், இந்தியாவைக் கொள்ளையடித்த ஒன்றாம் நம்பர் திருடன், நீங்கள் மியூசியத்தில் அவனது வீர தீரங்களைப் புகழ்ந்து வைத்திருக்கிறீர்கள், உங்கள் மொத்த வரலாற்றையும் உங்கள் கோணத்தில் திருப்பி எழுதாதவரை நீங்கள் திருந்தவே மாட்டீர்கள்” என்றார்.
மத்தியான வெயிலில் சட்டை நனையத் தொடங்கியது. கேண்டீனில் ஒரு டீ குடித்துவிட்டு, வெளியே கிளம்பலாம் என நடக்கத் தொடங்கினோம்.
சிறில், ”நான் டீ ஆடர் பண்றேன், நீ போய் அந்த கல்லறைக் காப்பாளர் வந்துவிட்டாரா எனப் பார்த்துவந்திடு” என்றார்.
இப்போது கன்னியாஸ்திரி அலுவகத்தில் தாடியுடன் கூடிய கரிய இளைஞர் ஒருவர் நின்றிருந்தார். வாங்க சார், உங்களுக்குதான் போன் பண்ண இருந்தேன். ராஜா, “இவருக்கு தான் நீங்கள் உதவ வேண்டும், இந்த பேப்பரில் எல்லா விவரமும் இருக்கிறது, ஒரு மணி நேரத்தில் தேடிக் கொடு என்றார்”.
அவர் தொடர்ந்து, ”ஆனால், அந்த கல்லறை வளாகம் மிகப்பெரியது, என்பதை நினைவில் கொள்ளுங்கள். இப்போது நிறைய செடிகள் வளர்ந்து பல கல்லறைகள் மூடப்பட்டுவிட்டது. மேலும் கல்லறைவளாகத்தை ஒட்டி சாலைகள் அமைக்கவும், மேம்பாலம் கட்டவும் ஜேசிபியால் பல கல்லறைகளை தூக்கி தூர்வாரி விட்டனர். ஆயிரத்து தொள்ளாயிரத்தின் கல்லறைகள் அந்தப் பகுதியில் இருந்தது என்கிறார் இவர். நீங்கள் தேடியது அங்கிருந்திருக்கக் கூடாது என வேண்டிக் கொள்ளுங்கள். இருந்தாலும், போய்ப் பாருங்கள், உங்களுக்கு நல்லதிர்ஷ்டம் வாய்க்கட்டும்” என்றார்
சுத்தம்!!!! என நினைத்துக் கொண்டேன்.
திரும்பி வந்து விசயத்தை சொன்னேன், ராய் “சரி காத்திருந்து பார்ப்போம், இப்போ என்ன ப்ளான்?” என்றார். ஒரு நாளிதழ் பேட்டி, பின் மதியவுணவு, அதன் பின் கல்லறைக்கு செல்லலாம் என முடிவு செய்து கிளம்பினோம்.
மைலாப்பூர் போலீஸ் ஸ்டேசன் எதிரில் உள்ள தினகரன் அலுவலகத்திற்கு சென்று யுவகிருஷ்ணா, சிவராமன் அவர்களை சந்தித்து ராய் பேட்டி கொடுத்து முடிந்தவுடன் கிளம்பி, அதே ரோட்டில் இன்னும் கொஞ்சதூரம் சென்று ராமகிருஷ்ணமத் சாலையில் அமைந்துள்ள ”ஈஷா லைஃப் முத்ரா” உணவகத்திற்கு சென்றோம்.
முத்ரா உணவகம், இந்திய க்ளாசிக்கல் டச்சுடன் அழகாக இருந்தது. கஞ்சி போட்டு இஸ்திரி போட்ட காட்டன் சேலையோ, பட்டுச் சேலையை வெட்டித் தைத்த ஸ்லீவ்லெஸ் சல்வாரோ, ஃபேப் இண்டியா பாணி குர்தாவோ அணிந்த முப்பத்தைந்திலிருந்து நாற்பது வயதுக்கு கீழ் என எண்ணவைக்கும் உயர்வர்க்க அழகிய பெண்கள் நிறைந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர்.
’தான் எப்போதும் மக்களைப் பார்க்க விரும்புபவன்’ எனக் கூறிய ராய் நான் உட்கார நினைத்த சுவர் பக்க சேரை பறித்துக் கொண்டு என்னை சுவரை வேடிக்கை பார்க்கவிட்டார்.
You see in England, we call this, “Women rule the lunch”. ஆண்கள் பிசியாக பொருள் ஈட்டிக் கொண்டிருக்கையில், பெண்கள் மதிய நேரத்தில் உணவகங்களை ஆண்டு கொண்டிருப்பார்கள் எனக் கலாயத்தார்.
சிறில் இஷா உணவகத்தின் சிறப்பையும் அங்கு வந்து செல்லும் விஐபிகளையும் விளக்கினார், “நீ சொல்வதைப் பார்த்தால், இது மிக விலையுயர்ந்த உணவகமாகத் தெரிகிறது, நாம் சாதாரண இடத்திற்கே போயிருக்கலாமே” என்றார், நான், ”சிறில்தான் ஆன் சைட் போறார்ல, கவலைப்படாம சாப்பிடுங்க” என்றேன்.
கேரள தமிழக பாணியில் அமைந்த ஃபுல் மீல்ஸை ருசித்துக் கொண்டிருக்கையில் மெதுவாக சிறில், “யோவ் அங்க பாரு, யாருன்னு தெரியுதா” என்றார். திரும்பி யாரெனப்பார்த்தேன். இவரா, இவர் இங்க என்ன பண்றார்ன்னு பேசிக்கொண்டிருக்கையிலேயே எழுத்தாளர் சாரு நிவேதிதா அருகே வந்துவிட்டார்.
சிறிலை அடையாளம் கண்டுகொண்டு கைகுலுக்கினார். புத்தகசந்தை கூட்டத்தில் நான் அறிமுகம் செய்து கொண்டிருந்த்தனால், உங்களை எங்கோ பாத்திருக்கிறேன் என்றார். அவரூக்கு எங்களை தெரிந்திருந்தது என்பதே மகிழ்ச்சியாக இருந்தது. ராயை அறிமுகம் செய்து, உப்பு வேலியையும், விளக்கினோம். அப்படியா, ரொம்ப சந்தோசம் என ஆச்சரியத்துடன், கைகுலுக்கிவிட்டு கிளம்பியவர் மீண்டும் வந்து, “இவர் புத்தகமும், இணைய முகவரியையும் அனுப்பி வையுங்கள், நான் படித்துப் பார்க்க விரும்புகிறேன்” என்றார்.
சாப்பிட்டுக் கிளம்பும் முன் ராஜாக்கு போனடித்தேன், “சார், என்னால முடிஞ்ச வரைத் தேடிட்டேன், எங்கயும் கிடைக்கலை,
அப்படியா, சரி இன்னும் கொஞ்ச நேரம் தேடிப் பாருங்க,
நீங்க எப்போ வர்றீங்க,
இன்னும் ஒரு மணி நேரம் கழித்து வருகிறோம்..
சரி அவருக்கு சற்று நேரம் கொடுத்தாச்சு, நாம் என்ன செய்வது என யோசித்தோம், ராய் தனக்கு பயணத்தில் படிக்க புத்தகங்கள் வாங்க விரும்பினார்.
ஒருவேளை அங்கு தேடியும் கண்டுபிடிக்கமுடியவில்லை என்றால், நுங்கம்பாக்கம் அமெரிக்கத் தூதரகம் அருகில் உள்ள சி.எஸ்.ஐ மெட்ராஸ் டையோசிஸ் அலுவலகத்திற்கு சென்றால் கல்லறையில் புதைக்கபட்டுள்ள அனைவரின் பெயர்களும் அடங்கிய பதிவேடு இருக்கும் அதைத் தேடி உண்மையில் அந்தக் கல்லறை அங்கிருந்ததா, இல்லையா என உறுதி செய்துகொள்ளலாம் என கன்னியாஸ்திரி தெரிவித்திருந்தார் என ராயிடம் சொன்னேன். ஐ சீ என மையமாகத் தலையாட்டினார்.
அண்ணா சாலை, ஹிக்கின்பாதம்ஸ்க்கு 100 மீட்டர் முன்பே சாலையோரமாக காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்றோம். ராய் இதுவரை தான் படித்ததிலேயே ராக் தர்பாரிதான் மிகச் சிறப்பாக இந்தியவாழ்க்கையை காட்டிய நாவல் என்றார். அதே வரிசையிலான க்ளாசிக்கல் இந்திய நாவல்ளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளை அவருக்கு வாங்கிக் கொடுக்கலாம் எனத்தேடினேன். ஒன்று கூட இல்லை. அருண் ஜோஷியின் அப்ரண்டிஸ் நாவலையும், இன்னொன்றையும் தேடி வாங்கிக் கொண்டார். இந்திய ஆங்கில எழுத்தாளர்களாம், நான் கேள்விப்பட்டதே இல்லை.
கிளம்ப எண்ணி வெளியே வந்தோம், இங்கயே இருங்க காரை எடுத்துவரேன் என்று போன சிறில் தொங்கப்போட்ட முகத்துடன் திரும்பினார். நோ பார்க்கிங் என காரை சங்கிலி போட்டு பூட்டி வைத்து விட்டார்கள். போலிஸைப் பார்த்து, பேச வேண்டியதைப் பேசினோம், அவர்கள் ’மன்னித்து’ சரி, அந்தப் பூட்டுப் போடற பையனுக்கு ஏதாவது பார்த்து செய்துவிட்டு போங்கள் என்றனர்.
பார்த்து செய்துவிட்டு காரில் செல்கையில், காரின் முகப்பில் Truth Always Triumps என எழுதப்பட்டிருந்த ஸ்டிக்கரை ராய்க்கு சுட்டிக் காட்டினேன். ஓ, மை குட்னெஸ், திஸ் இஸ் ரிடிகுலஸ் என வெடித்து சிரித்தவர், அது என்ன ஸ்டிக்கர் என விசாரித்து, அதைப் புகைப்படம் எடுத்துக் கொண்டார். ”இந்த ஒரு வரியை முன்வைத்து இந்தியாவைப் பற்றி ஒரு நாவலே எழுதிவிடலாம்” என்றார்.
பாடிகாட் முனீஸ்வரரீன் பெயர் சிறப்பை விளக்கிக் கொண்டே அந்தக் கோவில் அமைந்த சிறப்புப் பெற்ற பல்லவன் சாலையில் இருக்கும் மேம்பாலத்தின் கீழ், இடப்புறம் சென்று காரை கல்லறைத் தோட்டத்திற்குள் கொண்டு சென்றோம். பிரிட்டிஷ் கால பழைமையை உணர்த்தும் கிறிஸ்துவ கோபுர வளைவுகளுடன், வெளியே இருந்து பார்க்கையில் சிறியதாக தோன்றிய வளாகம் உள்ளே சென்றபின் தான் எவ்வளவு பெரியது எனத் தெரிந்தது.
பல்லவன் சாலையில் பாலத்திற்கு கீழ் ஆரம்பித்து மறுபுரம் கூவம் ஆற்றின் வரை பலநூறு ஏக்கர்களுக்கு விரிந்து கிடந்தது கல்லறை வளாகம். பூச்செடிகளும், மரங்களும், புதர்களும் மண்டி கல்லறைத் தோட்டம் சிறு வனப் பிராந்தியம் போல இருந்தது. திரும்பிய பக்கமெல்லாம் கல்லறைகள். ஆயிரக் கணக்கான கல்லறைகளால் ஆன ஒரு சிறு ஊரே இருந்தது. ராஜாவிடம் என்னங்க இப்படி இருக்கு, இதில எப்படித் தேடுவது என்றேன். அதான் சார், மூணுமணி நேரமா தேடிட்டு இருக்கேன், இன்னும் கிடைக்கலை, இப்போதான் சாப்பிடப் போனேன் சார் என்றார்.
வாங்க சார் காட்டுகிறேன் என கல்லறைத் தோட்டத்திற்குள் அழைத்துச் சென்றார். முந்தைய நாள் புலிக்காட்டில் பார்த்ததை விடப் பெரிய பெரிய ஸ்தூபிகள் நிறைந்த, செண்ட்ரல் பக்கத்தில் இருந்தும் அமைதியாக சென்னையை விட்டு தொலைவில் எங்கோ இருப்பதுபோல் உணரச் செய்த அந்தக் கல்லறைக் காட்டிற்குள் செல்கையில் கொஞ்சம் திகிலாகத்தான் இருந்தது. இதுவே இரவென்றால், நான் காரைப் பார்த்துக் கொள்கிறேன், நீங்கள் போய் தேடிட்டு வாங்கனு தைரியமாச் சொல்லி அனுப்பியிருப்பேன்.
ராஜா “முன்பெல்லாம் சினிமா சூட்டிங்கிற்கு வாடகைக்கு வருவாங்க,, இப்போது யாரையும் விடறதில்லை சார்” என்றார். காலம் போன காலத்தில் தாத்தாவிற்கு ஏன் இப்படி ஓர் விசித்திர ஆர்வம் என எண்ணிக் கொண்டேன்.
போகும் வழியில் இருந்த கல்லறைகளில் பொறிக்கப்பட்ட, ஆண்டின் பெயர்களை மட்டும் எட்டிப்பார்த்துக் கொண்டே சென்றேன். உள்ளே ரொம்ப தூரம் செல்ல வேண்டியிருந்தது. பாதிக் கல்லறைகள் உடைந்து சிதைந்திருந்தன, பல கல்லறைகளில் பெயர்ப்பலகைகளைக் காணோம். வேறு சிலவற்றில் எழுத்துக்கள் மறைந்து விட்டன.
ஆயிரத்து, அறுநூறு, எழுநூறு, எண்ணூறு தாண்டி ஆயிரத்து தொள்ளாயிரம் இருந்த பகுதி முழுக்கத் தேடி முடித்தாயிற்று, ஒன்றும் கிடைக்கவில்லை.
அவ்வளவு தான், சரி, அடுத்து என்ன, கிளம்பவேண்டியது தானா?
சார், ஒரு நிமிசம், நீங்க தேடுபவர் மில்ட்ரியா?..
கண்களில் ஆர்வம் பொங்க ஆம் என்றோம்.
அத சொல்லவே இல்லை, ஏதோ லேடிஸ்னு சொன்னீங்க?
ஆமா, ஆனால் அவர் கணவர் மிலிட்டரி தான்.
அப்படியா சரி அந்தக் கடைசியிலே கொஞ்சம் கல்லறைகள் இருக்கு, காட்டுறேன், பாருங்க..
அவரைத் தொடர்ந்து, இடதுபுறக் கடைசீ மூலைக்கு சென்றோம், போரில் இறந்தவர்களுக்கான கல்லறை என்ற ராணுவ பலகையைப் பார்த்ததும் ராய், நோ நோ நோ… இது அல்ல என முகம் சுளிக்க ஆரம்பித்தார்.
ஏன் ராய்?
ஏனென்றால், ”ஜெனரல் நிக்கோல்சன் போரில் இறக்கவில்லை..”
ஓ அப்படியா..
சிறில், ராஜாவுடன் கதைத்துக் கொண்டிருக்கையில், நாம் தப்பான இடத்தில் தேடிக் கொண்டிருக்கிறோம் என நினைக்கிறேன் என்ற ராய், வலது புற எல்லையை நோக்கி தனியாக நடக்கத் துவங்கினார்.
பச்சைப் புல்வெளியில் வரிசைவரிசையாக வெள்ளைப் பெயர்க்கற்களுடன் நேர்த்தியாக பராமரிக்கப்பட்டிருந்த மிலிட்டரிக் கல்லறைகளின் அழகைப் புகைப் படம் எடுக்கத்தொடங்கினேன்.
ராய் தொலைவில் எங்கோ மூலையில் இருந்தார். சிறிலை ஆளையே காணோம். முதல் நாள் சரியான தூக்கமில்லை, அலைச்சல் வேறு, கால் வலித்தது. ஒரு கல்லறை மேல் உட்கார்ந்து, அரங்கசாமியிடன் இருந்து கோவைக்கு கார் ரெடி என வந்த செய்திக்கு பதில் அனுப்பிக் கொண்டிருந்தேன்.
தொலைவில் எங்கேயோ இருந்து சிறில், இங்கே வா என்றார். தலை நிமிராமல் என்ன ஆச்சு, சொல்லுங்க என்றேன். மறுகணம் துணுக்குற்று, குரல் வந்த திசை நோக்கினேன். சிறில் பெரிய புன்னகையுடன் கை காட்டி அழைத்தார். புரிந்துவிட்டது.
ராயைத் தேடி அழைத்தேன். ராய் என்னை மதிக்கவே இல்லை. ராய், ராய், எனக் கூவி அழைத்து அருகே வரச் சொல்லிவிட்டு சிறிலை நோக்கி ஓடினேன்.
இரண்டுக்கு இரண்டு வெள்ளைப் பளிங்குக் கல்லால் இரண்டடி உயரத்தில் எழுத்து மேசை போன்ற வடிவில் அமைந்த சிறிய பீடத்தில் Malcolm Hassels Nicolson மற்றும் அவரது மனைவியின் பெயர் தெளிவாக பொறிக்கப்பட்டிரு
சிறில் மகிழ்ச்சியில் பொங்கிக் கொண்டிருந்தார். கண்டுபிடிக்க உதவிய ராஜாவும் மகிழ்ச்சியாக இருந்தார். நம்ப முடியாமல் நான் மீண்டும் ஒரு முறை பெயரை வாசித்துப் பார்த்தேன்.
முதுமையின் களைப்பால், ராய் மெதுவாக நடந்து வந்து சேர்ந்தார். அமைதியாக பார்த்துவிட்டு, ஓ, தேர் சி இஸ் என்றார். மகிழ்ச்சியில் கூத்தாடுவார் என நினைத்திருந்தேன்.
தன் கேமராவை எடுத்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். நான் சிறில், ராய், ராஜாவை கல்லறையுடன் சில போட்டாக்கள் எடுத்துக் கொண்டேன்.
அன்று ஜெனரல் நிக்கோல்சன் பெரும் அதிகாரமும் மரியாதையும் உடையவராய் இருந்திருப்பார். இன்று இங்குள்ள சீண்டப்படாத ஆயிரக்கணக்கான கல்லறைகளில் அவரும் ஒருவர். நூற்றுப் பத்து வருடம் கழித்து ஒரு எழுத்தாளரின் கணவர் என்பதால் இன்று அவர் பெயரும் நினைவு கூறப்படுகிறது, என எண்ணிக் கொண்டேன்.
சிறில், ”ராய் நீங்கள் மிக அதிர்ஷ்டசாலி” வேலியைத் தேடி வந்தீர்கள், கண்டுபிடித்தீர்கள், இப்போது கல்லறையைத் தேடி வந்தீர்கள், அதையும் கண்டுபிடித்துவிட்டீர்கள், என்றார். ராய் ஆரம்பகட்ட பரபரப்பு அடங்கி இப்போது கொஞ்சம் சிரிக்கத் தொடங்கியிருந்தார். முயற்சியும் தேடலும் இருந்தால், வெறும் கல்லறைகளைத் தேடிச் சென்றே ஒரு சாம்ராஜ்யத்தின் வரலாற்றை கண்டடையலாம், என எண்ணிக் கொண்டேன்.
வாசலுக்கு திரும்புகையில், சிறில் ”இவர் கொஞ்ச நாள் முன்ன இதே மாதிரி ஒரு வெள்ளைக்கார அம்மா, ஒரு கல்லறையைத் தேடி வந்தாங்க, அதுகூட ஆயிரத்தி தொள்ளாயிரத்தினு தான் சார் நினைக்கிறேன். பார்க்கிறீங்களா என்றார். சரிப் பார்க்கலாம் எனப் பின் தொடந்த நான் யாரோ தேடிவந்ததை நாம் ஏன் பார்க்கவேண்டும், ஹவ் ஸ்டுபிட், திரும்பிடலாம் என ஒரு கணம் நினைத்தேன். சும்மா, எந்த நம்பிக்கையும் இல்லாமல் தான் போய்ப் பார்த்தேன். ஆனால், பெயரைப் படிக்கையிலேயே உடல் சிலிர்த்தது” என்றார்.
உடனே ராய், ”அந்தப் பெண் யார்னு தெரியுமா?”
தெரியாது சார்.
இங்க ரிஜிஸ்டர் இருக்கா?
இரூக்கு சார்
நுழைவுவாயிலை ஒட்டியிருந்த தன் சிறு வீட்டிலிருந்து ராஜா ரிஜிஸ்டரை எடுத்து வந்தார். வந்தவர்கள் அவர்கள் பெயரை மட்டும் தான் எழுதியிருந்தார்கள். யார் கல்லறையைத் தேடினார்கள் என்ற விவரம் இல்லை. டிசம்பர் மாதத்தில் ஒருவர் “இந்தமுறை அதிர்ஷ்டம் இல்லை ஆனால் மீண்டும் வருவேன்” என கறுப்பு மையில் எழுதியிருந்தார்.
பதினைந்து நாள் இடைவெளியில் ”இன்றும் இல்லை, ஆனால் இன்னும் கொஞ்சம் தான் மிச்சமிருக்கிறது” என்ற குறிப்பு
அடுத்த மூன்று நாளில் அதாவது ஜனவரி முதல் வாரத்தில் ”அடெலா நிக்கோல்சனனைக் கண்டுபிடித்துவிட்டேன்” என ’விர்ஜினியா ஜெலஸ்’ என்ற ஆஸ்திரேலியப் பெண்ணின் பெயர் இமெயிலுடன் மகிழ்ச்சிக் கிறுக்கல்கள்.
ராய், இந்தப் பெண் ”பெரும்பாலும் நிக்கோல்சனின் பேத்தி அல்லது, கொள்ளுப்பேத்தியாக இருக்கலாம் அல்லது நம்மைப் போலவே ஆர்வத்தில் தேடிவந்திருக்கலாம்” என்றார்.
ராய், இது ஒரு விறுவிறுப்பான வரலாற்று நாவலுக்கான ப்ளாட், என்றேன்.
அவர் , ”விர்ஜினியா ஜெலஸ்” ஓஓஓ, வாட் எ நேம்” என சிரித்துகொண்டார், ”எதுவாயிருந்தால் என்ன, நான் அவளுக்கு மெயில் அனுப்புவேன்” என்றார்.
”நானும் அனுப்புவேன்!” என எண்ணிக் கொண்டேன்.