அன்பு ஆசிரியருக்கு,
அறம் வரிசை கதைகள் ஒவ்வொன்றும் பல முறை படித்தாகி விட்டது. மத்துறு தயிர் ஒரு நூறு முறையாவது!
(கிட்டத்தட்ட நான் அனுபவித்த வேதனை என்பதாலா என்று தெரியவில்லை)
ராஜம் அண்ணாச்சி யார் என்று யூகிக்க முடியவில்லை. அந்த நாயர் பெண்ணும் யாரென்று ஒரு ஆயிரம் பேரிடமாவது வினவி இருப்பேன்! உயிர் பிரிந்தது போல ராஜம் அந்த பெண் ஊரை விட்டு சென்றதும் துடித்தது, பேராசியர் ராஜம் குறித்து பட்ட வேதனை, ராஜம் அண்ணாச்சியின் தந்தை அம்மன் முன்பு கையை வெட்டி ரத்தம் ஊற்றி அழுதது, பேராசிரியரை எதிர்கொள்ள முடியாமல் ராஜம் பட்ட வேதனை, ஒவ்வொன்றையும் பல நூறு மடங்கு துல்லியமாக உணர்ந்து ஒவ்வொருமுறை படிக்கும் பொழுதும் கண் கலங்கி இருக்கிறேன்!
உண்மையாக இருந்தவர்களில், மீள முடியாமல் மூழ்கியவர்களே அதிகம்! மீண்டு வந்து விடுதல் ஒரு பெரும் வெற்றி உணர்வையும், இறுமாப்பையும் அளித்தாலும், இறப்புவரை உள்ளுக்குள் ஒரு முள் குத்திக்கொண்டே இருக்கும் போலும்!
தாழ்மையுடன்,
சரவணகுமார்.
ஜெ
நீண்ட இடைவேளைக்குப்பின் மத்துறுதயிர் கதையை மீண்டும் வாசித்தேன். அது குருசீட உறவின் கதை மட்டும் அல்ல. இரண்டுவகையான உணர்ச்சிநிலைகளின் கதை. உணர்வுரீதியாக வாழ்க்கையைப்பார்ப்பதற்கும் சமநிலையாக வாழ்க்கையைப்பார்ப்பதர்கும் இடையே உள்ள வேறுபாடு
எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் ஒருவருக்கு உணர்ச்சிபூர்வமாக தன் வாழ்க்கையை அழித்துக்கொள்ளும் உரிமை உண்டு என்றுதான்
செல்வா