விஷ்ணுபுரம் இலக்கியவட்டம்

அன்புள்ள ஜெ,

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் என்ற அமைப்பு நீங்கள் நடத்துவதா? அதனுடன் உங்களுக்கு உள்ள தொடர்பு என்ன? உங்கள் இணையதளத்தில் அதற்கு அளிக்கப் பட்டுள்ள இடம் காரணமாக இந்த வினாவைக் கேட்கிறேன்

சிவம்

அன்புள்ள சிவம்,

சென்ற ஜனவரி 2010 ல் கோவை நண்பர்கள் மரபின் மைந்தன், அரங்கசாமி, அருண் ஆகியோர் முன்முயற்சி எடுத்து கோவையில் என் நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார்கள். அது ஒரு வாசகர் சந்திப்பு. அதற்கான நிதி நண்பர்களிடமிருந்தே திரட்டப் பட்டது. அந்த நிதி தேவைக்கு அதிகமாக வந்து மிஞ்சியது. அதை எனக்கு ‘பொற்கிழி’ யாக அளிப்பதாகச் சொன்னார்கள். அதைப் பெற்றுக்கொள்வது முறையல்ல, நல்ல முன்னுதாரணமும் அல்ல என்று எனக்கு பட்டது.

ஆகவே அந்த நிதியைக் கொண்டு வேறு சில இலக்கிய நிகழ்வுகளை நடத்தலாமென்ற எண்ணம் ஏற்பட்டது. அந்த எண்ணம் வளர்ந்து இன்னும் கொஞ்சம் நிதி சேர்த்து ஓர் அமைப்பாக உருவாக்கினார்கள். அதுவே விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம். இந்த அமைப்பின் நிர்வாகம், அமைப்பு எதிலும் எனக்கு தொடர்பு இல்லை. ஆனால் என் கருத்துக்களுடன் ஒத்துப்போகிற என் நெருக்கமான நண்பர்கள் என் கருத்துக்களை முன்னிறுத்தி நடத்தும் அமைப்பு இது.

சென்ற காலங்களில் பொதுவாக கவனிக்கப் படாத பல படைப்பாளிகளுக்கு நானே விழாக்கள் எடுத்திருக்கிறேன், என் செலவில். நாஞ்சில்நாடன், அ.கா.பெருமாள்,நீல.பத்மநாபன், வேத சகாயகுமார் ஆகியோருக்கு எடுத்த விழாக்களைப் பற்றி இந்த இணையதளத்தில் எழுதியிருக்கிறேன். நான் மதிக்கிற, நான் ஆசிரியர்களாக எண்ணுகிற, பெரும் படைப்பாளிகள் மற்றும் அறிஞர்களை கௌரவிக்க பிறர் கையை எதிர்பார்ப்பதைவிட நாமே செய்து விடலாமென்பதே என் எண்ணமாக இருந்தது. இப்போது நண்பர்கள் அதற்கான ஓர் அமைப்பை உருவாக்கியிருக்கிறார்கள்.

கலாப்ரியாவுக்கு இவ்வருடம் அறுபதாண்டு. தமிழ்க் கவிதையில் எளிமையான மத்திய வர்க்க வாழ்க்கைச் சித்திரங்களைக் கொண்டு வந்ததன் மூலம் ஒரு புதிய அலையை உருவாக்கிய முன்னோடிக் கவிஞர் அவர். அவரை கௌரவிக்கும் நிகழ்ச்சி இது. மேலும் நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்த திட்டம் உள்ளது. எதிர்காலத்தில் இந்த அமைப்பு சார்ந்து இலக்கிய விருதுகளையும் அளிக்கலாமென எண்ணுகிறார்கள்.

ஜெ

நீல பத்மநாபன் பாராட்டு விழா

நாஞ்சில் 60 நிறைவு: நூல் வெளியீட்டுவிழா

வேதசகாயகுமார் விழா

நாஞ்சில் நாடன் அறுபதாம் மணவிழா

ஒரு இலக்கிய நிகழ்ச்சியின் கதை

அ.கா.பெருமாள் 60-நிகழ்ச்சி

கோவையில் வாசகர் சந்திப்பு

கோவையில்…

முந்தைய கட்டுரைகலாப்பிரியா படைப்புக் களம் – நிகழ்வு கோவையில்
அடுத்த கட்டுரைலீனா மணிமேகலை