அன்பின் ஜெ..
”மேலைநாடுகளில் மக்களுக்கு சேமிப்பதற்குரிய பாதுகாப்பான வழிகள் பல உள்ளன. இந்தியாவில் பங்குச்சந்தை போன்றவற்றில் எந்த நடுத்தரவர்க்கமும் முதலீடு செய்யமுடியாது. அவை அரசும், வங்கிகளும், அரசதிகாரிகளும்,தரகர்களும், முதலாளிகளும் சேர்ந்து செய்யும் மாபெரும் மோசடிகள் என்பது ஹர்ஷத் மேத்தா காலம் முதல் அப்பட்டமாகி விட்ட ஒன்று”
1992 ல் வந்த ஹர்ஷட் மேத்தாவின் ஊழலுக்கு எதிர்வினையாக, தேசிய பங்குச் சந்தை உருவாக்கப் பட்டு, இன்று அது இணையம் மூலமாக நடைபெறுகிறது.
முன்பு பங்குச் சந்தை – Open cry என்னும் வழியில் இயங்கி வந்தது. அதாவ்து சந்தையில் மாடு பிடிப்பது போன்ற ஒரு முறை.. சத்தமாகக் கூவுதலும் சங்கேத பாஷைகளும் கொண்ட ஒன்று. அதில் ஏமாற்றப் பல வழிகள் இருக்கின்றன என்பதால், இணையம் மூலமாக வணிகம் மாற்றப் பட்டு, இன்று மிக நேர்மையாக நடைபெறுகிறது. சில நிறுவனங்களில் 1 பங்கைக் கூட நீங்கள் வாங்க முடியும். இணையம் என்பதால், வாங்கும் விலை அந்த நொடியில் என்ன இருந்ததோ அது. அது என்றென்றும் அது தகவலாக இருக்கும். அது உலகின் மிக எளிதான சந்தைகளுள் ஒன்று.
ஆனால், இந்தப் பங்குச்சந்தையில் முதலீடு செய்யத் தெரியாமல் (இதை எழுதும் எனக்கும் ஒரு எழவும் புரிவதில்லை) செய்து பணம் இழப்பவர் அதிகம். குறைந்த காலத்தில் பங்குச் சந்தை ஒரு zero sum game. ஒரு பணம் சம்பாதிக்க இன்னொருவர் இழப்பார் – short term ல். ஆனால், நீண்ட கால நோக்கில், நல்ல பங்கில் முதலீடு செய்பவர்கள் ஓரளவு பணம் சம்பாதிக்கிறார்கள். ஆனால், இதில் ரிஸ்க் அதிகம். வளர்ந்த நாடுகளிலும் இது பெரும் ரிஸ்க் தான். 2008 ல், அமெரிக்க மக்களில் பெரும்பாலோனோர் இப்படிப் பணம் இழந்திருக்கின்றனர்.
இந்த கிளாரிஃபிகேஷன், எந்த வகையிலும் அண்ணாவின் கட்டுரையை தவறாகச் சொல்ல வில்லை. ஒரு நுட்பமான கோணத்தைச் சொன்னேன் உங்களுக்கு.
அவ்வளவே
பாலா
அன்புள்ள பாலா
இருக்கலாம்
ஆனால் அந்தப் பங்குமோசடிகளில் இந்தியாவில் எந்தப்பெருந்தலையும் தண்டிக்கப்பட்டதில்லை. ஆகவே எந்த ஒரு சாமானிய இந்தியனுக்கும் பங்குச்சந்தைமேல் இன்று நம்பிக்கை இல்லை
இந்தியாவின் மாபெரும் முதலீட்டுப் பற்றாக்குறையின் ஆணிவேர் இந்த அவநம்பிக்கைதான். அதுதான் இந்தியர்களின் சேமிப்பை தங்கமாக ஆக்கி தேங்கவைக்கிறது. நிலத்தில் முதலீடாக ஆக்கி கள்ளப்பணமாக மாற்றுகிறது.
பொருளியல் வளார்ச்சியில் ஆர்வம் கொண்ட ஓர் அரசு உருவாக்கவேண்டியது அந்த நம்பிக்கையைத்தான். கறாரான கண்காணிப்புகள் மூலம். கடுமையான தண்டனைகள் மூலம்
ஆனால் இங்கே எல்லா அரசுகளும் அதிகாரிகளை, தரகர்களை, முதலாளிகளைப் பாதுகாப்பவை மட்டுமே
ஜெ