ஆத்மாவும் அறிவியலும்: ஒரு விவாதம்

அன்புள்ள ஜெயமோகன்,

கீதை, சாங்கிய யோகம் குறித்த உங்கள் பதிவை படித்தேன். நீங்கள் செவ்வியல் நோக்கில் ஆத்மா குறித்த கேள்வியை அணுகுவதை நான் வரவேற்கிறேன். அந்தக் கட்டுரையில் நீங்கள் ஆத்மாவின் பொருளை விளக்க பல வழிகளை கையாள்கிறீர்கள். ஆனால் அறிவியல் சார்ந்த அணுகுமுறைகளைப்பற்றிய உங்கள் கருத்து முன் தீர்மானம் கொண்டதாக உள்ளது. அறிவியலின் விளக்கங்களை நீங்கள் மேலோட்டமாக விளக்குகிறீர்கள். நீங்கள் தெரிந்தோ தெரியாமலோ  இந்து மத கோட்பாடுகளை பிற கோட்பாடுகளுக்கு மேலாக ஆதரித்து வாதிடுகிறீர்கள் என்று படுகிறது. உங்கள் கட்டுரை ஒரு விஷயத்தை தெளிவாகவே காட்டுகிறது. உங்களால் தத்துவ, ஆன்மீக கோணத்தில் விஷயங்களை விளக்க முடிகிறது, அறிவியல் சார்ந்து முடியவில்லை.

ஆத்மா குறித்த உங்கள் தத்துவ விளக்கத்தை அளிப்பதற்கு முன்னால் மானுட மனம் என்பதைப்பற்றிய விளக்கம் ஒன்றை அளிக்க உங்களால் முடியுமா? மனித மனத்தின் இயல்புகள் என்ன? மனித இறப்புக்கு பிறகு மனம் என்பது நீடிக்குமா?நம் உடலில் இருந்து மனம் பிரிக்கப்படக்கூடிய ஒன்றா?

நீங்கள் இன்றைய நவீன அறிவியல் ஆய்வுகளை கவனிக்கிறீர்களா என்றெல்லாம் எனக்கு தெரியாது. மனித மனதைப்பற்றிய நவீன அறிவியல் கோட்பாடுகள் மேலும் மேலும் பொருள்முதல்வாத அடிப்படை நோக்கியே செல்கின்றன. மனம் என்பதை பொருள்முதல்வாத அடிப்படையிலேயே தீர்த்துக்கொள்ள முடியும் என்றுதான் நான் நினைக்கிறேன். நீங்கள் அப்படி நினைக்கவில்லை என்றால் அது உங்கள் விருப்பம்– ஆனால் அதுவல்ல உண்மை.

இன்றைய அறிவியலாளர்களும் தத்துவஞானிகளும் மனித மூளையை ஆராய்வதன்வழியாக மனித மனத்தைப்பற்றி அறிந்துவிட முடியும் என்று நம்புகிறார்கள். மூளை இல்லாமல் மனதுக்கு ஒரு தனித்த இருப்பு இல்லை. மனித மனம் என்பது மூளையின் ஒரு வெளிப்பாடு மட்டுமே. இந்த ஊகமானது மீண்டும் மீண்டும் பல்வேறு ஆய்வுகளால் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. நரம்பியல் தொடர்பமைப்புகள் மனம்-உடல் என்ற சிக்கலை சீக்கிரத்திலேயே தீர்த்துவிடும்.

உங்கள் கட்டுரையில் நீங்கள் உங்களை ஒரு அறியமுடியாமைவாதி அல்ல என்றும் உண்மையை தேடுபவன் என்றும் சொல்கிறீர்கள். என்னவகையான ஞானத்தேடல் கொண்டவர் நீங்கள்? ஆன்மீகத்திலும் தத்துவத்திலும் ஆராய்ச்சியை நிகழ்த்தும் நீங்கள் அறிவியலை நிராகரிக்கிறீர்கள்.

கடைசியாக உங்களுக்கு ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்பபுகிறேன். உங்கள் எழுத்து ஆன்மீக தத்துவ  ஆய்வுகளுக்குள் நுழையும் ஒருவருக்கு உதவிகரமானதாக இருக்கலாம். இந்தக் கடிதத்தை நான் உங்களுக்கு எழுதுவதற்கான நோக்கம் உங்கள் ஆய்வு இந்து மரபின் ஊகங்களை நோக்கி அதிகம் சாய்ந்துள்ளது என்று காட்டுவது மட்டும் அல்ல.  மனம் என்ற கோட்பாடைப்பற்றிய அறிவியலின் பொருள்முதல்வாத நோக்கிலான ஆய்வுகளை உங்கள் கவனத்துக்குக் கொண்டுவருவதற்காகவும் தான். இதைப்பற்றி நாம் விவாதிப்பதாக இருந்தால் விவாதிப்போம்

நானும் ஓர் அறியமுடியாமை வாதி அல்ல.  சாத்தியமான எல்லா திசைகளிலும் தேடக்கூடிய ஒருவன்.  நிகழ்வதைப் புரிந்து கொள்வதற்கும் என் பிரக்ஞையை புரிந்துகொள்வதற்கும் . நான் என் செருப்பின்  sole ஐதான் அறிந்திருக்கிறேன் soul  எதையும் அறிந்ததில்லை.

அன்புடன்

செந்தில்

*
தங்கள் கடிதத்துக்கு நன்றி.

நான் ஓர் இலக்கியவாதி. தத்துவத்தில் ஆர்வம் உள்ளவன். இந்த தளம் சார்ந்ததே எனது கீதை உரை.  நீங்கள் அறிவியல் கற்றவர் என அறிகிறேன். அறிவியல் என்னுடைய தளம் அல்ல. அங்கே ஒரு நிபுணனின் நுட்பத்துடன் நான்  செல்ல முடியாது. ஒரு எளிய வாசகனாக மட்டுமே நான் அதைக் கவனிக்க முடியும். அதைச் செய்துகொண்டுதான் இருக்கிறேன். அதன் எல்லைகள் என் சிந்தனைகளில் உண்டு.

என் எழுத்துக்களில் என் சொந்த அனுபவத்தை நான் முன்னிறுத்தக் காரணமே என்னால் சற்றேனும் திட்டவட்டமாகச் சொல்லத்தக்கது அதுவே என்பதனால்தான். சாதகன் என்றால் அதுதான் பொருள். அவன் தன்னை அலகாக்கி பிறிதை அறிபவன்.

ஆனால், ஓர்  ஆரம்பகட்ட அறிவியல் வாசகனாக நின்று நான் பார்க்கையில் கூட உங்கள் கடிதம் அறிவியல்சார்ந்த கருத்துக்களை  குறுக்கிப் புரிந்துகொண்டிருக்கிறது, நீங்கள் செல்ல வேண்டிய தூரம் அதிகம் என்று என்னால் உணர முடிகிறது என்று சொன்னால் கோபம் கொள்ள மாட்டீர்களே.

விவாதங்களில் ஈடுபடும்போது எதிர்தரப்பில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்று கூர்ந்து கவனித்து அதைச்சார்ந்து வாதங்களை உருவாக்கிக் கொள்வது அறிவியல் முறைமையின் முதல் விதி. நம் வாதங்களை உணர்ச்சி கலவாமல் முன் வைப்பது அடுத்த விதி. அதாவது அறிவியல்பயிற்சி கொண்ட ஒருவரின் விவாதம் முதல் தரப்பினனை ‘நான் என்ன சொல்ல வந்தேன் என்றால்…”என்று பதில் சொல்லும்படி வைக்காது. நீங்கள் என்னை அங்கே தள்ளுகிறீர்கள்.

ஒன்று,சாங்கிய யோகம் உரையில் அது நடைமுறைஞானம் என்று மீண்டும் மீண்டும் சொல்கிறேன். அந்த பகுதியில் கிருஷ்ணன் சொல்லும் சொற்கம் ,ஆத்மா குறித்த கருத்துக்கள் பிற்பாடு வரும் நுண்தள விவாதங்களில் மேலும் பலவாறாக உருமாறுவதை கீதையிலேயே காணலாம் என்கிறேன். நீங்கள் கீதையில் உள்ள அப்பகுதியை  இந்து ஞானத்தின் இறுதித் தரப்பாக, அது நிரூபிக்க முயலும் கருத்தாக  எடுத்துக்கொண்டு விவாதிக்க ஆரம்பிக்கிறீர்கள்.

இரண்டு, உடம்புக்குள் ஆத்மா என்ற ஒன்று உள்ளது என்றெல்லாம் நான் எங்கும் சொல்லவில்லை. நான் முழுக்க அறியாத எதையும் திடமாகச் சொல்ல விரும்பவில்லை என்றுதான் நான் சொல்கிறேன்.

*

நான் பேசுவது ‘மனம்’ பற்றி அல்ல என்பதை நீங்கள் அப்பகுதியைப் படித்தால் உணர்ந்து கொள்ளலாம். நான் பேசிக்கொண்டிருப்பது ‘தன்னிலை’ பற்றி. [Subjectivity] அதற்கும் மனத்துக்கும் பெரும் வேறுபாடு உண்டு. நான் என் குறுகிய வாசிப்பில் இன்று அறிவியலுக்குள் நான்கு தளங்களில் இது குறித்த விவாதம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்று அறிந்திருக்கிறேன்

ஒன்று, மொழியியல் . நவீன மொழியியல் தனக்குள் சமூகவியலையும் மானுடவியலையும் அடக்கிக் கொண்டு இந்த கேள்வியை மிக விரிவாக எதிர்கொண்டு பல கோட்பாடுகளை உருவாக்கி இருக்கிறது. ரஸ்ஸல், விட்ஜென்ஸ்டைன் தொடங்கி இன்று தெரிதா வரை வளர்ந்து வந்து கொண்டிருக்கும் விவாதம் மிக விரிவானது.

இரண்டு, உளவியல். ·ப்ராய்டு, யுங் முதல் ழாக் லக்கான் வரை தன்னிலை சார்ந்து பலவகையான விளக்கங்களும் கோட்பாடுகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

மூன்று, நரம்பியல். அதிலும் இரு போக்கு. செயல்முறை நரம்பியல் [கிளினிகல் நியூராலஜி] மற்றும் கோட்பாட்டு நரம்பியல்.

நண்பரே, நீங்கள் பேசும் பொருள்முதல்வாத ஆய்வு என்பதெல்லாம் செயல்முறை நரம்பியல் எண்பதுகளின் இறுதியில் முன்வைத்த நம்பிக்கை மற்றும் உற்சாகத்தைத்தான். அப்போது மனம் என்பதை மட்டுமல்ல; பிரபஞ்சத்தில் உள்ள நிறம், தூரம், பருண்மை ஏன் காலத்தையே கூட மூளை நரம்புகளின் அமைப்பைக்கொண்டு விளக்கிவிடும் உத்வேகம் நிலவியது.

ரிச்சர்ட் ரீஸ்டாக், ஆலிவர் சாக்ஸ், ரோஜர் பென்ரோஸ் போன்ற பொது வாசகர்களுக்காக எழுதும் அறிவியலாளர்களின் நூல்களை வாசிப்பவர்களே கூட இன்றைய நரம்பியல் ‘மனம்’ என்பதையும் ‘தன்னிலை’ என்பதையும் ‘முழுமையாக’ மண்டையோட்டுக்குள் இருக்கும் அந்த புரோட்டீன்காலி·ப்ளவரை மட்டும் கொண்டு விளக்கி விடலாம் என்ற நம்பிக்கையைத் தாண்டி வெகுவாக விரிந்துவிட்டது என்பதைப் புரிந்து கொள்வார்கள். அந்த  ஆரம்பகால நம்பிக்கைம்பியல் குறைத்தல்வாதம் [ Neuro Reductionism ] என்று சொல்லப்படுகிறது இன்று. உங்கள் ஒட்டுமொத்தக் கடிதமும் அந்த ஒருசொல்லில் அடங்கும்.

குறைந்த பட்சம் மூளை உருவான பரிணாமத்தை, அப்பரிணாமம் உருவான இயற்கையின் வலைவிரிவை  கணக்கில் கொள்ளாமல் மூளையின் செயல்பாட்டை, அதன் விளைவாக உருவாகியிருக்கும் மனம் என்பதை, புரிந்துகொள்ள முடியாது. மூளை ஒவ்வொரு கணமும் இயற்கையுடன் எதிர்வினையாற்றி தன்னை வளர்த்துக்கொண்டு இருக்கிறது.

ஓர் உதாரணம் மூலம் சொல்கிறேனே. ரிச்சர்ட்  ரீஸ்டாக் Your Brain Has its own Mind என்ற ஜனரஞ்சக நூலில் எழுதிய உவமை. நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லையும் ஒரு தனி உயிராக எடுத்துக்கொள்ளலாம் . அவை ஒவ்வொன்றுக்கும்  உண்ணல்- வளரல்- இனப்பெருக்கம்- மரணம் என்ற வாழ்க்கை, அவ்வாழ்க்கையை நீட்டிக்கும் இச்சை, அதற்கான வழிமுறைகளைச் செய்வதற்கான உடல் அமைப்பு, சேர்ந்து செயல்படும் தன்மை, அச்சம் ஆவல் போன்ற உணர்ச்சிகள் அனைத்தும் உண்டு. அவை சேர்ந்து உருவான நம் உடலுக்கும் அதே உணர்வுகள் உண்டு.

மூளையை மனமாகக் காணும் நீங்கள் அந்த மூளையில் உள்ள ஒவ்வொரு செல்லின் மனதையும் எப்படிப் பார்ப்பீர்கள்? ஒவ்வொரு செல்லின் மனத்தையும் தனித்தனியாக நரம்பியல் நோக்கில் விளக்குவீர்களா என்ன?  அம்மனங்களின் ஒட்டுமொத்தமா நமது மனம்? இல்லை நம் மனத்தை வைத்தே அவற்றின் மனத்தை விளக்குவீர்களா? நமது துளிகளா அவை?  அவற்றுக்கும் நமக்குமான ஒத்திசைவை உருவாக்குவது எது? அதைப்பொருட்படுத்தாமல் நியூரான்களுக்குள் டோபோமின் என்ன செய்கிறது என்று சொல்லி நீங்கள் மனதையும் தன்னிலையும் புறவயமாக விளக்கி விடுவீர்களா என்ன?

மனிதத் தன்னிலையை அத்தகைய  விரிவான தளத்தில் இயற்கையின் பேரமைப்புடன் இணைத்துப் பார்க்கும்போதுதான் எளிய பொருள்முதல்வாதம் போதாமலாகிறது. எளிய பொருள்முதல்வாதத்துக்கு இன்றைய அறிவியலின் எந்த தளத்திலும் இடமில்லை — மோட்டார் மெக்கானிஸம் போன்றவை தவிர.

மொழி என்ற அமைப்பை கிட்டத்தட்ட இயற்கையின் நகல் வடிவமாக, பிரம்மாண்டமாக, உருவகித்து அதற்குள் தன்னிலை எப்படி உருவாகிறது என்று பார்க்கிறது மொழியியல். தமிழிலேயே நாகார்ச்சுனன் போன்றவர்கள் இதைப்பற்றி விரிவாகப் பேசியிருக்கிறார்கள். இயற்கையை உளவியல் நோக்கில் அணுகி அது முடிவிலாத ஒரு குறியீட்டுவெளியாகக் கண்டு அதில் ஒரு தன்னிலை எப்படி உருவகிக்கப்படுகிறது என்று பார்க்கிறது நவீன உளவியல்

மனிதனையே இயற்கையின் ஒரு செல்தான் என்று உருவகிக்கும் நோக்கு தான் கயா போன்ற கோட்பாடுகளை உருவாக்கிக்கொண்டு முன்னகர்கிறது. நரம்பியலை அல்லது வேறு ஓர் அறிவுத்துறையை அதன் செயல்தளத்தில் பிரித்து தனித்து ஆராயலாம். தத்துவார்த்தமாக அப்படி பிரித்துக் கற்கவும் விவாதிக்கவும் முடியாது. என் இணைய தளத்திலேயே முழுமையறிவு பற்றி கென் வில்பர் போன்றவர்கள் பேசிவருவனவற்றின் குறிப்புகளும் நண்பர்கள் எழுதியவற்றின் இணைப்புகளும் உள்ளன.

மனம் என்றால் என்ன என்று சொல்ல முடியுமா என்பது போன்ற சவால்களையெல்லாம் அறிவியல் அல்லது தத்துவ அறிமுகம் கொண்ட ஒருவர் செய்ய மாட்டார்.  அவை எவையும் புறவயமான பொருட்கள் அல்ல. அவை  அக அனுபவம் சார்ந்த உருவகங்கள். எந்த உருவகத்தையும் அல்லது கருத்துநிலையையும் புறவயமாக முழுமையாக  வரையறை செய்து விடமுடியாது. அவற்றைப்பற்றி அறிவதற்காக சில கருத்துநிலைகளை உருவாக்கலாம், அவற்றை ஒரு விவாதச் சூழலுக்குள் தற்காலிகமாக வரையறை செய்துகொள்ளலாம். அவ்வளவுதான்.

உங்களுக்கு ஆர்வமிருந்தால் , பொருள்முதல்வாதம் விட்டு கொஞ்சம் நகர உங்கள் empiricist religion அனுமதிக்குமென்றால் மனம் குறித்து மிகவிரிவான கருத்துநிலைகளை பதஞ்சலி யோக சாஸ்திரமும் பௌத்த மெய்ஞானமும் உருவகித்திருப்பதை நீங்கள் கற்கலாம். நவீன மேலை உளவியல் மனம் சார்ந்த அதன் அடிப்படைகளை இவ்விரு மரபுகளில் இருந்துதான் பெற்றுக்கொண்டது. ஐயமிருந்தால் சி.ஜி.யுங்-கை படித்துப்பாருங்கள். ஒரு மனதைப்பற்றி அல்ல மனங்களைப் பற்றி பேசுகிறார் நாகார்ஜுனர்.  அவரது நோக்கில் மனிதனின் பலவகை அறிதல் [விக்ஞானங்களில்] ஒன்றுதான் மனோ விக்ஞானம். மனிதமனம் அமைந்திருக்கும் மானுட மனதைப்பற்றி, அது அமர்ந்திருக்கும்  இயற்கையின் மனதைப்பற்றி,  அதன் தன்னுள் கொண்டிருக்கும் பிரபஞ்சத்தின் மனம் பற்றிப் பேசுகிறது பௌத்தம்.

கருத்துருவக தளத்தில் நிகழும் விவாதங்களை நிரூபணவாதத்துக்குக் கொண்டுசென்று புரிந்துகொள்ள முடியும் என்ற நம்பிக்கை அறிவியலில் இன்று இல்லை என்றே நான் புரிந்துகொண்டிருக்கிறேன். என்றுமே மனிதனின் தன்னிலை என்றால் இதுதான் என அறிவியலால் புறவயமாக நிரூபிக்க முடியாது. பெரும்பாலான விஷயங்களை விளக்கும் ஒரு கோட்பாடாக அதை முன்வைக்க முடியும். மனிதன் பிரபஞ்சத்தையும் இயற்கையையும் புரிந்து கொள்ளும்தோறும் அது விரிவாகும்.

தத்துவத்தை இகழும் அறிவியலாளன் ஸ்க்ரூ டிரைவர் திருக லாயக்கானவன். அறிவியலை இகழும் தத்துவவாதி தத்துவத்தை மதமாக ஆக்க முனைபவன். நான் என்றும் அறிவியலை இகழ்பவனோ நிராகரிப்பவனோ அல்ல.

இனி மீண்டும் ஆத்மா பற்றி. பிரபஞ்சம், இயற்கை, தனிமனிதன் மூன்றுக்கும் பொதுவான ஒரு கொள்கையை முன்வைத்து மனிதனின் தன்னிலையை விளக்க முயல்வதே ஆத்மா என்ற கருத்துருவகம். அது ஒரு கருவி மட்டுமே. ஒரு உண்மை அல்ல. இதுவே என் புரிதல். கீதையிலும் அது ஒரு கருவியாக மட்டுமே கையாளப்பட்டுள்ளது. அது ஒரு மதநூல் அல்ல, தத்துவநூல் என நான் சொல்வதற்கான காரணம் இதுவே.

தன்னிலை என்பதை பிரபஞ்சமளாவக் கொண்டு செல்வதனால் ஆத்மா என்ற கருவி பிற கருவிகளை விட மேலும் நுட்பமானதாக  உள்ளது என்பதே என் எண்ணம். ஆத்மா என்ற கருத்து — ஒரே வரியில் விளக்க வேண்டுமானால் பிரபஞ்ச உருவாக்கத்தின் பின்னால் உள்ள கருத்து அல்லது ஆற்றல் அல்லது எதுவோ ஒன்று தான் மனிதனுக்குள்ளும் இருக்கிறது என்ற கருத்து அது– நீங்கள் புரிந்து வைத்திருப்பது போல கால்பந்துக்குள் உள்ள  காற்று அல்ல.

உங்கள் செருப்பின் அடிப்பகுதியைப்பற்றி அத்தனை திட்டவட்டமாக நீங்கள் அறிந்து விட்டீர்களா என்ன?

ஜெயமோகன்.

அன்புள்ள ஜெயமோகன்,

தங்கள் கடிதத்துக்கு நன்றி. முதலில் உங்கள் விரிவான கடிதத்துக்கு முதலாவதாக. இத்தனை விரிவான நல்ல கடிதத்தை இத்தனை விரைவில் எப்படி எழுத முடிகிறது என்று நான் வியக்கிறேன். உங்கள் கடிதம் சில தெளிவுகளை அளிக்கிறது. பிரபஞ்சமனம்– அபப்டி ஒன்று இருந்தால்–  பற்றி மேலும் விவாதிக்க தூண்டுகிறது. பதஞ்சலி மற்றும் பௌத்தத்தின் மனம் பற்றிய விளக்கங்களை அறிய ஆவல் உண்டு.

நான் அமெரிக்காவில் கணிப்பொறி இயலில் முதுகலை படிக்கிறேன். மன-மூளை அறிவியல் சார்ந்து முனைவர் பட்டத்துக்கு ஆய்வுசெய்யும் நோக்கில் இருக்கிறேன். மனம் பற்றிய என் அறிதல் எல்லைக்குபட்டது என்பதும் நான் செல்லவேண்டிய தூரம் அதிகம் என்பதும் எனக்கும் தெரியும்

நான் சொன்னவை நரம்பியல் குறைத்தல் வாதத்திற்குள் வரக்கூடியவை என்பதை நான் அறிவேன். அதனுள் வரக்கூடிய சிக்கலான வினாக்களை நீங்கள் முன்வைத்திருக்கிறீர்கள். அதேசமயம் நரம்பியல் என்பது ஒரு புதிய அறிவியல் என்பதை நீங்கள் மறுக்க முடியாது. இயற்பியல் 19 ஆம் நூற்றாண்டில் அடைந்த முழுவளர்ச்சியை இது அடையும்போது பிரக்ஞை- தன்னிலை பற்றிய பல அடிப்படைக் கேள்விகளுக்கு இது அந்த புரோட்டின் காலி·ப்ளவரை வைத்தே தக்க விடை அளிக்க முடியும் என்று நான் நினைக்கிறேன்.

பரிணாம உளவியல் உங்கள் பெரும்பாலான கேள்விகளுக்கு விடையளிக்கக் கூடும் என்று நினைக்கிறேன். அந்த விளக்கங்கள் இருந்தாலும் நம் மனம் என்பது ஒரு மின்தொடர்புக்குவியல் மட்டுமே என நான் நினைக்கவில்லை என்பதை சொல்லிக்கொள்கிறேன். மனித மூளையின் நியூரான் அமைப்பு மிக நெகிழ்தன்மை கொண்டது. சூழலின் தூண்டுகைக்காரணங்களினாலும் அதுவே உருவாக்கிக்கொள்ளும் தூண்டுகைக் காரணங்களாலும் அது தன்னை தொடர்ந்து உருமாற்றிக் கொள்கிறது. நரம்பியல் நெகிழ்தன்மை [Neuronal Plasticity ] சார்ந்த ஆய்வு என்பது பல்வேறு உளவியல் நரம்பியல் கருதுகோள்களை இணைத்து பொதுக்கோட்பாடுகளுக்கு வருவதற்கான முயற்சியாகும். மூளை நிபுணர்களுக்கே மூளையின் இந்த சுய அமைப்புத்திறன் இயல்பானதா இல்லையா என்று சொல்ல முடியவில்லை இன்று.

ஒவ்வொரு நியூரானுக்கும் தனி பிரக்ஞை உண்டு என்று நான் நினைக்கவில்லை. நரம்பியலின்படி பிரக்ஞை என்பது பலவகையான சிக்கலான நரம்பியக்கங்களின் ஒட்டுமொத்த விளைவு. எளிமையான நரம்பிணைப்புகள் எப்படி பிரக்ஞையாக ஆயின என்று நீங்கள் கேட்கலாம். அதுதான் நரம்பியலின் மிகச்சிக்கலான கேள்வி என்றுதான் நான் சொல்வேன். இன்றைய நரம்பியல் பிரக்ஞையில் உள்ள நரம்புகளின் இணைவியக்கத்தைப்பற்றி விரிவாகவே ஆராய்கிறது. குறிப்பாக காட்சி-கேள்வி சார்ந்த பிரக்ஞையைப்பற்றி.

எதிர்காலத்தில் இந்த வினாக்களுக்கான விடைகளுக்குள் நரம்பியல் வெற்றிகரமாகச் செல்லும் என்றே நான் நினைக்கிறேன். அதேசமயம் ஒரு அகவயமான புரிந்தல் இல்லாமல் ஒருவரும் இதற்குள் முழுமையாகச் சென்றுவிட முடியாதென்பதையும் நான் ஏற்கிறேன்.

நான் தத்துவத்தை முழுமையாக மறுப்பவனோ அல்லது அறிவியலை முழுமையாக பின் தொடர்பவனோ அல்ல. எனது தொழில்முறை ஆர்வம் அறிவியல். என்னுடைய தனிப்பட்ட ஆர்வம் தத்துவம்

ஆத்மா என்பதை ஒரு பொருளாகவோ இருப்பாகவோ எண்ணாமல் ஒரு அறியப்படாத கருத்துநிலையாக, அறிதலுக்கான கருவியாக மட்டும் காண்போம் என்றால் அதைப்பற்றிய எதிர்ப்பு ஏதும் எனக்கு இல்லை.

என் செருப்பின் அடிப்பகுதியைப்பற்றியும் அதிகமாக  ஒன்றும் எனக்கு தெரியாது. அந்த கூற்று உங்களைப் புண்படுத்தியிருந்தால் வருந்துகிறேன்

பிகு: சமீபத்தில் விஷ்ணுபுரம் படித்து முடித்தேன். அதைப்பற்றி விவாதிக்க ஆசை உண்டு
நன்றி

செந்தில்

அன்புள்ள செந்தில்,

உங்கள் வரி எதுவும் என்னை வருத்தப்பட வைக்கவில்லை. சற்று வேகமாக எழுதியதில் இருந்து நீங்கள் சற்று இளையவர் என்று ஊகித்தேன். உங்கள் வயதில்ந் ஆன் இதைவிட இருமடங்கு வேகத்தில் எழுதியிருப்பேன்!. நீங்கள் மனம் -உடல் சார்ந்த உயர்தள ஆய்வைச் செய்யக்கூடும் என்பதும் நான் ஊகித்ததே. என் ஆசிரியர் நித்ய சைதன்ய யதி உளவியலாளரும் கூட என்பதை அறிவீர்கள் என நினைக்கிறேன். அவரைச் சந்திக்க வரும் உளவியலாளர்களிடம் விரிவாகப்பேசியிருக்கிறேன்.

1990 களில் இரு அதீத உற்சாகங்கள் இருந்தன. கணிப்பொறி மொழி மிகவும் வளர்ந்து வந்த காலகட்டம் அது. செயற்கை அறிவு [AI] மூலம் எந்திரங்களை புரிந்துகொள்ளவும் சிந்திக்கவும் வைக்க முடியும் என்ற நம்பிக்கையை தீவிரமாக முன்வைத்த இரு ஜெர்மானிய அறிவியலாளர்களிடம் நான் ஊட்டி குருகுலத்தில் –சேர்ந்து பசுவுக்குச் சாணி அள்ளியபடி — பேசினேன். அவர்களின் நம்பிக்கையை கண்டு சிறு வயதாக இருந்த நானும் பரவசம் கொண்டு நான்குகாலில் பாய்ந்து ”குரு நித்யாவிடம் சென்று மனித சிந்தனையை இயந்திரங்கள் செய்யப்போகின்றன” என்று கிரீச்சிட்டேன்.

சிந்தனை என்பது பிரக்ஞையின் அலை. மனிதப் பிரக்ஞை என்பது மனிதனை விடப் பெரிய இயற்கையின் பிரக்ஞையின் ஒரு பகுதி. கடல் இல்லாமல் அலையை மட்டும் உருவாக்க முடியாது என்றார் நித்யா. இவர்கள் என்ன செய்வார்கள் என்றேன். இவர்கள் சொற்களையும் சொற்றொடர் முறைகளையும் இலக்கண அமைப்பையும் உருவாக்குவார்கள். ஆனால் கூறுவதும் தொடர்புறுத்துவதும் அதைவிடப்பிரம்மாண்டமான ஒரு அமைப்பின் செயல்பாடுகள் என்பதை உணர்வார்கள். மொழி என்பதன் மேல்மட்ட அமைப்புதான் இவர்கள் பேசிக்கொண்டிருப்பது. மொழியின் உள் அமைப்பு பிரக்ஞைதான். அது இயற்கையை குறியீடுகளாக மாற்றி அக்குறியீடுகளைக் கொண்டு தன் புற அமைப்பை உருவகித்துக் கொண்டிருக்கிறது. இயற்கையின் குறியீடுகளே முடிவில்லாதவை ஒவ்வொரு கணமும் புதிதாக நிகழ்பவை. அதற்கும் அப்பால் உள்ள பிரக்ஞை இயற்கையின் சாரமான செயல்தன்மையின் ஒரு பகுதி. இயற்கையின் சாரமாக உள்ள ஒன்று தன்னை ஒரு பிரக்ஞையாக பிரித்துக்கொண்டு அதே இயற்கையை பார்த்து குறியீடுகளாக மாற்றிக்கொண்டு ஆழ்மனம் என்ற கட்டமைப்பை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. அதன் வெளிப்பாடுகள் எண்ணற்றவை. அதில் ஒரு முறையே மொழி — என்றார் நித்யா.

பின்னர் தன்னிலை-பிரக்ஞை ஆகியவற்றைப் பற்றிய உளவியல் சார்ந்த உற்சாகம் கிளம்பியது. மூளையை நரம்புகளாக புரிந்துகொண்டால் எல்லாவற்றையும் விளக்கிவிடலாமென்ற பரபரப்பு. முதல் பரபரப்பு அளவுக்கு எனக்கு இதில் நம்பிக்கை வரவில்லை. மூளைக்கு அதைச் சூழ்ந்துள்ள இயற்கையுடனும் அதை உருவாக்கிய இயற்கையுடனும் எந்த உறவும் இல்லையா?

ரிக்வேத சூத்திரம் ஒன்று உண்டு. ‘ஒளிவேட்கை கண்ணாகியது’. அதை பரிணாமம் மூலம் விளக்கலாம். ரிச்சர்ட் அட்டன்பரோவின் ஒரு நல்ல காட்சித்தொகுப்பே உள்ளது. பல சிறிய உயிரினங்களுக்கு உடலே கண் ஆக உள்ளது. ஒளி உள்ளே ஊடுருவும் தோல் உள்ளது. பின்னர் அந்த தோல் சில புள்ளிகளில் மேலும் ஒளி ஊடுரும்படி ஆகியது. பின்னர் உள்ளே சென்ற ஒளியை புரிந்துகொள்ளும் நரம்புப்படலம் உருவாகியது. பின்னர் விழி ஆடிகள் உருவாயின. பின்னர் இரட்டைப் பிம்பம் உருவாகி முப்பரிமாணம் உருவாகியது. நமது கண் உருவாகியது. கண் மூளையின் பல்லாயிரம் பிம்பங்களை உருவாக்கியது. பிம்பங்கள் புற உலகை உருவாக்கின. நமது கண் பரிணாமத்தில் இப்படி உருவாவதற்கு சூரிய ஒளியின் இயல்பே காரணம். இப்படி ஒளி தன்னைப்பார்க்கும் கண்ணையும் காட்சியையும் தானே உருவாக்கியது என்று பார்த்தால் எந்த சக்தி மூளையை உருவாக்கியது?

நான் அக்காலத்தில்  என் ஐயங்களை ரோஜர் பென் ரோஸ¤க்கே எழுதினேன். அவரிடமிருந்து சுருக்கமாக ஒரு கடிதம் வந்தது. தன் நூல் வெளிவந்த காலகட்டத்து அதீத நம்பிக்கைகளை தான் இப்போது கொண்டிருக்கவில்லை என்றும் பரிணாம உயிரியல் உருவாக்கும் புதிய வினாக்கள் மேலும் தீவிரமானவை என்றும் அதே சமயம் நரம்பியலாய்வுகள் நிகழ்த்தியிருக்கும் ‘கிளினிக்கல்’ சாதனைகளை ‘தத்துவ அடிப்படைவாதம்’  மறுக்கக் கூடாது என்றும் எழுதியிருந்தார். அந்த வயதில் அக்கடிதம் பெற்றதே ஒரு சாதனையாக இருந்தது. அக்கால சொல்புதிது இதழ்களில் இவ்விஷயம் குறித்து ஒரு சில எளிய கட்டுரைகள் வந்தன. ரோஜர் பென் ரோஸின் ஒருபேட்டியின் மொழியாக்கமும் வந்தது. ஆனால் அதெல்லாம் அன்று தமிழில் பேசப்படும் சூழல் இருக்கவில்லை. இப்போது இணையம் வந்து புதிய வாசகர்கள் வந்த பிறகே அது சாத்தியமாகிறது.

பிரம்மம்  -ஆத்மா – முக்தி மூன்றைப்பற்றியும் இந்து-பௌத்த மெய்ஞான நூல்களில் மிகமிகச் சிக்கலான விவாதமே உள்ளது. இறுதி முடிவுகள் ஏதும் இல்லை. மேலும் இந்து ஞானமும் பௌத்த ஞானமும் இந்த உயர்தளத்தில் தெளிவாகப் பிரிக்கக்கூடியவையாகவும் இல்லை. ஒன்றோடொன்று கலந்தே உள்ளன.

ரிக்வேதம் 10 ஆம் மண்டலத்திலேயே பிரக்ஞை என்றால் என்ன, தன்னிலை என்றால் என்ன [நான் யார்?] என்ற கேள்வியும் அடிப்படையான ஊகமும் உருவாகி விட்டிருந்தன. சூழ உள்ள இவையெல்லாம்தான் நானுமா? அந்த எண்ணங்களே ‘பிரக்ஞானம் பிரம்மாஸ்மி’ ‘தத்வமஸி’ [பிரக்ஞையே பிரம்மம்,  அதுநீயே] போன்ற தரிசனங்கள் ஆயின. இக்காலத்தில் உருவான மூல நூல் பதஞ்சலி யோகசூத்ரம். மிகமுக்கியமான ஒரு உளவியல்– தத்துவ நூல் இது. ஒரு தகவலுக்குச் சொல்கிறேன் மனதை ஒரு அமைப்பாக இது பார்க்கவில்லை ஒரு நிகழ்வாகவே பார்க்கிறது. சித்தவிருத்தி — மனநிகழ்வு என்று அதை விளக்குகிறது. பிரக்ஞை எப்படி மொழியாக மாறுகிறது என்பதை மீமாம்சகர்களும் பிரக்ஞை எப்படி தர்க்கமாக ஆகிறது என்று நியாயிகர்களும் பார்த்தார்கல். நியாயசூத்ரம், மீமாம்ச சூத்ரம் இரண்டுமே யோக சூத்ரத்துக்கு துணைநூல்கள் போல.

பௌத்தர்கள்தான் யோகத்தை இன்று நாம் காணும் கட்டத்துக்குக் கொண்டு சென்றார்கள். லங்காவதார சூத்ரம் மிக முக்கியமான பௌத்த யோக நூல். இதுதான் சி.ஜி. யுங்குக்கு கூட்டுநனவிலி பற்றிய அடிப்படையை அளித்தது என்று அவர் சொல்லியிருக்கிறார். நாகார்ஜுனர் எழுதிய எல்லா நூல்களுமே பிரக்ஞையை அறிவதற்கு முக்கியமானவை. இவை இப்போது ஒரே நூலாகக் கிடைக்கின்றன. நாகார்ஜுனரின் மாணவர் திக்நாகரின் கோட்பாடுதான் விக்ஞானவாதம் — அறிவகவாதம். அதன் வளர்ச்சி அல்லது நீட்சியே ஒருவகையில் அத்வைதம்.

மேலைநாட்டு சிந்தனைகளைப் படிக்கும்போது நமது இந்திய மாணவர்கள் மட்டும் செய்யும் ஒரு பிழை உண்டு. ஒரு பழைய கருத்தைப்பற்றிப் பேசினால் அது மறுக்கப்பட்டுவிட்டது என்பார்கள். ‘அதனாலென்ன, மறுக்கப்படாத கருத்து ஏதாவது பூமியில் உண்டா?’ என்று நான் ஒருவரிடம் கேட்டேன். மேலைநாட்டில் சிந்தனைசெய்து ஒரு முடிவுக்கு வந்து நம்மிடம் சொல்லிவிடுவார்கள்  என்ற நம்பிக்கை. கூட்டுநனவிலி என்றதுமே அதை மறுத்துவிட்டார்கள் என்பார்கள். அப்படி மறுக்கும் கருத்தும் உடனடியாக மறுக்கப்படுமே. இவையெல்லாமே கருத்துக்கருவிகள். ஒரு பெரிய விவாதப்பரப்பை இவை உருவாக்குகின்றன. இந்த விவாதப்பரப்பை ஒட்டுமொத்தமாக புரிந்துகொள்ளவே நாம் முயலவேண்டும்.

இந்திய மெய்ஞான மரபும் அப்படி ஒரு விரிந்த விவாதப்பரப்பே. இங்கே மறுக்கப்படாத கருத்தே கிடையாது. மறுப்பு மூலம் கருத்துக்கள் பரிணாமம் பெற்ற படியே உள்ளன. கீதையில் முதலில் செத்த பின்பு ஆத்மா போகும் சொற்கம் பற்றிச் சொல்லப்பட்டுள்ளது.  அதன் பின் தூய ஆத்மா பற்றிய பேச்சு. அதன் பின் ஆத்மா என்பதை ஞான வடிவமாக காணும் நோக்கு. அப்படியே சென்று விபூதி யோகத்தில் பிளவற்ற ஒரு தூய பிரக்ஞையைப்பற்றிய பேச்சு மட்டுமே உண்டு. அது ஆத்மா என்ற கருத்தின் பரிணாமத்தையும் காட்டுகிறது.

இது பற்றி விரிவான விவாதங்கள் கீதை உரையிலேயே தொடர்ந்து வரக்கூடும்.

நரம்பியல் அதன் உச்சத்தில் என்னென்ன நிகழ்த்தும் என்பதை என்னால் ஊகிக்க முடியவில்லை. மனிதனின் உடல் அவன் பிரக்ஞையிலும் மனிதபிரக்ஞை அவன் உடலிலும் நிகழ்த்தும் நூற்றுக்கணக்கான விளைவுகளை அது சீர்ப்படுத்தி விளக்கலாம். பல்லாயிரம் உள-மன சிக்கல்களை அது தீர்க்கலாம். அதன் பின்னரும் அடிப்ப்படைப் பிரச்சினைகள் எஞ்சியிருக்கும். சரி, அது ரிக்வேதம் கேட்ட ‘நான் யார்? யாரால்?’ என்ற கேள்விக்கே பதில் சொன்னாலும் சொல்லலாம். ஏன் நாம் நம்பிக்கையில்லாமல் இருக்க வேண்டும்?

அன்புள்ள செந்தில், நீங்கள் ஏன் தமிழில் எழுதக்கூடாது? உங்களைப்போல இத்தனை நவீன உயர் படிப்பு படிப்பவர்கள் எல்லாம் ஆங்கிலத்திலேயே எழுதிக்கொண்டிருந்தால் தமிழில் யார்தான் இதையெல்லாம் எழுதுவது?

என் நண்பர் நீலகண்டன் அரவிந்தன் திண்ணை இணைய இதழில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதை ஓட்டியோ வெட்டியோகூட நீங்கள் எழுதலாமே.
ஜெயமோகன்

888

அன்புள்ள ஜெயமோகன்,

நான் தமிழ் மொழியில் தான் உங்களுக்கு மின்அஞ்சல் அனுப்பலாம் என்று எண்ணி இருந்தேன்,
ஆனால் தமிழ் மொழி கீபோர்டு  எனக்கு அவ்வளவாக பரிட்சயம் இல்லாத காரணத்தால் நான்
ஆங்கில மொழியில் தங்களுக்கு கடிதம் எழுத வேண்டிய சூழ்நிலை உருவாகி  விட்டது.
மற்றபடி, ஆங்கில மொழி மோகம் என்பது எல்லாம் எனக்கு இல்லை.
உண்மையை கூற வேண்டும் எனில் எனக்கு தமிழில் எழுதுவதில் தான் ஆர்வம்.

உங்களுடைய எழுத்துக்க்களை நான் சமிப காலமாக உங்களுடைய இணைய தளத்தில் வாசித்து வருகிறேன்
மேலும் தங்களுடைய நாவல்களையும் தற்சமயம் வாசித்து வருகிறேன். தங்களுடைய விஷ்ணுபுரம் நாவல் பல
அக விரிவுகளை தன்னகத்தே கொண்டு உள்ளது. வாசிப்பதற்கு சற்று கடினமாக தான் உள்ளது.தொடர்ச்சியான வாசிப்பின் மூலம்
அதன் அக விரிவுகளையும் மற்றும்  அதன் படிமங்களையும் அறிய முடியும் என்று எண்ணுகிறேன்.

நான் இந்தியாவில் இருந்து அமெரிக்க தேசத்திற்கு கணிபொறி கற்க வந்த காரணமே செயற்கை அறிவு(AI)
பற்றிய அராய்ச்சி முறைகளை கற்கத்தான்.நான் செயற்கை அறிவு பற்றிய ஆராய்ச்சி கட்டுரைகளை வாசிக்க நேர்ந்த பொழுது, நான்
கண்டடைந்தது நவின அறிவியலின் செயற்கை அறிவு ஆராய்ச்சி, அறிவியலில் உள்ள எந்தவிதமான நடைமுறை சிக்கலையும்
தீர்க்க உதவாது என்பதே.ஆகவே, செயற்கை அறிவு என்கின்ற ஆராய்ச்சி தளத்தில் இருந்து விலகி அறிவு என்றால் என்ன?
மனம் என்றால் என்ன? மனம் என்பது மூளையா அல்லது மனம் என்பது தனித்து இயங்கும் ஆற்றல் கொண்டதா என்பன
போன்ற தத்துவார்த்த கேள்விகளுக்கு என்னை ஆட்படித்தி கொண்ட போது தான் தத்துவத்தில் உள்ள பிரிவுகளான
பொருள்முதல் வாதம், கருத்துமுதல் வாதம் போன்ற  தத்துவார்த்த சிந்தனைகள் எனக்கு அறிமுகம் ஆகின.

மனம் என்றால் என்ன? ப்ரக்ஞை என்றால் என்ன ? போன்ற கேள்விகளுக்கு விடை காண முயன்ற பொழுது,
தத்துவத்திலும், அறிவியலிலும் மனம் மற்றும் ப்ரக்ஞை பற்றி பல்வேறு வகையான  கருத்துக்களும், கோட்பாடுகளும்
உருவாக்கப்பட்டு இருந்தன என்று காண நேர்ந்தது. அந்த காலக் கட்டத்தில் என்னுள் எழுந்த பல்வேறு விதமான கேள்விகளுக்கு
விடை காணும் முயற்சியாக நான் அறிவியல், ஆன்மிகம் மற்றும் தத்துவம் போன்ற துறைகளில் நூல்களை கற்ற பொழுது,மனம்
பற்றிய அறிவியல் கோட்பாடுகள் என்னுடைய அறிவிற்கும், மனதிற்கும் ஏற்புடையதாக இருந்தன. ஆகவே, நான் என்னுடய
தன்னிலை அறிதல் என்பது எவ்வாறு உருவாக்கப்படுகிறது? என்று ஆராய அறிவியலின் உதவியை நாடினேன்.இலக்கிய வாதிகள்
என்பவர்கள் வாழ்கையை பற்றிய ஒரு புரிதலுடன்   உண்மையை நாடுபவரக்ள் என்று எனக்கு தெரியும் ஆனால், 1990 களில்
பௌதிகம் மற்றும் மனம் பற்றிய ஆராய்ச்சியில் தலை சிறந்த விஞ்ஞானி ரோசெர் பென்றோசிக்கு கடிதம் எழுதும் அளவு உங்களுடைய
தேடுதல் இருந்தது என்று என்னும் பொழுது, ஒரு அறிவியல் மாணவனாக நான் இன்னும் கற்று கொள்ள வேண்டிய்து நிறைய
உள்ளது என்றே நான் எண்ணுகிறேன்.

லங்காவதார சூத்ரம் என்ற பௌத்த நூலை பற்றி உங்கள் கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளிர்கள். நான் அந்த நூலை கற்க ஆர்வமாக உள்ளேன்.
அந்த நூலின் முழு தொகுப்பின் பெயர் என்ன அதன் உரை ஆசிரியர் யார்? போன்ற தகவல்களை எனக்கு அனுப்பினால்
எனக்கு உதவியாக இருக்கும். உங்கள் குரு திரு நித்ய சைதன்யா எழுதிய மனம் மற்றும் பிரபஞ்ச மனம் பற்றிய நூல்கள்
ஏதேனும் இருந்தால் அதையும் தெரிய படுத்தவும். நரம்பியல் அதன் உச்சத்தில் என்னென்ன நிகழ்த்தும் என்பதை என்னாலும்
ஊகிக்க முடியவில்லை. எனினும் தாங்கள் கூறியது போல நாம் ஏன் நம்பிக்கை இழக்க வேண்டும் என்ற எண்ணத்துடன்
நான் சென்ற கடிதத்தில் கூறியது போல, அறிவியலின் துணையுடன்  மனம் பற்றிய ‘நரம்பு செல்களின் செயல்’ பற்றிய தேடலுடன்
மனம் மற்றும் பிரபஞ்ச மனம் பற்றிய அகவயமான தத்துவார்த்த தேடலிலும் இடுபடலாம்  என்று எண்ணி உள்ளேன்.

உங்களுக்கு வரும் எத்தனையோ மினஞ்சல்களுக்கு மத்தியில் என்னுடைய மினஞ்சல்ளுக்கு பதில் அனுப்பியதற்கு மிக்க நன்றி!

குறிப்பு: நான் முதல் முறையாக தமிழில் டைப் செய்வதால், இலக்கண பிழையோ, சந்தி பிழையோ,மற்றும்  ஒற்று பிழையோ இருக்க வாய்ப்பு உள்ளது.

– செந்தில்

கென் வில்பர்,ரமணர்,முழுமையறிவு:ஓரு உரையாடல்

http://www.thinnai.com/?module=displaystory&story_id=40410211&format=html

[கலைச்சொற்களுக்கு என் இணையதளத்திலேயே அகராதி இருக்கிறது.]

முந்தைய கட்டுரைசைவம் இருகடிதங்கள், இணையதளங்கள்
அடுத்த கட்டுரைஆத்மாவும் அறிவியலும்:கடிதங்கள்