புலியூர் முருகேசனின் புனைவுச்சுதந்திரம்

எழுத்தாளர் புலியூர் முருகேசன் (இதுவரை நான் அவரைப் பற்றி கேள்விப்பட்டதில்லை) அவர்களுக்கு ஆதரவான ஜெவின் பதிவைக் கண்டேன். பொதுவாக நானும் அவ்வாறே எண்ணுவேன். ஆனால் அவர் தன் புத்தகத்திற்கான முன்னுரையில் இப்படிக் கூறியிருக்கிறார்.

“கடந்த காலங்களிலும் நிகழ் காலத்திலும் என் மேல் துயரம் கவியச் செய்தவர்களையும், என்னை ஒரு நூறு முறை தற்கொலைக்குத் தூண்டியவர்களையும், அவர்கள் வாழும் காலத்திலேயே எழுதிக் காட்டுவதுதான் சரியானதாக இருக்கும் என்பதனாலேயே “புனைவற்ற கதைகளாக” முன் வைத்திருக்கிறேன்.”

ஜெவின் பதிவில் உள்ள மற்ற விஷயங்களான சமூகம் பற்றி எழுதுவது, இந்த இடைநிலைச் சாதி ஆதிக்க மனோபாவம் இவையெல்லாம் சரிதான். ஆனால் முன்னுரையில் இந்த எழுத்தாளர் சொல்லியிருப்பது சரிதானா? இந்த மனோபாவத்துக்கு எப்படி எதிர்வினையாற்றுவது? He deserves it என்று சொல்வது குரூரமாக இருக்கும் நியாயமாகவும் இருக்காது. ஆனால், Is he not asking for it? இலக்கியம் என்பது இப்படி சொந்த காழ்ப்புகளைக் வெளிக்காட்டிக் கொள்ளவா என்ன? இதை எப்படி எதிர்கொள்வது? உண்மையில் தமிழ்நாட்டில் வாழ்வதற்கு அசாத்ய மனவுறுதியும் சமூகத்தைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப் படாத அப்பட்டமான சுயநலப் போக்கும் வேண்டியிருக்கிறது.

மேலும் வா மணிகண்டன் அவர்களது தளத்தில் அந்தச் சிறுகதையின் சில பக்கங்களையும் படித்தேன். என்ன சொல்வது?

சுரேஷ் கோவை.

அன்புள்ள ஜெயமோகனுக்கு,

புலியூர் முருகேசனின் மீதான தாக்குதலைப் பற்றி அறையிலிருந்த
தொலைக்காட்சியில் செய்தி ஓடிக்கொண்டிருந்த போது நான் அதனைப்
பார்த்தும் கவனிக்காமல் விட்டுவிட்டேன். தங்களின் இணையப் பதிவைப் பார்த்தபிறகு அவ்விஷயத்தைப் பற்றி மேலும் இணையத்தில் தேடும் போது இதுகிடைத்தது.

http://www.tamil.chellamuthu.com/2015/02/blog-post_26.html

இதில் ஜாதியைப் பற்றிய குறிப்புகள் இல்லாமலே இருந்தாலும், இதனை ஒருகுறைந்த பட்ச இலக்கியத்தரத்துடனாவது அமைந்துள்ள படைப்பு என்று எப்படிஏற்றுக் கொள்வது என்பது எனக்குப் புரியவில்லை. இணையத்தில் பாலியல்கதைகள் படிக்கும் பழக்கம் இருந்த போது தமிழில் இதைப் போல், இதேநடையுடன் அமைந்துள்ள எக்கச்சக்கமான பாலியல் கதைகளைப் படித்துள்ளேன்.(பிராமணப் பெண்கள் வன்கலவி செய்யப்படுவதைக் கருவாகக் கொண்ட ஓரிருகதைகளும் அடக்கம்)

இதே மாதிரியான விஷயங்கள் சர்ச்சைகளில் சிக்கும் போது பெரும்பாலும் இவைநியாயமான விமரிசனங்களுக்குத் தப்பிப் போகின்றன என்றே நினைக்கிறேன். அதேநேரத்தில் தகுதிக்கு மிகமீறிய கவனம் பெறுகின்றன. ஆரம்பகட்ட வாசகர்கள் இதன் பிரபலத்தைக் கணக்கிற்கொண்டு இதைப் போன்ற படைப்புகளைப் படைத்தால்
இவைதாம் இலக்கியம் என்று நினைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். மிகக்குழப்படியான இலக்கிய சூழலாகவே தோன்றுகிறது.

ஷைன்சன்

அன்புள்ள நண்பர்களுக்கு,

இத்தகைய விஷயங்களை வெவ்வேறு பகுதிகளாகப் பிரித்துக்கொண்டு அணுகுவதே என் வழக்கம். திரு புலியூர் முருகேசனின் எழுத்தின் தரம் அல்லது பெருமாள் முருகனின் எழுத்தின் தரம் வேறு கேள்வி. அது இலக்கியவிமர்சனம் சார்ந்தது. அவரது எழுத்தின்பொருட்டு அவர் தாக்கப்படுவது முற்றிலும் வேறுவிஷயம், அது கருத்துச்சுதந்திரம் மட்டுமல்ல தனிநபர் சுதந்திரத்திற்கு எதிரான தாக்குதல்.

பெருமாள் முருகன் அல்லது முருகேசனின் எழுத்தை தரமற்றது என விமர்சிக்கலாம். நார்நாராகக் கிழித்துப்போடலாம். எந்தப்பிழையும் இல்லை. ஆனால் அவர் அதை எழுதுவதற்காக தண்டிக்கப்படுவதும் அந்த தண்டிக்கும் அதிகாரத்தைச் சாதியக்குழுக்கள் கையிலெடுத்துக்கொண்டிருப்பதும் அதற்கு அரசு இயந்திரமே ஆதரவளிப்பதும் எந்தக்கோணத்தில் சிந்தித்தாலும் சிந்திக்கும் சமூகத்தை பின்னோக்கித்தள்ளுவது மட்டுமே

உண்மையில் பண்பான, ‘தரமான’ எழுத்துக்கு எந்தப் பாதுகாப்பும் தேவையில்லை. அதற்குத்தான் எதிர்ப்பே எழாதே. எதிர்ப்பு எழுவது எப்போதுமே சீணடக்கூடிய, கடுமையான, சற்று அத்துமீறக்கூடிய எழுத்துக்குத்தான்.அந்த எழுத்தையும் ஒரு சமூகம் அனுமதிக்கையில்தான் அது முதிர்ச்சி கொண்டதாக ஆகிறது. அதன் கருத்துச்சுதந்திரம் அப்போதுதான் பேணப்படுகிறது.

அத்தகைய புண்படுத்தும், அத்துமீறும் எழுத்துக்களில் நூற்றில் ஒன்றே உண்மையான சிந்தனையில் இருந்தும், சமூகக் கவலையில் இருந்தும் பிறந்திருக்கும். பிற எழுத்துக்கள் தனிநபர்க்காழ்ப்பில் இருந்தும் பிற உணர்ச்சிகளில் இருந்தும் எழுந்தவையாகவே இருக்கும்.உண்மையில் இப்படி மிகக்கடுமையான எதிர்வினைகளை உருவாக்கும் படைப்புகள் பெரும்பாலும் அடிப்படையில் தரமற்றவையாகவே இருக்கின்றன.அந்த தரமற்ற தன்மையே எரிச்சலை உருவாக்குகிறது. ஆதரவுக்குரல்கள் எவையும் எழாமல் பார்த்துக்கொள்கிறது

ஆனால் அவற்றிலிருந்து தனித்தன்மை கொண்ட சிந்தனையையும், புதியகலையையும் எவர் பிரித்தறிவது? இந்த சாதியக்கும்பல்களிடம் அந்த அதிகாரத்தை கொடுப்பதா? அதன்பின் இச்சமூகம் என்னவாகும்?

மிக எளிமையான விஷயம்தான் இது. இதை புரியவைக்க ஏன் இத்தனை தூரம் பேசவேண்டியிருக்கிறதென்றே எனக்குப்புரியவில்லை. புலியூர் முருகேசனின் ஊருக்கு அருகே இன்னொரு ஊரில் இருந்து டி.எச்.லாரன்ஸ் எழுதிக்கொண்டிருந்தால் அவரும் தெருவுக்கு இழுக்கப்பட்டு தாக்கப்பட்டிருப்பார். அவர் எழுதாமலே போகலாம். அவரது எழுத்தைப்பாதுகாக்க ஒரே வழி நூறு புலியூர் முருகேசன்களை அனுமதிப்பதே.

உதாரணமாக புலியூர் முருகேசனின் இக்குறிப்பிட்ட கதையின் கருவை வைத்து கோமதி என்ற சிறுகதையை கி.ராஜநாராயணன் எழுதியிருக்கிறார். முழுமையான கலைப்படைப்பு அது. அதுவும் தெளிவான சாதி- இட அடையாளத்துடன்தான் உள்ளது. கிரா எழுதவேண்டுமென்றால் புலியூர் முருகேசன் தடுக்கப்படலாகாது. ஏனென்றால் கும்பலுக்கு அவர்களை வேறுபடுத்திப்பார்க்கத்தெரியாது

சிந்தனையையும் கலையையும் மதிப்பிட்டு அனுமதிக்கும் உரிமையை சாதிய ரவுடிக்குழுக்கள் கையிலெடுப்பதுபோல பண்பாட்ட்டுத் தளத்தில் பேரழிவு அளிக்கும் பிறிதொன்று இல்லை. அதை வலுவாகக் கண்டிக்க ஒரு சமூகம் தயங்குவது என்பது சிந்தனைக்கும் கலைக்கும் அது அடிப்படையில் மதிப்பெதையும் அளிக்கவில்லை என்பதையே காட்டுகிறது

அத்துடன், இந்த விவாதங்கள் அனைத்திலும் ஒலிக்கும் ஒரு குரல் உண்டு. அது இலக்கியம் என்றால் என்ன என்றே தெரியாதது. இலக்கியத்தை ‘நல்லுரைகளை சொல்லும் கதை’ என பாடப்புத்தகம் வழியாகப்புரிந்துகொண்டது அது. நிறையவாசிப்பவர்கள்கூட அந்த மனநிலை கொண்டவர்கள். ‘நாட்டுக்கு நல்ல விஷயங்களைச் சொல்லுங்க. இதையெல்லாம் எதுக்கு எழுதணும்’ என மன்றாடிக்கொண்டே இருக்கிறது அது.

இலக்கியம் சிந்தனைத்தெளிவுகளை, நல்லுரைகளைச் சொல்வது அல்ல. அது சமூகத்தின் ஆழ்மனத்திற்கு தன் ஆழ்மனம் வழியாக ஒரு படைப்பாளி சென்று சேரும் பயணம். ஆகவே அது எப்போதுமே , அந்தரங்கங்களை ஊடுருவிச்செல்வதாகவே இருக்கும். அது வெளிப்படுத்தும் உண்மைகள் சமூகத்திற்கு பிடித்தமானவையாக இருக்கவேண்டியதில்லை. சமூகத்திற்கு உதவிகரமானவையாக இருக்கவேண்டுமென்பதுகூட இல்லை. அவை ஆழ்மன உண்மைகள், அவ்வளவுதான்.

அவற்றை சென்று தொடுவதும் மொழியில் வெளிப்படுத்துவதும் மட்டுமே எழுத்தாளனின் கடமை. அவற்றைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டியது சமூகத்தின் பணி. ஆகவே ‘பொறுப்பான எழுத்தாளன்’ என ஒருவன் இருக்கமுடியாது. தன் எழுத்திற்கு ‘பொறுப்பேற்க’ எழுத்தாளனால் முடியாது. அது தான் காணும் கனவை முன்கூட்டியே தணிக்கை செய்வது போல.

அப்படி பொறுப்பாக எழுதும் எழுத்தாளன் என ஒருவன் இருந்தால் அவனிடம் ‘யோவ் போய் வேறுவேலைபாரு, இலக்கியம் உன் வேலை இல்லை’ என்றே சொல்வேன்.இலக்கியத்தின் இந்த அச்சமற்ற தன்னிச்சையான மலர்தலை இத்தகைய சமூகத் தணிக்கைமுறை முற்றாக அழித்துவிடும். புலியூர் முருகேசன் தாக்கப்படுவதென்பது அபூர்வமாக மலரும் அந்த கலைஞனுக்கு, சிந்தனையாளனுக்கு ,படைப்பாளிக்கு எதிரான மிரட்டல். அவனைக் கருவிலேயே கருகச்செய்யும் நஞ்சு. ஆகவேதான் அது வன்மையாகக் கண்டிக்கவேண்டியது

விவாதங்களில் இந்த எல்லை வரை வந்ததுமே ‘இலக்கியமும் வேண்டாம் ஒரு மண்ணும்வேண்டாம். சமூகம் அமைதியா இருந்தாப்போரும்’ என ஒரு குரல் ஒலிக்கும். உண்மையில் அதுதான் பிரச்சினை. இந்த மூடச்சமூகத்திற்கு இலக்கியம் என்றல்ல எந்த நுட்பமான விஷயங்களும் தேவையில்லை. அதைத்தான் ‘நாங்க நல்லாருக்குன்னு நினைக்கிறதயே எங்களுக்கு மறுக்கா சொன்னா நல்லாருக்குன்னு சொல்வோம்ல?’ என்று கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.

ஜெ

முந்தைய கட்டுரைசூரியதிசைப் பயணம் – 19 நிலம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 35