இனிய ஜெயம்,
என் வாழ்வின் இனிய தருணங்கள் பலப் பல. அவற்றில் தலையாயது எங்கேனும் பொது இடத்தில் உங்களை அதுவரை நேரில் காணாமல் எழுத்து வழியாக மட்டுமே உங்களை அறிந்து என்னைக் கண்டதும் உங்களைக் குறித்து வார்த்தை சிக்காமல் ததும்பி தவித்து பேசும் புதிய வாசகர்கள்.
ஒரு புத்தக சந்தையில் டேவிட் என்றொரு இருபது வயது இளம் நண்பரை சந்தித்தேன். பாபநாசம் ஊரில் சற்றே படிப்பும் பொருளாதாரமும் பின் தங்கிய சூழலில் வாழ்பவர். நெல்லைக்குரிய பாஷையில் மழலையாக பேசுவார். அவர்க்கு உங்களை தொடர்ந்து வாசிக்கும் சங்கர் என்ற நெல்லையை சேர்ந்த நண்பர் உங்கள் நூல்களை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்.
எங்கிகிருந்து வாசிப்பை துவங்குவது என்ற டேவிட்டின் கேள்விக்கு நவீனத் தமிழ் இலக்கியம் துவங்கி அடிப்படையான ஐந்து நூல்களை அறிமுகம் செய்தேன். பல மாதம் கழித்து. நேற்று இரவு பத்து மணிக்கு போன். டேவிட். அண்ணே எல்லாத்தையும் படிச்சுட்டேன். ஆமா இந்த புயலிலே ஒரு தோணி எந்த பதிப்பகம் என்று துவங்கி ஒரு மணி நேரம் பேசித் தள்ளினார். விதி சமைப்பவர்கள் நூல் அவருக்கு நிரம்ப பிடித்து விட்டது. அப்பாவின் தாஜ்மகால் குறித்து உருகி கலங்கி தவித்தெல்லாம் பேசினார்..
கிராமத்து வெகுளித்தனம் நீங்காத இளைஞர். நான் உங்களை உங்கள் வீட்டுக்கு வந்து பார்ப்பேன் என்று சொன்னதும், நிஜமாவன்னே நிஜமாவான்னே என்று பத்து முறையாவது கேட்டிருப்பார் .இனிய மனிதர்.
உங்கள் இல்லம் தேடி, காஷ்மீர் கம்பளி பரிசுடன் ஒரு நண்பர் வருகிறார். அன்று அருண்மொழி அக்கா உடல்நலம் குன்றி இருந்தமையால், உங்களால் அவர்களுடன் தரிக்க இயலவில்லை. நண்பர் வெறுமை கொண்டு திரும்புகிறார். உங்கள் கட்டுரை ஒன்றில் வரும் சம்பவம் இது. இந்தக் கட்டுரை பேசும் நண்பர்தான் டேவிட்டுக்கு உங்கள் எழுத்தை அறிமுகம் செய்த நெல்லை ஷங்கர்.
நண்பர் ஷங்கர் அவர்களையும் சந்தித்திருக்கிறேன். அன்றைக்கு தான் உங்களை முதலும் கடைசியுமாக பார்த்திருக்கிறார். அன்று மிகுந்த தயக்கத்துக்குப் பிறகே உங்களை சந்திக்க வந்திருக்கிறார்.அன்றைய நாள் குறித்து அவருக்கு எந்த வருத்தமும் இல்லை. உங்கள் எழுத்துக்கள் மேல் மாளாக் காதல் கொண்டு தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கிறார். இப்போ பாக்க வரலாமே என்ன தயக்கம் என்று கேட்டேன். இல்ல அன்னைக்கு அவர் என் கூட இருந்த மாதிரி இருந்தது. இன்னைக்கு அவர் என்னால் தொட முடியாத உயரத்துல இருக்குற மாதிரி இருக்கு. போதும் எனக்கு அவர் எழுத்துக்கள் மட்டுமே போதும். என்றார்.
இனிய ஜெயம் இத்தகு நிலைகள் அளிக்கும் உன்மத்தம் சொல்லில் கடத்த இயலாது. உங்களை ஒரு பொதும் தொடர்பு கொள்ளாத உங்களின் அணுக்க வாசகர்கள் பல நூறு பேர் வெளியில் இருக்கிறார்கள்.
வித வித வாசகர்களில் முருகவேலன் தனித்துவமானவர்,ஆடியின் அனல் தொட்டு முருகவேலன் எழுதிய உன்மத்த வரிகள் வாசித்தேன். ஒரு எழுத்து என்ன நிகழ்த்த வேண்டுமோ அது அவரிடம் நிகழ்ந்திருக்கிறது. அகல் தொட்டு ,அகல் தொட்டு சுடர் ஒளி துளிர்த்துப் பரவுவது போல, உங்கள் எழுத்து அதன் படைப்புத் திறன் ஒவ்வொருவருக்குள்ளும் நுழைந்து தூண்டி விடுகிறது. முருகவேலனைக் கண்டால் சக வாசகனாக செல்லமாக தோளில் தட்ட வேண்டும்.
கடலூர் சீனு