தமிழில் சிறுவர் இலக்கியம் திருப்திபடக்கூடிய அளவிற்கு உள்ளதா?
— ஹரன்பிரசன்னா.
பொதுவாக இம்மாதிரிக் கேள்விகள் கேட்கப்படுகையில் அறிவுஜீவிகள், இல்லை என்ற பதிலை சோகமாகவோ வேகமாகவோ சொல்வதுதான் வழக்கம். அவர்களுக்கு உயர்ந்த மதிப்பீடுகளைக் கொண்ட நுட்பமான ஆள் என்ற படிமம் கிடைக்கிறதே. ஆனால், “சரி, இதுவரை வெளிவந்தவற்றைப்பற்றிய ஒரு முழு மதிப்பீட்டை சரியான தகவல்களுடன் கொடு பார்ப்போம்” என்றுகேட்டால் பதில் இருக்காது. நாடகம், திறனாய்வு, கல்வித்துறைஆய்வு எதைப்பற்றியானாலும் இதுதான் நிலை. இங்கே எதையும் கூர்ந்து படிக்க, குறைந்தபட்சம் கவனிக்க ஆளில்லை. ஆனால் மட்டம்தட்ட ஒவ்வொரு ஊரிலும் மேதைகள் உலவுகிறார்கள். ‘இலக்கியவாசகமேதை’ களைக் கொஞ்சம் கட்டுக்குள் கொணர வேண்டிய காலம் வந்துவிட்டது.
தமிழில் சிறுவர் நூல்கள் ஏராளமாக வருகின்றன. அவற்றின் தரம் மற்ற நூல்களைப் போலவே பலவகையானது. சோவியத் பதிப்பகங்கள் போட்ட சிறுவர் நூல்கள் அற்புதமானவை. நான் நிறையச் சேர்த்து என் பிள்ளைகளுக்குக் கொடுத்தேன். பேரழகி வசீலிசா, சோவியத் நாட்டுப்புறக்கதைகள், ஓவியனின் கதை போன்ற நூல்களின் அச்சும் ஓவியங்களும் மகத்தானவை. அவை இங்கே தேங்கிக்கிடந்து பாதிவிலை கால்விலைக்கு விற்றன.
தேசியக் குழந்தைகள் புத்தக நிறுவனம், தேசிய பிரசுரப் பிரிவு மற்றும் சாகித்ய அகாதமி வெளியீடுகளாக 15 முதல் 30 ரூபாய் விலைகளில் ஏராளமான குழந்தை நூல்கள் மிக அழகிய கட்டமைப்புடன் வந்துள்ளன. பெரும்பாலான என்.சி.பி.எச் கடைகளில் கிடைக்கின்றன. இவ்வாரம் நாகர்கோவில் என்.சி.பி.எச் புத்தகக் கண்காட்சியில் சைதன்யாவுக்கும் அஜிதனுக்கும் 20 நூல்கள் வாங்கினேன்.
என் நண்பர் எம்.கெ.சந்தானம் தேசிய பிரசுரப் பிரிவில் ஆசிரியர். அவர்கள் வெளியிடும் குழந்தை நூல்கள் எல்லா மொழிகளிலும் வருகின்றன. தமிழில் வெளிவருவதைவிட முப்பது மடங்கு அதிகம் பிரதிகள் ஆங்கிலத்தில் வெளிவருகின்றன. அவை வருடம் இருபதிப்புகள் வரை வரும்போது தமிழில் ஒருபதிப்பு விற்றுப்போக நான்கு வருடங்கள் வரை ஆகின்றன. இம்முறை சைதன்யாவுக்கு வாங்கிய பல நூல்கள் 6 ரூபாய் விலைகொண்ட 1995ம் வருடப் பதிப்புகள்!
தமிழ்நாட்டில் பெற்றோர் குழந்தைகளுக்குத் தமிழ்நூல்கள் வாங்கி அளிப்பதேயில்லை. நூல்கள் வாங்கப் பணம் செலவுசெய்யும் நிலையிலுள்ள பெற்றோரின் குழந்தைகள் ஆங்கிலவழிக் கல்வியிலேயே படிக்கும். பெற்றோரும் பள்ளியும் ஆங்கில வாசிப்பையே ஊக்கமூட்டுகின்றனர். வாசிப்பு ஆங்கில மொழியறிவை வளர்க்கும் என்பது பொதுவாகச் சொல்லப்படும் காரணம்.
என் நண்பர் ஜீவா சொன்ன நிகழ்ச்சி. ரயிலில் போகும்போது அவரது பெண் என் ‘பனிமனிதன்’ நாவலைப் படித்துக் கொண்டிருந்தாள். எதிரே உட்கார்ந்திருந்த ஒரு மருத்துவர் அதை ஜன்னல் வழியாக வெளியே போடு, உனக்குப் பரிசு தருகிறேன் என்றாராம். அவர், ‘பாடநூல் தவிர எதையுமே படித்தது இல்லை. ஆகவேதான் டாக்டர் ஆகமுடிந்தது. புத்தகம் படிப்பது கெட்டபழக்கம்’ என்றாராம். ஜீவா அதைச் சாம்பல் இதழில் ஒரு படக்கதையாக எழுதினார். அக்குழந்தை ஆங்கில நாவல்- எனிட் ப்ளைட்டன்- படித்திருந்தால் அம்மனிதர் அப்படிச் சொல்லியிருக்கமாட்டார்.
ஆனால் பிள்ளைகளுக்குத் தமிழ் படிக்க ஆர்வம் இருக்கிறது, காரணம் அது அவர்கள் பேசிப்புழங்கும் மொழி. அப்பா அம்மாவுக்குத் தெரியாமல் ஒளித்துப் படிப்பார்கள். தமிழில் இன்று ஆறு நாளிதழ்கள் இலவச இணைப்பாகக் குழந்தைகள் இதழை அளிக்கின்றன. மொத்தப் பிரதி 20 லட்சம். இது சாதாரண விஷயமல்ல. ஆம், குழந்தைகள் படிக்கின்றன. இலவசமாக வெளியிடப்படுவதனால் அவற்றுக்கு நூல்கள் கிடைக்கின்றன. பணம் தந்து எவரும் வாங்கி அளிப்பது இல்லை. மேலும் இன்றைய கல்வியின் பயங்கரமான போட்டியும் கெடுபிடியும் படிக்கக் கூடிய நேரத்தையும் மனநிலையையும் குழந்தைகளுக்கு அளிப்பது இல்லை. அதையும் மீறி அவை படிப்பது ஆச்சரியம்தான். ஆனால் அவ்வெழுத்தின் தரத்தை அதிகரிக்க வேண்டியுள்ளது. அதற்குத் தடையாக இருப்பது இதழ்களை நடத்துபவர்களின் மனநிலையே. குழந்தை இதழ்கள் இன்னும் மாயஜாலம், சில்லறை நகைச்சுவை ஆகியவற்றாலேயே நிரப்பப்படுகின்றன.
ஆகவேதான் நான் தினமணி சிறுவர் மணி இணைப்பில் பனிமனிதன் நாவலை எழுதினேன். அறிவியல்பூர்வமாக திட்டமிடப்பட்ட குழந்தைகள் நாவல் அது. 8 வார்த்தைகளுக்கு மிகாத சொற்றொடர். மொத்தம் 100 சொற்களுக்கு மிகாத மொழி. கண்டிப்பாக அது எளிய நாவல் அல்ல. அறிவியலும் தத்துவமும் அதில் உண்டு. என் கனவும் என் அழகுணர்வும் அதில் உள்ளது. மிகப்பரவலான வாசிப்பு அதற்குக் கிடைத்தது. சிறுவர்மணி ஆசிரியராக இருந்த மனோஜ்குமாரின் ஆர்வத்தாலேயே அதை எழுத முடிந்தது. அப்படி ஆர்வத்துடன் பிறர் எழுத வைப்பது இல்லை. மேலும் எழுத நினைத்திருக்கிறேன். சா.தேவதாஸ், ராஜம் கிருஷ்ணன் போலப் பலர் குழந்தை இலக்கியங்களை எழுதியிருக்கிறார்கள்.
ஆனால் பனிமனிதன் நூலாக வந்தபோது பரவலாக வாங்கப்படவில்லை. பள்ளி நூலகங்களில் சென்று முடங்கிவிட்டது. ஆகவே நூல்களாக தமிழில் சிறுவர் இலக்கியம் எழுதுவது வீண். இதழ்களிலேயே எழுதவேண்டும்.
ஒட்டுமொத்தமாக இப்படிச் சொல்லலாம். நல்ல நூல்கள் உள்ளன. குழந்தைகளுக்கு ஆர்வமும் உள்ளது. ஆனால் நாம் குழந்தைகளைக் கணிப்பொறியுலகுக்கு மனிதமென்பொருட்களாக மாற்றும் தீவிரத்தில் இருக்கிறோம். ஆகவே சிறுவர் இலக்கியத்துக்கு நம் சமூகத்தில் இப்போது இடமில்லை.