சூரியதிசைப் பயணம் – 13

கோகிமாவிலிருந்து நீண்ட நெடும்பயணம் வழியாக மணிப்பூருக்குள் நுழைந்தோம். நாகாலாந்து முழுக்க கடுமையான ராணுவக்காவல் இருந்தது கூடவே ஒருவகை செல்வச் செழிப்பையும் காணமுடிந்தது. ஆனால் மணிப்பூரில் ராணுவக்காவல் மட்டும்தான். செழிப்பு இல்லை. மணிப்பூர் எல்லையில் எங்கள் வண்டியை நிறுத்தி விரிவாகச் சோதனையிட்டார்கள். அனுமதிச்சீட்டு வாங்கியிருந்ததைப் பரிசீலித்தார்கள்
17a

மணிப்பூரின் சாலைகள் பெரும்பாலும் வெறிச்சிட்டே கிடந்தன. இப்போதுதான் சாலை போட ஆரம்பித்திருக்கிறார்கள். ஆகவே குண்டும் குழியுமான சாலை. மணிப்பூரில் இப்போது 37 ஆயுதம்தாங்கிய சிறிய குழுக்கள் உள்ளன ஒவ்வொன்றும் ஒவ்வொரு இனக்குழுவுக்குரியது. ஒவ்வொன்றிலும் அதிகம்போனால் நூறு உறுப்பினர்கள் வரை உள்ளனர். அவர்களிடம் பர்மாவில் வாங்கப்பட்ட ருஷ்ய ஆயுதங்கள் உள்ளன. சீனாவும் அவர்களுக்கு ஆயுதம் அளிக்கிறது. அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்கிறார்கள் கூடவே வழிப்பறி, ஆள்கடத்தல் மற்றும் கொள்ளையில் ஈடுபடுகிறார்கள். ஆகவே இங்கே இரவு ஏழுமணிக்குமேல் மக்கள் நடமாட்டம் என்பதே இல்லை

துரதிருஷ்டவசமாக நாங்கள் மணிப்பூர் எல்லையைக் கடந்தபோதே மணி ஐந்து. இருட்டு கவிந்துகொண்டிருந்தது. எங்களை விசாரித்த காவலதிகாரி நாங்கள் செல்லவேண்டிய ஐம்பது கிமீ தூரம்தான் மிகமிக அபாயகரமானது என்றார். எங்கள் வண்டி மதிப்புமிக்கது. அது பிடுங்கப்படலாம். “சமீபகாலமாக பெரிய நிகழ்ச்சிகளேதும் இல்லை.தைரியமாக போங்கள்” என்றார். திருவனந்தபுரத்துக்காரரான ஒரு மலையாளி அங்கே எல்லைப்பாதுகாப்புப்படையில் இருந்தார். இம்பால் செல்லும்வரை எதுவுமே கிடைக்காது என்றார்.
17b

ராணுவவீரர்கள் ஓட்டுநரை அழைத்து ஏராளமான ஆலோசனைகளையும் ஆணைகளையும் வழங்கினர். அழைக்கவேண்டிய எண்களை அளித்தனர். அதுவே எங்களுக்குத் அச்சமூட்டியது. ஓட்டுநர் மணிப்பூருப்புப்புதியவர். இளைஞராக இருந்தாலும் அச்சம் கொண்டு தலையசைத்தபடியே இருந்தார்

காஷ்மீரில் சென்றது போல ஒரு திகில் பயணம். சாலை என ஏதும் இல்லை. கார் அலைகளில் படகு போலச் சென்றது. பெரும் புழுதிப்படலம். முழுமையான தனிமை. இரு பக்கமும் அடர்ந்த காட்டின் அமைதி. மிகமெல்லத்தான் செல்லமுடிந்தது. புதியகார். ஏதேனும் காரணத்தால் கார் ஓடாமலாகிவிட்டிருந்தால் பெரிய சிக்கல். அச்சமும் கூடவே ஒரு மனக்கிளர்ச்சியும் ஓடிக்கொண்டிருந்தது.

இரவு ஒன்பது மணிக்கு இம்பால் சென்று சேர்ந்தோம். நகரத்தின் கார்களைப் பார்த்தபின்னர்தான் பெருமூச்சு வந்தது. ஒரு விடுதியில் அறை எடுத்தோம். வழக்கம்போல நாங்கள் மிகமிகக் குறைவான செலவில்தான் அறை எடுத்துக்கொண்டோம். கார் நிறுத்த இடமில்லை. எங்கள் ஓட்டுநர் காரை சாலையில் நிறுத்தவே மாட்டேன் என்று சொல்லிவிட்டார். இம்பால் இரவில் அபாயமானது என்றார். பல கோணங்களில் பேசி முடித்தபின் ஓட்டுநரையும் காரையும் தன் வீட்டில் நிறுத்திக்கொள்ள உரிமையாளர் ஒப்புக்கொண்டு கூட்டிச்சென்றார்

இரவில் நகரம் முழுமையாகவே அடங்கியது. மொத்த நகரமும் ராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குச் சென்றது. இரவில் இடியுடன் மழை பெய்தது. தகரக்கூரை ஓலமிட்டதனால் விழித்துக்கொண்டேன். சன்னல் வழியாகப்பார்த்தால் அந்தக் கடும்குளிரிலும் சாலையில் ராணுவ வீரர்கள் காவலிருந்தனர். சன்னல் திறக்கப்பட்டபோது டார்ச் அடித்து பார்த்தனர். டார்ச் ஒளியை பாய்ச்சியபடி சுற்றி வந்தனர். அந்த ராணுவ வீரராக என்னைக் கற்பனைசெய்துகொண்டபோது வருத்தமாகவே இருந்தது.
17d
மறுநாள் காலையில் எழுந்ததும் இம்பால் அருகே உள்ள லோக்தக் என்ற ஏரியைப் பார்க்கசென்றோம். இந்தியாவின் மிகப்பெரிய நன்னீர் ஏரிகளில் ஒன்று இது. பற்பல கிராமங்களை கரைகளாகக் கொண்டு விரிந்து கிடக்கும் இந்த ஏரியைப்பற்றி விசாரித்தால் எவருக்குமே தெரியவில்லை. ஏனென்றால் அதற்கு ஒவ்வொரு ஊரிலும் ஒரு பெயர். ஒருவழியாக விசாரித்து அதை அடைந்தோம்

முதலில் அதை ஏரி என்றே சொல்லத்தோன்றவில்லை. பிரம்மாண்டமான சதுப்பு நிலம் என்ற எண்ணம்தான் வந்தது. ஏனென்றால் மறுகரை தெரியாதபடி நீர் தேங்கியிருக்க நீர்வெளிக்குள் அருகருகாக நூற்றுக்கணக்கான பச்சைத்தீவுகள். ஏரிக்கு நடுவிலேயே சாலை சென்றது. சாலை வழியாகவே ஏரியைச் சுற்றி வந்தோம். லோக்தக் ஏரி மிக முக்கியமான பறவைச் சரணாலயம். ஆனால் அப்போது சைபீரிய நாமக்கோழிகள் தவிர வேறு பறவை இல்லை
17f
நாணல் அடர்ந்த அந்த சிறிய தீவுகள் பறவைகள் பாதுகாப்பாக முட்டையிட உகந்தவை. பல ஊர்களில் அரசே அவற்றை உருவாக்கியிருக்கிறது. இங்கும் அவற்றை உருவாக்கியிருக்கலாமோ என்ற எண்ணம் வந்தது. தீவுகளை இணைத்து வலைகளைக் கட்டி மீன்களை வளர்த்தனர். ஆழமற்ற பகுதிகளில் வலைவளைப்புக்குள் வாத்துக்கள் இருந்தன.

லோக்தக் ஏரியைச்சுற்றி வீடுகள் செறிந்திருந்தன. அந்த ஏரியே அவர்களின் வாழ்வாதாரம். தகரக்கூரையிடப்பட்ட சிறிய வீடுகள். மூங்கில்தட்டிச்சுவர்கள். சிறிய திண்ணைகள். மக்கள் பெரும்பாலும் வைணவர்கள். மூக்கிலிருந்தே சந்தனத்தில் நீளமாக நாமம் போடும் வழக்கம் உள்ளது. சந்தன மூக்கு அவர்களின் பொன் மஞ்சள் நிறத்திற்கு மிக அழகாக தெரிந்தது.
17g
சாலைகளில் தெரிந்த பெரும்பாலான பெண்கள் அழகிகள் என்பதை போல ஒரு பரவசமூட்டும் அனுபவம் பிறிதில்லை. மஞ்சள் இனக்கலப்பின் விளைவான பொன்னிறம். பருமன் ஆகாத கொடியுடல். கூரிய விழிகள். இங்கே பெண்கள் பெரும்பாலும் செந்நிறமான டி ஷர்ட்டும் ஜீன்ஸும் அணிகிறார்கள். அல்லது லெக்கின்ஸ். நவீன உடையணிந்த பெண் மீன்கூடை தூக்கிச் செல்வதை காணமுடியும். கூந்தலில் வண்ணம் பூசிக்கொள்வதும் லிப்ஸ்டிக் அணிவதும் அனைவருமே செய்வது

முதுகில் கட்டப்பட்ட கம்பிளிக் கம்பளதோள்களில் குழந்தைகளை ஏந்திச்செல்கிறார்கள். பெரும்பாலான அன்னையர் தோள்களில் குழந்தைகள் இருக்கின்றன. குழந்தைகளை நம்மூரில் பெரும்பாலும் வீடுகளில் விட்டுச்செல்வதனால் வெளியே அவை தென்படுவதில்லை. இங்கே குழந்தைகள் எப்போதும் கண்ணில்படுகின்றன. சிறிய மூக்கும் இழுபட்ட சிறிய கண்களும் கொழுத்த கன்னங்களும் கொண்ட மஞ்சளினக்குழந்தைகள். அவை அன்னையுடன் இருப்பதனால் அழுவதில்லை. வேடிக்கை பார்த்தபடி விழிமலர்ந்து அமர்ந்திருக்கின்றன
17i

ஏரியைச்சுற்றி மூன்றுபக்கமும் உயரமற்ற களிமண் குன்றுகள். குன்றுகளுக்கும் ஏரிக்கும் நடுவே தான் வீடுகள். ஒவ்வொரு வீடும் ஒன்றுடன் ஒன்று இடித்துக்கொண்டு நிற்கின்றன. குன்றுகளின் ஒன்றின்மேல் ஏறி அங்கிருந்து ஏரியை பார்த்தோம். பல பகுதிகளாக சென்றுகொண்டே இருக்கும் ஏரி அது. இன்று இந்த ஏரி மூன்று பெரும் பகுதிகளாக நடுவே ஒடும் சலைகளால் பிரிக்கப்பட்டுள்ளது.ஏரி முழுக்க பலநூறு தீவுகள். விழிதொடும் இடம் வரை தீவுகள்தான். ஒரு ஆள் கைவிரித்து நிற்கும் அளவு சிறியவை. ஒரு ஏக்கர் அளவு பெரியவை.

கீழே வந்து அந்த சிறிய வீடுகளின் வழியாக காரில் சுற்றி ஒரு படகுத்துறையை அடைந்தோ. ஏரிக்குள் படகில் செல்ல 700 ரூபாய். காலையில் எங்களைத்தவிர பயணிகளே இல்லை. ஒரு மணிநேரம் கையால் துழாவி இருவர் எங்களை ஏரிக்குள் கொண்டு சென்றார்கள். ஏரிக்குள் சென்றதுமே கடுமையான குளிர். தீவுகள் காரணமாக நீர் ஆழமில்லாதது என்ற எண்ணம் இருந்தது. அத்துடன் ஆங்காங்கே கொடிகள் நடப்பட்டிருந்தன. ஆனால் நீர் பல இடங்களில் இருபதடி ஆழம். நீரை துடுப்புகள் தள்ளும் ஒலி. படகு என்றால் சாதாரண படகு இல்லை. இரு படகுகளை பலகைகளால் இணைத்து மேலே கூரை யிட்டு நாற்காலிகள் போட்டிருந்தனர். தெப்பம் போல.
17m
நாமக்கோழிகள் நீர்வெளியெங்கும் நிரம்பி மிதந்து கொண்டிருந்தன. அருகே நெருங்கும் வரை அவை பொருட்படுத்துவதில்லை. ஒரு புள்ளியில் ஒரு பறவை நம்மைக் கண்டுகொண்டு எழுந்து பறக்கத்தொடங்குகிறது. தொடர்ந்து அத்தனை பறவைகளும் எழுந்து சிறகடித்து செல்கின்றன. ஏரியின் முந்தானை பறப்பது போல.

ஏரிக்கு நடுவே உள்ள தீவில் இறங்கலாம் என்றார் ஓட்டுநர். இறங்கும்போதுதான் கவனித்தோம், தீவு மிதந்துகொண்டிருந்தது. அது மண்ணால் ஆன தீவு அல்ல. தாவரங்களால் ஆன தீவு. உலகில்ன் மிகமிக அபூர்வமான ஒரு சூழியல் அமைப்பு இது. நூற்றாண்டுகளாக நீர்மேல் வளர்ந்த களைகளின் மட்கல் அடர்ந்து ஒரு மிதக்கும் தெப்பமாக ஆகி அதன்மேல்தான் நாணல்ர்கல் வளர்ந்துகொண்டிருக்கின்றன. எல்லா தீவுகளும் மிதந்து அலைபவைதான்

திகைப்புடன் நின்றோம். உண்மையிலேயே காவேரியில் மூங்கிலால் ஆன பரிசலின் மேல் நிற்பதுபோலத்தான் இருந்தது. ஓங்கி மிதித்தால் ஓட்டை விழுந்து நீர் ஊறத்தொடங்கியது. அங்குள்ள நாணல்கள் தண்டுகள் இலைகள் அனைத்துமே உள்ளீடற்றவை, நீரில் மிதப்பவை. அதில் நின்றிருப்பது தொடர்ந்து நம் உணர்வுகளைச் சீண்டிக்கொண்டே இருக்கும். காலடியில் நிலமில்லாமல் வாழமுடியாத உயிரினங்கள் நாம்.

லோக்தக் ஏரியை ஒருமணிநேரம் படகிலேயே சுற்றிவந்தோம். அந்த தீவுகள் மிதப்பவை என்று தெரிந்தபின்னர் அக்காட்சியின் பொருளே மாறிவிட்ட விந்தையை எண்ணிக்கொண்டேன்.முன்பு ஆழமற்ற சதுப்புநிலமாகத் தோற்றம் அளித்தது இப்போது ஆழமான, அபாயகரமான, மர்மமான ஒரு நீர்வெளியாகத் தோற்றம் அளித்தது. தீவுகளை மூங்கில் ஊன்றி ‘கட்டிப்போட்டிருந்தனர்’. ஒருவகை பசுமாடுகள், நீரில் மேய்கின்றன என நினைத்துக்கொண்டேன்ன்

17l
லோக்தக் ஏரி மணிப்பூரின் முக்கியமான பொருளியல் ஆதாரம். நூற்றுக்குமேற்பட்ட சிறிய செம்படவக்கிராமங்கள் இங்கே உள்ளன. லோக்தக் நீர்மின்சார நிலையம் இதிலிருந்து வழிந்தோடும் நீரை நம்பி இயங்குகிறது. லோக்தக் ஏரியின் விளிம்புகளில் நிகழத்தொடங்கியிருக்கும் நன்னீர் இறால் வளர்ப்பும் அதன் சூழியலை அழித்துக்கொண்டிருக்கிறது. உலகின் அபூர்வமான சூழியல் அமைப்பான இதைப்பாதுகாக்க யுனெஸ்கோ முயற்சி எடுத்துவருகிறது.

லோக்தக் மிக வேகமாக பாழடைந்து வருகிறது. ரசாயன உரம் நீரில் கலப்பதனால் ஏற்கனவே களை மிகுந்த ஏரியில் பலவகை களைகளும் பாசிகளும் பல்கிப்பெருகுகின்றன. கேரளம் முழுக்க ஏரிகளைப்பாழ்படுத்திய ஆப்ரிக்க வரவான முட்டைப்பாசி இங்கும் கனத்து மூடியிருக்கிறது. பெரிய இயந்திரங்களால் முட்டைப்பாசியை அள்ளிக்குவித்துக் கொண்டிருக்கிறார்கள். சாலையோரமாக மூன்று ஆள் உயரத்துக்கு அள்ளிக்குவிக்கப்பட்ட களைகள் குவிந்து சாணிமலைகள் போல கிடக்கின்றன.

லோக்தக்கில் இருந்து திரும்பும் வழியில் இங்கிருந்து ஒரு நண்பர் வழியாக தெரியவந்த ஜீவன் தொலைபேசியில் அழைத்தார். அருகே உள்ள சிறிய ஊரின் சாலையில் நின்று அவருக்காக காத்திருந்தோம். அவர் வந்ததும் எங்களை தன் இல்லத்திற்கு அழைத்துச்சென்றார். பக்கோடாவும் டீயும் தந்து உபசரித்தனர்

ஜீவன் மணிப்பூர்க்காரர் என்றாலும் நம்மூர் போல கரிய நிறமுடையவர். அவரது மனைவி டெல்லி நாடகப்பள்ளியில் பயின்றவர். அங்கே ஒரு நாடகக்குழு நடத்திவருகிறார். நம்மூர் நாடக- சினிமா நடிகர் ஷண்முகராஜன் அவரது சகமாணவர் என்றார். அவரது மனைவியும் இரு குழந்தைகளும் மங்கோலியச் சாயல் கொண்டவையாக இருந்தனர்.

இளையவனாகிய பினாயக் எட்டுமாதம். சீனாவிலிருந்து நேரடியாக வந்து பிறந்தது போன்ற தோற்றம். சிறிய கண்கள், ரத்தச்சிவப்பு உதடுகள், மூக்கில்லாத உருண்டை முகம். கையில் எடுத்து வைத்துக்கொண்டேன். மணமே வேறுமாதிரி இருப்பதாகத் தோன்றியது. மணிப்பூரின் இனக்கலப்புத்தன்மைக்கு இந்தக்குடும்பமே மிகச்சிறந்த உதாரணம்

ஜீவன் மணிப்பூரின் அரசியல் பற்றி சொல்லிக்கொண்டே இருந்தார். இனக்குழுச்சிக்கல் என்பதே மணிப்பூரின் உண்மையான பிரச்சினை. இந்தியாவின் மற்ற இடங்களில் உள்ள சாதிப்பிரச்சினைக்கு நிகரானது. ஆனால் இனக்குழு என்பது மிகத்தனித்த உடல்கூறு அடையாளமும் பண்பாடும் கொண்டது. ஆகவே அவர்கள் பொதுவாக ஒன்றிணைவது மிகக்கடினம். அந்த வேறுபாடுகளை ஜனநாயகமும் பொதுவான அதிகார அரசியலும் இணைக்கமுடியும், பிற பகுதிகளில் நிகழ்ந்ததுபோல. ஆனால் அதை வளர்க்கவும் தூண்டிவிடவும் ஆயுதம் அளிக்கவும் அன்னிய சக்திகள் முயலுமென்றால் மேலும் மேலும் சிக்கலாகிக்கொண்டேதான் செல்லும்.

மணிப்பூரின் தீவிரவாத அரசியலை நவீன தொழில்நுட்பமும் பொருளியல் மாற்றமும் ஓரளவு மாற்றிவிட்டிருக்கின்றன என்றாலும் சிறிய போராளிக்குழுக்கள் இன்றும் பெரிய சவாலாகவே உள்ளன. அவை ஆயுதமேந்தியவை என்பதனாலேயே அவற்றால் வணிகர்களையும் தொழிற்சாலைகளையும் எளிய மக்களையும் மிரட்ட முடியும். அரசு, ராணுவம் போன்றவை அந்த மிரட்டலை எதிர்கொள்வது கடினம். தொடர்ச்சியான கண்காணிப்பு மட்டும்தான் சாத்தியம்.
17k
இந்த தீவிரவாத அரசியல் இன்றும் நீர்டிப்பதனால்தான் மணிப்பூரின் பொருளியல் தேங்கிக்கிடக்கிறது. அதை இந்தியாவின் பிறபகுதிகளுடன் இணைக்கும் லாரிப்போக்குவரத்து வளரவில்லை. ஆகவேதான் மணிப்பூரின் இளைஞர்கள் வேலைதேடி இந்தியாவெங்கும் சென்றுகொண்டிருக்கிறார்கள். வடகிழக்கில் மணிப்பூர், திரிபுரா மாவட்ட இளைஞர்களைத்தான் நாம் தமிழகத்து ஓட்டல்களில் பார்க்கிறோம்.

எல்லா வளங்களும் இருந்தும் அதைவிட பத்து மடங்கு வங்காள இளைஞர்கள் வேலைதேடி இந்தியாவெங்கும் செல்கிறார்கள். மணிப்பூர் மக்கள் அடித்தள வேலைகளுக்கு வருவதில்லை. வங்காளிகள் கட்டிடத்தொழிலாளிகளும் செங்கல்சூளை கொத்தடிமைகளுமாகவே தென்னகத்திற்கு வருகிறார்கள். தீவிரவாத அரசியலை விட இடதுசாரி அரசியல் அழிவுத்தன்மை மிக்கது போலும். திரிபுராவிலும் தீவிரவாதம் இல்லை. மார்க்ஸிய கம்யூனிஸ்டுக்கட்சியே தொழில்வளர்ச்சி இல்லாமல் பார்த்துக்கொள்கிறது.

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 28
அடுத்த கட்டுரைஇயல்-கடிதங்கள்