கும்பமேளா – 1

சென்ற ஏப்ரல் பத்தாம் தேதி காலை 11 மணிக்கு சென்னையில் இருந்து நானும் நண்பர்களும் டெல்லிக்கு விமானத்தில் கிளம்பினோம்.  வசந்தகுமார், யுவன் சந்திரசேகர், அரங்கசாமி ,அருண் மற்றும் ஈரோட்டில் இருந்து கிருஷ்ணன். நான் ஒருநாள் முன்னதாகவே வந்து  சென்னையில் தங்கியிருந்தேன். சில சினிமா சந்திப்புகள். மற்றவர்கள் பத்தாம் தேதி காலையில்தான் வந்து சேர்ந்தார்கள். அனைவருமாக கிளம்பி மீனம்பாக்கம் சென்றோம். நான் அங்காடித்தெரு மனநிலையில் இருந்து முழுமையாக விலகியது விமானநிலையம் வந்த பின்னர்தான். அதுவரை தொலைபேசி அழைப்புகள் வந்து கொண்டே இருந்தன. காதில் குத்தல் வலி எடுக்கும் அளவுக்கு. மீனம்பாக்கம் வந்ததும் அங்காடித்தெரு குழுவினரிடம் கடைசியாக பேசிவிட்டு செல்ஃபோனை அணைத்துவிட்டேன்

விமானத்தில் நான் பசியுடன் இருந்தேன். ஆகவே ஒரு சிக்கன் ரோல் சாப்பிட்டேன். எல்லாவற்றுக்கும் பணம் தனியாகக் கொடுக்க வேண்டும். அது ஒரு தொல் பொருள். எனக்கு வயிற்றுக்குள் ஒரு போராட்டமே ஆரம்பித்தது. கிருஷ்ணன் வாந்தி எடுத்துவிட்டார். மதியம் இரண்டரை மணிக்கு டெல்லி வந்துசேர்ந்தோம். டெல்லியில் விமானத்தில் இருந்து இறங்கியதுமே உக்கிரமான அனல் அடித்தது. நான் அது விமானத்தில் இருந்து அடித்த எஞ்சினின் வெப்பக்காற்று என்றுதான் நினைத்தேன். பின்புதான் அது டெல்லியின் வெயில் என்று தெரிந்தது. உலை பக்கத்தில் நிற்பது போல. காதுமடல்களும் உதடுகளும் எரிந்தன. சில கணங்களில் கன்னம் எரிய ஆரம்பித்தது

பஸ் பிடித்து ஐஎஸ்பிடி பேருந்து நிலையம் வந்தோம்.  அங்கே நான் ஒரு கோக் குடித்தேன். அது கார் கழுவுவதற்குச் சிறந்தது என்று பலர் சொல்லியிருக்கிறார்கள். ஆகவே அழுக்குகளை களையும் என்ற நம்பிக்கை வீண்போகவில்லை. சிக்கன் கரைந்தது. பேருந்து நிலையத்தில் தகரடப்பாக்கள் பேருந்துகளாக நின்றுகொண்டிருந்தன. தமிழக அரசு அவற்றை மண் அள்ளி போடக்கூட பயன்படுத்தாது. உடைசல் இருக்கையில் அமர்ந்துகொண்டோம். உக்கிரமான வெயில். அது உள்ளே தீபோல இறங்கிக்கொண்டிருந்தது. நான் கொஞ்சநாள் இடைவேளைக்கு பின்புதான் வட இந்தியா வருகிறேன். இங்கே எங்கும் பரவியிருக்கும்  வறுமையும் அழுக்கும் மேலும் மேலும் கண்ணை அறைந்தன. இதற்குள் நான் சென்று வந்த சில  வெளிநாட்டுப்பயணங்கள் காரணமாக இருக்கலாம்.

மொத்த பேருந்தில் நல்ல உடை, அதாவது அழுக்கு இல்லாத சட்டை அணிந்த  ஆறுபேர் நாங்கள் மட்டுமே. பேருந்து கிளம்பிய பின்னரும் எனக்கு அதுவே தோன்றிக்கொண்டிருந்தது. இடிபாடுகள். குப்பைமேடுகள். சாக்கடைப்பிரவாகமாக நெடுந்தூரம் நாறிய யமுனை. நாநூறு சதுர அடிக்கு கூரையிடுவதற்கான தகரம் ஐநூறு ரூபாய் ஆகும். அதுகூட இல்லாமல் பழைய போஸ்டர்களை கூரையிட்டு கட்டப்பட்ட குடில்கள். குப்பைகளையே அள்ளி வைத்து கட்டப்பட்ட சுவர்கள். புழுதி படிந்த குழந்தைகள். இந்தியாவின் தலைநகரத்தை பார்த்துச் செல்வது குமட்டும் அனுபவம்.

டெல்லியைவிட்டு நீங்கியபோது அந்தக் காட்சிகள் மறைந்தன. அறுபட்டைச் சாலைக்கன வேலைகள் நடப்பதனால் வழியெங்கும் தூசு. அந்த தூசுக்குள் செல்வது ஒரு கனவுக்காட்சி போலா இருந்தது. ஆனால் வழியெங்கும் பெரிய கடைகள் , ஓட்டல்கள், கல்விநிறுவனங்கள் வந்துகொண்டே இருந்தன. உத்தராஞ்சல் வரை ஊர் வளமாக இருப்பதாகவே தோன்றியது. நடுவே ஒரு இடத்தில் பேருந்தை நிறுத்தினார்கள். அத்தனைபேரும் இறங்கி பேருந்தை ஒட்டியே நின்று சிறுநீர் கழித்தார்கள். அதுவும் பெண்கள் பேருந்து சக்கரத்தை ஒட்டி அமர்ந்து கூட்டமாக சிறுநீர் கழித்த காட்சி அருமையாக இருந்தது. முக்காடுக்குள் இருப்பதனால் என்னவேண்டுமானாலும் செய்வதற்கான சுதந்திரம் அவர்களுக்குக் கிடைக்கிறது போலும்

டெல்லி அரித்வார் பயணம் முழு இரவையும் எடுத்துக்கொண்டது. நாங்கள் அதிகாலை இரண்டு மணிக்கு அரித்வாரில் வந்து இறங்கினோம்

[மேலும்]

முந்தைய கட்டுரைதூய அறிவு
அடுத்த கட்டுரைகர்மயோகம் : (20 – 24)