கடிதங்கள்

அன்புள்ள ஜெ

இந்தவருடம் புத்தகக் கண்காட்சிக்கு சென்றிருந்தேன். உங்கள் வாசகி நான். முக்கியமாக உங்கள் புத்தகத்தை வாங்கத்தான் போனேன். இந்தப்புத்தகக் கண்காட்சியில் உங்களுடைய ஒரு படம்கூட இல்லை. உங்கள் புத்தகங்களை நான் தமிழினி, உயிர்மை, நற்றிணை, கிழக்கு, வம்சி, கயல்கவின் எல்லா பதிபக்கங்களிலும் வாங்கினேன். அவர்கள் எவரெவரோ எழுத்தாளர்களின் படங்களெல்லாம் வைத்திருந்தார்கள். உங்கள் படம் மட்டும் இல்லை. தமிழினியில் கேட்டேன். அவர் எங்க எழுத்தாளர் இல்லை, அவர் புக்கை போடுறோம் அவ்வளவுதான் என்று ஒருவர் சொன்னார். நற்றிணையில் ஒருவர் கடுமையாகத் திட்டினார். உங்கள் படத்தை போட்டால் மற்ற எழுத்தாளர்கள் கோபித்துக் கொள்வார்கள் என்றார் ஒருவர்

அவர்கள் உங்கள் புத்தகம் போட்டு பணம் சம்பாதிக்கவேண்டும். ஆனால் உங்களை முன்வைக்கமாட்டார்கள் என்றால் என்ன நியாயம்? உங்களை முன்வைத்தால் பிரச்சினை என்கிறார்கள். ஆச்சரியமாகவும் வருத்தமாகவும் இருந்தது. இந்த புக்ஃபேரில் ஜெயமோகன் என்ற எழுத்தாளர் இருப்பதாகவே தடையமே இல்லை. இத்தனைக்கும் இந்தவருஷம்தான் உங்கள் மாக்னம் ஓப்பஸ் வந்திருக்கிறது. சின்னச்சின்ன கவிஞர்களுக்குக் கூட பிளெக்ஸ். உயிர்மை எஸ்.ராமகிருஷ்ணனை நன்றாகவே பிரமோட் செய்தது. உங்கள் பதிப்பாளர்கள் உங்கள் புத்தகங்களை நாமே கேட்டாலொழிய முன்னால் எடுத்துவைப்பதில்லை. தருவதில்லை

ஜெயா

அன்புள்ள ஜெயா

பதிப்பாளர்களிடம் கேட்கவேண்டும் என்ன பிரச்சினை என்று. பூக்கடைக்கும் கருவாட்டுக்கடைக்கும் விளம்பரம் எதற்கு என நினைத்தார்களோ என்னவோ?

ஜெ

அன்புள்ள ஜெ
முஸ்லிம் அடிப்படை வாதத்தை எதிர்க்கின்ற ஆற்றல் தங்களுக்கு இல்லை என்றும் அதே சமயம் அதனிடமே கை ஏந்தாத நேர்மை இருக்கிறது என்றும் தெரிவித்து உள்ளீர்கள். அது மட்டும் போதுமா?ஒரு மதத்தின் அடிப்படை வாதத்தை எதிர்க்க முடியாத போது அதே வகையான மற்ற மதங்களின் அடிப்படை வாதத்தை மட்டும் மிகக்கடுமையாக எதிர்ப்பது எப்படி நியாயமாக இருக்க முடியும்?

வி. ரங்கநாதன்

அன்புள்ள ரங்கநாதன்

நியாயமில்லை. இந்த நியாயமற்ற விமர்சனத்தை தாங்கியபடி நீங்கள் உங்கள் மத அடிப்படைவாதத்தை முன்னெடுக்கலாம்

ஜெ

*

அன்புள்ள ஜெயமோகன்,

“கருத்துச்சுதந்திரம் எவருக்கு?” என்று ஜெயராமன் எழுதிய கடிதத்தின் பதிலை படித்தேன். அதில் என்.டி.டி.வி கொடுத்துள்ள டிஸ்கிளெயிமர் பற்றி கூறியுள்ளீர்கள். அந்த டிஸ்கிளெயிமர் அதைப் போன்ற எல்லா வகையான கட்டுரைகளுக்கும் கொடுப்பார்கள். எடுத்துக்காட்டாக இதை சுட்டியை பார்க்கவும். http://www.ndtv.com/opinion/2-major-take-aways-for-bjp-from-delhi-738538?pfrom=home-topstories .

சு. ஹரிஹரன்

8

பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு,
வணக்கம்.

ஸ்ரீ.நித்யா அவர்களுடன் உள்ள உங்கள் புகைப்படத்தை பார்த்தேன். அதில் உள்ள உங்கள் “மீசை” முகம் (பளீரென்ற பற்களுக்கு மேல் எடுப்பாக) வெகு அருமை! என்னதான் உங்கள் “நான் தேர்ந்தெடுத்த முகம்” கட்டுரையில் சப்பை கட்டு கட்டினாலும்.

அன்புடன்,
அ .சேஷகிரி.

முந்தைய கட்டுரைபுனித துக்கம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 15