இணையப்பதிவுகள் நிறுத்தம்

அன்புள்ள வாசகர்களுக்கு

இந்த இணையதளத்தின் செயல்பாடுகளை இப்போதைக்கு நிறுத்திக்கொள்கிறேன். காரணம் சென்ற சில நாட்களாக இது மிகமிக மெல்ல இயங்குகிறது. ஒருபக்கத்தை திறக்கவே பற்பல நிமிடங்கள்– சமயங்களில் பத்து நிமிடம்கூட ஆகிறது. எனக்கு ஒரு இடுமையைப்போட நாற்பது நிமிடங்கள் கூட ஆகிறது. இதை ஒட்டி எனக்கு ஏராளமான கடிதங்களும் மின்னஞ்சல்களும் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றுக்கு பதிலளிப்பதும் இந்த தாமதம் உருவாக்கும் பொறுமையின்மையும் என் வேலைகளை எல்லாம் சுணக்கம் கொள்ளச் செய்கின்றன. ஆகவே வேறு வழி இல்லை

இந்த இணையதளத்தை நடத்தும் நண்பர் சிறில் அலெக்ஸ் இதைப்பற்றி இதன் சேவையளிப்பாளர்களுக்கு புகார்செய்தும் பயனில்லை. ஆகவே இனி பிறிதொரு தருணத்தில் சந்திப்போம்

*
சற்று தயக்கத்துடன், ஆனால் இது இன்றியமையாதது என்பதலான் இந்த விஷயத்தை பதிவுசெய்கிறேன். என் பெயரில் பலருக்கும் ஒருசில தவறான மின்னஞ்சல்கள் சென்றிருக்கின்றன. அவற்றில் மதக்காழ்ப்பு உமிழும் சொற்களும் வசைகளும் இருந்திருக்கின்றன. சிலருக்கு நான் பணம் கேட்டு எழுதிய மின்னஞ்சல்களும் சென்றிருக்கின்றன.

நான் அப்படி எந்த மின்னஞ்சலும் எவருக்கும் அனுப்பவில்லை. எனக்கு எழுதப்பட்ட மின்ஞஞ்சல்களுக்கு மட்டுமே பதிலளித்திருக்கிறேன். அவற்றில் தனிப்பட்ட தாக்குதல்கள் அல்லது மதம் சார்ந்த குறிப்புகள் எவையும் இடம்பெறவில்லை

நான் இணையத்தில் எந்த வலைத்தளத்திலும் வலைப்பூவிலும் எந்த பெயரிலும் எந்த பின்னூட்டமும் இடவில்லை. சொல்லப்போனால் நான் இணையத்தில் இப்போது செயல்படவே இல்லை. இதை இறுதியாகச் சொல்லிக் கொள்கிறேன்

*

வழக்கமாக ஒருநாளக்கு எனக்கு 50 ஸ்பாம் அஞ்சல்கள் வரும். அவற்றில் பாதி இன்பாக்ஸில் வரும். இப்போது இன்பாக்ஸிலேயே தினம் முந்நூறு நாநூறு ஸ்பாம் அஞ்சல்களும் பிற தேவையற்ற அஞ்சல்களும் வந்து என் அஞ்சல்கணக்கே உறைந்து விடுகிறது

ஆகவே நண்பர்களை வேறு ஒரு முகவரியில் தொடர்பு கொள்கிறேன். இப்போது விடைபெறுகிறேன்

ஜெயமோகன்

முந்தைய கட்டுரைபடிப்பறைப் படங்கள்
அடுத்த கட்டுரைஇணையப்பதிவுகள்