இயற்கைவேளாண்மை

பேரன்பு கொண்ட ஜெ ,

இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் .

நம்மாழ்வார் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி பற்றி படிக்கும் போது எழுந்த கேள்விகள் இவை .

இயற்கை வழி விவசாயம் இந்த நவீன வேளாண்மை காலகட்டத்தில் எந்த அளவு வெற்றி பெறும்,வரவேற்பு கிடைக்கும் என்று நினைக்கிறீர்கள்? நானும் இயற்க்கை விவசாயத்தை நேசிப்பவன் தான் .எனது தந்தை நடைமுறையில் இதை செய்து பார்க்கும் போது ஏற்படும் சிக்கல்களை சொன்னார்.நான் தான் அவரை வற்புறுத்தி இயற்கை விவசாயம் செய்ய சொன்னேன். ஒரு முறை செய்து விட்டு ஒதுங்கி விட்டார்.

ஆனால் அமெரிக்காவில் கூட இயற்கை வழி விவசாயத்துக்கு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது .இங்கு எல்லாமே organic முறையிலும் கிடைக்கின்றது.சமீப காலமாக இதன் வளர்ச்சி ஆண்டிற்கு 20% என்ற அளவிற்கு உள்ளதாக தகவல்கள் சொல்கின்றன .

இந்த வளர்ச்சி நிலைத்து நிற்குமா? உங்களது பார்வையில் இதன் எதிர்காலம் என்ன?
அதிக ஆட்கள் இதற்கு தேவைப்படும் என்பதால் இது கை விடப்படுகிறதா?
நாம் மீண்டும் இயற்கை வழி விவசாயத்திற்கு திரும்பினால் உணவுத்தேவையை பூர்த்தி செய்ய முயலுமா?

அன்புடன் ,
சம்பத் .

அன்புள்ள சம்பத்

1. இயற்கை வேளாண்மையின் மிகப்பெரிய சிக்கல் உழைப்புக்கு ஆள் தேவை என்பது. அவர்களுக்கான கூலி மிகப்பெரியது. அதை இயற்கைவேளாண்மை மூலம் ஈட்ட முடிவதில்லை. ஆகவே இயற்கைவேளாண்மை நஷ்டமாகவே இருக்கிறது.

2. இயந்திரங்களைக்கொண்டு இயற்கைவேளாண்மை செய்யும்போது இயற்கைவேளாண்மை என்ற கொள்கை அடிபட்டுப்போகிறது. அந்த எரிபொருள்செலவையும் மீட்க முடியவில்லை

3. ஆகவே இன்றைய சூழலில் இயற்கைவேளாண்மை என்பது பணக்காரர்களின் கேளிக்கை மற்றும் சில இலட்சியவாதிகளின் பிடிவாதம் மட்டுமே. அது நடைமுறையில் மாற்று விவசாயமுறை அல்ல

4. நீயா நானாவில் வசைபாடுவதற்கு அதைப்பயன்படுத்தலாமே ஒழிய நடைமுறையில் மிகக்கடினம். இது இயற்கைவேளாண்மை சார்ந்த அனுபவம்

5. கடைசியாக ஒன்று. இயற்கைவேளாண்மைக்குகூடவே நிலத்துடன் இருக்கும் படித்தவர்கள் தேவை. அது இங்கே சாத்தியமே இல்லை. என் நிலத்தில் ஒன்றில் ஒரு நண்பர் முன்முயற்சி எடுப்பதனால் இயற்கைவேளாண்மை நடக்கிறது. ஒரு வளமான நிலம் சும்மாவே கிடக்கிறது. 13 ஏக்கர்

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 26
அடுத்த கட்டுரைசூரியதிசைப் பயணம் – 11