வரலாறும் இலக்கியமும்

அன்புள்ள ஜெ சார்,

புனைவெழுத்தாளனை வரலாற்றாசிரியனாக காணக் கூடாது என்கிற உங்களது வரி சற்று ஆச்சரியமளிக்கிறது. காலம், வெளி ஆகியவற்றின் தடைகளை மீறி மற்ற வாழ்க்கைகள் எப்படி இருந்திருக்கும், அம்மனிதர்கள் எப்படி வாழ்ந்திருப்பார்கள் என்றறிய எம் போன்ற வாசகர்களுக்கு இருப்பது சீரிய இலக்கியம் மட்டும் தானே.

உதாரணமாக நான் தமிழ் சினிமா பார்க்கும் போதெல்லாம் நினைத்துக் கொள்வேன், உண்மையில் தமிழ் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்று என்றுமே தமிழ் திரைப்படங்களைப் பார்த்து தெரிந்து கொள்ள முடியாதென்று. அது வெறும் கேளிக்கை, கூத்து. அது போலவே உண்மையில் இராஜராஜ சோழன் காலத்து வாழ்க்கை எப்படி இருந்திருக்குமென்று பொன்னியின் செல்வன் படித்து தெரிந்து கொள்ள முடியாது, ஏனெனில் அவ்வகை வணிக எழுத்து, எளிய தரவுகளின் அடிப்படையில் மிகப் பெரிய கனவுக் கோட்டையை சமைப்பது

ஆனால் சீரிய இலக்கியமும் அவ்வகை தானா? போரும் வாழ்வும் படைப்பினின்றும் அன்றைய ருஷ்ய வாழ்க்கையைப் பற்றி நாம் எந்த முடிவுக்கும் வரக் கூடாதா? பின் தொடரும் நிழலின் குரலின் வரும் தொழிற்சங்க அரசியலும் அதன் சூழலும் ஒரு நம்பகத்தன்மைக்காக, நீங்கள் அமைத்த கற்பனை தானா?

உங்களின் வரிகளையே மேற்கோள் காட்டுகிறேன்:

“பெண்கள் வீட்டுக்குள் பூட்டி வைக்கப்பட்ட காலத்திலேயேகூட பலபெண் உறவும் பல ஆண் உறவும் சாதாரணமாக நிகழ்ந்திருக்கிறது என்பதை பல்வேறு வயோதிகர்களுடன் பேசும்போதும் அக்கால எழுத்துக்களைப் படிக்கும்போதும் காணமுடிகிறது.:”

http://www.jeyamohan.in/56792

உங்களை சீண்டுவதற்காக கேட்கவில்லை, நேரமிருப்பின் தயவு செய்து தெளிவுபடுத்தவும்.

என்றும் அன்புடன்
கிருஷ்ணன் ரவிக்குமார்.

அன்புள்ள கிருஷ்ணன் ரவிக்குமார்,

இந்த விஷயத்தை முன்னரும் பேசியிருப்பதனால் சுருக்கமாக சில விதிகளை மட்டும் சொல்கிறேன்

1. புனைவுக்கு ஒரு நோக்கம் உள்ளது. [அதை அதன் தரிசனம் என்று நான் சொல்வேன். கீழ்நிலையில் அது அரசியல்] அந்த நோக்கத்திற்கு ஏற்ப வளைக்கபட்ட அல்லது சமைக்கப்பட்ட வரலாறே அதில் வரமுடியும்.

உதாரணமாக விஷ்ணுபுரத்தில் தமிழக வரலாறு உள்ளது. ஆனால் அந்நாவலின் நோக்கம் ஞானம்- நிறுவனம்- அதிகாரம் ஆகியவற்றுக்கு இடையேயான ஊடாட்டம் பற்றிப் பேசுவது. ஆகவே ஞானம் எப்படி நிறுவனமாகி அதிகார அரசியலின் கருவியாக ஆகிறது என்றே அது பேசுகிறது. ஆகவே அதில் எல்லா அதிகார அமைப்புகளுமே ஏளனத்துடன் மட்டுமே காட்டப்பட்டுள்ளன. [இது சமீபத்தில் எங்கள் குழுமத்தில் பேசப்பட்டது]

ஆகவே புனைவிலுள்ள வரலாற்றை வரலாறாக எடுத்துக்கொள்ளக்கூடாது. வரலாற்றின் ஒரு கோணம், ஒரு சாத்தியம் மட்டுமே அது. அப்புனைவு அதை என்னவாக ஆக்கியிருக்கிறது என்ற விஷயத்தையும் கணக்கில்கொண்டே அதைப்பார்க்கமுடியும். அந்தத் தரிசனத்துடன் இணைத்தே அதை அணுகவேண்டும். தகவலாக தனியாக வெளியே எடுத்துப்பார்க்கக் கூடாது.அது பிழையானது

2 போரும் அமைதியும் காட்டும் சமூகசித்திரம் நேரடி வரலாறு அல்ல. வரலாற்றை அறிவதற்கான ஒரு துணைத்தளம் மட்டுமே. அதை ஆதரிக்கும் பிற சமூகச் சித்திரங்களும் தேவை. அதாவது அக்காலத்தின் ஒட்டுமொத்த இலக்கியம் மற்றும் பிற பதிவுகளை இணைத்துக்கொண்டுதான் அதை வரலாறாகப் பார்க்கமுடியும். ஆகவேதான் இது தல்ஸ்தோய் தரும் சித்திரம் என அவரது பெயருடன் இணைத்தே அந்த வரலாற்றுச்சித்திரம் பேசப்படுகிறது.

உதாரணமாக, நெப்போலியனைப்பற்றிய தல்ஸ்தோயின் சித்திரம் அவருடையதே ஒழிய நெப்போலியனின் நேர்ச்சித்திரம் அல்ல. நெப்போலியனை ஒரு காமெடியனாகக் காட்டிவிட்டார் என்று எவரும் தல்ஸ்தோயை குற்றம்சாட்டியதில்லை. அதைவைத்து நெப்போலியனை மதிப்பிட்டதும் இல்லை.

3.நேர் வரலாற்றின் துணைச்செய்தியாக மட்டுமே புனைவிலுள்ள தகவலை எடுத்துக்கொள்ளமுடியும். 19 ஆம் நூற்றாண்டின் சமூக யதார்த்தத்தை நாம் அக்கால நாவல்களில் காணலாம். உதாரணமாக க.நா.சுவின் ‘ஒருநாள்’ சாதனூர் சர்வமானிய அக்ரஹாரத்தின் விதவைகளில் பெரும்பாலானவர்கள் பாலியல் ஒழுக்கமற்றவர்கள் என்கிறது. ‘அந்நாவல் அப்படிக் காட்டுவதற்கான ஒரு முகாந்திரம் இருந்தது’ என்பதே அதன்பொருள். அன்றைய அக்ரஹாரத்தின் விதவைகள் பாலியல் ஒழுக்கம் அற்றவர்கள் என்ற தகவலாக அதை வாசிக்கமுடியாது.

4 அந்த ஆசிரியனின் தகுதியும் அத்தகவலுக்கு முக்கியமானது. க.நா.சு எழுதிய நாவலின் சித்திரம் அவரது தகுதியால்தான் கவனத்திற்குரியது.உள்நோக்கமும் கசப்பும் கொண்டு எழுதும் ஒருவரின் சித்திரத்தை அவரது எழுத்தின் தரத்தைக்கொண்டே நிராகரிக்கலாம். அதற்குத்தான் இலக்கியவிமர்சனம்

5 இலக்கியவிமர்சனம் விவாதம் வாசிப்பு குறைவாக இருக்கும் சூழலிலேயே இலக்கியம் நேரடி கருத்தாக, வரலாறாகக் கொள்ளப்படும் சிக்கல் நிகழ்கிறது

ஜெ

முந்தைய கட்டுரைசூரியதிசைப் பயணம் – 10
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 26