அன்புள்ள ஜெயமோகன்
மீண்டும் அம்பேத்கரின் தம்மம் கட்டுரை படித்த பொழுது ஒரு வரி இன்றைய சூழலில் முக்கியமாகப் பட்டது “‘ஏழைகள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று புத்தர் சொல்லவில்லை”,மிகவும் யதர்த்தமான வரிகள் .ஏழையாக இருப்பதால் மேலும் மேலும் அடக்குமுறைக்கு மட்டுமே உள்ளாக்கப்படுகிறார்கள் ,இதை மாற்ற அவர்கள் பொருளியியல் அடிப்படையில் முன்னேற வேண்டும் என்கிறது பௌத்தம்.
துறவைப்பற்றிப்பேசும் ஒரு மரபு அதற்குள் “பொருளியல் பற்றியும் வழியுறுத்துவது ” இரண்டையும் தெளிவு செய்ய வழி செய்கிறது . அது துறக்க சொல்வது “ஆசையை அல்ல பேராசையை ” என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக எனக்கு தெரிந்தது .இன்றய நுகர்வு சமுதாயத்தில் பௌத்த மரபின் முக்கயத்துவம் மேலும் வலுவடைகிறது.அறிவுக்கு முக்கியத்துவம் அளிப்பது ,உணர்வுக்கு அல்ல ,ஏழையின் மீது இங்கு கருணை இல்லை மாறாக அவர்களிடம் இருந்து ஒரு ஆக்கபூர்வமாக செயல்பாட்டினை வலியுறுத்துகிறது.
பௌத்த மரபினை ஒட்டிய ஒரு வினா .
இன்றைய உயர் தொழில் நுட்ப தொழிலில் உள்ள பலர் (IT professional) ,குறைந்தது இரண்டு வருடம் ஒரு நிறுவனத்தில் பணி புரிந்த பின்னர் மற்றொரு நிறுவனத்தை நாடுவது இயல்பு ,காரணம் தெரிந்த ஒன்றுதான் செய்துகொண்டிருக்கும் வேலையில் பெரிய மாற்றம் இல்லை (பெரிதாக அறிவுக்கு வேலை இல்லை ) ,பதிலாக சம்பள உயர்வு உண்டு .இது பேராசை இல்லை வாய்ப்பு ,ஒரு அருமையான வாய்ப்பு பொருளியல் ரீதியாக அல்லது இது பேராசை போன்றதா ?.ஏன்னென்றால் “பேராசை அறிவுக்கு எதிரானது ” என்ற வரிகளுடன் ஒப்பிடும் பொழுது இந்த நிலையில்லாத்தன்மை தான் இன்றைய “உயர் தொழில் நுட்ப துறை அடிமைகளை ” உருவாக்கி உள்ளதா ?. அறிவை மூலதனமாக கொண்டு வளராமல்,எந்திரத்தனமான வேலையாக மாறி உள்ளதா ?.
முரளி சித்தன்
அன்புள்ள முரளி,
இரண்டு விஷயங்கள். உலகியல்வாழ்க்கையில் அவசியமான ஒன்று ஷாத்ரம் என்னும் குணம். அதாவது தூய ரஜோகுணம். வென்றெடுக்க, கடந்துசெல்ல எப்போதும் உள்ள அக ஊக்கம் என அதைச் சொல்லலாம். அதை பேராசை என்று சொல்லக்கூடாது.
இருப்பது போதும் என்பது தமோகுணம். அதற்கு உலகியலில் இடமில்லை. அது தேக்கநிலை. துயரையே அளிக்கும். ஷாத்ர குணத்தால் முயன்று தோற்பதும் வெற்றியே. அதையே ‘யானைபிழைத்தவேல்’ என்றார் முனிவர்
தன்னறம் என்பது கூடவே இணைத்துப்பார்க்கவேண்டியது. ஒருவன் தன் செயல் மூலம் முழுமை பெறக்கூடிய துறையைத் தெரிவுசெய்யவேண்டும். தன் முழு ஆற்றலையும் அதில் செலுத்தவேண்டும். அதுவே அவனை விடுதலைசெய்யவைக்கும்
இவ்விரண்டிலும் உள்ள சோர்வே நீங்கள் சொல்லும் நிலைக்குக் காரணம். அது அச்சத்தால் சுயநலத்தால் வருவது. நம் நடுத்தரவர்க்க சமூகம் நம்மிடம் தேங்கி நிற்கவே சொல்லித்தந்து வளர்க்கிறது. அதைப்பாதுகாப்பாக இருத்தல் என நினைக்கிறது
‘பத்திரமா இருந்துக்க’ என்ற சொல்லைப்போல கேவலமான சொல் வேறு இல்லை. நான் எப்போதுமே பத்திரமாக இருந்ததில்லை. என் பையனிடமும் அதைச் சொன்னதில்லை
வாழ்க்கை வெல்வதற்கும் நிறைவதற்கும் உரியது. பத்திரமாக பதுங்கி இருப்பதற்குரியதல்ல
ஜெ