அன்புள்ள ஜெயமோகன் சார்
கம்பராமாயணம் குருமுகமாகவே கற்றுக்கொள்ள வேண்டும் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன், நம் நாஞ்சில் நாடன் அவர்கள் கூட, அப்படிதான் கற்றுக்கொண்டதாக , படித்திருக்கிறேன், இங்கே சென்னையில் நான் யாரிடம் கற்றுகொள்வது, உதவவும்,
அன்புடன்
சௌந்தர்.
9952965505
அன்புள்ள சௌந்தர்
எனக்குத்தெரிந்து சென்னையில் அப்படி எவரும் கம்பராமாயணம் படிப்பதில்லை. நீங்கள் சொந்தமாக இருபதுபேர் வரை இருக்கும் இடம் வைத்திருக்கிறீர்கள். எவராவது ஆர்வமிருந்தால் வந்து சொல்லிக்கொடுக்கும்படி ஏற்பாடுசெய்யலாம். அதற்கும் இன்று சென்னையில் எவரேனும் இருக்கிறார்களா என்று தெரியவில்லை.
பெங்களூரில் சொக்கன், ஜடாயு இருவரும் நண்பர்களுடன் கம்பன் வாசிக்கிறார்கள். மிகச்சிறப்பாக 200 அமர்வுகள் கடந்துவிட்டது என்கிறார்கள். அதைப்போல சென்னையிலும் செய்யலாம்.
ஒன்று உண்டு, தொடங்கி பாதியில் விடக்கூடாது. தொடங்கினால் முடித்தே ஆகவேண்டும். காவியங்களை பாதியில் விடுவது அவமுடிவுகளைக் கொண்டுவரும் என்பது பழங்கால நம்பிக்கை.
நான் பழங்கால நம்பிக்கைகளை நம்புவதில்லை, கொஞ்சம் பயப்படுவேன்
ஜெ