அன்புள்ள ஜெயமோகன்,
இன்றைய பதிவை (http://www.jeyamohan.in/70835 ) படித்ததும் , எனக்கு சங்க சித்திரங்கள் ஞாபகம் வந்தது. உங்களிடம் இருந்து திருக்குறளுக்கும் அப்படி ஒரு படைப்பு வர விரும்புகிறேன். உங்களுக்கும் அப்படி ஒரு எண்ணம் இருந்ததாக படித்த ஞாபகம்.
அருண்.
அன்புள்ள அருண்
திருக்குறளை சமூகவயப்படுத்தும் ஒரு முயற்சி பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொடங்கியது. அது சிறந்த விஷயம்தான். அது பரவலாக மக்களிடம் கொண்டுசெல்லப்பட்டது. மக்களுக்குப்புரியக்கூடிய வகையில் உரைகள் எழுதப்பட்டன
ஆனால் அந்த உரைகள் வழியாக குறள் எளிமைப்படுத்தப்பட்டது. அல்லது அதன் பொருள் குறைக்கப்பட்டது. குறைந்தபட்ச அர்த்தம் மட்டுமே கொள்ளப்படும் நிலை உருவானது. இன்று அதிலிருந்து குறளை மீட்பது கடினம்
குறள் ‘சூத்திரம்’. எல்லா சூத்திரங்களும் தியான மந்திரங்களே. மனனம்- ஸ்வாத்யாயம்- தியானம் என்னும் மூன்றடுக்குப் பயில்முறைக்கு உரியவை. ஸ்வாத்யாயம் என்பது அதுவரையிலான அர்த்தங்களனைத்தையும் அறிவது. தியானம் என்பது தனக்கே உரிய அர்த்தத்தை அறிவது
அதற்குரிய வழிமுறைகள் சமண-பௌத்த- வேதாந்த முறைகளில் நீண்டநாட்களாக குருமுறையாக பயிலப்பட்டு வந்துள்ளன. அவற்றின் அடிப்படையில் எழுதவேண்டும் என எண்ணம் உண்டு
கீதை குறள் இரண்டுக்கும் இரு உரைகளை எழுதிமுடிக்கவேண்டும்
ஜெ