அன்புள்ள ஜெயமோகன்.
வணக்கம்.
எங்கு ஆரம்பிப்பது என்று தெரியவில்லை இந்த மடலை. என் ஆதர்சம் நீங்கள். என் புத்தக அலமாரியில் உங்களுக்கு என்று தனியாக இரண்டு அடுக்குகள் உள்ளன. என்னை அடுத்த தளத்திற்கு நகர்த்திய ஒருவராக உங்களை நினைக்கின்றேன்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு ”பசுக்கள் பன்றிகள் சூனியக்காரிகள்…” நூல் குறித்து பேச தக்கர் பாபா வித்யாலயாவிற்கு வந்திருந்தீர்கள். அன்று உங்களது பேச்சை மிகவும் ரசித்துக் கேட்டேன். உங்களுக்கு நடு இரவினில் வரும் தவறான தொலைபேசி அழைப்பில் தொடங்கி ராணி மங்கம்மாவினைப் பற்றி கூறி அங்கிருந்து ”பசுக்கள் பன்றிகள்…” நூலில் இருந்து இரண்டு எடுத்துக்காட்டுகளை முன் வைத்து சமூக வரலாற்றையும், அதன் சிக்கல்களையும் குறித்துப் பேசினீர்கள்.
அந்த பேச்சின் சாரமாக நான் பெற்றுக் கொண்டது இது தான் : எந்த பண்பாட்டு விழுமியத்தையுமே யாரோ ஒருவரின் சதியாக புரிந்து கொள்ளக் கூடாது, அதன் பின்னிருக்கும் பல்வேறு தரப்புகளின் சிக்கல்களின் தொகையாதத்தான் பார்க்க வேண்டும். இந்துமத சாதி முறைகளைப் பற்றிய விவாதங்களிலும் நீங்கள் இதை தான் முன்வைத்தீர்கள் : சாதியை ஒரு குழுவின் சதியாக பார்ப்பது அதனை மிகவும் எளிமைப் படுத்தும் செயல்.
ஆரம்பத்தில் இருந்தே உங்கள் எழுத்தில் என்னை ஈர்த்த ஒரு விஷயம் அதன் உள்ளிருந்த அமைப்பினை, நிறுவன மயமாதலினை எதிர்க்கும் தன்மை.
வல்லிக்கண்ணன் தொகுத்த புதிய தமிழ் சிறுகதைகள் தொகுப்பில் அதுவரை நான் கேள்விப் படாத ஜெயமோகனின் ”திசைகளின் நடுவே” சிறுகதையை படித்த போது சார்வாகன் தருமனிடம் கூறும் “இந்த தங்கத்தினில் இரத்தக்கறை படிந்துள்ளது. வேறு கொடு” எனும் வரி சிலிர்க்க வைத்தது. அது வரை ஒற்றைப்படையாக நான் படித்திருந்த மகாபாரதத்தினை வேறு கோணத்தில் பார்க்க வைத்தது அந்த வரி.
விஷ்ணுபுரம் எனும் மாநகரம், பழங்குடிகளின் வழிபாட்டை, நிலத்தை கையகப் படுத்திய சூர்யதத்தனின் பொய்யின் மீதே நிற்கிறது. அத்தனை உன்னதமாக, மிகப்பெரிய நிறுவனமாக உயர்ந்து நிற்கும் கோவிலை அதன் மறுதரப்பில் நின்றுகொண்டு நிராகரித்தபடியே உள்ளது அந்த நாவல். பின் தொடரும் நிழலின் குரல் கம்யூனிசத்தின் மீதான விமர்சனம் என்பதையும் தாண்டி, ஓர் லட்சியம் நிறுவனமயமாகும் பொழுது அதன் ஆதார கருணை இல்லாது போவதை குறித்து பேசுகின்றது. இதுவே என் வாசிப்பு.
உங்கள் ஒவ்வொரு படைப்பிலும் இதை காண முடிந்தது. பரிணாமம் சிறுகதையினில் வரும் கருங்காணிகளின் பூர்வகதையும் ஆய்வாளனின் “வரலாறு”ம் சமமாகவே பட்டது. மதமாற்ற தடை சட்டத்தினை ஜெயலலிதா அமல்படுத்திய போது அதை எதிர்த்து நீங்கள் எழுதிய கடிதத்திலும் இதே நோக்கம் தான் இருந்தது.
”மத மாற்றம் என்பது மதங்களுக்குள் நிகழும் உரையாடல். இந்து மதத்திற்குள் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளை நாம் களைவதன் மூலமாக மட்டுமே மத மாற்றத்தினை எதிர்கொள்ள வேண்டும். அப்படி களைய இயலவில்லை என்றால் அப்படி ஒரு மதம் இல்லாது போவதில் ஒரு வருத்தமும் இல்லை” என்பது போல எழுதி இருந்தீர்கள்.
இப்பொழுது சில மாதங்களாக உங்கள் எழுத்துக்கள் இந்த சமநிலை இல்லாது இருக்கின்றதோ என்று தோன்றுகிறது. சில விஷயங்கள் மிகவும் எளிமைப்படுத்தப்பட்டு எழுத்துக்குள் வருகின்றன. ஊமைச்செந்நாய் சிறுகதையில் அந்த ஆங்கில அதிகாரியின் கதாப்பாத்திரம் உறுத்தியபடியே உள்ளது. ஆங்கில ஏகாதிபத்தியத்தின் மிகவும் எளிமைப் படுத்தப்பட்ட வடிவமாகவே அந்த அதிகாரி தோன்றினார்.
இப்பொழுது மதமாற்றம் குறித்த இன்று நீங்கள் எழுதுவதிலும் இந்த எளிமைப் படுத்துதல் தெரிகிறது. முகப்பேரில் ரோமன் கத்தோலிக்க தேவாலையத்தை ஒட்டிய வீதியில் எங்கள் வீடு இருந்தது. வருடத்திற்கு ஒரு குடும்பமாவது மதமாற்றம் செய்து கொள்வதை பார்த்திருக்கின்றேன்.
இன்று யோசிக்கும் பொழுது அதை வெறும் “காசு வாங்கிக்கொண்டு மாறி விட்டார்கள்” என்று எளிமையாக முடிவு செய்ய முடியவில்லை. கணவனை இழந்து இரண்டு குழந்தைகளை வளர்க்க பாடுபட்டுக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணுக்கு சாய்ந்துகொள்ள, சொல்லி அழ ஒரு தோள் தேவைப் பட்டிருக்கலாம். இந்து மதத்தை காட்டிலும் தன் வாழ்வின் மேல் அதிக ஆதிக்கம் செலுத்தக் கூடிய, பாதுகாப்பு உணர்வினை தரக்கூடிய கடவுளையும், அமைப்பையும் அவரது மனம் தேடி இருக்கலாம். கத்தோலிக்க சர்ச் அந்த பெண்ணுக்கு கூட்டிற்குள் இருக்கும் கதகதப்புணர்வை தந்திருக்கும் என்று நினைக்கின்றேன்.
இதற்கான மாற்றாகத் தான் மேல்மருவத்தூர் தொடங்கி இன்றைய பல இந்து நிறுவனங்கள் செயல்படுகின்றன என்று தோன்றுகிறது. இந்த முறை சென்னை சென்ற போது கல்கி பூஜை, மேல்மருவத்தூர் ஆனந்த ஜோதி, வேதாத்திரி மகரிஷியின் வாழ்க்கை கலை என ஒவ்வொரு வீட்டிலும் ஏதோ ஒரு விதத்தில் இந்த நிறுவனங்களின் செயல்பாடுகள் இருந்து கொண்டிருந்தன. இவை ஏதோ ஒரு சமூகத் தேவையை பூர்த்தி செய்து கொண்டிருக்கின்றன. இந்த நிறுவனங்கள் கிருத்துவ மதத்துடனான உரையாடலின் விளைவு என்றே தோன்றுகிறது. இந்த வகையிலும் சமூக நிகழ்வுகளைப் பார்க்கலாம் என்று உங்களின் மூலமாகவே கற்றேன்.
ஆனால் இன்று உங்களது கட்டுரையில் ”அப்படி பணம் கொடுக்கும் போது கூட மனிதாபிமானத்தால் கருணையால் கொடுக்க மனம் வரவில்லை. மதம் மாற வேண்டும் என்ற நிபந்தனையில்லாமல் பத்து பைசா அளிக்கக்கூட இவர்களின் கை நீளவில்லை. அப்படியானால் அது வணிகம். பணம் கொடுத்து மக்களை வாங்குகிறார்கள். இந்த முதலீடு நாளைக்கு ஒட்டு மொத்தமாக லாபம் தரும் என்று நினைக்கிறார்கள்” என்று எழுதி இருந்தீர்கள். இதை படித்ததில் இருந்து uneasyயாக உணர்கின்றேன்.
கட்டுரையில் ஒட்டுமொத்த செய்தியான “இந்தியாவின் பன்மைத் தன்மை” குறித்து ஒத்து போகிறேன். ஆனால் மேற்கூறிய வரி பிரச்சனையின் முழு பரப்பினையும் பார்க்காமல் சொல்லப்படும் வரியாகவே படுகிறது. வேறு யாராவது பேசி இருந்தால் தாண்டி சென்றிருப்பேன். இது உறுத்திக் கொண்டே இருக்கின்றது.
சித்தார்த்.
http://angumingum.wordpress.com
அன்புள்ள சித்தார்த்,
உங்கள் கடிதம் கண்டேன்.
ஓர் எழுத்தாளனாக மட்டுமல்லாமல் தனிமனிதனாகவும் என்னுடைய கொள்கை என்பது சமரசம்தான். சமநிலைதான் என் இலக்கும். அது எங்காவது தவறுவது போல இருந்தால் அது என் பிழை என்றே கொள்வேன். நீங்கள் சொன்ன விஷயங்களைக் கவனித்தேன். என் சொற்களின் வேகம் அப்படி ஒரு எண்ணம் உங்களில் உருவாக வழியமைத்திருக்கலாம். மீண்டும் என்னை சரியாகப் பதிவுசெய்ய, சரி செய்து கொள்ள வாய்ப்பு என இதைக் கொள்கிறேன்.
மதமாற்றத் தடைச் சட்டம் வந்தபோது எனக்கிருந்த அதே நிலைபாடு, அதே உறுதி இப்போதும் உள்ளது என்று கூற விரும்புகிறேன். அக்கட்டுரையை அப்படியே மீண்டும் இப்போதும் எழுதவே துணிவேன்.
கிறித்தவம், இஸ்லாம் போன்ற மதங்களின் அடிப்படையிலேயே ‘ஒரே உண்மை’ என்ற கருத்தாக்கம் உள்ளது. அந்த மதங்களை ஒருவர் ஏற்றுக் கொண்டால் அந்த உண்மையை அவர் ஏற்றுக் கொள்கிறார். பிறவற்றை அவர் நிராகரிக்கிறார். அத்தகைய தீர்க்கதரிசன மதங்களில் அந்த மதத்தின் உண்மையை ஏற்றுக் கொள்பவர் பிறரிடம் அதைக் கொண்டு செல்லும்படிப் பணிக்கப் பட்டிருக்கிறார். அது அவரது உரிமை மட்டும் அல்ல அந்த மத நம்பிக்கையின்படி கடமையும்கூட.
ஆகவே மதப் பரப்பு செய்வதும் என்பதும் , பிறரை மதமாற்றம் செய்வது என்பதும் இஸ்லாம், கிறித்தவம் போன்ற மதங்களை நம்புபவர்களின் அடிப்படை உரிமை. அவற்றைத் தடைசெய்வதென்பது அந்த மதங்களைத் தடைசெய்வதுதான். அதன்பின் மதச்சார்பின்மை பேசுவதில் பொருளே இல்லை.
ஆகவே இஸ்லாமியர்களும், கிறித்தவர்களும் தங்கள் மதங்களைப் பற்றிப் பிரச்சாரம் செய்வதை நான் வரவேற்கிறேன். அவற்றுடன் ஒத்துழைக்கவும் நான் இப்போதும் தயாராகவே இருக்கிறேன். குறிப்பாக கிறிஸ்துவின் மாபெரும் மானுடநேயச் செய்தி இந்தியாவில் உண்மையான தீவிரத்துடன் கொண்டு வரப்படவேண்டும் என்றும், அதனுடன் இந்து ஞானமரபுகள் அனைத்தும் ஆக்கபூர்வமான விவாதத்தில் ஈடுபடவேண்டும் என்றும் விரும்புகிறேன்.
தங்கள் மதங்களின் சாராம்சமான செய்தியை ஒரு இஸ்லாமியரும், கிறிஸ்தவரும் எடுத்துச் சொல்வது வரவேற்புக்குரியது. அதை ஏற்று தன் ஆன்மீகத் தேடலின் விளைவாக ஒரு இந்து அல்லது பௌத்தர் மதம் மாறுவார் என்றால் அது மிக இயல்பான ஒன்றேயாகும். அந்த வாய்ப்புள்ள நாடாக இருக்கும்போது மட்டுமே இங்கே மதச்சுதந்திரம் உள்ளதென அர்த்தம்.
அதேபோல இந்து மதம் தன் ஒருபகுதியினரை புறக்கணிக்கும் என்றால், அவமதிக்கும் என்றால், அந்த மக்கள் தங்களுக்கான சம உரிமை நாடி, பொருளியல் உரிமை நாடி மதம் மாறினால் அதையும் இயல்பான ஒன்றாகவே நான் எண்ணுவேன். அது இந்து சமயத்துக்கு ஓர் அறைக் கூவலாக நிகழட்டும் என்றே எண்ணுவேன்.
ஆகவே ஒருபோதும் மதம் மாறுபவர்களை பணம் மற்றும் பொருளுக்காக மதம் மாறுபவர்கள் என நான் கூற மாட்டேன். இக்கட்டுரையிலும் அதைச் சொல்லவில்லை என்றே எண்ணுகிறேன்.மத நம்பிக்கை என்பது ஒருவரது உரிமை. மதம் மாறுவதும் பிறப்புரிமை.
ஆனால் ஒருவரை அவரது வறுமையை அல்லது பிற இக்கட்டுகளைப் பயன்படுத்தி மதம் மாற்ற முயல்வதென்பது அடிப்படையில் ஆன்மாவற்ற ஒரு செயல் என்றே நினைக்கிறேன். குறிப்பாக, கிறிஸ்துவின் பெயரால் அப்படிச் செய்யப் படுமென்றால் அது கிறிஸ்துவை அவமதிப்பதாகும் என்றே நினைக்கிறேன்
அதற்கிணையாகவேப் பிற மதங்களைத் திரித்து, அவதூறு செய்து, அவநம்பிக்கையை வளர்த்து மதமாற்றம் செய்யப் படுவதும் கீழ்த்தரமான ஒருசெயலே. கிறிஸ்துவுக்காக அது செய்யப்படவில்லை, அவரைத் தங்கள் அதிகாரச் சின்னமாகக் கொண்ட அமைப்புகளின் நலனுக்காகவே செய்யப்படுகிறது என்று நினைக்கிறேன்.
தன் மத நம்பிக்கையை ஆத்மார்த்தமாக சகமனிதனுக்குச் சொல்லும் ஒரு மதநம்பிக்கையாளருக்கும், தொழில்முறை மதப்பரப்பு அமைப்புகளுக்கும் இடையே உள்ள இந்த வேறுபாட்டை நாம் எப்போதுமே தெளிவு படுத்திக் கொள்ள வேண்டும்.
இதுவரை நான் சொன்ன இத்தனை விஷயங்களையும் ஏறத்தாழ இப்படியே காந்தி சொல்லியிருக்கிறார். அவரது சொற்கள் வழியாக என் நிலைபாட்டை நான் மீண்டும் திடமாக உறுதிச் செய்துக் கொண்டேன்.
தாமஸ் கிறித்தவம் என்ற பேரில் செய்யப்பட்ட மோசடியைப் பற்றி எழுதிய கட்டுரையை நினைவு கூர்வீர்கள் என நினைக்கிறேன். அக்கட்டுரையின் முடிவிலும் கிறிஸ்துவை பிரச்சாரம் செய்யுங்கள் என்றே முடித்திருந்தேன், அவரது உண்மையான மானுடச் செய்தியைச் சொல்லுங்கள், மோசடி செய்யாதீர்கள் என்று வேண்டுகோள் விடுத்திருந்தேன்.
என்னுடைய இந்தக் கட்டுரையிலும் எப்போதும் நான் சொல்லும் அந்த விஷயமே ஒலிக்கிறதென நினைக்கிறேன். பெரும் அமைப்புகள் மானுடத்தை முன்வைப்பதில்லை, அதிகாரத்தையே முன்வைக்கின்றன. அந்த விதி திருச்சபைகளுக்கு மட்டும் பொருந்தாது என நினைக்கிறீர்களா என்ன?
கோடானுகோடி ரூபாய்கள் பெரும் வணிக நிறுவனங்களிடம் இருந்து திரட்டப் பட்டு இந்தியா போன்ற நாடுகளில் கொட்டப் பட்டு நவீன நிர்வாக-பிரச்சார முறைகளைப் பயன்படுத்தி செய்யப் படும் மதமாற்றம் என்பது ஓர் ஆன்மீகச் செயல்பாடு என நான் நினைக்கவில்லை. அதைச் செய்பவர்களின் நோக்கங்கள் ஆன்மீகமானவை என்றும் நினைக்கவில்லை. அது ஒரு முதலீடு மட்டுமே. பிறிதொன்றுக்கு ஒருபோதும் ஏகாதிபத்தியம் அத்தனை செலவிடாது. இந்த உண்மையை உணர நமக்கு மதச்சார்பின்மை தடையாக இருக்க வேண்டியதில்லை.
அந்த திட்டமிட்ட மாபெரும் தாக்குதலை உணர்ந்திருக்கா விட்டால், அதற்கு எதிரான விழிப்புணர்வு இருக்கா விட்டால், அதன் தேசிய இழப்புகள் பிரம்மாண்டமாக இருக்கும் என்றே நினைக்கிறேன். இன்று இரு கிறிஸ்துக்கள் உள்ளனர். சிலுவையில் மாண்ட மனித குமாரன் ஒருவர். ஏகாதிபத்தியத்தின் முகப்படையாளமாக உள்ள கிறிஸ்து இன்னொருவர். இரு கிறிஸ்துக்களையும் வேறுபடுத்திப் பார்க்க இந்துக்கள் மட்டுமல்ல கிறிஸ்தவர்களாலும் முடிய வேண்டும் என்று நினைக்கிறேன்.
அந்த தெளிவு இருக்கும் என்றால் ஒட்டு மொத்த இந்திய வரலாற்றையே திட்டமிட்டு திரிக்கக் கூடிய முயற்சிகளுக்கு எதிராக கவனமாக இருக்கலாம். திரு பாஸ்கி சுட்டிக் காட்டியதுபோல இந்துமதம் மற்றும் இந்து அமைப்புகள் மீது பரப்பப்படும் ஆதாரமற்ற அவதூறுகளை திடமாக எதிர்க்கவும் செய்யலாம். அதே சமயம் அந்த எதிர்ப்பு கிறிஸ்துவின் ஆன்மீகச் செய்திக்கு எதிரானதாக இல்லாமல் இருக்கவும் கவனம் கொள்ளலாம். நான் அதற்காகவே முயல்கிறேன்.
எளிமையாகவே யோசியுங்கள். இந்துமத நிறுவனங்கள் கிட்டத்தட்ட அனைத்துமே அரசின் பிடியில் உள்ளன. அவற்றின் நிதி முழுக்க அரசால் எடுத்துக் கொள்ளப் படுகிறது. பிறமத நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கில் கட்டுப் படுத்தப் படாத செல்வம் இருக்கிறது. அந்தப் பணம்மூலம் அவை செய்யும் சேவைகளை மனக்குறுகல் காரணமாக இந்து அமைப்புகள் செய்வதில்லை என்று அதே அமைப்புகள் குற்றம் சாட்டி பிரச்சாரமும் செய்கின்றன. என் கட்டுரை அந்த அவதூறுக்கான பதில் மட்டுமே.
என்னுடைய இந்தக் கட்டுரையில்கூட என்னுடைய வழக்கமான தரிசனமே உள்ளதென நான் நினைக்கிறேன். மாபெரும் அமைப்புகளின் கிறிஸ்துவுக்கு மாற்றாக தனிமனித மனங்களுடன் உரையாடும் கிறிஸ்துவையே இக்கட்டுரையும் முன்வைக்கிறது. தல்ஸ்தோயின் கிறிஸ்து. இந்த இணைய தளத்தில் பல்வேறு கட்டுரைகள், கதைகள் வழியாக மீண்டும், மீண்டும் பேசப்பட்ட தரிசனம் அது.
‘ஊமைச்செந்நாய்’ கதையின் உங்கள் வாசிப்பு அது. ஆனால் அந்த கதாபாத்திரம் ஆங்கில ஏகாதிபத்தியத்தின் பிரதிநிதி அல்ல என்றே அக்கதை சொல்கிறது. ஆங்கில ஏகாதிபத்தியத்தால் சுரண்டப் பட்டு ஒடுக்கப்பட்ட வேறு வகையான அடிமைகளில் ஒருவன் மட்டும்தான் அவன்.
என் மீதுள்ள உங்கள் நம்பிக்கை எனக்கு ஊக்கமூட்டுகிறது. ஒவ்வொரு முறையும் என் கருத்துக்களையும், உணர்வுகளையும் மீண்டும் பரிசீலனை செய்து கொள்கிறேன்.
நன்றி
ஜெ
மதமாற்ற தடைச்சட்டமும் ஜனநாயகமும்