படிப்பறைப் படங்கள்

உங்கள் வீட்டில் சுவரில் யாருடைய படத்தை வைத்திருக்கிறீர்கள்? என்று ஒரு நண்பர் கேட்டார். இ.எம்.எஸ் நம்பூதிரிப்பாட் அவரது வீட்டின் சுவரில் காந்தியின் படத்தை மட்டுமே வைத்திருந்தார் என்ற செய்தியைப்பற்றி பேசிக்கொண்டிருந்தோம். ஏன் மார்க்ஸ், எங்கல்ஸ், லெனின் படங்களை வைக்கவில்லை என்ற கேள்விக்கு அவர்கள் என் சிந்தனைக்கு வழிகாட்டிகள், காந்திமட்டுமே என் அன்றாட தனிப்பட்ட வாழ்க்கைக்கு வழிகாட்டி என்று இ.எம்.எஸ் சொன்னாராம்.

நான் சொன்னேன் ”வீட்டில் என்றால் வரவேற்பறையிலா? வரவேற்பறையில் அஜிதன் சின்னக்குழந்தையாக இருக்கும்போது எச்சில்வழிய காமிராவை ‘எவண்டா அவன்?’ என்று பார்க்கும் ஒரு புகைப்படம் மட்டும்தான் உள்ளது” நண்பர் ”சரி, படிப்பறையில்?” என்றார். நான் ”படிப்பறை என்று ஏதுமில்லை. படுக்கையறை படிப்பறை எல்லாம் ஒன்றுதான் எனக்கு. அங்கே என் படுக்கைக்கு மேலே, கணிப்பொறியில் நான் இருக்கும்போது பார்க்கும்படியாக, இரு படங்களை ரசாயனப்பூச்சுச் சட்டகம் போட்டு மாட்டியிருக்கிறேன். ஒவ்வொரு நாளும் பலமுறை பார்த்துப்பார்த்து அந்தப்படங்கள் எனக்கு உயிருள்ள முகங்களைப்போல ஆகிவிட்டிருக்கின்றன. ஒன்று காந்தியின் கோட்டோவியம். ஆதிமூகம் வரைந்தது. நெய்தல் அமைப்பு நடத்திய ஒரு கூட்டத்தில் எனக்கு அளிக்கப்பட்ட  நினைவுப்பரிசு. இன்னொன்று அசோகமித்திரனின் படம். ‘சொல்புதிது’ அட்டையில் வந்தது”

சற்று நேரம் சிந்தனை செய்த பின் நண்பர் கேட்டார் ”வள்ளுவர் படம் இல்லையா?” நான் அதற்கு எப்படி பதில் சொல்வதென சிந்தனை செய்த உடனே இ.எம்.எஸ் சொன்ன பதில்தான் நினைவுக்கு வந்தது.”வள்ளுவர் எனக்கு ஞானகுருவைப்போல. ஆகவே கண்டிப்பாக அவரது படத்தை மாட்ட வேண்டியதுதான்…” நண்பர் ”நான் உங்களுக்கு நல்ல படம் தருகிறேன்” என்றார். நான் ”ஆனால் வள்ளுவரை மாட்டுவதாக இருந்தால் புத்தர் படத்தை மாட்ட வேண்டும். கண்ணனின் சித்திரம் ஒன்று வேண்டும். கண்டிப்பாக மனிதகுமாரனின் சித்திரமும் வேண்டும்…” என்றேன் ”என்னை உங்களுக்குத்தெரியும். தல்ஸ்தோயின் படமில்லாமல் முடியாது. தஸ்தயேவ்ஸ்கி இல்லாமல் தல்ஸ்தோய் முழுமையடைய முடியாது.”

”ஆமாம்” என்றார் நண்பர் சோர்வுடன். ”நீங்கள் சொன்னதும் நினைத்துக்கொண்டேன், ஆற்றூர் ரவி வர்மா, குரு நித்யா இருவரின் புகைப்படம் என் வீட்டில் இல்லை. நாராயண குருவின் படம் கூட இல்லை… புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் படத்தை வைக்கலாம். சுந்தர ராமசாமி படத்தை வைக்கலாம். ஏன் பஷீர்? காரந்த்? தாராசங்கர்? கோவை ஞானியின் படத்தைக்கூட வைக்கவேண்டும்…”

நண்பர் சிரித்துவிட்டார். நான் சொன்னேன் ”ஆனால் இவர்களுடைய நூல்கள் அனைத்தும் கையெட்டும் தூரத்திலேயெ உள்ளன. அலுவலகத்திலும் வீட்டிலும் ஏன் பலசமயம் தங்கும் விடுதிகளிலும்கூட இந்த மூலநூல்கள் அருகே இருக்காமல் நான் இருப்பதில்லை. எப்போதும் என் மனம் அவர்களின் சொற்களில் துழாவிக்கொண்டேதான் இருக்கிறது…”

”அப்படியானால் ஏன் இந்த இரு படங்கள் மட்டும்?” என்றார் நண்பர்.”…சொல்லப்போனால் அப்படி சிந்தனை செய்து வைத்தவை அல்ல. ஏதோ தோன்றியது, வைத்தேன். அதன் பின்னர்தான் ஏன் வைத்தேன் என்று நினைக்க ஆரம்பித்தேன்” என்றேன். ”காந்தியை நீங்கள் வைத்திருப்பது ஊகிக்கக் கூடியதே” என்றார் நண்பர்.

”ஆமாம். நான் என்னை காந்தியவாதியாக சொல்லிக்கொள்ள மாட்டேன். வாழ்க்கையில் அதற்குரிய நிபந்தனைகள், விரதங்கள் என்றுகூடச் சொல்லலாம், ஏராளமானவை. நான் சாதாரணமானவன். ஆனால் எந்த தளத்திலும் என் சிந்தனைகளை காந்திதான் அடிப்படைகளைத் தீர்மானிக்கிறார். எதிலும் பன்மையையும், விவாதத்தன்மையையும், சமரசப்போக்கையும் நாடுகிறேன். நேரான பாதை என்பது மெதுவாகச் சென்றாலும் பல்லாயிரம் சிக்கல்களைச் சந்தித்தாலும் உறுதியான வெற்றியை சென்றடையக்கூடியது என்று எண்ணுகிறேன். செய்யும் ஒவ்வொரு செயலிலும் நேர்மையும் அர்ப்பணிப்பும் இருந்தால் அது ஞானமாகக் கனியக்கூடுமென நம்புகிறேன். அனைத்துக்கும் மேலாக வன்மமும் வன்முறையும் இல்லாத சிந்தனையே இந்நூற்றாண்டின் பண்பாக இருக்கமுடியும் என்று எண்ணுகிறேன்” என்றேன்.

மேலும் ”ஆனால் அதற்கும் மேலாக ஒவ்வொருநாளும் காந்தி எனக்கு தேவைப்படுகிறார். என்னுடைய காரியங்களை நானே செய்துகொள்ளலாம் என்று எனக்கே சொல்லிக்கொள்வதற்கு. உடல்சார்ந்த வேலைகள் மனத்துக்கு இன்றியமையாதவை என்று உறுதி செய்துகொள்வதற்கு. முடிந்தவரை உலகியல் தேவைகளைக் குறைத்துக்கொள்வது ஒரு விடுதலை என்று உணர்வதற்கு…. உடலை ஒவ்வொரு நாளும் கூர்ந்து கவனித்து எளிமையான உணவையும் மருந்துகளையும் மட்டும் அதற்கு அளிப்பதற்கு…” என்றேன்.

ஆனால் அச்சொற்கள் என்னை வெட்கச்செய்தன. ”உங்களுக்கே தெரியும், ஒரு மனிதனாக நான் மிகவும் சமநிலை இல்லாதவன். உணர்ச்சிவசப்படுபவன். கொந்தளிப்பு கொண்டவன். என்னாலேயே புரிந்துகொள்ள முடியாத ஒரு சுயமைய நோக்கும் ஆணவமும் உடையவன். எழுத்தாளனாக உள்ள அனைவருக்குமே இந்த சாபம் இயற்கையால் அளிக்கப்பட்டிருக்கிறது. என்னால் காயப்படாத என் நண்பர்கள் இருக்க மாட்டார்கள். வாசகர்களும் புண்பட்டிருக்கக்கூடும். என் மீதான பிரியத்தால் அவர்கள் அதை ஏற்றுக்கொள்கிறார்கள். கடந்த பல வருடங்களாக என்னை கட்டுப்படுத்திக்கொள்ளவே என் மன உழைப்பில் பெரும்பகுதி தேவைப்படுகிறது. குறைந்த பட்சம் இலக்கிய விஷயங்கள் தவிர்த்த செயல்பாடுகளிலாவது பிறரிடம் உரசாதவனாக மென்மையானவனாக ஆக முடியுமா என்று முயன்றுகொண்டிருக்கிறேன். அதற்கு எனக்கு ஒவ்வொரு நாளும் காந்தி தேவையாகிறார். காந்தியின் ஆளுமை, காந்தியின் முகம்…”

”அசோகமித்திரன்?” என்றார் நண்பர். ”உங்கள் இலக்கிய மதிப்பீட்டில் அவரை முக்கியமான படைப்பாளியாகவே நினைக்கிறீர்கள் என்று தெரியும். ஆனால் ஒருபோதும் தல்ஸ்தோய் வரிசைக்கு அவரைக் கொண்டு போக மாட்டீர்கள். ஒரே பெரும் இலக்கியவாதியாக அவரை எண்ணவும் மாட்டீர்கள்…”

”உண்மைதான். அசோகமித்திரன் மனிதனின் லௌகீக துக்கத்தைச் சொல்ல வந்த கலைஞர். அவரது உலகில் ஆன்மீகமான தத்தளிப்புகளும் தேடல்களும் இல்லை. சரித்திரத்தின் பாரம் இல்லை. அவர் தத்துவம் நோக்கிச்செல்வதே இல்லை. அப்படிப்பார்த்தால் அவர் என்னுடைய உலகுக்குள்ளேயே வரவில்லை. அவரிடமிருந்து நான் எதையுமே கற்றுக்கொள்வதில்லை. நான் அவருடைய உலகை இங்கிருந்து பார்க்கிறேன். சோறு, துணி, வீடு, கௌரவம் மீண்டும் சோறு, துணி, வீடு, கௌரவம் என்றே வாழவிதிக்கப்பட்ட அவரது மக்களை அவரது சொற்கள் வழியாக நேசத்துடன் புரிதலுடன் பார்க்கிறேன். அவ்வளவுதான்” என்றேன்.

”ஆனால் அவரது ஆளுமை எனக்கு முக்கியமானது” என்றேன். அதை சொல்லச்சொல்ல என் சொற்கள் அவற்றைக் கண்டடைந்தன. தமிழ்ச்சூழலில் லௌகீக வாழ்க்கையின் உச்சகட்ட நெருக்கடிக்கு உள்ளாகிய இரு முக்கியமான இலக்கிய முன்னோடிகள் கு.ப.ராஜகோபாலனும் அசோகமித்திரனும்தான். கு.ப.ராஜகோபாலனின் பிரச்சினையில் அவருடை நோய் ஒரு முக்கியமான பங்கை வகித்தது. ஆனால் அசோகமித்திரன் அப்படி அல்ல. அவர் அந்நாளிலேயே பட்டதாரி. அவர் நல்லவேலைக்குச் சென்றிருக்க முடியும். அவருக்குள் இருந்த எழுத்தாளன் அவரை அலைக்கழித்தமையால் அது அவருக்குச் சாத்தியமாகவில்லை.

பின்பு வயிற்றுக்காக ஜெமினியில் வேலைக்குச் சேர்ந்தார். கணக்கு எழுதினார். வாசனின் காரைக் கழுவினார். ஒரு கட்டத்தில் ”நான் ஒரு எழுத்தாளன். என்னை காரைக்கழுவச் சொல்கிறீர்களே” என்று அவர் வாசனிடம் கேட்டார். ”நீ உண்மையிலேயே எழுத்தாளன் என்றால் இங்கே இருந்து காரை துடைத்துக் கொண்டிருக்க மாட்டாய்” என்றார் வாசன். அந்தக்கூற்றை உண்மை என்று அசோகமித்திரனின் ஆழ்மனம் ஏற்றுக்கொண்டது. அந்த வேலையைத் துறந்தார். அதன் பின் அவர் எவர்கீழும் வேலை பார்க்கவில்லை.

ஆனால் அவர் கடுமையாக உடலால் உழைத்திருக்கிறார். நாட்கணக்கில், வருடக்கணக்கில் பட்டினி கிடந்திருக்கிறார். அவமானங்கள், இழிவுகள் என அவர் ஒருபோதும் சொல்ல வாய்ப்பில்லாத அனுபவங்களின் ஒரு சுமை அவரிடம் உண்டு. நம் கலாச்சாரக் காவலர்கள், இலக்கிய பீடங்கள், இதழாளர்கள் அவரை எப்படி நடத்தினார்கள் என்று அவர் சொல்வதே முறை. ஆனால் ஒருபோதும் தனிநபர்களுக்கு எதிராக எதையும் சொல்லக் கூடாதென்பதை கொள்கையாக வைத்திருக்கிறார் அவர். ஒரு நூலைப் பிடிக்கவில்லை என்று சொல்வதேகூட வன்முறை என்று எண்ணுகிறார்.

பத்து வருடங்களுக்கு முன் நான் அவரிடம் கேட்டேன் ”என்ன செய்யுது உடம்புக்கு?” அவர் அந்த கசந்த புன்னகையுடன் ”சாப்பிட வேண்டிய நாட்களிலே சாப்பிடலை. அவ்ளவுதான்…”என்றார். தமிழ் ஒரு தனி எழுத்தாளனுக்கு இரண்டுவேளைச் சோறுகூடப் போடவில்லை. ”நெறைய பேரை தெரியும். அவாளுக்கும் என்னைத் தெரியும். யாரும் ஒண்ணும் பண்ணல்லை. எனக்குத்தான் கேக்கத் தெரியல்லைன்னு நெனைக்கிறேன்” என்றார் அசோகமித்திரன். சில்லறை தொடர்புகள் இருந்தால் கூட மேலே மேலே ஏறிவிட வாய்ப்பிருக்கும் பெரு நகரத்தில் எதையும் கேட்பதற்கு குரலற்றவராக வாழ்ந்தார். அதுதான் எழுத்தாளனின் குணம்.

ஆனால் அவரளவுக்கு வெற்றிகரமான தமிழ் எழுத்தாளர்கள் மிகச்சிலரே. தன் கலைத்திறனின் கடைசித்துளியைக்கூட வெளிப்பாடாக ஆக்கியவர் தமிழிலக்கியத்தில் அவர் ஒருவரே. மற்ற அத்தனை எழுத்தாளர்களும் சிதறுண்டிருக்கிறார்கள். வாழ்நாட்களை, உளத்திறனை வீணடித்திருக்கிறார்கள். தி.ஜானகிராமன் அவர் பார்த்த கும்பகோணம் வேலையை தொடர்ந்திருந்தால் அவர் சென்றிருக்கும் தொலைவே வேறு. டெல்லியில் உயர் பொறுப்புள்ள வேலையும், பணமும், தொலைதூரப் பயணங்களும், உயர்மட்ட விருந்துகளும், அதிகாரிகள் கூட்டங்களும் சந்திப்புகளும், மாதாமாத அறிக்கைகளுமாக அவரது கால்பகுதி வாழ்க்கை வீணாகியது. முற்றிலும் எழுத்தை நிறுத்திக்கொண்டு துணிவணிகத்தில் பல வருடங்களை சுந்தர ராமசாமி செலவிட்டிருக்கிறார். அரசியல் கூட்டங்களில் ஜெயகாந்தன் கரைந்தழிந்திருக்கிறார்.

வீடுகட்ட ஆரம்பித்து இலக்கியத்தை மறந்த எழுத்தாளர்கள் உண்டு. பதவி உயர்வுக்காக படித்து இலக்கியத்தை விட்டவர்கள் உண்டு. வியாபாரம் சூடுபிடித்தபோது இலக்கியத்தை விட்டு விலகியவர்கள் உண்டு. ஏன், பையன் பிளஸ்டூ படிக்கிறான் என்று இலக்கியத்தை ஒதுக்கியவர்கள் பலர். ஆனால் எழுத ஒரு இடம்கூட இல்லாமல், வாகனங்கள் இரையும் சாலை நடுவே பூங்காவில் ஆட்கள் வருவதற்கு முன்னரே காலைநேரத்தில் சென்று அமர்ந்து ஓயாமல் எழுதினார் அசோகமித்திரன். அனேகமாக தினமும்.

அவரது எழுத்துக்களின் கைப்பிரதிகளைக் கண்டால் ஒன்று தெரியும், காகிதம்கூட அவருக்கு எப்படி ஒரு அரும்பொருளாக இருந்திருக்கிறது என்று. நுணுக்கி நுணுக்கி இடம் முழுக்க நிரப்பி எழுதப்பட்ட வரிகள். வாங்கக்கிடைக்கும் மிகமலிவான செய்தித்தாள் காகிதம். எழுத்து மூலம் அவருக்குக் கிடைத்தது என்ன? பணம்? அவரது எழுத்துக்களில் பெரும்பகுதி சிற்றிதழ்களில் பணம் பெறாமல் எழுதப்பட்டது. அவர் எழுதிய வணிக இதழ்கள்கூட எவ்வளவு பணம் கொடுத்திருக்கும்? இன்றுகூட அவை அனுப்பும் பணத்தை தபால்காரன் தரும்போது பக்கத்திலிருப்பவர் காணாமல் வெட்கி மறைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

புகழ்? அவரது ஆகச்சிறந்த படைப்புகள் வெளிவந்த காலகட்டத்தில் அதிகம்போனால் அவருக்கு 500 வாசகர்கள் கூட இருந்திருக்கமாட்டார்கள். அவரது ஆரம்பகாலச் சிறுகதைத் தொகுதிகள் ஆயிரம் பிரதிகள் விற்க பத்து வருடங்களுக்கு மேல் ஆகியிருக்கின்றன. 1985-ல் நான் ஆராவமுதன் என்ற நண்பருடன் அவரை சந்திக்கச் சென்றபோது ”நர்மதா ராமலிங்கம் ‘இன்று’ன்னு ஒரு நாவல் போட்டிருக்கார்…ஒரு காப்பி போய் வாங்குங்கோ. சந்தோஷப்படுவார்… யாருமே வாங்கலைன்னு வருத்தப்பட்டார்”என்றார்.

அப்படியானால் அவர் ஏன் எழுதினார்? அவர் ஒரு எழுத்தாளர், ஆகவேதான் எழுதினார். அவர் காலத்தில் உலகில் எழுதிய முதன்மையான எந்தப்படைப்பாளிக்கும் குறைந்தவரல்ல அவர். ரேமண்ட் கார்வர் அல்லது வில்லியம் சரோயன் அல்லது ஜான் ஓ ஹாரா அல்லது ஜான் அப்டைக் போன்ற எந்த இலக்கிய ஆசிரியர்களும் அவரைவிட மேலானவர்களல்ல.  ஆனால் தமிழ்ப்பண்பாட்டின் புறக்கணிக்கப்பட்ட மூலையில் தன் போக்கில், காட்டில் பூக்கும் மரம் போல, அவர் எழுதிக்கெண்டிருந்தார்.

தொண்ணூறுகளுக்குப் பின் உருவான இலக்கிய மறுமலர்ச்சியில் அவர் சற்றே அறிமுகமாக ஆரம்பித்தபோது உடனடியாக அவரது சாதிதான் அடையாளப்படுத்தப்பட்டது. ”உண்டுகொழுத்த மடிஆசாரப் பார்ப்பான் எப்படி சாதாரண மக்களைப்பற்றி எழுத முடியும்?” என்று அவரைப்பற்றி மேடையில் முழங்கினார் ஒரு புரட்சிப் பேராசிரியர். கடந்த பல வருடங்களாக அவரைப்பற்றி எழுத்தில் வருவதெல்லாம் சாதியக் காழ்ப்பின் விளைவான வசைகள் மட்டுமே. வாழ்க்கையின் நுண்ணிய இக்கட்டுகளையும், மனத்தின் அறியப்படாத இருண்ட பக்கங்களையும் சாதாரணமான நடையில் சொல்லி உணர்த்தும் அவரது மகத்தான ஆக்கங்களைப்பற்றி எவராவது எதையாவது எழுதி நான் வாசிக்க நேர்ந்ததில்லை.

எழுத்தாளனுக்கு இங்கே விதிக்கப்பட்டிருக்கும் வாழ்க்கைக்கு சிறந்த உதாரணம் அவர். எழுத்தாளனை வாழ்க்கையின் எந்தக் குரூரமும் வெல்ல முடியாதென்பதற்கு தமிழின் ஆகச்சிறந்த உதாரணமும் அவரே. எழுத்தாளனின் வெற்றி என்பது புகழிலோ பணத்திலோ இல்லை என்று அவர் காட்டுகிறார். எழுத்தாளன் எழுதும் கணத்திலேயே தன் வெற்றியை அடைந்துவிடுகிறான், வேறெதுவுமே  அவனுக்கு ஒரு பொருட்டல்ல என்பதற்கு வாழும் சான்றும் அவரே.

”என் வீட்டுச் சுவரில் இருந்துகொண்டு அசோகமித்திரன் இலக்கியத்தின் அழியாத சாரம் ஒன்றை ஒவ்வொரு கணமும் சொல்லிக்கொண்டிருக்கிறார். அதனால்தான் அவரது முகம் எனக்குத்தேவையாகிறது” என்றேன் நண்பரிடம்.

அசோகமித்திரன் படைப்புலகுக்கு ஒரு வாசல்

முந்தைய கட்டுரைகடிதங்கள்
அடுத்த கட்டுரைஇணையப்பதிவுகள் நிறுத்தம்