ஜனவரி 23.2010 அன்று கோவையில் ஒரு வாசகர் சந்திப்பு. நான் கோவை செல்லவிருந்தபோது அரங்கசாமி சொன்னார் “ஸார் சும்மா வர்ரதுக்கு ஒரு மீட்டிங் மாதிரி ஏற்பாடு பண்ணிடலாமே? ஃபார்மலா அறிவிப்பு குடுத்து சந்திக்கிற மாதிரி”
ஆகவே இணையத்தில் அறிவித்து நண்பர்களைக் கூட்டி ’நமக்கு நாமே’ திட்டப்படி நானே ஒரு ‘எழுத்தாளர் சந்திப்பை’ ஒழுங்கமைத்துக்கொண்டேன். நண்பர்கள் உற்சாகமாக உதவினார்கள்.
அது ஒரு தொடக்கம் என அப்போது தெரிந்திருக்கவில்லை. கோவையில் முருகன் ஓட்டலில் தங்கியிருந்தேன். அதன்பின் ஓட்டல் அன்னலட்சுமியில் உணவும் நண்பர் சந்திப்பும். அறுபதுபேர் வந்திருந்தார்கள். நிறையப்பேசினோம். அதன்பின் உணவு
அது அப்போதே ஓர் உறுதியான நட்புக்கூடலாக உருவாகியது. விடுதியில் பேசிக்கொண்டிருந்தோம். நேராகச்சென்று கோவை ஞானியையும் அங்கிருந்து மராபொ குருசாமியையும் சந்தித்தோம்
விஷ்ணுபுரம் என்ற அமைப்பு அப்படித்தான் உதயமானது. ஏதாவது உருப்படியாகச் செய்யலாமே,இத்தனைபேர் இருக்கிறோமே என்று எண்ணியபோது ஓர் அமைப்பாகத் திரண்டாலென்ன என்ற எண்ணம் வந்தது. முதலில் ஒரு வாசகர் சந்திப்பை ஒருங்க்மைத்தோம் தேவாங்கர்பள்ளியில். அதன்பின்னர் கலாப்ரியாவுக்காக ஒரு கூட்டம். நிகழ்ச்சிகள் அளித்த உற்சாகத்தைக் கண்ட பின்னரே விஷ்ணுபுரம் என பெயர்சூட்டினோம்.
அதாவது கருத்தியல், கொள்கைகள் ஒன்றுமே இல்லாத பொதுவான வாசகர் அமைப்பு. சில குறைந்தபட்சச் செயல்திட்டங்கள் மட்டும். இலக்கியத்தில் செய்யப்படவேண்டியது என்று எண்ணும் மிகச்சில செயல்களைச் செய்வது. அப்படித்தான் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் பிறந்தது. அந்தவருடமே விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்டது, ஆ.மாதவனுக்கு.
[சென்னை விஷ்ணுபுரம் விழா 2014]
உற்சாகமாக இருக்கிறது. இப்போது பல கட்டங்கள் தாண்டிவந்துவிட்டோம். அன்றிருந்த நண்பர்களின் நட்புக்கூட்டில் எந்த விரிசல்களும் இதுவரைவிழவில்லை. [இது தமிழ்ச்சூழலில் எவ்வளவு பெரிய சாதனை என சொல்லித்தெரியவேண்டியதில்லை] விருதுவிழாக்கள். இலக்கியச் சந்திப்புகள். இலக்கியக் கூட்டங்கள். வருடாந்தரப் பயணங்கள்
நண்பர்கள் அனைவருக்கும் இருக்கும் உற்சாகத்தைப் பகிர்ந்துகொள்கிறேன். இப்போது உற்சாகமான சந்திப்புகளாக இருக்கும் இந்த நேரங்கள் நம் வாழ்க்கையின் பொன்னாட்கள், பிறகெப்போதோ இவை மெல்ல வரலாறாக நினைவுகூரப்படும் என எத்தனைபேர் அறிந்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை