வெண்முரசு எழுதத்தொடங்கி ஓராண்டுதான் கடந்து சென்றிருக்கிறது. ஆனால் முதற்கனலை மீண்டும் வாசிக்கும்போது நெடுந்தூரம் கடந்து வந்ததுபோலிருக்கிறது. மகாபாரதத்தின் வான்தோய் உருவம் அச்சத்தை உருவாக்குகிறது. மாபெரும் கோபுரத்தில் ஏற ஏற பேருவம்கொண்ட அடித்தளச் சிற்பங்கள் சிறிய பாவைகளாக மாறுவதைக் காண்பதுபோல
முதற்கனல் மகாபாரதத்தின் அறச்சிக்கல்களை தொடங்கிவைத்த தொடக்கப்புள்ளியின் கதை. வள்ளுவர் மொழியில்
அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அற்றே
செல்வத்தைத் தேய்க்கும்படை
முகில்தொட்டு நின்ற மாடங்கள் கொண்ட அஸ்தினபுரியின் மாளிகை முற்றத்தில் விழுந்த முதல் கண்ணீர்த்துளியின் கதை இது. மகாபாரதத்தை ஆக்கிய அடிப்படை வன்மங்கள் முளைவிட்டெழுகின்றன. அநீதியிழைக்கப்பட்டவர்களின் கண்ணீர் காய்ந்து மறைவதேயில்லை.கண்ணீர்த்துளி ரத்தப்பெருக்காக மாறியதன் கதையே மகாபாரதம் எனலாம்.
ஆனால் அது அநீதியா என்பது மிகமிகச்சிக்கலான வினா. அது மகத்தான அறச்சிக்கலின் தருணம் என்று மட்டுமே சொல்லமுடியும். ஆகவேதான் மகாபாரதம் முடிவடையாத அறப்புதிர்களின் களமாக இன்றும் உள்ளது. அந்த களத்தைத் தொடங்கிவைக்கும் நாவல் இது
வடிவ அளவில் இது ஒரு முழுமையான தனிப்படைப்பு. இதன் மொழியும் கட்டமைப்பும் இதற்குள்ளேயே நிறைவை அடைகின்றன. ஆனால் வெண்முரசு என்றபேரில் நான் மகாபாரதத்தை விரிவாக எழுதிவரும் நாவல் தொடரின் தொடக்கநாவலும்கூட
இதிலுள்ள ஓவியங்கள் நண்பர் ஷண்முகவேல் வரைந்தவை. உதவியவர் ஏ.வி.மணிகண்டன். அவர்கள் இதன் இணை ஆசிரியர்கள் என்பதுபோல ஒரு தனியுலகை உருவாக்குவதைக் காணலாம். அவர்களுக்கு என் நன்றி.
இதன் ஆக்கத்தில் எப்போதும் துணைநின்றவர்களை நன்றியுடன் நினைக்க வேண்டியிருக்கிறது. நண்பர் சீனிவாசன் மற்றும் சுதா சீனிவாசன் இருவரும் இதை பிழைநோக்கி இணையத்தில் ஏற்றுவதை அர்ப்பண உணர்வுடன் செய்துவருகிறார்கள். நண்பர் ராமச்சந்திர ஷர்மா இணையதளத்தை சீராக நிர்வகிக்கிறார். எம்.ஏ.சுசீலா பிழைதிருத்ததில் உதவுகிறார். நண்பர் ஹரீஷ் வெண்முரசுக்கான இணையதள விவாதக்குழுமம் ஒன்றை நிர்வகிக்கிறார்.
தொடர்ந்து இந்நாவலை வாசித்து எனக்கு ஊக்கமாக இருந்து வரும் விஷ்ணுபுரம் அமைப்பின் நண்பர்களை நன்றியுடன் நினைத்துக்கொள்கிறேன். தொடர்ந்து இதை வாசித்துவரும் வாசகர்களுக்கும் என் நன்றிகள்
இதன் முதற்பதிப்பை செம்மையாக வெளியிட்ட நற்றிணை பதிப்பாளர் யுகன் அவர்களுக்கும் இப்போது பிரதிசெம்மை செய்த ஹரன்பிரசன்னாவுக்கும் பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரிக்கும் நன்றிகள்
இந்நாவலை எனக்கு குருவின் இடத்தில் இருந்து அருளும் இளையராஜா அவர்களுக்குச் சமர்ப்பணம் செய்திருக்கிறேன்.குருநாதர்கள் என்பவர்கள் பலராகத் தெரியும் ஒருவரே. குருவருள் துணைநிற்கட்டும்
ஜெயமோகன்
http://venmurasudiscussions.blogspot.in
http://venmurasu.in
[கிழக்கு பிரசுரமாக வரவிருக்கும் முதற்கனல் நாவலின் இரண்டாம்பதிப்புக்கான முன்னுரை]