உங்கள் மீதான தனிப்பட்ட தாக்குதல் உங்களைப் பலவீனப்படுத்துகிறதா?
— பாஸ்டன் பாலாஜி.
நீங்கள் செயல்படும் துறையில் குறைந்தது ஆறுமாதம், உண்மையென மனதில் பட்ட விஷயங்களை அவ்வக்கணங்களிலேயே எங்கும் எதற்கும் தயங்காமல் சொல்லிப்பாருங்கள். என்ன நிகழும்? நீங்கள் உங்களைச் சூழ்ந்துள்ளவர்களால் அஞ்சப்படுவீர்கள்; வெறுக்கப்படுவீர்கள். உங்களைப்பற்றிய வசை, அவதூறு வந்தபடியே இருக்கும். நான் இலக்கியத்தில் மட்டுமே கூடுமானவரை உண்மையைச் சொல்வது என்ற நெறியை இறுக்கமாகக் கடைப்பிடிக்கிறேன். அன்றாட விஷயங்களில் நுட்பமான விலகலும் மௌனமுமே. ஆகவே இலக்கிய உலகில் இந்தத் தாக்குதல்கள், அவதூறுகள் வருகின்றன. ஆனால் நான் செயல்படும் இன்னொரு தளத்தில், அன்றாட தொழிற்சங்க நடவடிக்கைகளில் நான் அனைவராலும் மிகமிக மதிக்கப்படுகிறவன்.
ஆக, இங்கே பிரச்சினை உண்மையைச் சொல்லத்துணிவதே. அது நானே தெரிவுசெய்துகொண்டது. அதுதான் என் தகுதியையும் முக்கியத்துவத்தையும் உருவாக்குகிறது. ஆகவே தாக்குதல்களும் அவதூறுகளும் எந்தவகையான சோர்வையும் உருவாக்குவது இல்லை. 1990ல் என் முதல் கதை வெளிவந்த நாள்முதல் இது நடக்கிறது. ஒவ்வொரு காலத்திலும் என்மீது கடுமையான தாக்குதல்களை எழுத என்று சிலர் செயல்பட்டுள்ளனர். நான் சோர்வுற்றிருந்தால் இத்தனை ஊக்கத்துடன் எழுதியிருக்க இயலாது. ஹோமியோபதி மருந்துக்களுக்கு ஒருவிதி உண்டு. மருந்து உள்ளே சென்றதும் நோய் அடையாளங்கள் தீவிரப்படவேண்டும். அப்போதுதான் மருந்து வேலை செய்கிறது என்று பொருள்.
அதே சமயம் ஒன்று உண்டு. எழுத்தாளன் அல்லது அரசியல்வாதியின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிப் பேசக்கூடாது என நான் நினைக்கவில்லை. அவனைப்பற்றி பேசினால் அதுவும் பேசப்படவேண்டும். மனித மனம் அவ்வாறு தனிவாழ்க்கை பொதுவாழ்க்கை என பிரித்துக்கொள்வது இல்லை. ஜானகிராமனுக்கு சாப்பாடும் சங்கீதமும் பெண்களும் பிடிக்கும் என்றால் அது கதையில் வெளிப்படுகிறது. நேருவுக்கு பெண்மோகம் அதிகம் என்றால் அது அவரது அரசியலின் ஒரு நிர்ணாயகக் கூறுதான். மார்க்ஸுக்கு ஹெலன் டெமுத்துடனான உறவு அவரில் செயல்பட்ட நுட்பமான ஆண்டான்மனநிலைக்குச் சான்று, மார்க்ஸியம் அதை கருத்தில்கொள்ளாமல் விவாதிக்கப்பட்டால் முழுமையாகாது. காந்தியைப்பற்றி எழுதியபோது நான் மீரா பென் விஷயத்தைக் கூர்ந்து அவதானித்தேன்.
அதே விதிகள்தான் எனக்கும். நான் உறுதியான ஒழுக்கவாதி. ஆகவே என் ஒழுக்கம் என் சொந்த விவகாரமல்ல, பொதுவிஷயம்தான். அதை எவரும் விமரிசிக்கலாம், விவாதிக்கலாம். என் சொல்லுக்கும் செயலுக்கும் இடையே முரண்பாடு இருந்தால் சொல்லலாம். ஆனால் அவையெல்லாமே என் ஆளுமையை மதிப்பிடும் பல விஷயங்களுள் ஒன்றாக இருக்குமே ஒழிய என் மீது எதிர்த்தீர்ப்புச் சொல்வதற்கான இறுதிக் காரணமாக இருக்கக் கூடாது.