கர்மயோகம் : (25 – 30)

25

பரத குலத்தில் உதித்தவனே
அறிவற்றவர்
செயலில் பற்றுள்ளவராக
செயலாற்றுவது போல
அறிவுள்ளவன்
பற்றற்று
உலக நன்மை கருதி
செயலாற்ற வேண்டும்.         

26

அறிவுடையவன்
செயலில் பற்றுடன் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்
அறிவிலாதோரிடம்
அறிவுக் குழப்பத்தை உருவாக்கலாகாது
விவேகமுடையவன்
அனைத்தையும் சிறப்புற ஆற்றி
பிற செயல்களையும்
செய்விக்க வேண்டும்.        

27

இயற்கையின்
குணங்களால்தான்
எல்லாவகையான செயல்களும்
நிகழ்கின்றன.
ஆணவத்தால் அறிவிழந்தவர்கள்
அவற்றை தாங்கள் செய்வதாக
எண்ணிக் கொள்கிறார்கள்          

28

வலிமையான தோள் கொண்டவனே
இயல்பு, செயல் என்னும்
பிரிவினையின் இயல்பறிந்தவன்
இயல்புகள்
இயல்புகளில் உறைகின்றன
என்று அறிந்து
செயல்களில் பற்று கொள்வதில்லை   

29

இயற்கையின்
இயல்புகளைப் பொறுத்தவரை
மூடர்கள்
இயல்புகள் செயல்கள் ஆகியவற்றை
ஒட்டி நிகழ்வனவற்றில்
விருப்பு வெறுப்பு கொள்கிறார்கள்
தத்துவ ஞானமில்லாத
அந்த மூடர்களை
அறிவுடையவன்
சஞ்சலப்படுத்தலாகாது. 

30

எல்லா செயல்களையும்
என்னிடம் ஒப்படைத்துவிட்டு
தன்னைப்பற்றிய விழிப்படைந்து
பற்றற்று
விருப்பற்று
துயரமறுத்து
போர் புரிக.  

உலகியலில் செயலாற்றுதல்

இருபத்தைந்து இருபத்தாறாவது பாடல்கள் முதிர்ந்த லெளகீக ஞானியால் கூறப்பட்டவைபோல ஒலிக்கின்றன. செயலில் மிகுந்த பற்றுடையவர்களாக லெளகீகர்கள் செயலாற்றுகிறார்கள். வேதாந்த ஞானம் பெற்றவன் செயலாற்றும் போது அவனுக்கும் ஒரு லெளகீகனுக்கும் இடையேயான வேறுபாடு என்பது அவனுக்கு செயலில் பற்றில்லை என்பது மட்டுமாக இருக்கவேண்டும். மற்றபடி வேகம், அர்ப்பணம், உணர்வுரீதியாக ஈடுபாடு அனைத்துமே லெளகீகனுக்கு நிகராக இருக்கவேண்டும் என்கிறான் கண்ணன்.

ஆச்சரியமான கீதை வரி இது. பல கீதை உரைகளில் இது இயல்பாக கடந்து செல்லப்படுகிறது. பற்றிலாது யோகி ஆற்றும் செயல்தானே உயர்ந்தது? அதில் சமநிலை உண்டு. எனவே விவேகம் உண்டு. அது அத்துமீறாது. பதறாத காரியம் சிதறாது என்பதற்கு உதாரணம் அது. பற்றுள்ளவன் செய்யும் செயல்கள் உணர்ச்சிகரமான ஈடுபாடுகளினால் சிதறிப் போகவே வாய்ப்பதிகம். ஆனால் இங்கே பற்றுள்ளவனின் செயல்போல இருக்க வேண்டும் யோகியின் செயல் என்று கூறுகிறது கீதை! ஏன்?

ஏற்கனவே கூறப்பட்ட உதாரணத்தையே பார்ப்போம். அறுவை சிகிச்சை மேடையில் கிடக்கும் நோயாளி மீது அறுவை நிபுணருக்கு உணர்வுரீதியான பற்று இருந்தால் அவரது கை நடுங்கும். மனம் பதறும். அவரால் பணியாற்ற முடியாது. ஆகவே அந்தப் பற்றில்லாத ஒருவர் அதைச் செய்வதே முறை. அதுவே பற்றற்ற யோகியின் செயலுக்கு உதாரணம். ஆனால் அந்த அன்னிய அறுவை சிகிச்சையாளன் அச்சிகிச்சையை எப்படிச் செய்ய வேண்டும்? மேடையில் கிடப்பவன் தன் மகன் என்றால் அவன் எத்தனை அர்ப்பணிப்புடன் செய்வானோ அதே தீவிரத்துடன் செய்யவேண்டும். அந்த உண்மையும் வெறியும் அவனில் கூட வேண்டும். அதுதான் இச்செய்யுளில் கூறப்படுகிறது.

பலவாறாக விவாதிக்கப்பட்ட 26ஆவது பாடலும் முதிர்ந்த லெளகீகப் பார்வையில் இருந்தே கூறப்படுகிறது. இத்தகைய லெளகீகமான விவேகங்களை விவாதிப்பதில் பொருளில்லை. நமது நடைமுறை அனுபவங்களை வைத்துப் புரிந்து கொள்வதே சிறந்ததாகும். இந்த வரிகளில் கீதாசாரியன் பெரும்பற்றுடன் செயலாற்றும் அஞ்ஞானிகளிடம் முற்றுணர்ந்தவன் பற்றிலாச் செயலை உபதேசம் செய்து அவர்களிடம் குழப்பத்தையும் மனத்திரிபையும் உருவாக்கக்கூடாது என்கிறார். தகுதி படைத்த யோகி தான் உத்தேசிக்கும் செயலை முன்னின்று தாமே செய்ய வேண்டும். பிறரை அச்செயலில் ஈடுபட செய்து அவர்களை சிறப்பாக செயலாற்றவும் வைக்க வேண்டும்.

ஒரு கோணத்தில் ஞானம் இல்லாதவனுக்கு அந்த ஞானத்தை அளிக்கக்கூடாது என்று கூறுகிறது இந்தச் செய்யுள்! ஞானத்தை பிறரிடம் பகிர்ந்து கொள்வதுதானே சிறந்தது? பிறரை அந்த ஞானம் நோக்கி கொண்டு வருவதுதானே ஒரு ஞானியின் கடமையாக இருக்க முடியும்? இந்தப் பாடல் கூடாது என்று விலக்கவில்லை என்பதைக் கவனியுங்கள். இது அதனால் பயனில்லை என்றே கூறுகிறது. அதன் விளைவாக மனத்திரிபே நிகழும் என்று கூறுகிறது.

அதாவது பற்றற்று செயலாற்றுவது யோகம். அந்த யோகம் நோக்கி வருவதற்கான மனத்தயாரிப்பு உள்ளவர்களிடம் அதைப்பற்றி கூறினால் மட்டுமே அது புரிந்து கொள்ளப்படும். ‘உனக்கு எதுவுமே வேண்டாம், ஆனாலும் நீ செயலாற்று’ என்று சாதாரண மனிதரிடம் கூறினால் ‘நீ பணியாற்று, அதன் பயன் உனக்கு கிடைக்காது’ என்று கூறுவதாக மட்டுமே அவரால் பொருள் கொள்ளப்படும்.

ஐயமிருப்பின் ‘கர்மண்யே வாதி காரஸ்தே நா பலேஷ¥ கதாசன’ என்ற கீதை வரி இன்றுவரை பொதுப்புத்தித்தளத்தில் எப்படி பொருள் கொள்ளப்பட்டிருக்கிறது என்று பாருங்கள். பெரும்பாலும் ‘வேலை செய், கூலி கேளாதே’ என்று கிருஷ்ணன் கூறுவதாகவே அது புரிந்து கொள்ளப்படுகிறது. ஆகவேதான் இந்த விவேகம் அனைத்து மனிதர்களுக்கும் உரியதல்ல கர்மயோகிக்கு மட்டுமே உரியது என்று கீதை கூறுகிறது.

சாங்கியயோகம் பயிலும் போது வந்த முக்கியமான ஐயத்திற்கும் இங்கே பதில் வருவதாகக் கூறலாம். கிருஷ்ணன் அர்ஜூனனுக்கு போர் புரிவதற்கான தூண்டுதல் அளிக்கும் பொருட்டு முதலில் கூறுவதெல்லாம் லெளகீக இலாபங்களைப் பற்றி மட்டுமே. செல்வம், அதிகாரம், அரச போகங்கள், வீரன் என்ற கெளரவம், வரலாற்றில் பெரும் புகழ் இவையெல்லாம் கிடைக்கும் ஆகவே போர் புரிக என்கிறான். அதே வாயால் பயனைக் கருதாது போர் புரிக என்று பிற்பாடு கூறுகிறான். ஏன்?

அதற்கான விளக்கம் இதுதான், ஒரு லெளகீகனுக்கு செயல்புரிவதற்கான முழுமுதல் ஊக்கம் லெளகீக லாபங்களே. அதை அவன் விரும்பக் கூடாது என்று அவனிடம் கூறுவது அவனுக்கு புத்திபேதத்தையே உருவாக்கும். ஆகவேதான் கிருஷ்ணன் லெளகீக இலாபங்களுக்காகப் போர்புரிக என்கிறார். பற்றற்ற செயலைப்பற்றி அர்ஜூனனிடம் எதுவும் பேசவில்லை. ஆனால் தன் தொடர்ந்த வினாக்கள் மூலம் ஒரு யோகிக்கான அடிப்படை இயல்புகளை அர்ஜூனன் வெளிப்படுத்தியமையால்தான் மேற்கொண்டு பற்றில்லாத செயல் குறித்து கிருஷ்ணன் பேச ஆரம்பிக்கிறார்.

அப்படியானால் பிழையான நிலையில் வாழ்ந்து கொண்டு பற்றுடன் செயலாற்றும் லெளகீகனுக்கு எப்படி மீட்பு வரும்? அவனிடம் அவனுடைய துயரங்களின் ஊற்று எது என்று யார்தான் கூறுவார்கள்? அவன் எப்படி தன்னைப் பிணைத்திருக்கும் அறியாமையைப் பற்றிய முதல் பிரக்ஞையை அடைவான்?

அந்த வினாவுக்கு தன் உரையில் நித்ய சைத்தன்ய யதி பதில் அளிக்கிறார். இமானுவேல் கான்ட்டின் ஒரு வரியை நித்யா மேற்கோள் காட்டுகிறார். ‘முடிவின்மை வரை திரும்பத்திரும்பச் செய்வதற்கு சாத்தியமான ஒன்றுதான் ஒழுக்கமானது. ஒரே மனிதர்களால் ஒரே இடத்தில் முடிவிலாது திரும்பத் திரும்ப செய்ய முடியாதது எதுவோ அதுவே ஒழுக்கமற்றது’. பற்றுடன் ஒரு செயலைச் செய்பவன் இயல்பிலேயே நுண்ணுர்வும் சிந்தனைத் திறனும் உடையவன் என்றால் அதை மீண்டும் மீண்டும் செய்ய முடியாது என்று அவனே உணர்வான். அது பிழை என்று தெரிந்ததும் எது சரி என்ற வினா அவனுள் எழும். அவனே பற்றில்லாத செயலை ஆற்றத் தகுதி உடையவன் ஆகிறான்.

இயற்கையே செயலாகிறது

 

இருபத்தேழாம் பாடலிலும் பிறகு வரும் பாடல்களிலும் கீதை சாங்கியத்தின் அடிப்படையான தரிசனத்தை கையாள்கிறது. நினைவுகூர்க, பிற்பாடு கபிலரால் ஒருங்கிணைக்கப்பட்டு ஆறு தரிசனங்களில் மையமானதாக ஆன சாங்கிய தரிசனத்தின் தொடக்க கால வடிவமே இங்குப் பேசப்படுகிறது.

சங்கிய தரிசனத்தின்படி பிரபஞ்சத்தில் உள்ள எல்லா செயல்களும் இயற்கையின் இயல்பாக உள்ள சத்வம், ராஜஸம், தமஸ் என்ற மூன்று குணங்களின் விளைவாகவே நிகழ்கின்றன. ஆதி இயற்கையில் (மூலப்பிரகிருதி) இந்த மூன்று குணங்களும் பரிபூரணமான சமநிலையில் இருந்தன. ஆகவே அதில் செயல் இல்லை. செயல் செயலுக்கான ஒரு சாத்தியமாக மட்டுமே உறைந்திருந்தது என்று தத்துவார்த்தமாகக் கூறலாம்.

அந்தச் சமநிலை ஏதோ காரணத்தால் எப்போதோ குலைந்தது. சமநிலையை திரும்ப அடையும் பொருட்டு மூலபிரகிருதி தன்னை பலவாக பிரித்துக் கொண்டது. இயற்கையின் ஒவ்வொரு கூறும் ஒவ்வொரு வகை தன்னிலை கொண்டது. சிலவற்றில் தமோகுணம் மிகுந்திருக்கும். சிலவற்றில் ரஜோ குணம் மிகுந்திருக்கும். இந்தக் கூறுகள் ஒன்றுடன் ஒன்று பிணைந்து இணைந்து விலகி உருவாகும் கோடானுகோடி சாத்தியக் கூறுகளினால்தான் இந்தப் பொருள்வய பிரபஞ்சம் நாம் காணும்படி உருவாகியிருக்கிறது. இங்கு நிகழும் எல்லா செல்களும் அந்த பரிபூரண சமநிலையை மீண்டும் அடையும் பொருட்டு இயற்கை தனக்குத்தானே நிகழ்த்திக் கொள்பவையே.

பிரபஞ்சத்தில் நிகழும் செயல்களை இங்கே கடவுளின் லீலை என்று கீதை கூறவில்லை என்பதை கவனிக்கவும். முற்றிலும் பொருள் முதல்வாத விளக்கமாகிய சாங்கிய தரிசனத்தின் பார்வையையே அதுவும் கூறுகிறது. இயற்கையின் குணங்களால் எல்லா செயல்களும் நிகழ்கின்றன. தன்னை இயற்கையின் ஒரு எளிய கூறாக கருதாமல் விலக்கிப் பார்க்கும் அகங்காரம் கொண்டவன் அதை தன் செயலாகப் பார்க்கிறான். அவனை கீதை ‘விமூடாத்மா’ என்று நிராகரிக்கிறது.

சாங்கியத்தின் பிரபஞ்ச தத்துவத்தையே மீண்டும் விரிவாக்குகிறது கீதையின் அடுத்த செய்யுள். பிரபஞ்சத்தின் இயக்கத்தைத் தீர்மானிக்கும் குணங்கள் எங்கு எவ்வாறு உள்ளன? ‘குணா குணேஷ¥ வர்தந்தே’ என்கிறது கீதை. குணங்கள் குணங்களிலேயே உறைகின்றன. குணங்கள் எவற்றில் இருந்தும் தோன்றியவை அல்ல. அவற்றின் தொடக்கமும் முடிவும் இயல்பும் அவற்றிலேயே உள்ளன.

சாங்கிய தரிசனம் அடிப்படையான இரு கேள்விகளுக்கு இந்தப் பதிலையே அளிக்கிறது. ஆதி இயற்கை எதிலிருந்து எவ்வாறு தோன்றியது? அது எதிலிருந்தும் தோன்றவில்லை. வேருக்கு வேர் தேவை இல்லை. அது என்றும் இருந்துகொண்டிருப்பது அழியாதது. காலதீதமானது. சரி, அதில் உறையும் முக்குணங்கள் எப்படி உருவாயின? எப்படி நீடிக்கின்றன? அதற்கும் அதுவே பதில் அக்குணங்கள் தங்கள் குண இயல்பால் அறியப்படுபவை. இயல்பாக இருந்து கொண்டிருப்பவை. காரண காரியத்திற்கு அப்பாற்பட்டவை. அந்த பதிலையே இங்கு கீதை கூறுகிறது.

இயற்கையின் குணங்களால் பிரபஞ்சத்தில் செயல்கள் நிகழ்கின்றன. அக்குணங்கள் அக்குணங்கள் மூலமே அறியப்படத்தக்கவை, அக்குணங்களாகவே வெளிப்படபவை, ஆகவே அனாதியானவை என்கிறது கீதை. ஆகவே இப்பிரபஞ்சத்தின் நிகழ்வுகளுக்கு நாமறியும் அர்த்தம் என ஏதுமில்லை. அது நம்மை மீறி நமக்கு அப்பால் தன்னிச்சையாக  நிகழ்கிறது. இந்தப் பிரபஞ்ச யதார்த்தம் அறிந்த யோகி செயல்களில் பற்று கொள்வதில்லை.

வெறும் தத்துவ வரியாக இல்லாமல் இதை கொஞ்சம் கற்பனை செய்து அனுபவமாக விரித்துக் கொள்ள முடியும். இப்பிரபஞ்சத்தில் உள்ள செயல்கள் ஒவ்வொன்றும் இன்னொன்றுடன் தொடர்பு கொண்டவை.  உதாரணமாக, நம்முடைய பால்வீதியில் சூரியனுக்கு பக்கத்தில் இருக்கும் ஒரு நட்சத்திரம் சூரியனுடன் நாம் அறிய முடியாத அளவுக்கு சற்றே நெருங்குகிறது. விளைவாக சூரியனின் சுழற்சியில் ஒரு சிறு மாற்றம் நிகழ்ந்து அதன் அனல் பரப்பில் காந்தபுயல் ஒன்று அடிக்கிறது.

விளைவாக பூமத்திய ரேகையில் அதிகமான வெயில் அடிக்கிறது. ஆகவே பெரும் மேகம் திரண்டு கங்கை சமவெளியில் மழை கொட்டுகிறது. உத்தரப்பிரதேசத்தில் வெள்ளம் பெருகுகிறது. அங்கு ஒரு கிராமத்தில் சில நூறு பேர் சாகிறார்கள். அதில் ஒரு குழந்தை அப்போதுதான் பிறந்தது. அந்த தாய் பத்துமாதம் அதைச் சுமந்து பெற்றுவிட்டு கையில் கூட எடுத்துப் பார்க்கவில்லை.

அந்த தாய் இந்தக் குழந்தை கருவுற்று பிறந்து உடனே வெள்ளத்தில் இறந்தமைக்கான காரணத்தை யோசித்தால் அது எங்கே போய் நிற்கும்? அந்த பக்கத்து நட்சத்திரம் சூரியனை நெருங்கியமைக்குக் காரணம் நம் பால் வழியில் உருவான ஒரு சிறு நெருக்கம். காரணம் அது பக்கத்து பால் வழியுடன் கொண்ட உறவு. அது நிகழ்ந்தமைக்கு காரணம் இந்தப் பிரபஞ்சத்தில் நிகழ்ந்த ஓர் அதிர்வு… இப்படி முடிவில்லாமல் அது போகும் அல்லவா?

ஆம், பிரபஞ்சச் செயல்களுக்கு காரணமாக உள்ள இயற்கையின் அலகிலா விளையாட்டு என்பது நம்முடைய தர்க்கத்திற்கு முற்றிலும் அப்பாற்பட்டது. அந்த உத்தரபிரதேசக் கிராமத்தில் ஒரு உயிர்காப்பீட்டு ஊழியன் இருந்தான். அந்தக் குழந்தைக்கு ஒரு காப்பீடு எடுக்க வைத்துவிட வேண்டும் என்று அவன் ஆறுமாதமாகவே குழந்தையின் பெற்றோரிடம் பேசிக் கொண்டிருந்தான். அவ்விரவில் அந்த திட்டம் முறிந்து போய்விட்டது. காரணம் அந்தத் திட்டத்தை முறியடிப்பதற்கான முன் செயல்பாடுகள் ஆறு கோடி வருடம் முன்பே ஆரம்பித்துவிட்டன.

இப்பிரபஞ்சத்தில் நம்முடைய செயல்பாடுகள் இப்படி நம்மால் நினைத்தறிய முடியாத ஒரு மாபெரும் வலையின் பகுதிகளாக உள்ளன. இதை வாசிக்கும்போது நீங்கள் காலை தூக்கி வைக்குமிடத்தில் நசுங்கிச் சாகப்போகும் எறும்பு உக்கிரமாக உழைத்து ஒரு செத்த பூச்சியை இழுத்து நாளைக்கான உணவாக கொண்டு சென்று கொண்டிருக்கிறது. குண- கர்ம உறவின் தத்துவம் அறிந்தவன் இந்த வலையை அறிந்தவன். ஆகவே இதில் தன் இடம் என்ன என்று அவன் தெரிந்திருப்பான். ஆகவே அவன் செயலாற்றுவான், அச்செயலில் உள்ளூர பற்று கொள்ளவும் மாட்டான் – அதுவே இங்கு கீதை கூறும் கொள்கை.

குணமும் கர்மமும், ஒரு விவாதம்

இங்கே ‘குணகர்ம விபாக’ என்ற சொல்லாட்சி வருகிறது. இதை சதுர்வர்ணம் மயாசிருஷ்டம் குணகர்ம விபாகச’ என்ற சாங்கிய யோகத்தின் செய்யுளுடன் இணைத்து பொருள் கொள்ளும் வழக்கம் சில உரைகளில் உள்ளது. இந்த இடத்தில் அப்படிப் பொருள் கொள்ள இடமிருக்கிறதா என்றால் முற்றிலும் இல்லை. இங்கு குணசெயல் உறவு என்பது சாங்கியதரிசனத்தின் அறிதலாகவே முன்வைக்கப்படுகிறது.

ஆனால் இந்தப் புரிதலை அந்த முந்தைய செய்யுளின் பொருள் மீது ஏற்றி விரித்தெடுக்கலாம். ‘நான்கு வருணங்களும் என்னால் உருவாக்கப்பட்டன. குணங்கள் மற்றும் செயல்களின் அடிப்படையில்’ என்ற வரியில் உள்ள குண-கர்ம தொடர்புக்கு சாங்கிய விளக்கம் அளிக்கலாம் மனிதர்கள் அவர்களின் இயல்பு காரணமாகவே நான்கு வர்ணங்களாக உள்ளனர். அந்த இயல்புகளைத் தீர்மானிப்பது அவர்களிடம் உள்ள சத்வ, ரஜோ, தமோ குணங்கள். அந்தக் குணங்கள் எப்ப்டி அமைகின்றன என்றால் அது ஆதி இயற்கையின் இயல்பு என்று கீதை பொருள் கூறுவதாக விளக்கலாம்.

குணங்கள் ஏன் அப்படி இருக்கின்றன என்றால் ‘குணோ குணேஷ¥ வர்தந்தே’ என்று பதில் கூறலாம். ஒரு மனிதன் எதிர்மாற்றப் பண்புடன் தமோ குணத்துடன் ஏன் காணப்படுகிறான் என்றால் அந்தக் குணம் இயற்கையில் இருக்கிறது என்பதனாலேயே என்று பதில் கூறலாம். அந்தக் குணம் அவனிடம் இருப்பதனாலேயே அவன் இழிந்த வர்ணத்தவன்.

அனால் இந்த விளக்கம் சற்று வலிந்து கூறப்படும் ஒன்று என்பது என் எண்ணம். நான் ஏற்கனவே கூறியபடி கீதையின் அந்தப் பகுதி காலத்தால் பிற்பட்டது. கீதையை நாம் இன்று காணும் புனைவு வடிவுக்குக் கொண்டுவரும் பொருட்டு எழுதப்பட்டது. மாறாக இந்தப் பகுதி தொன்மையானது. கபிலனின் சாங்கிய காரிகைக்கும் முற்பட்ட ஒரு வேதாந்த நூலின் பகுதி இது. யாதவ மன்னாகிய கிருஷ்ணனால் எழுதப்பட்டது. தரிசனங்களிலும் விவரணைகளிலும் கீதையில் இவ்விரு பகுதிகள் நடுவே ஒரு வேறுபாடு, சில சமயங்களில் முரண்பாடுகள் கூட, காணப்படும். அதை கணக்கில் கொண்டே நாம் இந்தப் பகுதிகளைப் பொருள் கொள்ள வேண்டும்.

இயற்கையில் முக்குணங்கள் அமைந்திருக்கும் அனாதியான இயல்பு அவை இயைந்தும் விலகியும் உருவாகும் பிரபஞ்சப் பேரியக்கம் ஆகியவற்றை உணர்ந்து, தன் இடம் என்ன என்று அறிந்து தெளிவடையாமல் இருப்பவர்கள் தங்களில் ஓங்கியிருக்கும் குணங்களுக்கு ஏற்ப அதற்கான செயல்களில் பெரும் பற்று உடையவர்களாக இருக்கிறார்கள் என்று கீதை கூறுகிறது.

இதை நடைமுறையில் இருந்து விரித்துப் பொருள் கொள்ளலாம். ஒருவன் தன்னியல்பாகவே குற்றம் சார்ந்த, வன்முறை சார்ந்த செல்களில் ஈடுபடுகிறான். ஏன் என்றால் அவனிடம் ஓங்கியிருக்கும் தமோ குணமும் அதனுடன் இணையும் ரஜோ குணமும் அவ்வாறு அவனைச் செய்ய வைக்கின்றன. அக்குணங்கள்தான் அச்செயலை தேர்ந்தெடுக்கின்றன. அதில் அவனுக்கு வேறு தேர்வே இல்லை. இரண்டு வாய்ப்புகள் இருந்தால் அதில் எது வன்முறையம்சம் உடையதோ அதையே அவன் தெரிவு செய்வான். அதற்கான காரணத்தை அவன் அறிவதில்லை. அதுவே சரி என்று நினைப்பான். அதைத் தெரிவு செய்வது தன்னுடைய புத்தியே என்று நம்புவான்.

ஆனால் தன்னை உணர்ந்தவன் தனக்குள் செயல்படும் இயற்கையின் முக்குண விளையாட்டைப் புரிந்துகொள்வான். அந்த குணங்களே இந்தக் கர்மங்களைச் செய்கின்றன என்ற தொடர்பை உணர்ந்து கொள்வான். இதையே கீதை முந்தைய பாடலில் ‘குணகர்ம விபாக’ என்று கூறியது. இவ்வாறு குணங்கள் தங்கள் இயல்பான முரணியக்கம் மூலம் செயல்களை நிகழ்த்துவதைப் புரிந்து கொண்டவன் அது இயற்கையின் அலகிலா விளையாட்டின் ஒரு சின்னஞ்சிறு பகுதி மட்டுமே என்று புரிந்து கொள்வான்.

அவனுக்கு அதன் மூலம் செயல்களின் விளைவுகள் மீது பற்று இல்லாமலாகிறது. ஏனென்றால் செயலாற்றுவது அவனல்ல, அவனில் உள்ள குணங்கள். செயல்களின் விளைவுகளை நிகழ்த்துவதும் முக்குணங்களின் முடிவிலா ஆட்டமாகத் திகழும் பேரியற்கைதான். ஆகவே செயல்களில் பற்று வைப்பதில் அர்த்தமே இல்லை. அவனுடைய விருப்பு வெறுப்புகளுக்க அப்பாற்படடது அது. அதை உணர்ந்த அவன் பற்றிலாது செயலாற்ற கற்றுக்கொள்வான்.

இவ்வாறு இயற்கையை அறிந்தவனை கீதை ‘கிருத்ஸ்னவித்’ என்கிறது. அறிந்தவன், உணர்ந்தவன் என்ற அச்சொல்லுக்குப் பொருள். சரியான சொல் பொருள் ‘செயலறிந்தவன்’ என்பதாகும். என்ன செய்வதென அறிந்தவன், செயல் என்றால் என்ன என்று அறிந்தவன் அவ்வாறு அறியாதவனை ‘அகிருத்ஸ்னவித்’ என்று நேர் எதிர்பதமாக கூறுகிறது கீதை. செயலை அறிந்தவன் செயலின் ரகசியம் அறியாதவனை கலைத்து குழப்பக்கூடாது என்கிறது கீதையின் இப்பாடல்.

இரு பாடல்கள் வழியாக கீதை வலியுறுத்தும் மையமான விஷயம் இதுவே. ஒருவன் தன்னை அறிந்து தன்னுள் செயல்படும் முக்குணங்களையும் அவற்றின் விளைவாக உருவாகும் செயல்களையும் புரிந்துகொள்ளலாம். அவன் தன்னை அறியாமல், தன் குணங்களை அறியாமல், செயல்களில் பெருவிருப்புடன் ஈடுபடுபவனை திருத்த முடியாது. குழப்ப மட்டுமே முடியும். அவனே தன்னை அறிதலின் முதல் வினாவை கேட்டுக்கொண்டான் என்றால் அடுத்த அறிதல்களுக்கு அவனே இயல்பாக வந்துவிட முடியும். தன்னை உணராதவன் மனம் அகங்காரத்தால் மூடப்பட்டிருக்கும். அத்துடன் உரையாடவே இயலாது.

முப்பதாவது செய்யுளில் கீதையுன் இன்னொரு மையச் செய்தி மீண்டும் வருகிறது. இது அடிக்கடி வேறு வேறுவகையில் கீதை முழுக்க வந்து கொண்டே இருப்பதுதான்.எல்லா செயல்களையைம் என்னிடம் விட்டுவிட்டு, விருப்பு வெறுப்புகள் .இல்லாமல் போரைத் தொடர்க என்கிறான் கண்ணன். இச்செய்யுளில் கவித்துவமாக கவனிக்கப்படவேண்டிய வரி ‘ஆசையும் ஈடுபாடும் இல்லாதவனாக’ என்று கிருஷ்ணன் கூறுவததே

‘நிராஸா நிர்மம:’ என்ற சொற்களின் மேலெழுந்தவாரியா¡ன பொருள் ஒன்றே. ஆசை, மமதா (தமிழில் மமதை என்ற சொல்  ஆணவம் என்ற பொருளில் வருகிறது. சமஸ்கிருதத்தில் பிரியம் ஈடுபாடு என்றுபொருள்) இரண்டையும் ஏன் இங்கே தொடர்ச்சியாகக் கூறுகிறது கீதை?

யோசிக்கையில் தோன்றுவது இதுவே. ஆசை என்பது விளைவைப் பற்றி எதிர்பார்ப்புடன் உருவாகும் ஈடுபாடு. வெல்வதற்கான ஆசை. துய்ப்பதற்கான ஆசை. மமதா என்பது இயல்பாக உருவாகும் ஈடுபாடு. அதற்குக் காரணம் ஏதுமில்லை. நம்முடைய உள்ளார்ந்த இயல்பு காரணமாக ஒன்றில் நம்முடைய மனம் படிகிறது. அதன் மூலம் நமக்கு எந்த விதமான பயனும் இல்லை என்றாலும், பயனில்லை என்று நமக்கே உறுதியாகத் தெரியும் என்றாலும் நாம் ஈடுபாடு கொள்வோம்.

ஒரு தொழிலில் நாம் காட்டும் ஈடுபாடு ஆசை. ஒரு கலையில் நாம் காட்டும் ஈடுபாடு மமதா. பொருளில் நாம் வைப்பது ஆசை. பெற்ற பிள்ளைகளில் நாம் வைப்பது மமதா. இரண்டையும் உதறிவிட வேண்டும்; இரண்டுக்கும் அப்பால் நின்று இந்த உலகில் செயல்பட வேண்டும் என்கிறது கீதை.

இச்செய்யுளை கவனிக்கும்போது கீதையின் கட்டுமானத்தில் உள்ள ஓர் அம்சம் தெளிவாகத் தெரிகிறது. ஒரு தூய வேதாந்த நூல் எப்படி ஒரு உபநிடதக் கட்டுமானத்திற்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறது என்பதுதான் அது. முந்தைய செய்யுள்களைப் பார்த்தால் அவை வேதாந்த ஞானியின் குரலில் ஒலிக்கின்றன. மிகுந்த நடைமுறை ஞானத்துடன் பேசுகின்றன சட்டென்று இச்செய்யுளில் கண்ணன் பரம்பொருளில் நிலையில் வந்து நின்று பேசுகிறான். இந்த தாவல் கீதை முழுக்க வந்து கொண்டே இருக்கும்.

மூவர் பார்வைகள்

சங்கர ராமானுஜ உரைகளில் கண்ணனை எப்படி எடுத்துக்கொள்வது என்ற இந்த வேறுபாட்டை நாம் காணலாம். சங்கரர் 25ஆவது பாடலுக்கு உரையமைக்கும் போது ‘என்னைப் போல நீயும் ஆன்ம தரிசனம் பெற்றால் கர்மம் செய்ய வேண்டிய தேவை இல்லை’ என்ற கிருஷ்ணன் அர்ஜூனனிடம் கூறுவதாக எழுதுகிறார். அதாவது ஆன்ம ஞானம் பெற்ற ஞானியாகவே கிருஷ்ணனை சங்கரர் காண்கிறார் – பரம்பொருளாக அல்ல. ராமானுஜர் இச்செய்யுளை இந்த எல்லைவரை கொண்டு சென்று வாசிப்பதில்லை.

அதேபோல சங்கரரின் உரையில் 27ஆவது பாடலின் உரைவிளக்கம் சாங்கிய தரிசன அடிப்படையில் அமைந்துள்ளது. ஆதி இயற்கையான முக்குணங்களின் சமநிலையில் உள்ளது, சமநிலை குலைந்ததனால் பிரபஞ்சச் செயல் தொடங்கியது. இதிவே குணங்களுக்கும் செயல்களுக்கும் இடையேயான உறவு இதையே ‘குணகர்ம விபாகச’ என்று கீதை கூறுகிறது என்பது சங்கரரின் கூற்று. சாங்கிய தரிசனத்தின் சாரமே இச்செய்யுள்களில் உள்ளது என்பதை மத்வாச்சாரியார் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. ராமானுஜர் அழுத்தம் தந்து பார்க்கவில்லை.

அதேபோல வேதாந்த மூவருமே தங்கள் உரைகளில் குண கர்ம விபாகயோ என்ற வரியை முன்பு சதுர்வர்ணம் குறித்து சொன்ன வரியுடன் எங்கும் தொடர்பு படுத்தவில்லை. அது பிற்காலத்திய உரையாசிரியர் சிலரது மனோதர்மமே ஆகும். இந்தச் சொற்களை முழுக்க முழுக்க பிரபஞ்ச குணங்கள் பிரபஞ்ச கர்மங்களை எப்படி தீர்மானிக்கின்றன என்றே சங்கரர், ராமானுஜர், மத்வர் மூவரும் ஆராய்கிறார்கள்.

மூன்று உரைகளிலும் சங்கரர் உரை சாங்கிய தரிசனத்தை முதன்மையாக கணக்கில் கொண்டு அதனடிப்படையில் உரை வகுக்கையில் பிறர் அதை கவனிக்கவில்லை என்பதற்கு அவர்கள் எழுதிய காலகட்டமே காரணம் என்று படுகிறது. சங்கரர் காலத்தால் மிக மூத்தவர். கிபி ஏழு அல்லது எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். ராமானுஜர் பதிமூன்றாம் நூற்றாண்டு. மத்வர் பதினான்காம் நூற்றாண்டு. இவர்களுக்கிடையே ஐந்நூறு முதல் எண்ணு¡று வருடங்களுக்கு மேல் கால இடைவெளி உள்ளது.

சங்கரரின் காலகட்டத்தில் இந்தியக் குருகுலக் கல்வி முறையில் சாங்கிய தரிசனம் முதன்மையாக கற்பிக்கப்பட்டது. நம்மைச் சூழ்ந்துள்ள இயற்கையைப் புரிந்து கொள்வதற்கான முக்கியமான ஞானமுறைமையாக அது கருதப்பட்டது. பெளத்தர்களுக்கும் அது முக்கியமானதாக இருந்தது. மாறாக ராமானுஜரின் காலகட்டத்தில் சாங்கியம் அதன் செல்வாக்கை இழந்து இந்து ஞான மரபின் ஒரு பாடத்திட்டப் பகுதியாக குறுகிவிட்டிருந்தது. மத்வரின் காலத்தில் அது இன்னும் சுருங்கி சில பழைய நூல்களாக மாறிவிட்டிருந்தது.

இந்த மாற்றம் எப்படி நிகழந்தது? சங்கரரின் காலகட்டத்தில் தத்துவமே இந்து ஞானமரபில் மையப் பெரும் சக்தியாக இருந்தது. ராமானுஜரின் காலகட்டம் வரும்போது நடுவே பக்தி .இயக்கம் முழு வேகத்துடன் எழுந்துவிட்டிருந்தது. சைவ, வைணவப் பெரு மதங்கள் பிரம்மாண்டமாக உருவாகி விட்டிருந்தன. தத்துவம் மேலோங்கி இருந்த காலகட்டத்தில் பிரபஞ்சமெனும் பேரியக்கத்தை கடவுளின் துணை இல்லாமல் பிரபஞ்சத்தின் கட்டமைப்புக்குள்ளேயே வைத்து விளக்க முயலும் பொருள்முதல்வாத (ஜடவாத) தரிசனமாகிய சாங்கியம் செல்வாக்குடன் இருந்தது இயல்பே.

பக்திஇயக்கம் ஆரம்பித்ததுமே பிரபஞ்சப் பேரியக்கதிற்கு காரணமாக பரம்பொருள் இருப்பதாக பெருமதங்கள் வாதிட்டன. அந்த வாதகதிக்கு ஆதாரமாக அவை சாங்கிய தரிசனத்தில் உள்ள புருஷன் என்ற கோட்பாட்டை விரித்தெடுத்து பரமபுருஷன் என்று ஆக்கி அதுவே பரம்பொருள் என்று காட்டின. இவ்வாறு கடவுள் சேர்க்கப்பட்ட சாங்கியம் ஸேஸ்வர சாங்கியம் என்று கூறுப்பட்டது. (ஸ+ஈஸ்வர சாங்கியம்) இந்த சாங்கியம் படிப்படியாக முனை மழுங்கி பெருமதங்களின் இறைக்கோட்பாட்டின் ஒரு நீட்சியாக மாறி முக்கியத்துவம் இழந்தது.

மத்வரும் ராமானுஜரும் பார்ப்பது இப்படி வீரியமிழந்த சாங்கியத்தை. சங்கரர் பார்ப்பது உயிர்ப்புடன் விளங்கிய அசலான சாங்கிய தரிசனத்தை. அதே சமயம் கீதை பேசுவதோ சாங்கியம். முழுமையாக தொகுக்கப்படுபவதற்கும் முந்தைய தரிசன மூலத்தை. சங்கரருக்கும் பத்து நூற்றாண்டுகளுக்கு முன்பு கீதையின் இன்றைய வடிவம் உருவாகியிருக்கலாம். பதினைந்து நூற்றாண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணன் எழுதிய வடிவம் இருந்திருக்கலாம். கீதையை விளக்கும் போது ஒவ்வொருவரிடமும் வேறு வேறு சிந்தனைகளின் ஆதிக்கம் தெரிவதற்கு இதுவே காரணம்.

முந்தைய கட்டுரைகும்பமேளா – 2
அடுத்த கட்டுரைகும்பமேளா – 3