20 ஜனகன் முதலானோர்
செயலாற்றுவதன் மூலமே
உயர்ந்த பேறை அடைந்தனர்
உலகப் போக்கை கவனித்தாலும்கூட
நீ செயலாற்ற வேண்டியவனே
21
மேலோன்
எதை கடைப்பிடிக்கிறானோ
அதை பிறரும் செய்கிறார்கள்.
அந்த மேலோன்
எதை ஆதராமாகக் கொள்கிறானோ
அதையே
உலகமும் ஏற்றுக்கொள்கிறது.
22
பார்த்தா
நான் செய்தேயாக வேண்டியவை என
ஏதுமில்லை
ஏனென்றால்
மூவுலகங்களிலும்
அடைய வேண்டிய எவையும்
என்னால் அடையப் படாமலில்லை
எனினும் நான்
செயலில் ஈடுபட்டுக் கொண்டே இருக்கிறேன்
23
பார்த்தா
ஏனென்றால் நான்
எப்போதாவது
ஊக்கமற்றவனாக
செயலில் ஈடுபடாமலிருந்தால்
உலகமும்
எல்லாவகையிலும்
என் வழியைப்
பின் தொடரக் கூடும்
24
நான் செயலாற்றவில்லை என்றால்
இந்த உலகங்கள் அழியும்
பாகுபாடுகளை கலப்பவனாக ஆவேன்
இந்த மனிதகுலத்தை
அழிப்பவனாக நான் ஆகிவிடுவேன்.
முன் விதிகள்.
கீதையின் இந்த விளக்கம் செயலின்மையில் இருந்து செயலாற்றலுக்கு நகர்வதன் சித்திரத்தை அளிக்கிறது. ஆத்மாவில் ஆழ்ந்தவன் செயலாற்ற வேண்டியதில்லை. ஆனால் விருஷ்டிப் பெருவெளியான பிரபஞ்சத்தை அறிய முயல்பவன் செயலாற்றியாக வேண்டும். அதேசமயம் செயலில் அவன் மூழ்கினால் அவன் எதையும் அறிய போவதில்லை. செயலின் விளைவான இன்பதுன்பங்களிலேயே சிக்கியிருப்பான். ஆகவே செயலாற்றி அதே சமயம் செயலில் இருந்து விடுபட்டும் அவன் இருக்க வேண்டியிருக்கிறது.
அதைப்பற்றிய விவரணையின் தொடக்கமாக ஜனகனைப் பற்றிய உதாரணம் கூறப்படுகிறது. ராமாயணத்தில் சீதையின் (வளர்ப்பு) தந்தையாக வரும் மிதிலை மன்னர் ஜனகர் ராஜரிஷி என்று சிறப்பிக்கப்படுவர். அரசப் பணியை ஒரு முனிவருக்குரிய மனநிலையுடன் செய்தவர். அந்த முன்னுதாரணம் உனக்கு உள்ளதே என்கிறார் கிருஷ்ணன். அதாவது உலக வரலாற்றின் முன்னுதாரணங்களை எடுத்துக் கொண்டால் கூட உனக்கு செயலூக்கமும் முனிவர்களின் உள் ஒழுக்கமும் ஒருங்கே கொண்ட ஜனகர் அல்லவா முன்னுதாரணம் என்று கிருஷ்ணன் கூறுகிறான்.
முன் ஏர் சென்ற வழியேதான் பின் ஏர் செல்லும். சிறந்த முன்னுதாரண மானுடர் ஆற்றும் செயலை பிறரும் ஆற்ற முயல்கிறார்கள். அவர்கள் நம்பும் விஷயங்கள் பிறகு விதிகளாக ஆகின்றன. ஆகவே ஜனகமுனிவர் உனக்கு முன்னுதாரணம் மட்டுமல்ல நீ பின்பற்றியாக வேண்டிய பாதையும் கூட என்கிறான் கண்ணன்.
இந்த வரியில் இருந்து அடுத்த வரிக்குச் செல்லும் விதத்தில் நுட்பமான ஒரு தாவல் உள்ளது கீதையில். ஜனகன் உனக்கு முன்னுதாரணம் என்று கூறும் கிருஷ்ணன் தனக்கும் ஜனகனையே முன்னுதாரணமாகக் கொண்டிருப்பதாக அடுத்த வரியில் கூறுகிறான். ஏனென்றால் அரச குலத்தில் பிறந்து ஆட்சியில் முனிவன் போல பற்றற்று இருப்பவன்தானே அவனும்.
எனக்கும் இவ்வுலகில் அடைவதற்கென ஏதுமில்லை. ஆகவே ஆற்றுவதற்கும் ஏதுமில்லை. இருந்தாலும் நான் செயலாற்றிக் கொண்டே இருக்கிறேன். நான் சோம்பல்பட்டோ நிலைமறந்தோ செயலாற்றமலிருந்தால் என் குடிமக்கள் என்னைப் பின் தொடர்வார்கள் என்கிறான் கிருஷ்ணன். இங்கே தன்னை ஆத்மாவில் ஆழ்ந்தவன் என்றே கண்ணன் முன்வைக்கிறான்.
கீதையில் ஆசிரியனாகிய வரலாற்று கிருஷ்ணனின் சித்திரம் இது. அவன் யாதவ மன்னன். தத்துவம் அறிந்து, ஞானம் உணர்ந்து, தன்னுள் நிறைந்து முழுமை கொண்டவன். வேதாந்தத்தின் உச்சம் கண்டவன். ஆகவேதான் அவனால் கீதையை எழுத முடிந்தது. தன் முன்னுதாரணம் முன்னோடியாகிய ஜனக மன்னரே என்று கூறும் யாதவ மன்னன் ஆத்மராமனாகிய தனக்கு புற உலகில் ஆற்றுவதற்கு ஏதுமில்லை என்றாலும் புற உலகுடன் உள்ள உறவே செயல் மூலம் சாத்தியம் என்பதனால் செயலாற்றுவதாகச் சொல்கிறான். எந்த வழியை அர்ஜூனனுக்கு சொல்கிறானோ அது தான் கடந்து செல்வதும்கூட என்கிறான்.
இந்த பாடலை அடுத்து வரும் 24 ஆவது பாடல் தொன்ம வடிவமான கிருஷ்ணனை காட்டுகிறது. இங்கே கிருஷ்ணன் பரம்பொருளின் வடிவம். பிரபஞ்சங்களை ஆக்கி அழிக்கும் சக்தி. கீதையில் நாம் காணும் கிருஷ்ணனின் இரு முகங்களும் அருகருகே வெளிப்படும் இடம் இது. இங்கே கடவுள் வடிவினனாகிய கண்ணன் கூறுகிறான் நான் செயலாற்றமலிருந்தால் இவ்வுலகங்கள் அழிந்து போகும் இயற்கையின் மாற்ற முடியாத செயல் விதிகள் ஒன்றுடன் ஒன்று கலக்கும் உயிர்குலமும் மானுட இனமும் அழியும்.
கீதை முழுக்க எங்கெல்லாம் வரலாற்று கண்ணன் வெளிப்படுகிறானோ அதை ஒட்டி அடுத்த செய்யுளிலேயே புராணக்கண்ணன், கடவுள் வடிவமான கண்ணன் , வெளிப்படுவான். இரண்டாவது வடிவம் பின்னர் கீதை ஓர் உபநிடத வடிவம் கொண்டபோது உருவாக்கப்பட்டு சேர்க்கப்பட்டது என நான் நினைக்கிறேன்
செயல்வடிவே அது
இங்கே கவனிக்கத்தக்க தத்துவக் குறிப்பு ஒன்று உள்ளது என்று நடராஜகுரு கூறுகிறார். பெளத்த சிந்தனையில் பிற்பாடு பெரிதாக வளர்ந்த தரிசனம் ஒன்றின் விதை அது. பிரம்மம் தர்ம ரூபத்தில் உள்ளது. இன்னும் சாதாரணமாகச் சொல்லப் போனால் இறைவன் செயல் என்னும் வடிவில் இருக்கிறான். இந்தப் பிரபஞ்சத்தில் கோடானுகோடி இயக்க விதிகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு நியதி. ஒரு தர்மம். அவையனைத்தும் இணைந்து ஒரு பெரும் நியதியாக ஆகுமென்றால் அதுவே மகாதர்மம், அல்லது பிரம்மம்.
அந்நிலையில் தர்ம வடிவமான பிரம்மம் இருக்க வேண்டுமென்றால் அந்த தர்மம் செயல்பாட்டாக வேண்டும் அல்லவா? உதாரணமாக தீ என்றால் என்ன? எரிதல் என்ற நிகழ்வே தீ. எரிதல் என்ற வேதியியல் செயலின் ஆதார விதியே தீ என்பது. ஆகவே எரிதல் நிகழ்ந்தால் மட்டுமே தீ இருக்க முடியும். அதேபோல பிரபஞ்சம் நிகழ்ந்தால் மட்டுமே அதன் விதி மையமாகிய மகா தர்மம் இருக்கமுடியும். தர்ம வடிவமாகிய பிரம்மம் செயல்மூலம் மட்டுமே தன்னை இருத்தலாக மாற்றிக் கொள்ள முடியும்.
இப்பிரபஞ்சம் ஏன் நிகழ்கிறது என்ற கேள்விக்கு பெளத்தர்கள். ‘இது மகாதர்மம், தர்மம் என்றால் அது நிகழ்ந்தாக வேண்டும், அது நிகழ்தலே அது’ என்று பதில் கூறுகிறார்கள். கிருஷ்ணனின் இக்கூற்றில் அந்த ஞானம் உள்ளது. பரம்பொருள் செயலாற்றவில்லை என்றால் அதன் விதிகள் இல்லை. ஆகவே எதுவும் எஞ்ச இயலாது.
இந்தச் செய்யுளில் ‘சங்கரஸ்ய’ என்று வரும் வார்த்தைக்கு சில கீதை உரைகளில் வர்ணக்கலப்பு என்றே பொருள் கெள்ளப்பட்டிருக்கிறது. இதற்கான அடிப்படை கீதையின் மொழிக் கட்டுமானத்திலும் இல்லை. தர்க்கக் கட்டுமானத்திலும் இல்லை. முதல் அத்தியாயத்தில் வர்ணக்கலப்பினைப் பற்றி பேசியவன் மனம் குழம்பிய நிலையில் இருந்த அர்ஜூனன். வருணங்களை தான் படைத்ததாக கூறிய கிருஷ்ணன் இயல்பு மற்றும் செயல்களின் அடிப்படையிலேயே அவற்றை அமைத்ததாகவே கூறுகிறார். பிறப்பின் அடிப்படையில் அல்ல.
மேலும் கீதையின் காலத்தில் விவாதிக்கப்பட்ட வர்ணப்பகுப்பு என்பது ஜாதிப்பாகுபாடு அல்ல. அது மொத்த இயற்கையையே இயல்புகள், செயல்களின் அடிப்படையில் பிரித்து அறிய முனையும் ஒரு அணுகுமுறை. மரங்கள் செடிகள் புழுப்பூச்சிகள் பறவைகள் விலங்குகள் மட்டுமல்ல பாறை முதலிய பொருட்கள் கூட அந்த வர்ணப்பாகுபாட்டுக்குள் வருவதைக் காணலாம். அது ஒரு அரிஸ்டாடிலியச் சாயல் கொண்ட இயற்கை ஆய்வுமுறை மட்டுமே.
இங்கே இச்செய்யுளில் ‘சங்கரஸ்ய’ – கலப்புக்கு என்று மட்டுமே சொல்லப்படுகிறது. இங்கே பேசப்படுவது மனிதர்களைப் பற்றி மட்டுமல்ல. பிரபஞ்சத்தைப்பற்றி, இயற்கை விதிகளைப் பற்றி. ஆகவே இங்கு கலப்பு என்று கூறப்படுவது இயற்கையின் ஆதாரவிதிகளின் கலப்பையே. அந்த விதிகளே பொருள்களின் தனித்தன்மைகளை நிறுவி பொருண்மை விதிகளை நிலைநாட்டியுள்ளன. அவற்றின் எல்லைகள் மயங்குவதே இயற்கையின் முற்றான அழிவுக்குக் காரணமாகும்.
இந்தக் கோட்பாட்டை கீதை சாங்கிய தரிசனத்தில் இருந்து பெற்றுக் கொண்டிருக்கும் என்பது எளிதில் ஊகிக்கக் கூடிய ஒன்றே. இயற்கை, பருப்பொருள்வெளி ஆகியவற்றைப் பற்றி கீதை எங்கெல்லாம் பேசுகிறதோ அங்கெல்லாம் சாங்கிய தரிசனத்தின் நேரடியான பாதிப்பு உண்டு என்று ஏற்கனவே கூறப்பட்டிருக்கிறது. அதே போல கீதையில் பேசப்படும் சாங்கிய தரிசனம் சாங்கிய காரிகை போன்ற நூல்களால் தெளிவாக கட்டமைக்கப்பட்ட சாங்கிய தரிசனம் அல்ல; அதற்கும் முன்பே இருந்து வந்த சாங்கிய தரிசனம் என்று ஏற்கனவே சாங்கியயோக விளக்கத்தில் கூறியதையும் இங்கே நினைவூட்ட விரும்புகிறேன்.
முக்குணங்களான சத்வ, ரஜோ, தமோ குணங்கள் சமநிலையிழந்ததன் மூலமே ஆதிஇயற்கை செயல்வடிவம் கொண்டது என்பது சாங்கிய தரிசனம். இந்தக் குணங்களின் இயல்புக்கு ஏற்பவே பிரபஞ்சத்தின் பருப்பொருட்களின் தனித்தன்மை உருவாகியது. இந்த முக்குணங்கள் தங்கள் எல்லையழிந்து கலக்கும் போது பிரபஞ்ச விதிகள் சிதறும், பொருட்களில் தனித்தன்மைகள் அழியும். அதன் விளைவாக இயற்கை தன் இயல்புகளை கைவிட்டு விட்டு மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பக்கூடும் என்று சாங்கியம் கூறுகிறது. அந்த கலப்பையே ‘சங்கர’ என்ற ஒற்றைச் சொல் மூலம் இங்கே கீதை சுட்டுகிறது.
கீதையின் இயற்கை தரிசனம் சாங்கியத்தில் இருந்து வந்தது என்றறியாத வாசிப்பில் இருந்தே சங்கர என்ற சொல் இனக்கலப்பு, குலக்கலப்பு என்று பொருள் கொள்ளப்படுகிறது. செயல்வடிவில் இருக்கும் பிரம்மம் என்பது செயல்விதிகளிலேயே உறைகிறது. செயல்விதிகளின் கலப்பு என்பது அழிவேயாகும். இந்தப்பாடல் பிரபஞ்ச விதிகளைப்பற்றியே பேசுகிறது என்னும்போது வேறு பொருள் கொள்ள சாத்தியமே இல்லை
[மேலும்]