பகுதி 6 : ஆடியின் அனல் – 2
திரௌபதி வந்திறங்கியபோதே களைத்திருந்தாள். அணிப்படகிலிருந்து நடைப்பாலம் வழியாக மெல்ல வந்தபோது மாலையிளவெயில் அவளை வியர்த்து தளரச்செய்தது. மங்கல இசையைக் கேட்டு உடலதிர்ந்தவள் போல் முகம் சுளித்து கைகளால் ‘மெல்ல’ என்றாள். பெருங்கூடத்தை அடைந்ததும் சேடியிடம் மெல்லிய குரலில் அணியறைக்குச் செல்லவேண்டும் என்றாள்.
அவள் வரும் இசையைக் கேட்ட சகதேவன் எழுந்து சாளரத்துக்கு வந்து கீழே நோக்கவேண்டுமென விழைந்தான். ஆனால் உடல் தயங்கிக்கொண்டே இருந்தது. அவள் அணியறைக்குச் சென்றுவிட்டதை அவனே உய்த்துணர்ந்துகொண்டான். அது அவனுக்கு சற்று ஆறுதலை அளித்தது. உடலை எளிதாக்கிக்கொள்ளும்பொருட்டு சால்வையை சீராக மடித்து தன் தோள்களில் அணிந்துகொண்டான்.
கீழே எங்கோ எழுந்த ஒரு சிறிய ஓசை அவனை மீண்டும் அதிரச்செய்தது. நடுங்கும் விரல்களுடன் சால்வையை சீரமைத்து கழுத்திலணிந்த மணியாரத்தை திருத்தினான். தன் மூச்சை உணர்ந்தபடி காத்திருந்தான். மீண்டும் ஓசைகள் கேட்கவில்லை. அது சாளரக்கதவின் ஒலி என உணர்ந்து மீண்டும் எளிதானான். சால்வையை சீரமைத்தபடி எழுந்து சென்று சாளரத்தருகே நின்றாலென்ன என்று எண்ணினான். அப்போது அவள் நடந்து வரும் ஒலியை கேட்டான்.
அவள் உயரமும் எடையும் அவ்வொலியில் இருந்தது. அவள் பாதங்களின் மென்மையும் அவள் மூச்சின் தாளமும் அதிலிருந்தது. ஒலி இத்தனை துல்லியமாக ஒரு உடலை காட்டுமா? அணுகி மேலும் அணுகி கதவுக்கு அப்பால் எழுந்தது. அணிகள் குலுங்கும் ஒலி. ஆடை நலுங்கும் ஒலி. மெல்லிய மூச்சொலி. இதழ்களை நாவால் நனைக்கும் ஒலிகூட.
எழவேண்டுமென எண்ணியபடி அசையாமலேயே அமர்ந்திருந்தான். அவளுடைய கைகள் கதவை தொட்டதை தன்மேல் என உணர்ந்தான். அவள் சிலகணங்கள் வாயிலிலே நின்றபின் தாழ்த்திய கைகளின் கைவளைகள் குலுங்க மேகலை மணிகள் கிலுங்க அருகே வந்தாள். சகதேவன் அறியாமல் மெல்ல எழுந்தான். அவன் உடலின் எடையை தாளமுடியாமல் கால்கள் தளர்ந்தன. அவள் அருகே வந்து அவனை நோக்கி களைத்த மென்புன்னகையுடன் இதழ்கள் மலர்ந்து “எதிர்வெயிலில் வந்தேன்” என்றபடி பீடத்தில் அமர்ந்தாள்.
சகதேவன் அமர்ந்துகொண்டு “மேல்திசை வெயில் கூரியது” என்றான். அத்தனை எளிய உலகியல் பேச்சொன்றை அவள் தொடங்கியதற்காக அவளை அப்போது மிக விரும்பினான். வேறென்ன பேசுவார்கள், காவியங்களின் அணிச்சொற்களையா என்று எண்ணியதும் புன்னகைத்தான். அப்புன்னகையிலேயே மேலும் எளிதானான்.
”ஆம், கங்கையில்தான் நிழலே இல்லையே” என்றபின் அவள் புன்னகைசெய்தாள். தன் புன்னகையின் எதிரொளி அது என்று அவன் எண்ணினான். தலையை சற்றே சாய்த்து கூரிய மூக்கைச் சுளித்து நெற்றியை கைகளால் பற்றிக்கொண்டு “நாளை முழுநிலவு. இன்று அரண்மனையில் அதற்குரிய சடங்குகள் காலைமுதலே இருந்தன. உள்ளறையைச் சுற்றி பந்தலிட்டிருந்தார்கள். அறையிலிருந்து வேள்விப்புகை வெளியே செல்லவே முடியவில்லை” என்றாள். ”துயின்று எழுந்தபோது மூக்கு அடைத்துக்கொண்டிருந்தது. தொண்டையிலும் வலியிருந்தது.”
“மருத்துவச்சிகள் இருப்பார்களே?” என்றான் சகதேவன். “ஆம், அவர்கள்தான் உடனே கையிலிருக்கும் அனைத்து மருந்துகளுடனும் வந்துவிடுவார்களே?” என்று அவள் கையை வீசினாள். “எல்லா மருந்தும் ஒன்றுதான், சுக்கு, மிளகு, திப்பிலி. ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு மணத்தை கொண்டுவருவதில் வெற்றிபெற்றிருக்கிறார்கள்” என்றபடி அவனை நோக்கி புன்னகை செய்தாள். “ஆம், நோய் ஒன்றுதானே. நாம் கொள்ளும் துயர்தானே பல?” என்றான்.
அவள் கைகளை பீடத்தின் மேல் வைத்துக்கொண்டு நிமிர்ந்து அவனை விழிகளால் அளந்து “அழகுடன் அணிசெய்துகொண்டிருக்கிறீர்கள்” என்றாள். சகதேவன் நாணிச்சிரித்து “ஆம், அணிசெய்துகொண்டால் நான் மூத்தவர் தருமனின் சாயலை அடைவதுண்டு என்பார்கள்” என்றான். திரௌபதி முகவாய் தூக்கி கழுத்து மயிலென நீள உரக்கச் சிரித்தபடி “அச்சாயலில் இருந்து விலகிச்செல்வதற்கல்லவா நீங்கள் அணிசெய்துகொள்ளவேண்டும்?” என்றாள்.
இணைந்து நகைத்தபடி “அதை நான் அவரிடமே சொன்னேன்…” என்றான். “அவர் எல்லா நகைச்சுவைகளையும் முன்னரே நூல்களில் வாசித்திருப்பதனால் நகைப்பதில்லை.” அவள் சிரித்து “ஆம்” என்றாள். அவன் “இளமையிலிருந்தே நான் அவரைத்தான் தந்தையென்றும் ஆசிரியரென்றும் தமையனென்றும் கண்டு வருகிறேன். குழந்தைநாட்களில் அவரைப்போல தோளில் ஒரு சால்வை சரிய கையில் எந்நேரமும் ஏடு ஒன்றுடன் அலைவேன் என்று அன்னை சொல்லி நகைப்பதுண்டு” என்றான்.
திரௌபதி “ஆகவேதான் நூல்நவிலத் தொடங்கினீர்களா?” என்றாள். “ஆம், அவர் கற்றுக்கொண்ட நூல்களையே நானும் கற்றேன். ஆனால் எங்கோ என் உள்ளம் அவரது விழிதீண்டாத நூல்துறை ஒன்றை தேடியிருந்திருக்கிறது. கோள்நூலும் குறிநூலும் என்னுடையதாயின” என்றான். அவள் சிரிப்புகள் வழியாக அந்தத்தருணத்தை மிக இயல்பானதாக ஆக்கிவிட்டிருந்தாள் என்று புரிந்தது.
“கோள்நிலையும் குறிநிலையும் கண்டு வாழ்க்கையை அறியமுடியுமா என்ற ஐயம் எப்போதும் எனக்குண்டு” என்றாள். அவள் தன்னுடன் இயல்பான உரையாடலை தொடரவிழைவதை அவன் உய்த்துக்கொண்டான். “அந்த ஐயமில்லாதவர் எவருமில்லை. நிலைகூறும் அக்கணத்தில் மட்டும் கேட்பவர்கள் நம்புகிறார்கள். கூறுபவன் அப்போதும் நம்புவதில்லை” என்றான். அவள் சிரித்துவிட்டு கைகளால் இதழ்களைப் பொத்தி “மூத்தவரும் சற்று சிரிக்கலாம். நெறிநூல்கள் இன்னும் அழகுகொண்டிருக்கும்” என்றாள்.
“சிரிக்கத்தெரியாத நிமித்திகன் மெல்லமெல்ல சித்தமழிவான்” என்றான் சகதேவன். “எண்ணி எண்ணிச் சிரிக்க அன்றாடம் ஏதேனும் ஒன்று சிக்காமல் ஒருநாள் கூட செல்வதில்லை.” அவள் “அரசகுலத்தார் நிமித்திகநூல் கற்பதில்லையே” என்றாள். “ஆம், நெறிநூலும் கதையும் வில்லும் கற்பார்கள். எஞ்சியது நகுலனுக்குப் புரவி. எனக்கு நிமித்தநூல்” என்றான்.
“இளவயதில் ஒருமுறை தெற்குப்பெருவாயிலில் இருந்து கணிகர்வீதி வழியாக வந்துகொண்டிருந்தபோது நிமித்திகர் கூடும் பிரஹஸ்பதியின் ஆலயமுற்றத்துப் பெருமண்டபத்தின் முன்னால் முச்சந்தியில் இருந்த சின்னஞ்சிறு கோயிலை கண்டே0ன். பெட்டிபோன்ற கருவறைக்குள் ஒரு கையில் ஒருமை முத்திரையும் மறு கையில் அறிவுறுத்தும் முத்திரையுமாக சிறிய கற்சிலையாக அமர்ந்திருந்த தேவன் யார் என்று தெரியவில்லை. அங்கிருந்த இளம்பூசகன் அவர்களின் முதுமூதாதை அவர் என்றான். அவர் பெயர் அஜபாகன்.”
“அங்கிருந்து செல்லத் தோன்றவில்லை. தூண்டிலில் சிக்கியதுபோல் என் சித்தம் அங்கே கிடந்து துள்ளியது. ஏனென்று அப்போது அறியவில்லை, பின்னர் அதை சொற்களாக்கிக் கொண்டேன். அந்த தெய்வத்தின் விழிகளில் இருந்த கடுந்துயர் என்னை அங்கே நிற்கச்செய்தது. என்னை அது அச்சுறுத்தியது, அமைதியிழக்கச் செய்தது. அதற்கு அடியில் என்னென்றோ ஏனென்றோ அறியாமல் என் சித்தம் உருகிக்கொண்டிருந்தது.”
“கோடி சிற்பங்களுண்டு மண்ணில். அவையெல்லாம் பொருட்கள். மானுட உடலோ நிகழ்வு. அனல் போல, நீர் போல, வான் போல. உயிரற்ற மானுட உடலை எவரும் விழைவதில்லை. எந்தச்சிற்பியும் செதுக்குவதுமில்லை. சிற்பி செதுக்க எழுவது உயிர் உடலில் நிகழ்த்தும் அசைவைத்தான். சில அருந்தருணங்களிலேயே உளியின் தொடுகை கல்லிலோ மரத்திலோ உயிரசைவை கொணர்கிறது. அதிலும் மானுட உடலில் விழியைப்போல் அசைவே உருவான பிறிதொன்று இல்லை. ஒரு கணத்தில் ஆயிரம் முறை பிறந்திறப்பது அது. அதை செதுக்குவது பெருஞ்சிற்பியின் கையில் எழுந்த பெருங்கணம். அது நிகழ்ந்த சிற்பம் அது…” சகதேவன் சொன்னான்.
“தேரில் செல்லும் ஒருவனின் கணநேரப் பார்வையிலேயே தன் உள்ளத்தை அறிவித்தவை அச்சிற்ப விழிகள். சற்று நேரம் அவற்றை நோக்கி நின்றால் உடல் பதறத்தொடங்கும். நான் எண்ணியதையே பூசகனும் சொன்னான். ’பெருந்தந்தை அஜபாகரின் விழிகளை நோக்கலாகாது இளவரசே, அவை நம்மை பித்தாக்கிவிடும்’ என்றான். அவ்விழிகளைக் கடந்து என்னால் திரும்ப முடியவில்லை. அவற்றிலிருந்தது துயரம்” என்றான் சகதேவன்.
“மானுடர் மண்ணிலறிவதெல்லாமே சின்னஞ்சிறுதுயரங்களைத்தான். இறப்பு, நோய், பிரிவு, இழப்பு, அவமதிப்பு, தனிமை என நூறுமுகங்கள் கொண்டுவருவது உண்மையில் ஒன்றே. மிகமிகச் சிறியது அது. மானுடன் விட்டால் விட்டுவிடக்கூடியது. பெருந்துயர் என்பது வானிலிருந்து மண்ணை நோக்கும் தெய்வங்கள் கொள்வது. அது கலையாத கொடுங்கனவு. அத்துயரை அடைந்தவன் அதில் உறைந்து விடுகிறான். அவனை சிற்பமாக்குவது எளிது என தோன்றியது. அவன் நீர் பனிக்கட்டியாக ஆனதுபோல வாழ்விலேயே சிற்பமாக ஆனவன் அல்லவா?”
”முதுசூதர் ஒருவரை அரண்மனைக்கு வரச்சொல்லி அவரிடம் அஜபாகனைப்பற்றி கேட்டேன்” என்றான் சகதேவன். “சந்திரகுலத்தின் அத்தனை நிகழ்வுகளையும் ஒன்றாகத் திரட்டி ஒரு களத்தில் அமைத்து ஒன்றுடன் ஒன்று இணைத்து ஒரு முழுமைச்சித்திரத்தை அமைக்கமுயன்றவர் அவர். அஸ்தினபுரியின் வரலாற்றிலேயே அவருக்கிணையான நிமித்திகர் இருந்ததில்லை என்றார் சூதர். ஃபால்குன மாதம் விசாக நட்சத்திரத்தில் அவருக்கு பெருஞ்சுடரேற்றும் அன்னக்கொடையும் நிகழ்கின்றன.”
திரௌபதி “அந்த நாள் மாமன்னர் சந்தனு மறைந்த நாள்” என்றாள். சகதேவன் “குலக்கதைகளை நினைவில் கொண்டிருக்கிறாய். நன்று” என்றான். திரௌபதி “அரசுசூழ்தலில் முதல் நெறி என்பது அத்தனை அரசர்களுடைய குலமுறைகளையும் நினைவில் கொண்டிருத்தல்தான். அஸ்தினபுரியின் குலக்கதை அறியாத அமைச்சுத்தொழிலோர் எவரும் இருக்கமுடியாது” என்றாள்.
சகதேவன் புன்னகைத்து “ஆம், அன்றுதான் அவரும் நிறைவடைந்திருக்கிறார். மாமன்னர் சந்தனுவுக்காக விண்சுடர் எழுப்புதல் தெற்குக்கோட்டைக்கு அப்பால் அரசர்களுக்குரிய இடுகாட்டில் அவரது பள்ளிப்படைச் சிற்றாலயத்தில் நிகழும். மூத்தவர் அமைச்சர் விதுரருடன் அங்கே வழிபாட்டு நிகழ்ச்சிகளை அறிவிப்பதற்காக சென்றிருந்தார். அவருடன் சென்ற நான் அவரது ஆணைக்கேற்ப அரசரிடம் ஒரு சொல் அளிப்பதற்காக திரும்பி வருகையிலேயே அஜபாகனின் ஆலயத்தைக் கண்டேன்” என்றான்.
“கதைகளின்படி அஜபாகன் சந்தனு மன்னர் இறந்த நாளில் கோட்டைமுகப்பில் நின்றிருந்தார். மழைக்கால இரவின் நான்காம் சாமம். அவரது உடல்நிலையை பலநாட்களாகவே அனைவரும் அச்சத்துடன் நோக்கியிருந்தனர். அன்றிரவு அனைவருக்கும் தெரிந்துவிட்டது அரண்மனை மருத்துவர்கள் என்ன சொன்னார்கள் என்று. ஊர்மன்றுகளிலும் ஆலயமுற்றங்களிலும் கூடி நின்று அரண்மனைக்கோட்டைமுகப்பின் வெண்கலமணியாகிய காஞ்சனத்தையே பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போதுதான் நெடுங்காலம் இமயமலையடுக்குகளில் எங்கோ அலைந்துவிட்டு அஜபாகன் அஸ்தினபுரிக்குள் நுழைந்தார்.”
“அவரை அவரது குலம் மறந்துவிட்டிருந்தது. அவரது கொடிவழியினர் நீர்க்கடன் கொடுக்கத் தொடங்கியிருந்தனர். எவரும் அவரை அடையாளம் காணவில்லை. மாமன்னர் சந்தனு விண் ஏகிய அத்தருணத்தில் அரண்மனையின் வெண்மாடமுகட்டிலிருந்து ஒரு சின்னஞ்சிறிய வெண்பறவை எழுந்து பறந்து மறைந்தது என்கிறார்கள் சூதர்கள். அதைக் கண்டதும் அஜபாகன் கைநீட்டி எக்களித்து நகைத்து ‘சந்திரவம்சத்தின் மணிமுடிமீது வந்து அமர்ந்த அந்தப்பறவை அதோ செல்கிறது. குருவம்சத்தின் முடிவு தொடங்கிவிட்டது’ என்று கூவினாராம்.”
”அன்றுமாலையே அவர் பிரஹஸ்பதியின் ஆலயத்தின் முன் பெருமண்டபத்தின் ஏழாவது படிக்கட்டில் படுத்து கண்ணீருடன் உடல் அதிர நகைத்து நகைத்து உடல் வலிப்புகொள்ள சோர்ந்து உயிர்துறந்தார்” என்றான் சகதேவன். “அவர் இறக்கும் முன் சொன்ன நான்கு வரிகளை நிமித்திகர் குறித்துவைத்திருந்தனர். அதற்கு பொருள் காண நெடுங்காலம் முயன்றனர். பின்னர் அதுவே ஒரு நூல்வரிசையாக மாறியது. அஜபாகரகஸ்யம் அவற்றில் முதன்மையான நூல். அஜபாகசித்தம், அஜபாககாமிகம் இரண்டும் வேறுகோணங்களில் ஆராயும் நூல்கள். பின்னர் அந்நூல்களை வெறுமனே நிமித்தவியல் மாணவர்கள் கற்று மறக்கத் தொடங்கினர். அவரது அச்சிலை மட்டும் துயர் ததும்பி ஒளிவிடும் விழிகளை வெறித்து அங்கே அமர்ந்திருக்கிறது.”
“என்ன வரிகள்?” என்றாள் திரௌபதி. “தர்மத்தின் மேல் இச்சையின் கொடி ஏறிவிட்டது என்பது முதல் வரி. வெற்று இச்சை வீரியத்தை கோடைக்கால நதிபோல மெலியச்செய்கிறது. பலமிழந்த விதைகளை மண் வதைக்கிறது வடதிசையில் எரிவிண்மீன் உதித்திருக்கிறது ஆகியவை எஞ்சியவரிகள்” சகதேவன் சொன்னான். “அன்றுதான் நான் நிமித்திகநூலில் ஆர்வம் கொண்டேன். அவ்வரிகளின் பொருளை அறியவிழைந்தேன்.”
”என்னை அமைச்சர் விதுரர் எச்சரித்தார். தொழிலாக அன்றி அறிதலின் பாதையாக ஒருபோதும் நிமித்தநூலை கற்கலாகாது என்றார். ஏனென்றால், மானுட அறிவென்பதே நேற்று நிகழ்ந்ததைக் கொண்டு இன்றையும் நாளையையும் அறிவதுதான். நிமித்தநூல் நாளை நிகழவிருப்பதைக்கொண்டு இன்றை அளக்க முற்படுகிறது. அம்முறையில் எங்கோ ஆழ்ந்த பிழை ஒன்று உள்ளது. நிமித்திகர் தேவை. நிமித்தங்கள் ஆராயப்படவும் வேண்டும். ஆனால் நிமித்தநூல் வழியாக சென்றடையும் இடமென ஒன்றில்லை.” சகதேவன் புன்னகைத்து “அதையே எளியோரும் சொல்வார்கள். நிமித்தநூல் கற்பவன் மேல் தெய்வங்கள் சினம்கொள்கின்றன என்று” என்றான்.
”அந்த நான்கு வரிகளுக்குமே அஸ்தினபுரியில் விடையுள்ளது அல்லவா?” என்றாள் திரௌபதி. “சந்தனு மன்னரின் காமவிழைவை முதல்வரி குறிப்பிடுகிறது. சந்திரகுலத்தில் பிறந்த வீரியமற்ற இளவரசர்களை இரண்டாம் வரி. மூன்றாம் வரி அவர்களின் வாழ்க்கையின் துயரை. நான்காவது வரி அஸ்தினபுரியின் மேல் விழுந்த காசிநாட்டு இளவரசி அம்பையின் தீச்சொல்லை” என்றாள்.
“ஆம், ஆனால் நிமித்திகச் சொற்களுக்கு சுட்டுவதற்கு அப்பால் பொருளிருக்கும்” என்றான் சகதேவன். “நான்கு சொற்கள். இச்சையின் கொடி. சத்தற்ற விதை, வதைக்கும் மண், வடதிசை எரிவிண்மீன். அவை நான்கும் இணைகையில் முழுமையான பொருள் ஒன்று எழுகிறது.” சகதேவன் “என்னுடைய தனிப்பட்ட கணிப்புகள் இவை. தனிப்பட்ட அச்சங்களாகவும் இருக்கலாம். ஆனால் இந்நான்கு சொற்களால் நான் அனைத்தையும் தொகுத்துக்கொண்டிருக்கிறேன்” என்றான்.
“எரிவிண்மீன்… வடதிசை எரிமீன் என எதைச் சொல்கிறார்?” என்றாள் திரௌபதி. சகதேவன் “துருவனைச் சொல்வதாக ஏன் எடுத்துக்கொள்ளக் கூடாது?” என்றான். “துருவன் குளிர்மீன் அல்லவா?” என்றாள் திரௌபதி. சகதேவன் மெல்லிய புன்னகையுடன் “அவன் எரியாகும் தருணமொன்று வரலாகாதா என்ன?” என்றான். திரௌபதி அவனையே இமைக்காமல் சற்றுநேரம் பார்த்திருந்தாள். பின்னர் பெருமூச்சுடன் “தெரியவில்லை” என்றாள்.
“நிமித்தநூல்களை இரண்டாகப்பிரிக்கிறார்கள்” என்றா
“நிமித்தநூலுக்கு அடிப்படை ஒரு பெரிய மெய்நோக்கு. இங்கே நிகழ்ந்துகொண்டிருக்கும் மானுட வாழ்வென்பது தனித்த நிகழ்வாக இருக்க முடியாது. ஒவ்வொரு தனிமனிதனின் வாழ்க்கையும் பிறர் வாழ்க்கையுடன் பிணைந்துள்ளது. மானுட வாழ்க்கை ஒட்டுமொத்தமாக மழையுடனும் வெயிலுடனும் காற்றுடனும் கலந்துள்ளது. இங்குள்ள உயிர்குலத்தின் வாழ்வுடன் அது இணைந்துள்ளது. இருப்பது வாழ்க்கை என்னும் ஒற்றைப்பெருநிகழ்வு.”
“அப்படியென்றால் அதை மண்ணைவைத்து மட்டும் ஏன் கணிக்கவேண்டும் என்பதே நிமித்தமெய்யறிவின் முதல் வினா. விண்ணிலுள்ள கோள்களெல்லாம் நம் வாழ்க்கையுடன் பிணைந்துள்ளன. மீன்கள் பிணைந்துள்ளன. கடுவெளியின் அலைகளும் நம் வாழ்வும் ஒற்றை நிகழ்வின் இரு தருணங்களே” என்றான் சகதேவன். “அந்த மெய்யறிதலில் இருந்து உருவானதே நிமித்திகம்.” புன்னகையுடன் “சரியாக சொல்லிவிட்டேன் என நினைக்கிறேன்” என்றான்.
“ஆம்” என்று அவள் சிரித்தாள். “அவையில் அமர்ந்து பரிசில் பெறவேண்டுமென்றால் இந்த இளமைக்குரல் போதாது. இன்னும் எழுந்த மணிக்குரல் வேண்டும்.” தன் உடலை நிமிரச்செய்து “என் எதிர்காலத்தை கணித்துச்சொல்லுங்கள்” என்றாள். சகதேவன் தலையசைத்து “இல்லை, நூல் நெறிப்படி தன்னையும் தன்னைச்சார்ந்தவர்களையும் கணிக்கலாகாது” என்றான்.
திரௌபதி வியப்புடன் “நூலறிந்த ஒருவர் அவ்வாறு கணிக்காமலிருக்க முடியுமா என்ன? உண்மையிலேயே என்னை கணிக்கத் தோன்றவில்லையா?” என்றாள். “தோன்றவில்லை என்று சொல்ல மாட்டேன். ஒவ்வொரு கணமும் தோன்றுகிறது. ஆனால் கணிப்பதில்லை” சகதேவன் சொன்னான். “அது ஓர் ஆழ்ந்த அச்சம். நூல் கற்கும்தோறும் வலுப்பெறுவது.”
திரௌபதி சிலகணங்கள் நோக்கிவிட்டு “வியப்புதான். ஐவரில் இளையவரிடமே முழுமை நிகழ்ந்திருப்பது” என்றாள். சகதேவன் “நற்சொல் என்னை மகிழ்விக்கிறது. ஆனால் எங்கும் செல்வதற்கில்லாதவன் அமர்ந்திருக்கும் அழகை புகழ்வதற்கென்ன இருக்கிறது?” என்றான். திரௌபதி சற்று முன்னால் சாய்ந்து “சிறியவரே, நீங்கள் எதை அஞ்சுகிறீர்கள்?” என்றாள்.
அவன் திகைப்புடன் நிமிர்ந்து “அச்சமா, எனக்கா?” என்றான். “ஆம், அது அச்சம்தான். வேறெதையும் அறிய விழியில்லையென்றால் அச்சங்களை மட்டும் நான் அகம்சென்று அறிவேன்” என்றாள் திரௌபதி. சகதேவன் விழிகளை திருப்பிக்கொண்டு “அச்சம்தான்” என்றான். “எதை?” என்றாள். சகதேவன் அவளை நோக்கி “நிமித்திகரெல்லாம் அஞ்சுவது வாழ்க்கையின் கட்டற்ற பெரும் பெருக்கை. நிலையின்மையை. அதன் உள்ளீடாகத் திரண்டெழும் பொருளின்மையை. நான் அஞ்சுவது அதையல்ல.”
அவன் விழிகளை நோக்கி அவள் விரல்களை பூட்டிக்கொண்டாள். அவன் அவளை ஒருகணம் நோக்கி பின் விலகி “நான் மானுடரின் உள்ளே கொந்தளிக்கும் ஆணவத்தை அஞ்சுகிறேன்” என்றான். அவன் இதழ்களின் ஓசை அங்கே ஒலித்தது. “காமம் குரோதம் மோகம் என்கிறார்கள். அவையெல்லாம் எளியவை. அத்தனை விலங்குகளுக்கும் உள்ளவை. ஒவ்வொன்றையும் சென்றுதொடும் ஆணவமே அவற்றை பேருருக்கொள்ளசெய்கிறது. குருதிவிடாயெழுந்த கொடுந்தெய்வங்களாக்குகிறது.”
விழிகள் சுருங்க “நீங்கள் காண்பது என்ன?” என்றாள் திரௌபதி. அவன் புன்னகையுடன் தலையசைத்து “ஒன்று தெரியுமா? முன்பொருமுறை அஸ்தினபுரியில் குருதிமழை பெய்திருக்கிறது” என்றான். “குருதிமழையா…” என்று அறியாமல் அவள் புன்னகைசெய்து பின் “குருதிமழை என்றால்…” என்றாள். “கதைகள்தான்” என்றான் சகதேவன். “வெளியே வானிலிருந்து பெய்திருக்கலாம். உள்ளே கனவிலிருந்தும் பெய்திருக்கலாம். ஆனால் அப்படியொரு கதை உள்ளது.”
“காந்தாரத்து அன்னை நகர்நுழைவதற்கு முந்தையநாள் நள்ளிரவில் விண்ணிலிருந்து குருதித்துளிகள் பொழிந்தன. அஸ்தினபுரியின் நாணேறி நின்றிருக்கும் கைவிடுபடைகளின் கூர்முனைகளிலிருந்து குருதி துளிர்த்துச் சொட்டியது. அதைக் கண்டவர்கள் காவலிருந்த படைவீரர்கள் மட்டுமே. கிழக்குக்கோட்டைவாயிலில் காவலிருந்த படைவீரன் ஒருவன் அதில் நனைந்து அன்றுபிறந்த குழவி போல் எழுந்தான். அவன் அதை பாடலாகப் பாட அப்பாடல் படைவீரர்கள் நடுவே நெடுங்காலம் பாடப்பட்டு வந்தது. பின்னர் அதை மறந்துவிட்டனர். நிமித்தநூல்களின் எளிய குறிப்பாக அது மறக்கப்பட்டுவிட்டது.”
திரௌபதி அவனை நோக்கியபடி சற்றுநேரம் அமர்ந்திருந்தபின் நன்றாக சாய்ந்துகொண்டாள். கண்கள் சிரிக்க, உரத்த குரலில் “நிமித்திகரே, இத்தருணத்தில் பாண்டவர்கள் செய்யவேண்டுவதென்ன?” என்றாள். அவன் புன்னகையுடன் அவள் கண்களை நோக்கி இதழ்கள் புன்னகைத்தாலும் கண்களில் கூர் ஒளிர்ந்ததை கண்டான். ஆயினும் சிரிப்பை விடாமல் தலைவணங்கி “ஆணை இளவரசி. செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான். ஐவரும் தங்கள் துணைவியுடன் இந்த பாரதவர்ஷத்தை விட்டு விலகிச் செல்லவேண்டும். வடக்கே கின்னர கிம்புருட நாடுகளுக்குச் செல்லலாம். அல்லது மேற்கே காந்தாரத்தைக் கடந்து பெரும்பாலை நாடுகளுக்குச் செல்லலாம். அல்லது தெற்கேசென்று கடல்களைக் கடந்து தொலைதூரத்து தீவுகளில் குடியேறலாம்” என்றான்.
திரௌபதி புன்னகையை பெரிதாக்கி “அது ஒன்றே வழி, அல்லவா?” என்றாள். “ஆம், இளவரசி. நிமித்திகன் சொல்லக்கூடுவது அது ஒன்றே” என்றான். “அரசியர் நிமித்திகர் சொல்லை கேட்டுக்கொள்ளவேண்டும் என்றே நூல்கள் சொல்கின்றன” என்றாள் திரௌபதி. “மூத்தோர், அவையோர், அமைச்சர், நிமித்திகர், ஒற்றர் என்னும் ஐம்பேராயத்தை கலந்துகொள்ளவேண்டும். அதன் உள்ளுறையும் தெய்வம் சொல்வதையே செய்யவேண்டும்.”
“ஆம்” என்றான் சகதேவன். “என் உள்ளுறைத்தெய்வம் சொல்கிறது எனக்கு அஸ்தினபுரி வேண்டும். அப்பாலுள்ள நாடுகளனைத்தும் வேண்டும். பாரதவர்ஷத்தின் அரியணையன்றி எதிலும் நான் நிறைவடைய முடியாது. ஏனென்றால் நான் பிறந்ததே அதற்காகத்தான்.” சகதேவன் புன்னகை மேலும் விரிய “இளவரசி, நிமித்த நூல் தாங்கள் இதையே சொல்வீர்கள் என்றும் சொல்கிறது” என்றான்.
திரௌபதி சிரித்தபடி “நிமித்தநூல் அதை சொல்லும் என்று எங்கள் அரசுநூல்களும் சொல்கின்றன” என்றபடி கைகளை பீடத்தின்மேல் வைத்து உடலைக் குறுக்கி “குளிர்கிறதே… கங்கையின் காற்றில் ஈரம் மிகுந்துள்ளதா?” என்றாள். “இல்லையே, இன்று முன்பைவிட வெக்கையல்லவா உள்ளது?” என்றான். அவள் மேலாடையை போர்த்திக்கொண்டு “எனக்கு குளிர்ந்து உடல் சிலிர்க்கிறது” என்றாள்.
சகதேவன் எழுந்து அவள் கைகளில் தன் கையை வைத்து தொட்டுப்பார்த்து “வெம்மை தெரிகிறது. உடல்காய்கிறது” என்றான். “நீர்நோய் போலத்தான் தெரிகிறது. அதை நான் புகை அடைத்தது என்று எண்ணிக்கொண்டேன்” என்றாள் திரௌபதி. அவன் அவள் நெற்றியைத் தொட்டுவிட்டு “ஓய்வெடு… மருத்துவர் கீழே இருப்பார்” என்றான். “தேவையில்லை. நான் முன்னரே மருந்துச்சாறு அருந்திவிட்டேன்” என்றபின் அவள் அவன் தோள்களைப் பற்றிக்கொண்டு எழுந்தாள். சற்று தள்ளாடி தன் உடலை அவன் மேல் நன்றாக சாய்த்துக்கொண்டாள்.
“கால்கள் தளர்கின்றன. மாளிகைச்சுவர்கள் மெல்ல ஆடுகின்றன” என்றாள். “நாளை ஒருவேளை இவ்வெம்மைநோய் மேலும் கூடலாம்” என்றான் சகதேவன். “கங்கைக்கரை மாளிகை நீர்நோய்க்கு உகந்தது அல்ல.” “எனக்கு அது பழக்கம்தான்… இளமையில் இந்த மாளிகையில்தான் நாங்கள் இளமகளிர் தங்கி வேனலாடுவோம்” என்றாள்.
அவன் அவளை மெல்லத் தாங்கி கொண்டுசென்றான். அவள் உடலின் வெம்மையை தோள்கள் உணர்ந்தன. வெம்மை கொண்ட உடலில் இருந்து எழுந்த தோல்மணம் அவன் எங்கோ அறிந்ததுபோல் இருந்தது. அதை அவன் முகர்வதை அவளறியலாகாது என்று எண்ணிக்கொண்டான். அவள் அவன் தோளிலிருந்து கைகளை எடுத்து மஞ்சத்தில் அமரப்போனபோது கால்தளர்ந்தாள். அவன் அவளை பற்றிக்கொண்டான். அவள் கழுத்தில் அவன் முகம் உரசிச்சென்றது. மென்மணம். உச்சிவேளைத் தாமரையிதழின் மணம்.
அவள் முலையிடுக்கின் வியர்வைப் பளபளப்பை கண்டான். அவன் விழிகளைக் கண்டதுமே அவள் அறிந்து புன்னகைத்து “கீழே சென்று மருத்துவரிடம் என் உடல்நிலையைச் சொல்லி மருந்து வாங்கி வாருங்கள்…” என்றாள். “அவரை அழைத்துவருகிறேன்” என்றான் சகதேவன். “இல்லை, அவர் இங்கே வரலாகாது… எனக்கு சிறிய வெம்மைநோய்தான். நாளை எழுந்துவிடுவேன்.” பின் அவனை நோக்கி புன்னகைசெய்து “ஆனால் இன்று உங்கள் நாளல்லவா? அதை நீங்கள் இழக்கலாகாது” என்றாள்.
சகதேவன் உடல் விதிர்க்கத் திரும்பி “இல்லை, நீ ஓய்வெடுக்கலாம். ஒன்றுமில்லை” என்றான். அவள் சிரித்து “சென்று சூர்ணமோ லேகியமோ வாங்கிவாருங்கள்” என்றாள். “வேண்டாம்…“ என்றான். செல்வதா நிற்பதா என்று அவனுக்குத்தெரியவில்லை. “வேண்டாமா என பிறகு பார்ப்போம்… முதலில் மருந்து” என்றாள். அவன் “என்ன சொல்கிறாய்… எனக்கு ஒன்றுமே புரியவில்லை” என்றான். அவள் உரக்க நகைத்து “இந்தச்சிறுவன் வெளியே வருவதைத்தான் நோக்கியிருந்தேன். செல்லுங்கள்” என்றாள். “ஆனால்…” என்று அவன் சொல்லத் தொடங்க “சொன்னதை செய்யுங்கள்” என அவள் உரத்தகுரலில் சொன்னாள். “சரி” என்று அவன் இறங்கி வெளியே சென்றான்.
மருத்துவர் அவன் சொல்வதைக்கேட்டு “உடல் அலுப்பு. புகையை உடல் ஏற்கவில்லை. துயின்று எழுந்தால் மீண்டுவிடுவார்கள்” என்றார். இலையில் களிம்புபோல அரைகூழை அள்ளி வைத்துக்கட்டி “இதில் பாதியை இப்போது உண்ணட்டும். விடியலில் சிலசமயம் வெம்மை கூடக்கூடும். நடுக்கமும் இருக்கும். அப்போது தேவையென்றால் எஞ்சியதை உண்ணலாம்” என்றார். சகதேவன் அதை முகர்ந்து நோக்கி “தேன் மணம்” என்றான். “ஆம், நெஞ்சுநோய்களுக்கான எல்லா மருந்தும் மதுவும் தேனும் கலந்ததே” என்றார்.
அவன் இலைப்பொதியுடன் மேலே வந்தான். மஞ்சத்தில் படுத்திருந்த திரௌபதி கையூன்றி எழுந்து “அரைகூழா? நன்று. இடித்தூள் வேண்டாம் என்று சொல்லியிருக்கலாமென எண்ணிக்கொண்டிருந்தேன்” என்றபடி அதை வாங்கிக்கொண்டாள். “பாதியை இப்போது உண். எஞ்சியது நாளை விடிவதற்கு முன்” என்றான் சகதேவன். அவள் அதை உண்டுவிட்டு கைகளை நீட்டினாள். அவன் மரவுரியை நீரில் நனைத்து அவள் விரல்களை துடைத்தான். “தேன்சுவைதானே?” என்றான்.
“கசப்பும் காரமும்” என அவள் முகம் சுளித்து உதடுகளை குவித்தாள். “நெஞ்சுநோய்களுக்கு எப்போதும் தேன் கலந்திருப்பார்கள்” என்றான். “தேனில் கசப்பு கலக்கையில்தான் அதன் உண்மையான சுவை வெளிப்படுகிறது என்பார்கள்.” அவள் மீண்டும் உதட்டைச் சுழித்தபடி மல்லாந்து படுத்துக்கொண்டாள். “துயில்கொள்” என்றான். “ஏன்?” என்றாள். “ஆம், அவ்வண்ணமே” என்று சொல்லி அவன் எழுந்தான்.
“சற்றுநேரத்தில் வியர்வை வரும். வெம்மை இறங்கும்” என்றாள் திரௌபதி. “இன்னும் இரண்டு நாட்கள் உள்ளன. நாளை முழுநிலவு நாள்” என்றான் சகதேவன். “இன்று முழுக்க துயில்கொள்.” அவள் முகம் சிவந்திருந்தது. விழிகளிலும் வெம்மைநோயின் ஈரம் தெரிந்தது. “ஏமாற்றமில்லையே?” என்றாள். “சற்றும் இல்லை” என்றான். “உண்மையாகவா?” என்றாள். “உன்னிடம் பேசிச்சிரித்தபோதே என் அகம் நிறைந்துவிட்டது.” அவள் கூர்விழிகளுடன் நோக்கிக்கொண்டிருந்தாள். “என் நூல்கள்மேல் ஆணையாக… போதுமா?” என்றான். ”சரி” என்றபின் அவள் புன்னகையுடன் கண்களை மூடிக்கொண்டாள்.
புன்னகையில் அவள் இதழ்களின் இருமருங்கும் வந்துசென்ற சிறுமடிப்பைக் கண்டு உவகை எழுந்த நெஞ்சுடன் நோக்கி நின்றபின் அவன் திரும்பி உப்பரிகைக்கு சென்றான். “என்ன?” என்றாள். “நிலா… சற்றுநேரம் பார்க்கிறேனே” என்றான். அவள் “நானும் இன்று நிலாவை நோக்க விரும்பினேன்…” என்றாள். மெல்லப் புரண்டபடி “உடல் வலிக்கிறது… விழிகள் எரிகின்றன” என்றாள்.
கிழக்கு உப்பரிகையில் மூன்றுபக்கச் சாளரங்கள் வழியாகவும் நிலவொளி சரிந்து வந்து விழுந்திருந்தது. அப்பால் இலைப்பரப்புகள் ஒளிர்ந்துகொண்டிருந்தன. அவன் சென்று நிலவை நோக்கி நின்றான். முழுநிலவு என்றுதான் தோன்றியது. எங்காவது குறைகிறதா என்று நோக்கினான். அதன் கரியதிட்டுகளை சிறுவயதில் நோக்கி இருந்ததை நினைத்துக்கொண்டான். கங்கையின்மேல் நிலவொளி விரிந்திருந்தது. அலைகளில் ஆடி நின்ற படகின் பாய்மரத்தில் கட்டப்பட்ட பாய் எழுந்து துடித்து கொடிமரத்தை அறைந்தது. எங்கோ ஒரு பறவையின் ஒலி. ஏதோ ஒற்றைச் சொல்.
முகத்தின்மேல் நிலவொளி விழுவதைப்போல நின்றுகொண்டான். நிலவு முகத்தில்பட அவர்களை மடியில் படுக்கவைத்துக்கொள்வது குந்தியின் வழக்கம். அப்படியே கண்களை மூடி துயில்கையில் கனவுக்குள்ளும் நிலவொளியே நிறைந்திருக்கும். அவர்கள் அரைத்துயிலில் இருக்கையில் சற்று இனிப்புப் பண்டத்தை வாயில் வைப்பாள். கனவுகளில் இனிப்பு குவிந்திருக்கும். உண்டு உண்டு தீராத இனிப்பு. காலையில் ‘அன்னையே இனிப்பு! அப்பம்!’ என்று கூவியபடிதான் கண்விழிப்பார்கள்.
அவன் திரும்ப வந்து கதவை ஓசையின்றி திறந்து உள்ளே சென்று மஞ்சத்தில் அவளருகே அமர்ந்து பின் காலை நீட்டிக்கொண்டான். அவள் சீரான மூச்சுடன் துயின்றுகொண்டிருந்தாள். கன்னத்தின் மெருகு இருளிலும் தெரிந்தது. திரும்பி குறுங்கால் பீடத்தில் இருந்த அரைகூழ் பொதியை நோக்கினான். அதை எடுத்து திறந்து கைகளால் வழித்து வாயிலிட்டான். தூதுவளையின் மணம் அது என வாய் வழியாக மூக்கு அறிந்தது. சுக்கின் காரம்.
எஞ்சியதையும் வாயில் இட்டபின் கையை அந்த இலையிலேயே துடைத்துவிட்டு திரும்பியபோது அவன் அவள் தன்னை நோக்குவதை கண்டான். சிரித்து “எறும்புகள் வந்துவிடும்…” என்றான். அவள் சிரித்துக்கொண்டு தலையைத் தூக்கி அவன் நெஞ்சில் வைத்துக்கொண்டாள்.
அனைத்து வெண்முரசு விவாதங்களும்