கசாக்கின் இதிகாசம்- சொற்கள்

111
ஆசிரியருக்கு,

தற்போது யூமா வாசுகியின் மொழிபெயர்ப்பில் ஒ வி விஜயனின் மலையாள நாவலான கஸாக்குளின் இதிகாசம் (காலச் சுவடு பதிப்பகம்) படித்து முடித்தேன். அற்புதமான நாவல், மிக செறிவான மொழிபெயர்ப்பு.

இது பல வகைகளில் மார்குவஸ்சின் 100 years of solitude ஐ நினைவு படுத்தியது. அனால் இது அதற்கு 20 ஆண்டுகள் முன்பே எழுதப் பட்டது. எனது ரசனையில் இது 100 ஆண்டு காலத் தனிமையை விட ஒரு படிமேல் நிற்கிறது. இதில் உள்ள ரசனை, தரிசனம் குறித்த அலகுகளை (இருத்தலியல்/ பாத்திரப் படைப்பு போல) உங்களுடன் பேசியோது நீங்கள் சொன்னவற்றை மனதில் பகுத்து அடுக்கிக் கொண்டேன் , ஆனால் கொச்சை மொழி குறித்தது நீங்கள் சொன்னதை என்னால் முழுமையாக வரிசைப்படுத்த முடியவில்லை. போகவும் இது பொது வாசகர்களுக்கும் தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்வதில் பெரிய உதவியாக இருக்கும்.

யூமா வாசுகி
யூமா வாசுகி

இதைப்படிக்கும் போது 7ம் உலகமும் நினைவுக்கு வந்தது, இரண்டிலும் கையாளப் பட்டிருக்கும் உரையாடல் மொழி மிக மிக கொச்சையானது , பிஸயம் (விஷயம்), கம்மூஷ்ட்டு (கம்யூனிஸ்டு) போன்ற சொற்கள். ஒரு பின்தங்கிய கிராமத்தினரோ அல்லது சமூகத்தின் கீழ் தட்டில் வசிப்பவர்களோ மலிவான மொழியை பயன்படுத்துவதை நானும் பார்த்துள்ளேன். மேலே சொன்னது போல வார்த்தைகளை உடைத்து தேய்த்து விடுவார்கள், டுவாக்கி, டமாஸ், படாஸ் என உச்சரிப்பையும் மலினப் படுத்திவிடுவார்கள் . மேலும் சாதரணமாகவே மத்தியத் தட்டு வர்கத்தினரும் பல சமயங்களில் உச்சரிப்பில் பிரக்ஞையற்று பின்தங்கி இருப்பதையும் நாம் பார்க்கலாம், டேசன், ச்சீஸ் (seize) எனப் பேசுவார்கள்.

நமது மாநிலத்தில் பொது மொழி “தமில்”, சுட்டுப் போட்டாலும் ‘ழ’ கரம் வராது. அதுபோக ஒவ்வொரு வாக்கியத்திலும் ‘சூப்பார் /சூப்பரு’, ‘சான்சே இல்லை’ ‘மொக்கை’ வேறு. இந்த மூன்று பதங்களையும் தடை செய்துவிட்டால் தமிழர்கள் அனைவரும் ஊமைகளாகிவிடுவார்கள்.

இதுபோல கொச்சையான மொழியில் புழங்குபவர்களை பார்க்கும் போது அவர்களின் புரிந்துகொள்ளும் திறனும், மூளைத் திறனும் குறைந்தபட்சத்திற்கு ஒரு படி குறைவாகவே இருப்பதையும் பார்கிறேன்.

நமக்கு காணக் கிடைக்கும் கார் விளம்பரங்களை புரிந்து கொள்ள சற்று திறன் தேவை, ஆனால் துணி துவைக்கும் சோப்பு விளம்பரத்திற்கு அது தேவை இல்லை.

இவைகளை வைத்துப் பார்க்கும் போது ஒருவர் கையாளும் மொழிக்கும் உச்சரிப்புக்கும் அவரது மூளைத் திறனுக்கும் தொடர்பு உண்டா?

ஒருவரின் வர்க்கத்திற்கும் அவர் கையாளும் மொழிக்கும் தொடர்பு உண்டா ?

என்கிற கேள்வி எழுகிறது.

கிருஷ்ணன்.
O.-V.-Vijayan

அன்புள்ள கிருஷ்ணன்,

கசாக்கின் இதிகாசம் முக்கியமான நாவல். உங்களுக்கு அது இன்னமும் கூட முக்கியமானது. ஏனென்றால் பாலக்காடு மாவட்டத்தில் உங்களூருக்கு அண்மையில்தான் உண்மையான கசாக் இருந்தது

நுட்பமான அங்கதமும் கோட்டோவியங்கள் போன்ற கதாபாத்திரச் சித்தரிப்பும் ஆங்காங்கே மிளிரும் கவித்துவமும் [காலத்தில் அசைவற்ற பொருட்கள் பயணம் செய்வதன் அடையாளமே தூசி. அவனுக்குப்பின்னால் கண்னாடி வாயில்கள் ஒவ்வொன்றாக மூடிக்கொண்டன] அதை மறக்கமுடியாத அனுபவமாக ஆக்குகின்றன.

1984இல் நான் அதை முதல்முறையாக வாசித்தேன். பிறகு நான்கு முறை. ஒவ்வொருமுறையும் மறக்கமுடியாத அனுபவம். அவரை நான்குமுறை நேரில் சந்திக்கமுனைந்தேன். தவிர்த்துவிட்டார்.விஜயன் நித்ய சைதன்ய யதிக்கு நெருக்கமானவர். பின்னர் யதியின் மாணவன் என்ற அடையாளத்துடன் திருவனந்தபுரம் போத்தங்கோடு கருணாகர சுவாமிகளின் குருகுலத்திற்குச் சென்று அவரைச் சந்தித்தேன்.

[ஓ.வி.விஜயன் கருணாகர சுவாமிகளின் மாணவர். குருசாகரம் என்ற நாவல் கருணாகர சுவாமிகளால் தூண்டுதல் அடைந்து எழுந்தப்பட்டது. விஜயன் அங்குதான் இறுதிக்காலத்தில் இருந்தார்.அவரது தங்கை ஓ.வி. உஷாவும் அவரும் அங்குதான் இருக்கிறார்கள்.]

விஜயன் ஒரு கேலிச்சித்திரக்காரர். அவரது எழுத்து முழுக்க அந்த இயல்பான தன்மை உண்டு. அத்துடன் நவீனத்துவ யுகத்தைச் சேர்ந்தவர். நாவலை விட சிறுகதைகளே அவருக்கு இன்னமும் இயல்பாகக் கைவந்தது. ஆரம்பகால சிறுகதைகளும் குறுநாவல்களும் அங்கத மொழியும் கேலிச்சித்திரத்தனமான கதாபாத்திரங்களும் கொண்டவை. ஒரு யுத்தத்தின் ஆரம்பம்,யுத்தத்தின் அவசானம் ஆகிய குறுநாவல்களை சிறப்பாகக் குறிப்பிடலாம்

கசாக்கின் இதிகாசமே கூட அறுபதுகளில் தனிச்சிறுகதைகளாக முதலில் எழுதப்பட்டபின் விரிவாக்கம் செய்யப்பட்டது என்று விஜயன் என்னிடம் சொன்னார். இதை வெளியிட அன்று மாத்ருபூமியின் ஆசிரியராக இருந்த எம்.டி.வாசுதேவன் நாயர் பெருவிருப்பம் காட்டினார். விஜயனுக்கு வாசுதேவன்நாயர் இலக்கியத்தில் வழிகாட்டி

விஜயன் பிளவடையாத கம்யூனிஸ்டுக் கட்சியின் விசுவாசி. இ.எம்.எஸ் ஆட்சிக்கு வந்த முதல் கம்யூனிஸ்டு அரசாங்கம் அவருக்கு பெரும் நம்பிக்கையை அளித்தது. அச்செய்தியை அறிந்தபோது சென்னையில் கல்லூரிப்பேராசிரியராக இருந்தார் .பெரும் மனக்கொந்தளிப்புடன் ரயிலில் கேரளம் திரும்பிய அனுபவத்தை, பாலக்காடு தாண்டியதும் பார்த்த முதல் கம்யூனிஸ்டுக் கொடி அவரைக் கண்ணீர் மல்கவைத்ததை எழுதியிருக்கிறார் [ஒரு குங்குமப்பொட்டின் நினைவுக்கு]

கட்சியின் உடைவும் அதன் கொள்கைவீழ்ச்சியும் அது இந்திராகாந்தியிடம் சமரசம் செய்துகொண்டதுமெல்லாம் அவரை சோர்வுறச்செய்தன. அந்த அரசியல் சோர்வு அவரை இருத்தலியல் நோக்கிக் கொண்டுசென்றது.ஆனந்த் விஜயன் இருவருமே எம்.கோவிந்தனின் சிந்தனைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர்கள். கோவிந்தனிடமிருந்து தனிநபர் நோக்கை, அரசின்மை நோக்கை, நவீனக் காந்தியத்தை பெற்றுக்கொண்டார்கள் என்று சொல்லலாம்

கசாக்கின் இதிகாசம் அவரது கேலிச்சித்திரத் திறன் புனைவில் வெளிப்பட்ட நாவல்.அல்லாப்பிச்ச மொல்லாக்க, கண்ணிமூத்தான் எல்லாருமே கதாபாத்திரங்களின் கேலிச்சித்திர வடிவங்கள்தான். அந்நாவலின் வலிமை [பலவீனமும்] அதுவே. ஆனால் அது வெற்றிபெறுவது அந்தக் கேலிச்சித்திரத்தன்மை அதிலுள்ள ஆன்மீகத்தரிசனத்துடனும் கவித்துவத்துடனும் இயல்பாக முயங்குவதனால்தான். அந்த அம்சம் அடுத்துவந்த நாவல்கள் எதிலும் நிகழவில்லை.

கசாகின் இதிகாசம் மிகக்குறுகிய காலத்தில் எழுதப்பட்ட நாவல். ஒருவருடகாலம் அது தொடராக வந்தாலும் எழுதியது வெறும் நாற்பது நாட்களுக்குள் என்று விஜயன் சொன்னார். திருப்பி எழுதவில்லை. வாசிக்கவும் செய்யவில்லை. அச்சில் வந்தபின்னரே வாசித்து அடுத்த பதிப்புகளில் கொஞ்சம் விரிவாக்கிக்கொண்டார்

விஜயனை நான் சந்தித்தபோது அவர் நன்றாகத்தான் இருந்தார். ஆனால் பின்னர் பார்க்கின்சன் நோயாக மாறிய நரம்புக்கோளாறுகள் இருந்தன. கைகள் நடுங்கிக்கொண்டே இருந்தன. சரியாகப் பேசமுடியவில்லை.அரைமணிநேரம் பேசிக்கொண்டிருந்தேன். பெரும்பாலும் நித்யசைதன்ய யதி பற்றி. அவரது மனம் பேசிக்கொண்டிருக்கும்போதே உள்ளே சென்றுவிடக்கூடியது. நினைவில் நிற்கும்படி ஏதும் பேசவில்லை. அந்தச்சூழலில் அன்று சந்தடி மிக்கதாக இருந்தது

மலையாளச்சிந்தனையில் அரசின்மைவாதத்தின் மிகச்சிறந்த குரலாக ஒலித்தவர் விஜயன். காந்தியை புதிய கோணத்தில் எனக்கு அறிமுகம் செய்தவர்- காந்தியிடமிருந்த அரசின்மைவாதத்தைத்தான் அவர் முக்கியமாகக் கருதினார். 1980களில் ஒரு ஆசிய சமாதான மாநாடு டெல்லியில் நடந்தபோது அதற்கான ஆடம்பர ஏற்பாடுகளைப்பற்றி எழுதிய விஜயன் “சமாதானத்தைப்பற்றி பேசுவதற்கென்றால் சாணிமெழுகிய தரையே போதுமே” என்று எழுதியதை நினைவுக்கூர்கிறேன்

*

மூலத்தில் தமிழ் கலந்த மிக விசித்திரமான ஒரு வட்டார வழக்கை பயன்படுத்தியிருந்தார் விஜயன். “நைசாமலியாக்கும்” என்றுதான் அலி தன்னை அறிமுகம் செய்துகொள்கிறார். “உள்ளதாக்குமா?” என்ற கேள்வி எழுந்துகொண்டே இருக்கிறது. அன்று மலையாளத்தில் விசித்திரமான ஒரு ‘அனுபூதி’யை அந்த மொழி அளித்தது.

இத்தகைய தனிச்சிறப்பான வட்டாரவழக்குகள் பொதுவாக புனைவுகளை நாமறியாத ஒரு மொழிப்பிராந்தியத்தில் கொண்டு சென்று நிறுத்தி ஒரு கனவுத்தன்மையை அளிக்கின்றன. அந்த மனிதர்களுக்கும் வாழ்க்கைக்கும் ஒரு வகையான உண்மைத்தன்மையை, தனித்தன்மையை உருவாக்கி கொடுக்கிறது. அந்தப்புனைகதைக்கு மட்டுமேயாக ஒரு மொழி உருவாகியிருப்பதனால் அந்நாவலே தனியாக நின்று கொண்டிருக்கிறது.

ஆனால் நல்ல எழுத்தாளனால் எழுதப்படாதபோது வட்டார வழக்கு சலிப்பூட்டும். சாதாரண எழுத்தாளன் அதன் சராசரிகளைக் கொண்டு தன் மொழிநடையை உருவாக்குவான். இதற்கு தமிழில் நிறைய உதாரணங்கள் உள்ளன. நல்ல எழுத்தாளன் அதன் தனிச்சிறப்புகளைக்கொண்டு புனைவுமொழியை உருவாக்குவான். அவனே அழகுகளை உருவாக்குபவன்.

அடித்தளமக்கள் மட்டுமல்ல எல்லா மக்களுக்கும் பேச்சு வழக்கு என்பது கொச்சையே . வட்டார வழக்கு போலவே சாதி சார்ந்த தனி மொழிவழக்கும் உண்டு.பிராமணர் பேசுவது அவர்களின் தனி வழக்கு. சுப்ரமணியம் சுப்புணி ஆவது பார்த்தசாரதி பாச்சா ஆவதும் நாம் காண்பதுதானே. எழுந்தருள்கிறார் என்பதை ஏள்றார் என்பார்கள் அய்யங்கார்கள்.

பொதுவாக வட்டார வழக்கின் இயல்பு விரைந்து பேசுவதற்கான குறுக்குவழிகளை அது கண்டுபிடிக்கும் என்பதுதான். சொற்கள் மருவுவது அதனால்தான். ஒரு வழக்கு குறைந்த மக்களுக்குள் பேசிக்கொள்வதாக ஆகும்போது ஒருவகையான குழூக்குறித்தன்மை வந்துவிடுகிறது. அவர்களுக்குள்ளேயே அது பொருள்படுகிறது.

சமீபத்தில் கரசூர் பத்மபாரதி இருபாலினத்தவரைப்பற்றி எழுதிய நூலில் [தமிழினி பதிப்பகம்] அந்த சமூகத்திற்கென்று ஒரு தனிமொழி இருப்பதை விவரித்திருந்தார். தொழில் சார்ந்த தனிமொழிகளும் உண்டு. இவையும் ஒருவகை வழக்குகள்தான்.

பழங்காலத்தில் மக்களின் இடப்பெயர்வு மிகக்குறைவாக இருந்தமையால் நிலம் சார்ந்த வட்டாரவழக்குகள் வலிமையாக இருந்தன. ஆனால் நுணுகிப்பார்த்தால் அவற்றுக்குள்ளேயே சாதி சார்ந்த உபவழக்குகளும் இருப்பதைக் காணலாம்.

அன்னியச் சொற்களை தங்கள் மொழிக்கேற்ப மாற்றிக்கொள்வது வட்டார வழக்கின் இயல்பு. குமரிமாவட்டத்தில் நெடுங்காலம் ஃபோட்டோ போட்டம் என்றுதான் சொல்லப்பட்டது. ஃபோட்டோ என்பது கேள்வி போல ஒலித்ததனால். போட்டம் என்றால்தானே அது பொருள்.

பழங்காலத்தில் எஞ்சினீர் என்ற சொல்லை இஞ்சிநீர் என்று சொல்லி வந்ததாக வை.மு.கோதைநாயகி அம்மாள் நாவல்களில் வாசிக்கிறோம்

பேச்சுமொழியை முன்கொண்டு செல்வதில் கேலிக்கு முதன்மையான பங்கு உண்டு. மதிப்பிற்குரியவை, முறையானவை ,ஆதிக்கம் செலுத்துபவை வேண்டுமென்றே ஒலித்திரிபு செய்யப்படும்.அதற்கான தனிச்சொற்களும் கண்டடையப்படும்.

அத்துடன் மக்களில் மிகச்சிலரே மொழி குறித்த பிரக்ஞை உடையவர்கள். பாடுவதுபோல வரைவதுபோல அது ஒரு தனித்திறன். அவர்கள் சொற்களை பிரக்ஞை பூர்வமாகக் கையாள்கிறார்கள். பகடிக்காக வளைக்கிறார்கள். விசித்திரமாகப் பயன்படுத்திச் சிரிக்க வைக்கிறார்கள். புதிய சொல்லாட்சிகளை உருவாக்குகிறார்கள். சொல்லிணைவுகள் மூலம் புதிய மொழிவெளிப்பாடுகளை கண்டடைகிறார்கள்

படித்தவர்களிலும் படிக்காதவர்களிலும் உயர்குடியினரிலும் அடித்தள மக்களிலும் இவர்களின் சதவீதம் சமம் என்றே நினைக்கிறேன். மற்றவர்கள் பழகிய சொற்களை அப்படியே கையாண்டு பேசுவார்கள்.

அடித்தள மக்களில் அவ்வாறு பல சொற்கள் மாறாமல் அதே உச்சரிப்புக்குறையுடன் அதே பொருளுடன் புழங்குகின்றன. ஆனால் உயர்குடிகளிலும் அதேதான். சான்ஸே இல்ல, அட் எண்ட் ஆஃப் த டே போன்ற சொற்களை சகட்டுமேனிக்கு பயன்படுத்துபவர்களையே நான் அதிகமும் கண்டிருக்கிறேன்

உயர்குடிக்கொச்சை என்பது ஆங்கிலக்கலப்பு கொண்டது. அடித்தளக் கொச்சை என்பது வட்டாரத்தன்மை கொண்டது, இந்த வேறுபாட்டை மட்டுமே நான் காண்கிறேன்

அத்துடன் எனக்கு ஒரு அந்தரங்கமான புரிதல் உண்டு. வட்டாரக் கொச்சைகளை உருவாக்குவதில் குழந்தைகளுக்குப் பெரும்பங்கு உண்டு என்பது என் எண்ணம். அவர்கள் பேசும்போது இயல்பாக மொழியைச் சிதைக்கிறார்கள். அந்த வசீகரம் காரணமாக அச்சொற்கள் பொதுமொழியில் நிலைத்துவிடுகின்றன.

ஏழாம் உலகத்தில் மொழியை கையாள்வதன் பல வடிவங்கள் வருகின்றன. குய்யன் காதில் ஒரு சொல் விழுந்தால் அவன் சாத்தியமான எல்லா இடங்களிலும் அதைப்போடுகிறான். உதாரணம் நிரபராதி என்ற சொல்லை அவர் பயன்படுத்தும் விதம்.

ஜெ

ஓ.வி விஜயன் பற்றி

முந்தைய கட்டுரைநம்பிக்கை மனுஷிகள்-கடிதம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 5