‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 17

பகுதி 6 : ஆடியின் அனல் – 1

சூதர்கள் அமர்ந்த பின்னர் சிசிரனால் அழைத்துவரப்பட்ட சகதேவன் கூடத்திற்குள் வணங்கியபடி வந்து அமர்ந்து புன்னகையுடன் தொடங்கலாமென்று கையசைத்தான். முழவை மெல்லத் தட்டிய சூதர் திரும்பி அறையின் கதவை நோக்க சகதேவன் அதை உணர்ந்து “அந்தக்கதவை மூடுங்கள். அவர் கண்களில் கங்கையின் ஒளிபடுகிறதென்று எண்ணுகிறேன்” என்றான். சிசிரன் கதவைமூடிவிட்டு பின்னகர்ந்தான். நீண்ட குழல்கற்றைகளை தோளில் எடுத்துவிட்டுக்கொண்டு முன்னால் வந்து அமர்ந்த சூதருக்குப் பின்னால் அவரது விறலி அமர்ந்தாள். அவள் கையில் வட்டவடிவமான சிறுபறை இருந்தது.

அணிக்கோலத்தில் இருந்த சகதேவன் கைகளைக் கட்டிக்கொண்டு அவர்களை நோக்கினான். சூதர் விறலியிடம் என்ன கதை சொல்வதென்று மெல்லிய குரலில் கேட்டார். அவள் ஏதோ சொல்ல அவரை அறியாமலேயே அவரது உதடுகளில் ஒரு புன்னகை வந்து மறைந்தது. சூதர் கைகளை கூப்பி வணங்கியதும் சகதேவன் “சூதரே, இம்முறை விறலி பாடலாமே” என்றான். சூதர் “வழக்கமாக…” என்று சொல்லத்தொடங்க “இம்முறை எனக்காக பெண் குரல் என்ன சொல்கிறதென்று அறியவிழைகிறேன்” என்றான்.

சூதர் தலைவணங்கி விறலியிடம் ஏதோ சொல்ல அவள் முகம் சற்றே சிவந்தது. பெரிய விழியிமைகள் ஒருகணம் சரிந்து எழுந்தன. எழுந்து தன் பெரியமுலைகளை மூடிய மெல்லிய கலிங்கத்தை சீரமைத்துக்கொண்டு வந்து முன்னால் அமர்ந்தாள். கரிய தடித்த உருவமும் உருண்டமுகமும் கொண்டிருந்தாள். விழிகளும் பெரியதாக இரு கரிய கிண்ணங்கள் போலிருந்தன. ஆனால் இதழ்களும் மூக்கும் செவிகளும் மிகச்சிறியவை. கழுத்தென்பதே இல்லாததுபோன்ற உருவம். மூக்கின் இருபக்கமும் ஏழுகற்கள் பதிக்கப்பட்ட மூக்குத்தி போட்டு அகன்ற மென்மார்பில் பதிந்த வேப்பிலையடுக்குத்தாலி அணிந்திருந்தாள்.

“உங்கள் ஊர் எது?” என்றான் சகதேவன். ”திருவிடம்” என்றாள் விறலி. “அங்கே கோதையின் கரையில் உள்ளது என் சிற்றூர்.” சகதேவன் “நெடுந்தொலைவு” என்றான். “சொல் செல்லும் தொலைவுடன் நோக்க அண்மையே” என்று அவள் புன்னகைசெய்தாள். அவள் பற்களும் மிகச்சிறியவை. நாக்கு நாகப்பழம் தின்றதுபோல செந்நீல நிறத்துடனிருந்தது. “எனக்கென பாடப்போவது எந்தக்கதை?” என்றான் சகதேவன். அவள் மூக்கைச்சுளித்து நாணிச்சிரித்து “ஒன்றும் சித்தத்தில் எழவில்லை இளவரசே” என்றாள்.

“என்னை நீயென எண்ணிக்கொள்… கதை எழும்” என்றான். அவள் சிரித்து “நான் பெண்ணல்லவா?” என்றாள். ”சரி அப்படியென்றால் உன்னை திரௌபதி என எண்ணிக்கொள்” என்றான். அவள் நாணி தலைசாய்த்து “அய்யோ” என்றாள். நாணிச்சிரிக்கையில் அவள் சிறிய மூக்கு வரிவரியாகச் சுருங்கும் அழகைக் கண்டு சிரித்த சகதேவன் “சூதரே, உம் விறலி பேரழகி” என்றான். சூதர் “இளமையில் அழகியாக இருக்கவில்லை இளவரசே. என் கவிதையால் அவளை அழகாக்கினேன்” என்றார். சகதேவன் சிரிக்க அவள் திரும்பி சூதரின் தொடையில் தன் குறுபறையால் அடித்தாள்.

”நீ பிறந்த மீன் எது என்று சொல்” என்றான் சகதேவன். அவள் தாழ்ந்த குரலில் “விசாகம்” என்றாள். ”விசாகம்… அதன் தேவர்கள் அக்னியும் இந்திரனும். அவர்கள் இருவரும் அமையும் ஒரு கதையை சொல்…” அவள் கீழுதட்டை கடித்துக்கொண்டு தலைசரித்து சிந்தித்தாள். விழிகளைத் தூக்கி “சொல்கிறேன்” என்றபின் திரும்பி தன் கணவனிடம் அதை சொன்னாள். அவர் தலையசைக்க அவள் தன் குறுபறையை விரல்களால் முழக்கி “ம்ம்ம்” என்று முனக யாழுடன் இருந்த சூதர் அந்தச்சுதியை பற்றிக்கொண்டார். அவள் சொல்மகளுக்கும் பாஞ்சாலமன்னனுக்கும் அவனை ஆளும் தெய்வங்களுக்கும் வாழ்த்துரைத்தாள். இந்திரனையும் அக்னியையும் வாழ்த்திவிட்டு கதை சொல்லத் தொடங்கினாள்.

காமிகம் என்னும் இனியகாடு பிரம்மத்தால் தொடப்பட்ட முகில்வெளி என பூத்தது. அங்கே அழகிய முகத்தின் புன்னகை என வழிந்தோடியது ஒளிமிக்க காமவதி என்னும் ஆறு. அதனருகே அமைந்த தவக்குடிலில் தேவசர்மர் என்னும் வேதமுனிவர் வாழ்ந்திருந்தார். மூன்று வேதங்களும் முறைப்படி கற்பிக்கப்பட்ட அந்த அறிவுச்சாலையில் பன்னிரு மாணவர்கள் அவருடன் தங்கியிருந்தனர். அவரது துணைவியாகிய ருசி அவர்களுக்கு உணவிட்டு புரந்தாள்.

இளங்காலை ஒளிபட்ட மலர்க்கொன்றை போன்றவள் ருசி. பெருங்காதலுடன் கணவனால் முத்தமிடப்பட்டமையால் மேலும் அழகுகொண்டாள். ஒவ்வொரு நாளும் அவள் அழகு வளர்ந்தது. அவள் நீராடச்சென்ற இடங்களில் கந்தர்வர்கள் மலர்தேடும் வண்டுகளாகவும் விழியேயான தவளைகளாகவும் உடல் சிலிர்க்கும் ஆண்மான்களாகவும் வந்து சூழ்ந்துகொண்டனர். அவளழகைக் கண்ட உவகையால் அவர்களின் உடல்கள் பொன்னொளி கொண்டன. சிறகுகளில் புலரிச்செம்மை எழுந்தது.

வானவீதியில் தன் வெண்முகில் யானைமேல் மின்னல்வாளேந்தி சென்றுகொண்டிருந்த இந்திரன் கீழுலகில் எழுந்து பறந்துகொண்டிருந்த கந்தர்வர்களில் சிலரது உடல் மட்டும் பொன்னென ஒளிர்வதைக் கண்டான். அவர்களில் சிலரை அழைத்து உங்கள் ஒளியை எங்ஙனம் அடைந்தீர் என்று கேட்டான். அவர்கள் மண்ணில் எங்குமில்லாத பேரழகை காமிகவனத்திலே கண்டோம். எங்கள் விழிகள் மலராயின. உடல் பொன்னாயிற்று என்றனர்.

ஒரு பொன்வண்டாக மாறி மறுநாள் காமவதிக்கரையில் யாழிசைமீட்டி சுழன்றுகொண்டிருந்த இந்திரன் நீராட வந்த ருசியை கண்டான். மலரிலிருந்து மலரில் விழுந்து மண்ணை அடைந்து விழிமட்டும் உயிர்கொண்டு கிடந்தான். அவள் நீராடிய அழகை இருமுறை காண்பதற்காக காற்றை நிறுத்திவைத்து ஆற்றை ஆடியாக்கினான். அவள் சென்றபின்னரும் அந்த ஆடிப்பாவை அங்கேயே கிடக்கும்படி செய்தான். அதை நோக்கி நோக்கி நெஞ்சுலைந்து அங்கே நின்றான்.

மறுநாள் ஒரு காட்டுமானாக அவள் குடிலுக்குப்பின்பக்கம் சென்று நின்றான். அதன் மலர்க்கிளைக்கொம்பைக் கண்டு ஆசைகொண்ட ருசி அதை அருகே அழைத்து இளந்தளிர்க் கீரையும் வெல்லமும் கொடுத்து அதன் நீள்கழுத்தை வருடினாள். மறுநாள் வெண்நுரை என சிறையெழுந்த அன்னமாக அவள் செல்லும் வழியில் வந்து நின்றான். அதை கூலமணிகொடுத்து அருகழைத்து தன் நிறைமுலைகள் அழுத்த அணைத்துக்கொண்டாள். மறுநாள் அவள் துயிலெழுவதற்காக சேவலாக வந்து நின்று கூவினான். அவள் தனிமையில் கனவுகண்டு அமர்ந்திருக்கும் மாதவிப்பந்தலில் வந்தமர்ந்து குயிலென கூவினான்.

இனியவனே கேள், மனைவியின் அழகென்பது அழகிய சித்திரங்களுடனும் கொடிகளுடனும் கணவனுக்காகத் திறந்திருக்கும் பொன்னிறப்பெருவாயில் மட்டுமே. அவன் ரதம் நுழைந்ததும் அது விலகி பின்னால் சென்றுவிடுகிறது. அந்தப்புரத்தின் மையத்தில் அவள் இலச்சினைக்கொடி பறக்கும் அரண்மனையை நோக்கியே சாலைகளனைத்தும் செல்கின்றன. அங்கே அடித்தளத்தின் ஆழத்தில் உறையும் தெய்வத்தைக் கண்டவனே மனைவியை அடைந்தவன்.

தன் விழிகளுக்கப்பால் நோக்கத் தெரியாதவனை பெண்களும் அறிவதேயில்லை. அவர்கள் அவன் கண்களையும் கைகளையும் வெண்குருதி மணத்தையும் வீண்சொற்களையும் மட்டுமே அறிந்திருக்கிறார்கள். உள்ளம் இதோ இதோ என எழுகையிலும் உடல் முந்தியெழும் தீயூழ் கொண்டவள் பெண். வாயில்களற்ற மாளிகையில் சுவரோவியங்களெனத் தெரிபவை வாயில்களே.

வறியோன் வழியில் கண்டெடுத்த வைரமென தன் துணைவியை அறிந்தவர் தேவசர்மர். இமை மூடினாலும் அழியாத விழிச்சித்திரமாக அவளிருந்தாள். அவள் கண்ணசைவை உதட்டுச்சுழிப்பை கழுத்துவளைவை விரல்நெளிவை சொற்களென்றாக்கிய மொழியை அறிந்தவர். எங்கு சென்றாலும் அவளுடன் அவர் இருந்தார். அவளைச்சூழ்ந்திருக்கும் ஒவ்வொரு பொருளிலும் அவர் விழி ஒளியுடன் திறந்திருந்தது.

அவளை வழிபடுந்தோறும் அணுகினார். அணுகும்தோறும் அறியமுடியாமை கண்டார். அறியமுடியாதவை அச்சமூட்டுகின்றன. அச்சமோ ஐயமாகிறது. ஐயம் தன்னை தான் வளர்க்கும் பூசணம். அவள் அவரில் குடியேறிய நஞ்சானாள். கனிந்து சிவந்து கணம் தோறும் தெறிக்கும் வலி. இறக்கிவைக்கமுடியாத சுமை. எவரிடமும் பகிரமுடியாத பழிக்கனவு. எப்போதும் உடனிருக்கும் இழிமணம்.

நீராடித் திரும்புகையில் சேற்றில் பதிந்த தன் மனைவியின் காலடியை கண்டார். ஒவ்வொரு இரண்டாவது காலடியும் அழுந்தப்பதிந்திருக்கக் கண்டு அவள் சிறு துள்ளலுடன் சென்றிருப்பதை உணர்ந்து உடல்நடுங்கினார். நாவில் திகழ்ந்த வேதம் மறந்து அவள் காலடிகளை தொடர்ந்து சென்றார். அவள் தன் குடிலில் அடுப்பில் நெருப்பேற்றி கைகூப்பி கலம் ஏற்றுவதை கண்டார். அவள் கைகளிரண்டும் ஒன்றுடன் ஒன்று முழுமையாக பொருந்தியிருக்கவில்லை.

அவர் விழிகள் அன்றுமுதல் மாறுபட்டன என்பதை அவளும் கண்டாள். அவளைச்சூழ்ந்து அவை பறந்தலைந்தன. கேட்டவினாக்களுக்கு ஒருகணம் கடந்தபின்னரே விடைவந்தது. உண்ணும் உணவிலும் ஓதும் மொழியிலும் சிந்தை நிலைக்கவில்லை. அவள் கழற்றியிட்ட ஆடைகளை எடுத்துப்பார்த்தார். அவள் தொட்டெடுத்த குங்குமக்கதுப்பில் எஞ்சிய கைவிரல் பதிவை தான் தொட்டு நோக்கினார். அவள் கால்சிலம்பின் உதிர்ந்த மணி ஒன்றை தேடிச்சென்று கடம்பமரத்தடியில் கண்டெடுத்தார். அவள் துயில்கையில் ஓசையின்றி எழுந்து வந்து நோக்கினார்.

ஏதுமில்லை எவருமில்லை என்று சித்தம் சொல்லச் சொல்ல சித்தத்தை ஆளும் இருள் மேலும் அச்சம் கொண்டது. இருளுக்குள் ஓசைகளெல்லாம் காலடிகளாயின. இலையலுங்கி ஆடையோசையாகியது. அணுகி மூச்சுவிட்டு விதிர்க்கச்செய்து விளையாடியது காற்று. அப்பால் தன்னை நோக்கும் விழிகளிரண்டை எப்போதும் உணர்ந்தார்.

பருவம் தவறி பூக்கும் கொன்றை என தன் மனைவி பொன்பொலிவதை கண்டார். அவள் விழிகளின் நுனிகளில் என்றுமிலாத கூர்மை. அவள் புன்னகையில் எப்போதும் ஒரு நாணம். தனித்திருக்கையில் அவளில் எழும் மூச்சில் வெம்மை ஏறியது. கனவில் நடந்தாள். கைகள் செய்வதை கண்கள் அறியாமலிருந்தாள். பொருள்பொருந்தா சொற்கள் உதிர்த்தாள். துயில்கையில் அவள் முகத்தில் சாளர இடுக்கில் ஊறும் விளக்கொளி என எப்போதும் புன்னகை இருந்தது. பெரிய மீன் உள்ளே நீந்தும் சுனைநீர் என அவள் எப்போதும் அலையழிந்த உடல்கொண்டிருந்தாள்.

அவரது நிலைமாற்றம் கண்டு அவள் முதலில் திகைத்தாள். பின் உதிர்ந்த மணிகளை ஒவ்வொன்றாய் சேர்த்து கோர்த்து எடுத்து அவர் உள்ளத்தை அறிந்தாள். அவரது ஐயம் அவளை சினம் கொள்ள வைத்தது. தன்னை இழிவுபடுத்தும் அவர் முகத்தை நோக்குகையில் வெறுப்பெழுந்தது. தனித்திருந்து எண்ணுகையில் அகம் கனன்றது. அவரிடம் முகம் நோக்கி சொல்லவேண்டிய சொற்களை எடுத்து கோர்த்துக்கோர்த்து திரட்டியபின் வீசி நீள்மூச்செறிந்தாள். நூறுமுறை அவர் முன் தீக்குளித்தாள். நீறிலிருந்து மீண்டும் எழுந்தாள்.

பின் மெல்ல தன் அகச்செப்பின் அந்த சிறு ஒளிர்மணியை அவரால் தொடவே முடியாதென்று உணர்ந்தாள். அதை எண்ணி புன்னகைத்துக்கொண்டாள். இத்தனைக்கும் அப்பால் இப்படியொன்று தன்னில் நிகழ்ந்திருப்பதை எண்ணி மெய்சிலிர்த்தாள். கன்னிப்பருவத்தின் களிப்புகளுக்குள் செல்ல இன்னும் ஒரு மந்தணக்குகைவாயில் இருக்கிறது. காலத்தில் மீண்டு செல்ல ஒரு கரவுச்சொல் இருக்கிறது. தெய்வங்கள் மட்டுமே அறிந்த ஒன்று எஞ்சியிருக்கிறது.

கன்னியர் தங்கள் அகத்தை ஒளிப்பதில்லை இளையோனே. அவர்கள் அதை மலரென கூந்தலில் சூடிக்கொள்கிறார்கள். செஞ்சாந்தென நெற்றியில் அணிகிறார்கள். ஒளிமணிகளென முலைகள் மேல் தவழவிடுகிறார்கள். கரந்துறைக கரந்துறைக என்று அவளிடம் சொல்லிக்கொண்டிருக்கிறது அவளைச்சூழ்ந்திருக்கும் காற்று. கரந்துவைக்க சிலவற்றை அவள் கண்டடைகிறாள். அதை எண்ணி எண்ணி முகம் சிவக்கிறாள். மூச்செறிகிறாள். இருளில் ஓசையின்றி புரண்டுபடுக்கிறாள்.

பெண்ணை அடைபவன் அவள் கரவுகளை கைப்பற்றுகிறான். அரண்மனையின் அத்தனை வாயில்களையும் திறக்கிறான். நிலவறைகளை, குகைவழிகளை, கண்கள் ஒளிரும் இருள்தெய்வங்கள் குடியிருக்கும் கருவறைகளை. ஆடைபறிக்கும் காற்று சுழன்றடிக்க பதறும் இரு கைகளால் பற்றிப்பற்றி சுழன்று குனிந்து தவிக்கிறாள். கையளவே எஞ்சுமா? காற்றறியாதது ஒன்றுமில்லை என்றாகுமா? தானென ஏதுமில்லையா? தெய்வங்களுக்குப் படைக்க குருதி ஒரு சொட்டும் மிச்சமில்லையென்றாகுமா?

இளையோனே, இழந்திழந்து ஏங்கித்தவிப்பது என்பதே பெண்ணின் பெருங்காலம். சுட்டும் குளிர்ந்தும் கைதவித்துக் கைதவித்து அவள் ஏந்திய கன்னிப்பருவத்தை நழுவவிட்டபின் அதை எண்ணாது ஒருநாளும் கடந்துசெல்வதில்லை. குளிர்ந்துறைந்த பனிவெளியின் பாழ்வெண்மையில் உருகிச்சொட்டும் பொற்துளியென சிறுசூரியன் ஒன்று எழுமெனில் அவள் பூத்து மீள்கிறாள். அதை அவள் ஒருபோதும் இழப்பதில்லை. இனியவனே, இனியவனே, பாவத்தை விட இனிதாவதுதான் என்ன?

பின்னர் அவள் அவரை எண்ணி புன்னகைக்கத் தொடங்கினாள். அப்புன்னகை கண்டு அஞ்சி அவர் விழிதிருப்புகையில் அதை விளக்கும் இன்சொற்களை சொன்னாள். போர்வையின் இளவெம்மையின் இதமறிந்தோர் குளிர்காற்றை விரும்புவர். அவர் ஐயம் தன்னை சூழ்ந்துவருகையில் அவள் உவகை பெருகியது. அவர் விழிமுன்னர் ஒளிந்தோடுகையில் அவள் சிறுமியென உடல்குறுக்கி வாய்பொத்திச் சிரித்து உடல் அதிர்ந்தாள்.

கொலைவாளை அருகே உருவி வைத்துவிட்டு ஆடும் பகடை. கட்டங்கள் ஒவ்வொன்றும் அஞ்சிய விலங்கின் உடலென அதிரும் களம். குருதிமணமெழுந்த காற்றில் ஆடவேண்டும் சூது. அவள் பேசிய ஒவ்வொரு சொல்லும் புதிரானது. அவள் சென்ற காலடிச்சரடுகள் எல்லாம் சுழல் பாதைகளாயின. அவள் அளித்த சான்றுகளெல்லாம் அவரை தன் பெருநிழல்முன் கொண்டுசென்று நிறுத்தின. அவளை அவர் மீண்டும் மீண்டும் கண்டுபிடித்தார். ஒன்றுநூறாகி நூறு ஆயிரமாகி ஆடிப்பாவைகளென முடிவிலிப் பெருக்காகி அவள் அவர் திசைகளை நிறைத்தாள்.

போதும் போதுமென்று கண்ணீருடன் தவித்தது அவரது அகம். என்னை வாழவிடு என்று எவரிடமோ கணமொழியாது கெஞ்சியது அவரது அகச்சொல். தன் குருதிநக்கி சுவைகண்ட குகைவிலங்கு. தன்னையே தின்று வெள்ளெலும்பாக அங்கே எஞ்சும். இலைகளெல்லாம் விழிகளான காடு. நிழல்களெல்லாம் வலைக்கண்ணிகளான நிலம். தன் கைகளே நாகங்களாகக் கூடுமென்றால் துயில் எங்கு நிகழும்? காற்று எடை கொண்டது. ஆவியாகி நீராகி பனிப்பாறையாகி உடலை அழுத்தியது. எஞ்சுமொரு சொல்லென்றால் அது என்ன?: ஏன் ஏன் ஏன் என்றல்லாமல் மானுடம் என்ன சொல்லிவிடமுடியும் இளையோனே?

ஓய்ந்து கண்மூடி விழிமுனைகள் பனித்து நிற்க படுத்திருப்பாள். பெருமூச்சுடன் உடல் உடலுக்குள் புரண்டு கொள்ளும். ஊற்றெழுந்த மலைச்சுனை என முகம் ஓயாது அலைபாயும். முத்தமிடும் கருநாகக் குழவிகள் என புருவங்கள். உதடுகள் ஒலியேற்காத ஓராயிரம் சொற்கள் உச்சரித்து உச்சரித்து அழியும். கைகளை விரித்து “இத்துடன் இங்கே” என்று சொல்லி எழுவார். எழுந்து சென்று ஆற்று நீரில் இறங்கி மும்முறை மூழ்கி நீராடி ஆடை அகற்றி பிறந்த உடலுடன் எழுந்து கரைசேர்ந்து மரவுரி மாற்றி மீள்வார்.

எடையகன்ற இதம் திகழும் அகம். முகம் மலர்ந்து இன்சொல்லெழும். தன்னை தான் நிகழ்த்தத் தொடங்குவார். மாணவர்களிடம் சிறுநகை சொல்லிச் சிரிப்பார். இன்னுணவு வேண்டும் எனக்கு என்பார். இளமையை மீட்டெடுத்தவரெனத் திகழ்வார். அவளை புதியவள் என அணைப்பார். சொல்லி மறந்த சொற்களால் அழைப்பார். அனைத்தையும் மீண்டும் தொடங்க விழைவார்.

ஆனால் அது அவளை ஏமாற்றத்தில் சுருங்கச்செய்யும். தன் அகத்தில் அவள் துளித்துளியாக அருந்தும் தேன்கிண்ணம் ஒழிகிறது. அவள் அகக்காட்டில் அந்தி எழுகிறது. அவள் அவரையே ஓரவிழிகளால் வேவு பார்ப்பாள். பார்க்கப்பார்க்க அவரது உவகையின் மிகையே அது நடிப்பு என்று காட்டும். நடிக்கநடிக்க அதன் நெறிகளை அவரே கண்டடைந்து விரிவாக்கிச் செல்வது தெரியும். அதற்கு எல்லையிருப்பதை அவள் அகம் உணர்ந்ததும் அடுமனையில் நின்று புன்னகை புரிந்துகொள்வாள்.

பின் அவர் அமைதியை சென்று முட்டிக்கொள்வார். கைப்பிழையால் கட்டவிழ்ந்து நாடகத்தின் நடுவே திரைவிழுந்துவிடும். தனிமையில் வெறுமை சூழ்ந்த முகத்துடன் அவர் அமர்ந்திருக்கையில் அவள் புண்பட்டு மயங்கிய சிம்மத்தை அணுகும் நரியென மெல்ல காலடி வைத்து மூக்குநீட்டி விழிகூர்ந்து அணுகுவாள். மிக மெல்ல ஒரு சிறு சான்றை அருகே இட்டுவிட்டு விலகி ஓடி பதுங்கிக்கொள்வாள். காய்ந்த தைலமரக்காட்டில் ஒரு நெருப்புப்பொறி.

மீண்டும் பகடைகள் உருளும். பற்றி வாங்கி உருட்டி வென்று தோற்று ஆடி முடித்து சலித்து காய்களைக் கலைத்து புதியதாக மீண்டும் நிகழும். பகடைகளில் தோற்றவர்கள் வெற்றிக்காக துடிக்க வென்றவர்கள் தோல்வியை அஞ்சி தவிக்க அது அவர்களை ஒருபோதும் விடுவதேயில்லை இளையவனே. பகடையென்று ஆன எதுவும் பாழ்வெளி நோக்கி கொண்டுசெல்லும் தெய்வங்களின் களமே.

எந்த ஆடலிலும் இருமுனைகள் ஒன்றை ஒன்று அணுகுகின்றன. நஞ்சோ அமுதோ பரிமாறி முடிகின்றன. இளையோனே, ஆடலென்பது யோகம். யோகமென்பது ஒன்றாகும் நிறைவு. ஒவ்வொரு சான்றாக கொடுத்துக்கொண்டிருந்தாள். ஒவ்வொன்றாகப் பற்றி சேர்த்துக்கொண்டு நூறுநூறாயிரம் வடிவங்களில் வைத்து வைத்து நோக்கிக்கொண்டிருந்தார். அவள் அளித்தவை பெருகின. அவர் அடைந்தவை கூர்ந்தன.

எங்கோ ஒரு முனையில் அவர் அறியவேண்டுமென அவள் விழைந்தாள். ஆடலில் அவள் அடையும் முழுவெற்றி அதுவே என்று உணர்ந்தாள். எங்கோ ஒரு முனையில் அவள் அறியத்தருவாள் என அவர் புரிந்துகொண்டார். அத்துடன் அவ்வாடல் முடியும் என்று அவர் உணர்ந்தார். இருவரும் அந்தத் தருணம் நோக்கி தங்கள் அறியாப்பாதைகளில் இருளில் ஒலிக்கும் குளம்புகளுடன் மூச்சிரைக்க ஓடிக்கொண்டிருந்தனர்.

ஒருநாள் காலையில் நீராடச் செல்கையில் அவள் காலடிகளால் அவரை எழுப்பினாள். அவர் தொடர அறியாதவளென குளிர்நீர்ச்சுனை ஒன்றை அடைந்தாள். நீலநீர்ப்பரப்பில் அவள் நீராடும்போது நீரிலெழுந்த பாவையை முத்தமிட்டு முத்தமிட்டு எழுந்த பொன்னிறச் சிறுகுருவியை அவர் கண்டார். அதற்கு நிழலில்லை என்பதை அவர் காண்பதற்காக அவள் அருகே நின்ற குவளை மலரொன்றை எடுத்து அதை நோக்கி வீசினாள். கிளுக் எனச் சிரித்து எழுந்து பறந்தபின் சிறகடித்து வந்து அவள் தோளில் அமர்ந்து பின் எழுந்ததை கைவீசி கலைத்து நகைத்தாள்.

கண்டுகொண்டதும் அவர் எரிந்த உடலில் குளிரெண்ணை விழுந்த இதத்தையே உணர்ந்தார். சினமோ துயரோ இல்லாத நெஞ்சில் விழவு முடிந்த பெருங்களத்தில் எவரோ கைவிட்டுச்சென்ற சால்வை என ஒற்றைச் சொல் ஒன்று மெல்ல நெளிந்தது. பெருமூச்சுடன் திரும்பிச் சென்று தன் பீடத்தில் அமர்ந்து தன் சித்தத்தையே வியந்து நோக்கிக் கொண்டிருந்தார். சித்தமென்பது கலைந்தபின் தன்னை அடுக்கத் தெரியாத ஆட்டுமந்தை. கூடணைவதற்காக பூசலிடும் அந்திப்பறவைக்குலம். நெளிந்து நெளிந்து மீண்டும் பழைய பாவையையே காட்டும் அலைநீர்ப்பரப்பு.

அவள் மீண்டுவந்தபோது விழிமுனை வந்து தன்னை தொட்டுச்செல்வதை அறிந்தார். உடல் பதற எரிந்து அணைந்தது வெந்தணல். அவள் உடலில் கூடிய துள்ளல் அவளும் அதை அறிந்திருந்தாள் என்பதையே காட்டியது. அவள் காலடிகளை மட்டுமே தொட்டுத் தொட்டுச்சென்ற அவர் கண்கள் ஈரப்பாதத் தடங்களிலேயே அவள் அகத்தை முழுதறிந்தன. மெல்லியகுரலில் பாடிக்கொண்டாள். கன்னியென சிறுமியென உருமாறிக்கொண்டிருந்தாள். எரியடுப்பில் கலமேற்றியபோது கன்னம் சிவந்தாள். பின்கட்டில் குவளை ஒன்றை கழுவுகையில் விழியலைந்து முகம் வியர்த்தாள்.

துயிலற்ற இரவைக் கடந்து மறுநாள் காலையில் எழுந்ததுமே மழையால் உருட்டிவரப்பட்டு முற்றத்தில் கிடக்கும் கரும்பாறை என ஒன்றை உணர்ந்தார். அன்றுதான் அந்நாள். எழுந்து சென்று சுவடிகளை நோக்கினார். அது விசாகம், இந்திரனுக்குரிய நாள். நெடுமூச்சுடன் எழுந்து செல்லும்போது ஒன்றை உணர்ந்தார், அது அக்னிக்குரிய நாளும்கூட. நீராடி வந்த ருசி தன் நீள்குழலை புகையிட்டு உலரசெய்து ஐந்து புரிகளாக பின்னி அவற்றில் மலர்சூடியிருந்தாள். அவள் கண்களில் கனல் ஒளிர்வதை, கன்னங்கள் வெம்மைகொண்டு கனிந்திருப்பதை அவர் கண்டார்.

அவரது மாணவர்களில் பிருகுகுலத்தைச் சேர்ந்த விபுலனும் இருந்தான். பிரம்மனின் வேட்கையின் வடிவாக வேள்விநெருப்பில் தோன்றிய பிருகுவின் கொடிவழி வந்தவர்கள் அக்னிகுலத்தார் என்று அறியப்பட்டனர். வெறும் கைகளாலேயே தொட்டு சமதையை நெருப்பாக்கி வேள்வியைத் தொடங்கும் வல்லமை கொண்டிருந்தான் விபுலன். அவன் மூச்சுபட்டால் சருகுகள் எரிந்தன. அவன் கால்பட்ட இடங்களில் புல்கருகி தடமாயிற்று. இரவுகளில் சுனைகளுக்குள் உடல் முக்கி படுத்துத் துயின்றான். அவன் சொல்லும் வேதச்சொல் உருகிச் சொட்டியது.

ஆசிரியன் முன் பணிந்து நின்ற சிறுவனாகிய விபுலன் மெல்லிய தோள்கள் கொண்ட செந்நிற உடலும், எரிமீன் எனச் சிவந்த கண்களும் கனலென கனிந்த இதழ்களும், செந்தழல் அலைகளென பறக்கும் குழலும் கொண்டு உடல்கொண்டு வந்த எரி என தோன்றினான். “மைந்தா, நான் நீராடச் செல்கிறேன். இங்கிருப்பாயாக. உன் குருவன்னையின் கற்புக்கு நீயே காப்பாகுக” என்று அவனை நிறுத்தியபின் மரவுரியையும் நீராட்டுத்தூளையும் எடுத்துக்கொண்டு தன் மாணவர்களுடன் நீராடச்சென்றார்.

திண்ணையில் ஏற்றப்பட்ட சிற்றகல் அருகே அமர்ந்திருந்தான் விபுலன். கண்நோக்கியிருக்கவே அக்காடு பொன்னொளி கொண்டு எழுவதைக் கண்டான். வானில் முகில்கணங்கள் ஒன்றை ஒன்று முட்டிக்கொண்டு வந்து தேங்கிச் செறிந்தன. பொன் துருவல் பொழிந்ததுபோல் ஓர் இளமழை விழுந்தது. இலைத்தகடுகளில் ஒளி வழிந்து துளித்துச் சொட்டியது. பறவைக்குலங்கள் ஒலியடக்கி இலைகளுக்குள் அமைந்து விழி விரித்து நோக்கின. தென்கிழக்கு திசையில் ஒரு வானவில் எழுந்து தெளிந்தது.

சோலைமரங்களுக்கு மேல் ஒரு சிறு மின்னல் அதிர்ந்ததை விபுலன் கண்டான். எழுந்து நின்று நோக்கியபோது அது சிறு சுனையொன்றில் விழுந்து நீரை பொற்குழம்பாக்கியதையும் மின்னல் அணைந்தபின்னரும் சுனை ஒளிவிடுவதையும் பார்த்தான். சுனையில் இருந்து எழுந்த குழலிலும் ஆடையிலும் ஈரநீர் சொட்டும் இளைஞன் ஒருவன் கைகளை உதறிக்கொண்டு கரைவந்து நின்றான். குழலை நீவி நீரை வழித்தபின் சுருட்டி கொண்டையாகக் கட்டி அருகே நின்றிருந்த பத்ரபுஷ்பம் ஒன்றைப் பறித்து அதில் சூடிக்கொண்டு நடந்து வந்தான்.

அவன் வருவதைக் கண்ட விபுலன் இல்லத்திற்குள் புகுந்தான். அங்கே ருசி புத்தாடை அணிந்து முலையிணைகள் மேல் மலர்மாலை சூடி கால்மேல் கால் ஏற்றி மஞ்சத்தில் அமர்ந்திருப்பதைக் கண்டான். நோவுகண்ட பசுவென அவள் விழிகள் நனைந்து சரிந்திருந்தன. மூச்சில் அவள் முலைகள் எழுந்தமைந்தன. கனிந்து உதிரப்போகும் பழமென சிவந்திருந்தன அவள் உதடுகள். மதயானையின் வாசத்தை அவன் உணர்ந்தான்.

அவனைக் கண்டதும் ஏறிட்ட அவளுடைய செவ்வரி விழிகள் அவனை நோக்கவில்லை. அவன் அவளிடம் “குருவன்னையே, தாங்கள் உள்ளறைக்குச் செல்லுங்கள்” என்றான். அணங்கெழுந்த பெண்ணென அவள் பொருளின்றி ஏதோ முனகினாள். வெளியே குயில்களின் ஓசையை அவன் கேட்டான். பொன்னிறமான நீள்நிழல் ஒன்று முற்றத்தை தொட்டதை கண்டான். பாரிஜாதம் மணத்தது. யாழேந்திய மதுகரம் சுழன்று சுழன்று இசைத்தது.

அவன் மண்டியிட்டு வணங்கி அனலுருக்கொண்டு எழுந்து அவளை அள்ளித்தழுவினான். “இழிமகனே, நான் உன் குருவின் துணைவி” என்று கூவினாள். “ஆம், ஆகவே உங்கள் கருவறையில் புகுந்துகொள்கிறேன்” என்று அவன் அவள் உடலுக்குள் நுழைந்து கருவறையில் அமர்ந்து கொண்டான்.

வாயிலில் வந்து நின்ற அழகனைக் கண்டு எழுந்தோடிச்சென்றாள் ருசி. கதவை அணுகுவதற்குள் கால்தளர்ந்து முகம் வியர்த்தாள். விழிபூக்க, முலைகள் விம்ம, இடை குழைய நிலைப்படியில் நின்று கைகளை நீட்டினாள். முகம் மலர்ந்து அந்த அழகன் படியேறும்போது அவள் வாய் “கீழ்மகனே, விலகு. இது வேதமுனிவர் தேவசர்மரின் குடில். இப்படிகளை கடந்தால் உன்னை சுட்டெரிப்பேன்” என்று கூவியது.

திகைத்து முற்றத்தில் நின்ற இந்திரன் “தேவி!” என்றான். “விலகிச்செல்… இல்லையேல் நீ அழிவாய்” என்றாள். அவள் வாய்க்குள் இருந்து அனல்கதிர் ஒன்று நாவாக எழுந்து நெளிவதைக் கண்டான். கைகளை விரித்து “நீ யார்? இப்பெண்ணுக்குள் குடியிருக்கும் நீ யார்?” என்றான். “நான் இவள் மைந்தன்… அணுகாதே” என்றாள் ருசி.

மணிவெளிச்சம் பரவிய அவன் பெருந்தோள்களையும் கைகளையும் கண்டு அவள் முலைகள் விம்மின. தொடைகள் நெளிந்து கதவுடன் இழைந்தன. கண்களில் கசிந்த நீர் இமைப்பீலிகளில் சிதறி மின்னியது. “தேவி, நீ என்னை அறியாயா?” என்று இந்திரன் கேட்டான். “கன்னியரை களவுக்கு அழைக்கும் கீழ்மகன் நீ. உன்னை நன்கறிவேன்… இவ்வில்லத்தை அணுகாதே” என்றாள் ருசி.

அவன் மெல்ல கால்களை எடுத்து வைத்தபோது அவள் நாவு அனலென எழுந்து அவனை சுட்டது. அவன் மீசையும் காதோரக்குழலும் பொசுங்கிச் சுருண்டன. அஞ்சி காலெடுத்து வைத்து அவன் பின்னால் சென்றான். “ஆம், நிகழ்ந்தது என்னவென்று அறிந்தேன். அனலோன் மைந்தனே, உனக்கு வணக்கம்” என்றபின் ஒரு சிறிய செம்மணிக்குருவியாக மாறி வானிலெழுந்து மறைந்தான்.

அவள் நா தொட்ட நிலைச்சட்டம் பற்றிக்கொண்டது. அவ்வனலில் இருந்து விடுபட்டவள் என அவள் பின்னால் சரிந்து விழுந்து கால்கள் குவித்து முகம் புதைத்து அமர்ந்து தோள்கள் அதிர அழுதாள். அவளருகே குடிலின் சட்டகமும் கதவும் மெல்ல வெடித்து நாவோசையுடன் எரிந்துகொண்டிருந்தன. நீராடிய ஈரத்துடன் ஓடிவந்த தேவசர்மர் நீரூற்றி நெருப்பை அணைத்து உள்ளே சென்றார். கதறியபடி அவள் அவர் கால்களை பற்றிக்கொண்டாள். தன் கமண்டலத்து நீரை அவள் நெற்றியில் தெளித்து “அறிந்து கடந்தாய். இனி அவ்வாறே அமைக!” என்று அவளை வாழ்த்தினார் தேவசர்மர்.

மறுநாள் தன் தோல்மூட்டையுடன் விபுலன் தேவசர்மரின் குருகுலத்தில் இருந்து கிளம்பினான். அவள் கண்ணீருடன் அவன் பின்னால் சோலை முகப்பு வரை வந்தாள். “நீ செல்லத்தான் வேண்டுமா?” என்றாள். “மைந்தனா கொழுநனா என தெய்வங்கள் திகைக்கும் உறவு இது. இது நீடிக்கலாகாது” என்றபின் அவன் சோலைக்குள் சென்று மறைந்தான். பல்லாயிரம் கோடி நாக்குகளுடன் சொல்லற்று நின்றது காடு.

“காட்டில் திகழும் சொல்லின்மையை வாழ்த்துக! கோடிநாக்குகள் உதிர்கின்றன. கோடி நாக்குகள் தளிரிடுகின்றன. சொல்லப்படாத ஒன்றால் நிறைந்து நின்றிருக்கிறது பசுமையின் இருள். அதை தெய்வங்கள் அறியும். தெய்வங்களே அறியும். இளையோனே, பெண்தெய்வங்கள் மட்டுமே அறியும். ஓம்! ஓம்! ஓம்!”

குறுபறையை தூக்கி அதன் மேல் முகம் வைத்து வணங்கிய விறலி அப்படியே அசையாமல் அமர்ந்திருந்தாள். அவளுடைய கொழுத்து விரிந்த கரிய தோள்களில் மயிர்க்கால்கள் புள்ளியிட்டிருப்பதைப் பார்த்தபடி சகதேவன் அமர்ந்திருந்தான்.

வெண்முரசு அனைத்து விவாதங்களும்

மகாபாரத அரசியல் பின்னணி வாசிப்புக்காக

வெண்முரசு வாசகர் விவாதக்குழுமம்

முந்தைய கட்டுரைசூரியதிசைப் பயணம் – 1
அடுத்த கட்டுரைகம்பராமாயணம் வகுப்பு