கர்மயோகம் : (16 – 19)

 16     பார்த்தா
இவ்வாறு சுழலும் சக்கரத்தை
இங்கே கடைப்பிடிக்காதவன்
தீமை நிறைந்தவன்
புலன் வழிச் செல்பவன்
வீண் வாழ்வு கொண்டவன்.

17     ஆனால்
ஆன்மாவை விரும்பி
ஆன்மாவில் நிறைவு கொண்டு
ஆன்மாவில் மகிழ்ந்திருக்கும்
மானுடன்
செய்ய வேண்டியதென
ஏதுமில்லை.

18      இவ்வுலகில் அவனுக்கு
செயலால் எப்பயனுமில்லை
செயலாற்றாவிடினும்
எந்த இழப்புமில்லை
அவன்
எந்த லாபத்திற்காகவும்
இந்த உலகிலுள்ள எதையும்
நம்பியிருப்பதில்லை.

19     ஆகவே
பற்றற்ற வனாக
செய்யவேண்டிய செயல்களை
சிறப்புறச் செய்க.
ஏனென்றால்
பற்றற்று
செயலாற்றும் புருஷன்
பரத்தை அடைகிறான்.

ஒரு கண் உள்ளே ஒரு கண் வெளியே

முந்தைய செய்யுட்களை இந்த வரிகளுடன் இணைத்துதான் புரிந்து கொள்ள வேண்டும். ஏற்கனவே பலமுறை கூறியதுபோல கீதையை ஒரு பொன்மொழித் தொகுப்பாக வாசிக்கலாகாது. வரிகளை உருவியெடுத்துப் பொருள் கொள்வது பிழைகளை உருவாக்கும். அது ஒரு தொடர் விவாதம். ஒரு விவாதத்துடன் முரண்படுவதன் மூலம் அடுத்தது நோக்கி நகரும் ஒரு விவாத ஊசல் அது.

முந்தைய செய்யுள்களில் யக்ஞம் (வேள்வி) என்று கூறப்பட்டது எது என்பதை மீண்டும் உறுதியாக நிறுவுகின்றன இச்செய்யுள்கள். பற்றிலாது செய்யப்படும் பெருஞ்செயலே வேள்வி என்று இங்கே கூறப்படுகிறது. தன் சொந்த நலங்களை கருதாது, மானுடம் முழுக்க நலம் பெறும் பொருட்டு, பெரும் தியாக உணர்வுடனும் அர்ப்பணிப்புடனும் செய்யப்படும். செயல்களே வேள்வித்தன்மை கொண்டவை. அவ்வாறான செயல்கள் மூலமே ஒருவன் ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு நம்மை மாட்டிவிடும் இவ்வுலகின் செயல்சுழற்சி என்ற மாயச்சக்கரத்தில் இருந்துவிடுபட இயலும்.

ஒன்பதாவது செய்யுளில் செயல்சுழல் என்ற சக்கரத்தைப் பற்றிய குறிப்பு வருகிறது. பதினைந்தாவது செய்யுளில் பிரபஞ்சச்சுழற்சி என்ற மகத்தான சக்கரத்தைப் பற்றிய குறிப்பு வருகிறது. இரண்டுக்கும் இடையேயான வேறுபாட்டை தத்துவார்த்தமாகப் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

நாம் பிறந்ததுமே ஒரு செயல் சுழலில் மாட்டிக் கொள்கிறோம். செய்யும் ஒவ்வொரு செயலும் மேலும் செயல்களைச் செய்தாக வேண்டிய கட்டாயத்தை நோக்கிக் கொண்டு செல்கிறது. இதுவே கர்மசக்கரம். பெளத்தர்கள் இதை பவ சக்கரம் என்பார்கள். பிறப்புஇறப்பின் சுழல் என்றும் இதைக் கூறலாம். செயலும் அதன் விளைவும் மாறி மாறி சுழற்றும் சக்கரம் இது. இந்த கர்ம சக்கரத்தை தன்னுடைய ஓர் உறுப்பாகக் கொண்ட மாபெரும் சக்கரமே இரண்டாவதாக கூறப்படுவது. இது பிரபஞ்ச நிகழ்வின் சக்கரம். இதை பெளத்தம் தர்ம சக்கரம் என்று கூறுகிறது.

அந்த பிரபஞ்ச சக்கரம் என்பதன் சுழற்சியைப் பற்றியே கீதையின் 16 ஆவது செய்யுளாகிய இது பேசுகிறது. கருத்தில் இருந்து பருப்பொருளுக்கும் பருப்பொருளில் இருந்து திரும்பவும் கருத்துக்குமாக சுழலும் சக்கரம் அது. இருப்பில் இருந்து இன்மைக்கும் திரும்பவும் சுழல்கிறது. அறியும் பொருளில் இருந்து அறிய முடியாமைக்கும் திரும்பவும் சுழல்கிறது.

ஒருவன் அந்தச் சக்கரத்தை இந்த உலகின் நிகழ்வுகளில் கண்டு அதற்கேற்ப தன் வாழ்வை ஒத்திசைவு கொண்டவனாக ஆக்கிக் கொள்ள வேண்டும். அவ்வாறாக தன்னைச்சுற்றியுள்ள ஒவ்வொரு சிறு அசைவிலும் பிரபஞ்சத்தின் மாபெரும் சுழற்சியை ஒருவன் காண்பான் என்றால் அவன் தானும் அதில் ஒரு சிறு பகுதியே என உணர்வான்.  அப்படி உணராதவனின் வாழ்வு விணாநது புலன்களால் அலைக்கழிக்கப்படுவது, பாவம் நிறைந்தது என்கிறது கீதை.

என்னுடைய அனுபவம் ஒன்றைக்கூறுகிறேன். காடுகளில் அலைகையில் அடிக்கடி கொக்கிப்புழு தாக்குதல் எனக்கு ஏற்படுவதுண்டு. அதைப்பற்றி இணையத்தில் வாசித்தேன். கொக்கிப்புழு மலக்குடலில் வளர்கிறது. பிராணிகளின் குதவாயில் வந்து நெளிகிறது. பிராணிகள் அரிப்பெடுத்துச் குதவாயைச் சொறியும்போது கைக்கும் அங்கிருந்து  வாய்க்கும் சென்று விடுகிறது அதன் முட்டை. மீண்டும் குடலுக்கு வந்து சேர்கிறது. அவ்வாறாக அது கனகச்சிதமாக தன் சுழற்சியை நிகழ்த்துகிறது.

எப்படி உருவானது அந்த சுழற்சி? அந்த புழுவுக்குள் ஒரு சின்னஞ்சிறு பிரக்ஞைத்துளி அன்றி மனமோ அறிவோ இருக்க வாய்ப்பில்லை. அது தொற்றி வாழும் உயிரினத்தின் வடிவத்தை அதனால் கற்பனையே செய்ய முடியாது. அதன் பிரக்ஞைக்கு மிகமிகப் பிரம்மாண்டமான ஒன்று  அந்த உடல். ஆனால் பரிணாமத்தின் படிகளினூடாக மிகக்கச்சிதமாக அந்த உடலின் எல்லா சாத்தியங்களையும் புரிந்துகொண்டு அது தன் வட்டப்பாதையை அமைத்துக்கொண்டு அதில் சுழன்றுகொண்டிருக்கிறது. பலலட்சம் வருடங்களாக.

அப்படி எந்த வட்டப்பாதையை நாம் உருவாக்கியிருக்கிறோம்? நாம் சற்றும் உணரமுடியாத ஏதேனும் ஒரு சுழற்சியில்தான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோமா? ஒருமுறை காட்டில் குனிந்து ஒரு கொக்கிப்புழுவைப் பார்த்தேன். உடலே விரலாக அது நெளிந்துகொண்டிருந்தது. அந்த தியான மனநிலையில் சட்டென்று எதுவோ திறக்க ஒரு அதிர்வு முதுகெலும்பை உலுக்கியது. ”ஏவம் பிரவர்த்திதம் சக்ரம்” என்ற சொற்களின் பிரம்மாண்டத்தை அந்த மலப்புழு சொல்லியது எனக்கு.

அற நோக்கில் ஆழ்ந்து கவனிக்கத் தக்க செய்யுள் இது. பிற மத நூல்களைப் போல செய்யக்கூடுவன செய்யக் கூடாதவை என்று பிரித்து செய்யக்கூடாதவற்றை செய்வதே பாவம் என்று கீதை கூறவரவில்லை என்பது முக்கியமானது. அப்படி கூடுவன கூடாதன என பட்டியலிடுபவை ஸ்மிருதிகள். அவை கால இட நிபந்தனைகளுக்கு உட்பட்டவை. எப்போதைக்கும் எவ்விடத்துக்குமாக கூடுவன கூடாதன பட்டியலைப் போட்டுவிட முடியாது. கீதை ஒரு ஸ்மிருதி. ஆகவே அது அழியாத நீதியைப் பற்றி பேசுகிறது. கூடுவன கூடாதன குறித்தல்ல, அப்பிரிவுகளை உருவாக்கிக் கொள்வதற்கான அடிப்படைகளைப் பற்றிப் பேசுகிறது.

அந்தக் கோணத்தில் மேலே உள்ள வரிகள் இன்னும் கூர்மை கொள்கின்றன. ‘ஏவம் பிரவர்த்திதம் இஹய:’ என்கிறது கீதை அவ்வண்ணமே ‘இங்கு’ செயல்படும் அந்த சக்கரம் என்ற கூற்று முக்கியமானது. அந்த பிரபஞ்ச சக்கரம் இங்கே நம்மைச் சுற்றி ஒவ்வொரு புல்பூண்டிலும் புழுவிலும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஞானமென்றால் அதை ஒவ்வொரு கணத்திலும் பார்க்கும் கண் மட்டுமே.

அந்த மகத்தான சக்கரத்தை உணர்ந்து அதில் இயைந்து கொள்ள வேண்டும் என்கிறது ‘அனுவர்த்தயதி’ என்ற சொல் முக்கியமானது. ‘கடைப்பிடிப்பதன் மூலம் ஒத்துப் போதல்’ என்ற பொருள் வரும் சொல் அது. அதாவது கீதை பாவம் என்றும் வீண் என்றும் கூறுவது நம்மைச் சுற்றியுள்ள இயற்கையின் பெரு நிகழ்வுடன் இயையாது முரண்பட்டு நிற்பதையே. துருத்திக் கொண்டு நிற்பதையே.

அத்துடன் கீதை இணைத்துக் கொள்ளும் இன்னொரு சொல்லையும் நாம் கவனிக்க வேண்டும். இவ்வாறு இணையாமல், ஒத்திசைவில்லாமல், துருத்தி நிற்பவன் புலன்வழிச் செல்பவன் என்கிறது கீதை. புலன்வழி இச்சைகளை பின்தொடர்ந்து செல்வதன் மூலமே மனிதன் அந்தப் பெரும் சக்கரத்தில் இருந்து பிரிந்து செயல்படுகிறான். ஆயுர்வேத மருத்துவத்தில் அடிப்படைக் கொள்கையும் இதுவே. இயற்கையின் பெரும் சுழற்சியில் இருந்து தன் காம குரோத மோகத்தால் மனிதன் விலகும் போதே நோய் உருவாகிறது என்கிறது அது.

அந்தச் சுழற்சியுடன் இணைவதற்கான வழியையே முந்தைய செய்யுள்களில் கீதை யக்ஞம் என்கிறது. இப்பிரபஞ்ச நிகழ்வு ஒரு அதிபிரம்மாண்டமான யக்ஞம். அந்த முடிவிலா வேள்வியின் ஒரு பகுதியாக ஆகும் வேள்விச் செயல்களின் மூலமே நாம் அதில் இணைய முடியும். நமது சொந்த விருப்பு வெறுப்புகள்  மூலம் நாம் அதிலிருந்து விலகும் போதுதான் கர்மசக்கரத்தில் மாட்டிக் கொண்டு அதில் சுழல ஆரம்பிக்கிறோம். வேள்வியென செய்யப்படும் செயல்கள் நம்மை பிரபஞ்ச நிகழ்வின் சக்கரத்துடன் இணைத்து நம்மை முழுமை செய்கின்றன. நமது தனிப்பட்ட நலன் நாடி நாம் செய்யும் செயல்கள் நம்மை எளிய வாழ்க்கைச் சூழலில் சிக்கவைத்து அழிக்கின்றன.

அதற்கான விடையாகவே கீதை அடுத்த செய்யுளை முன்வைக்கிறது. அது பற்றற்ற செயல். கர்மயோகத்தின் சாரம்சமான செய்தி அதுவே. பற்றற்ற செயலை ஏன் செய்ய வேண்டும் என்தற்கான விடைகளாகவே இச்செய்யுள்கள் வருகின்றன. ஒருவன் தனக்கென எது செய்தாலும் அவள் செயலெனும் சுழலில் மாட்டிக்கொள்கிறான் என்கிறது கீதை. ஆனால் அவன் அவற்றை செய்தாக வேண்டுமே. உயிரை வளர்க்க வேண்டும், சுற்றத்தை தாங்க வேண்டும். இச்செயல்களை எதன் பொருட்டு அவன் செய்யாமலிருக்க முடியும்?

ஒருவனுடைய இருப்பின் சாரம் அவனுடைய ஆன்மா. அவனுடைய இன்பம், நிறைவு அனைத்துமே அங்குதான் உள்ளது. ஆன்மாவில் இன்பமும் நிறைவும் கொள்பவனுக்கு வெளியே அடைய வேண்டிய இன்பமும் நிறைவும் ஏதுமில்லை. ஆகவே அவள் இன்பத்திற்காகவும் நிறைவுக்காகவும் எதையும் செய்ய வேண்டியதில்லை. செயலில் அல்ல செயலின்மையிலேயே மானுட சாரம் நிறைவைக் காண்கிறது. ஏனென்றால் அது புருஷன். அது வெறும் சாட்சி.

கேரளத்தில் வாழ்ந்த நூறு வயதான பெரியவர் மொய்து மௌலவி. காங்கிரஸ் தியாகி. 1984ல் நான் அவரை சந்தித்த போது அவர் சொன்னார். ‘இத்தனைநாள் எல்லாவற்றையும் வேடிக்கைபார்த்துக்கொண்டிருந்தேன் என்று இப்போதுதான் புரிகிறது. பார்த்ததை எல்லாம் இப்போது ஞாபகப்படுத்திக்கொள்கிறேன்’ என்று. அச்சொற்களை பின்னர் கீதையை வைத்து புரிந்துகொண்டேன். மிக ஆழத்தில் நாம் சும்மா வேடிக்கைதான் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

இச்செய்யுளில் உள்ள இந்திரிய ராமன் என்ற சொல்லைப்பற்றி சில கீதை உரைகளில் தவறான விளக்கங்கள் உள்ளன. இதற்கு ஒரு கிண்டலான தொனி உள்ளது என்று (சாப்பாட்டுராமன் போல) சிலர் கூறுவதுண்டு, சமஸ்கிருதம் அறியாமல் கூறுப்படுவது அது. ராமன் என்றால் ரமிப்பவன், விரும்புவன் என்றே பொருள். புலனிச்சைக் கொண்டவன் என்றே இச்சொல் பொருள்படுகிறது.

இச்செய்யுளுக்கு விளக்கம் அளிக்கும்போது நித்ய சைதன்யயதி இவ்வாறு கூறினார். பிரம்மத்தின் வெளிப்பாடான இப்பிரபஞ்சம் இரு தோற்றங்கள் கொண்டது. ஒன்று நாம் புறத்தே அறியும் பிரம்மாண்டமான செயல் வடிவப்பிரபஞ்சம். இதை சமஷ்டி ரூபம் என்கிறார் நித்யா. பிரபஞ்சத்தின் கோடானுகோடி செயல்களை விருஷ்டி என்கிறார். விருஷ்டி எல்லையில்லாது விரிந்திருக்கும் இந்த சமஷ்டிரூபமான பிரபஞ்சத்தை அறிய அறிபவனும் செயல்பட்டாக வேண்டும். அதுவே கர்மயோகம்.

ஆனால் இதற்கு நேர்மாறாக ஒருவன் தன்னுள் அறியும் தன்னிலையானது புறத்தே உள்ள செயல்களுடன் தொடர்பற்றது, மாறாதது, செயலாற்றாதது, தன்னுள் தான் நிறைந்து இருப்பது. அதனுடன் தொடர்பு கொண்டு அதை அறிய அறிபவன் செயலுக்கு நேர் எதிர்நிலையில் சென்றாக வேண்டும்.

அவ்வாறு ஆத்மாவில் ஆடுபட்டபவனாகிய ஆத்மராமனுக்கு இவ்வுலகில் செயல்களால் அமையப்படுபவை என்று ஏதுமில்லை. செயலாற்றாமல் இருப்பதன் மூலம் அவன் இழப்பதும் ஏதுமில்லை. அவன் எந்த உயிரையும் சார்ந்திருக்கவில்லை. தன்னுள் உள்ள தன்னை மட்டும் சார்ந்திருக்கிறான்.

ஆயினும் அர்ஜூனனைச் செயலாற்றும்படி கூறுகிறார் கிருஷ்ணன். ஏனென்றால் இங்கே அர்ஜூனன் தன் ஆத்மாவை நம்பி அதில் ஈடுபட்டு இருக்கவில்லை வெளியே பார்த்து அறிய முயல்கிறான். புறத்தே செயற்பெருவெளியாக பரந்துள்ள இப்பிரபஞ்சத்தையும் அதன் ஒரு பகுதியாக கண்முன் நிகழும் குருஷேத்திர போரையும் அறிய முயல்கிறான்.

அவ்வாறு செயலாற்றும் போது ஒரு கண் உள்ளே திரும்பி அங்குள்ள ஆத்ம சாரத்தைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்கிறது கீதை. வெளியே நோக்கி செயலில் தீவிரமாக ஈடுபடும் போதுகூட உள்ளே நோக்கி அச்செயலில் பற்றில்லாமல் இருக்கவும் வேண்டும். கர்மயோகம் மேலும் மேலும் விரிவுபடுத்திப் பேசும் தத்துவம் இதுவே.

[மேலும்]

முந்தைய கட்டுரைதொலைக்காட்சியிலே…
அடுத்த கட்டுரைஇயந்திரமும் இயற்கையும்