அன்புள்ள ஆனந்த்
தங்கள் கருத்துரை கண்டேன். தத்துவார்த்தமான விவாதங்களுக்கு ஒரு செறிவான மொழி தேவைப்படுகிறது. கூடுமானவரை எளிமையாக எழுதப்பட்ட நூல்தான் இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள். படிமங்கள் போன்ற சொல்லாட்சிகள் ஏற்கனவே தமிழில் வேரூன்றிவிட்டவை அல்லவா?
ஜெ
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
இந்து மரபில் ஆறு தரிசங்கள் படித்தேன்…. ( கிழக்கு வெளியீடு) … சில கேள்விகள்…
அஜீவக மரபு, நம் செயல்கள் மூலம் நிகழ்சிகளை மாற்ற முடியாது என சொல்வதாக எழுதி உள்ளீர்கள்…
ஊழையும் உப்பக்கம் காண்பர் என திருவள்ளுவர் சொல்வது, நம் செயல் மூலம் , நியதியை மாற்றலாம் என பொருள் தருகிறதே… அவரை எப்படி அஜீவகர் என்கிறீர்கள்..? சில குரல்கள் மூலம் விளக்கவும்…
தமிழ் நாடு சித்தர் மரபு , இந்து மரபில் இருந்து வேறுபட்டதா… அவர்களின் தரிசனம் என்ன?
107 ம பக்கத்தில், மூன்றாவது பாரா…. ” இதை நாம் விஷ்ணு புறம் நாவலில்…..” என்று ஆரம்பித்து… ” மரபு கேட்டது ” என முடிகிறது…. வாக்கியம் சரியாக புரியவில்லை….
regards,
Ravi
அன்புள்ள ரவி
உங்கள் வினாக்களுக்கு நூலிலேயே பதில்கள் உள்ளன என்று நினைக்கிறேன்.
திருவள்ளுவர் சமணராக அல்லது ஆஜீவகாரக இருக்கலாம் என்பது பரவலான ஓர் ஊகம். ஆனால் தமிழகத்தில் சமணம் ஆசீவகம் பௌத்தம் போன்ற மதங்கள் எவையுமே அவற்றின் ‘தூய’ வடிவில் நீடிக்கவில்லை. அவை இங்குள்ள எல்லா பண்பாடுகளுடனும் தொடர்ச்சியான விவாதத்தில் ஈடுபட்டன. இங்குள்ள பண்பாட்டுக்கூறுகளை உள்ளிழுத்துக்கொண்டன. ஆகவேதான் திருத்தக்க தேவர் என்ற சம்ண முனி இன்பச்சுவை நிறைந்த சீவக சிந்தாமணியை எழுதினார். குறளில் இன்பத்துப்பால் இருக்கிறது
சிலப்பதிகாரமே சான்று. அதில் எல்லாமதங்களும் ஒன்றுடன் ஒன்று கலந்து ஒரே இடத்தில் இருப்பதை நாம் காண்கிறோம். கோவலன் அருகனையும் புத்தரையும் சிவனையும் விஷ்ணுவையும் வணங்கிவிட்டு மதுரைக்குக் கிளம்புகிறான். ஊழையும் உப்பக்கம் காணலாம் என்பதில் உள்ள உம் தான் முக்கியமானது.
சித்தர் மரபு என்று வரையறுக்கப்பட்ட ஒன்று முன்பே இருந்ததில்லை. அது ஒரு வாய்மொழி நம்பிக்கை. 18 சித்தர் பாடல்கள் என்ற நூல் 20 ஆம் நூற்றாண்டில் மாம்பழ கவிசிங்கராயர் போன்றவர்களின் உதவியால் ரத்தினநாயகர் ஆன்ட் சன்ஸ் போன்ற பதிப்பகத்தாரால் உருவாக்கப்பட்டது.
சித்தர் மரபு என்பதற்கு இரண்டு ஊற்றுமுகங்கள். ஒன்று சமணர்களின் திகம்பர துறவிகளின் மரபு. இன்னொன்று சைவ தாந்த்ரீக மதங்களான காலாமுகம் காபாலிகம் போன்ற மரபுகள். இரு ஊற்றுக்கண்களில் இருந்து பதினைந்தாம் நூற்றாண்டுக்குப் பின்னர் உருவாகி வந்த ஒரு மரபுதான் சித்தர் மரபு. கிட்டத்தட்ட இதற்கு இணையான மரபு கர்நாடகத்தில் உள்ள வீரசைவ மரபாகும்
சந்தேகமென்ன, அவை இந்து மதத்தின் உட் கூறுகளே. இப்படி ஒன்றில் இருந்து ஒன்றாக முளைக்கும் பலநூறு ஞானவழிகளின் ஒட்டுமொத்த்தமே இந்து மதம் என்பது. அதிலும் தமிழ் சித்தர் மரபு என்பது சைவத்தின் வளமான ஒரு கூறுமட்டுமே
அது ஓர் அச்சுப்பிழை. திருத்திக்கொள்கிறோம்
ஜெ