ஆன்மாவை கூவி விற்றல்

அன்புள்ள ஜெ,

சமீபகாலமாக நான் பல இளம் எழுத்தாளர்களைக் கவனித்து வாசித்து வருகிறேன். ஒரு நல்ல கதை கண்ணிலேபடும். உடனே அவர்கள் மீது ஒரு நம்பிக்கை உருவாகிறது. தொடர்ந்து படித்தால் பலமான ஏமாற்றம். பெரும்பாலும் அதேமாதிரி கதைகளையே திரும்பத்திரும்ப எழுதுகிறார்கள். கடந்த பத்தாண்டுகளிலே யார் புதிசாக வந்திருக்கிறார்கள் என்று பார்த்தால் இந்த ஏமாற்றம் உங்களுக்கே தெரியும். இந்தக் கதைகளை கவனித்து பார்த்தால் அவற்றில் வாழ்க்கை இல்லை என்று தெரிகிறது. ஒரு கிரா·ப்ட் மட்டும்தான் மிச்சமிருக்கிறது. கதையை புதுமாதிரியாகச் சொல்லிப்பார்க்கிறோம் என்று ஏதாவது சர்க்கஸ் வித்தைகளைச் செய்கிறார்கள். அதை பெரிய கலை என்று நினைத்துக்கொள்கிறார்கள். நல்ல கலை என்பது வாழ்க்கையைப்பற்றிய ஒரு ஞானத்தை அளிக்கும் என்று நான் நினைக்கிறேன். அல்லது நம்மை அது உணர்ச்சிவசப்பட வைக்கும். இவை எதையுமே செய்வதில்லை. நம்முடைய இளம் எழுத்தாளர்களைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஏன் இப்படி ஆகிறது?

சிவம்

அன்புள்ள சிவம்

நெடுநாட்களுக்குப் பின் எழுதுகிறீர்கள். உங்கள் கேள்விக்கு நான் எப்படி பதில் சொல்ல முடியும்? நானே இளம் எழுத்தாளர்தானே?

உங்கள் கடிதம் சார்ந்து எனக்கு பல சிந்தனைகள் எழுந்தன. ஓர் எழுத்தாளனுக்கு எழுத்தின் ஊற்றுக்கண்ணாக இருக்கக் கூடியது எது? வெங்கட் சாமிநாதன் அதை ‘நேர்மை’ என்று திரும்பத் திரும்பச் சொல்வார். அது பொதுவான ஒரு சொல். ஆனாலும் முக்கியமானது.

ஒரு குடிமகனாக, ஒரு குடும்பத்தலைவனாக எழுத்தாளன் வாழ்கிறான். எழுத்தில் அந்தரங்கமாக இன்னொரு வாழ்க்கை வாழ்கிறான். நேர்மை என்பது எங்கே இருக்கிறது? அவனது தனிவாழ்க்கையை பார்க்கக் கூடாது, எழுத்துவாழ்க்கையை மட்டுமே பார்க்கவேண்டும் என்று சொல்பவர்கள் உண்டு.

ஆனால் வெங்கட் சாமிநாதன் அதை ஏற்பதில்லை. தனிவாழ்க்கையில் இருந்தே எழுத்தாளன் தன் இலக்கியத்திற்கான தூண்டுதலை பெறுகிறான். அங்கே அவனது மனம் நேர்மைதவறியிருந்தால் எழுத்தில் மட்டும் எப்படி நேர்மை வரும்? நேர்மையற்ற உணர்ச்சிகளைக் கொண்ட எழுத்து போலியான தொழில்நுட்ப விளையாட்டாகவே இருக்க முடியும் என்பார்.

எனக்கு முழுக்கமுழுக்க ஏற்புடைய கருத்து அது. அன்றாட வாழ்க்கையில் சிறுசிறு சமரசங்கள் இல்லாமல் நாம் வாழமுடியாது. எழுத்தாளர்கள் சமரசங்கள் வழியாக வாழ விதிக்கப்பட்ட நடுத்தர வற்கத்து மனிதர்களும்கூட. ஆனால்  தனிவாழ்க்கையில் விழுமியங்களில் ஒருவன் சமரசம் செய்துகொண்டால் அவனுள் எரியும் நெருப்பு ஒன்று அணைந்துவிடுகிறது.

அதன்பின் அவன் சொற்களில் உண்மையின் சீற்றமும் தெளிவும் கைகூடாது. அவை ஒளியற்ற செயற்கை வெளிப்பாடுகளாகவே இருக்க முடியும். அந்நிலையில்தான் எழுத்தாளனிடம் இரு பெரும் சரிவுகள் நிகழ்கின்றன. ஒன்று அவன் சமகாலத்தில் எது மோஸ்தரோ அதை எழுத ஆரம்பிக்கிறான். எல்லாரும் கதையை கலைத்துப்போட்டால் தானும் கலைப்பான். எல்லாரும் பாலியல் எழுதினால் தானும் எழுதுவான்.

அதேபோல கருத்துக்களிலும் அவனிடம் ஜாக்ரதையான நிலைபாடுகள் உருவாகின்றன. எது அரசியல்சரியோ அதை ஏற்றுக்கொண்டு மிதமிஞ்சிய தர்மாவேசத்தை கூக்குரலிட ஆரம்பிப்பான். தன்னை புரட்சியாளனாக, கலகக்காரனாக காட்ட விழைவான். ஓரக்கண்ணால் பக்கத்தில் வருபவர்களை பார்த்துக்கொண்டே லெ·ப் ரைட் போடுவதைப்போல.

உண்மையின் அனல் உள்ள எழுத்தாளன் உலகமே எதிர்த்தாலும், புறக்கணித்தாலும் தன் நெஞ்சறிந்தவற்றை துணிச்சலாக முன்வைப்பவனாகவே இருப்பான். ஒருபோதும் தன் கருத்துக்களை சூழலில் இருந்து பெறமாட்டான். தான் அறிந்த வாழ்விலிருந்தே பெறுவான். அதற்காக அன்னியமாகவும் அஞ்சமாட்டான்.

ஆனால் சொல்லுமளவுக்கு எளிதல்ல அது. பல சபலங்கள் எழுத்தாளனைச் சிதைக்கின்றன. அவற்றில் முதன்மையானது புகழாசை. இரண்டாவது அகங்காரம். அறியப்பட வேண்டும் என்ற விருப்பில், ஒரு இடத்தில் முக்கியத்துவம் பெறும்பொருட்டு, ஒரு எதிரியைவிட மேலே செல்லும் பொருட்டு அவன் தன்னுடைய சமரசங்களை செய்ய ஆரம்பிக்கிறான். அங்கே ஆரம்பிக்கிறது சரிவு.

ஒரு தனிப்பட்ட விஷயத்தையே உதாரணம் காட்டுகிறேன். எப்படியானாலும் பதிவாகவேண்டிய விஷயம் இது. நான் பத்மநாபபுரத்தில் இருந்த நாட்களில் தக்கலையில் இருந்த ஒரு இடதுசாரிப் புத்தகக் கடையில் ஓர் கல்லூரி மாணவரை சந்தித்தேன். இருகால்களும் போலியோவால் பாதிக்கப்பட்டவர். என்னிடம் முறைப்பாக இருந்தார்.

அவர் சுந்தர ராமசாமி ஒரு பூர்ஷ¤வா எழுத்தாளர் என்றார். எப்படி என்றேன். புளியமரத்தின் கதையில் சக்கிலியர்களை கேவலமாக எழுதியிருக்கிறார் என்றார். நான் அவரிடம் விவாதிக்க விரும்பவில்லை. இன்னும் ஆரம்ப வாசிப்பையே அவர் தாண்டவில்லை என்று நினைத்தேன். அவரிடம் விடைகள்மட்டுமே இருந்தன. எனக்கு வினாக்கள் இருப்பவர்களிடமே ஆர்வம்.

பின்பு சில மாதங்கள் கழித்து அவரை பத்மநாபபுரம் சாலையில் சந்தித்தேன். என்னைப் பார்த்ததும் முகம் மலர்ந்து என்னுடைய கதைகளை வாசித்ததாகவும் நிறைய கேட்பதற்கு இருப்பதாகவும் சொன்னார். ‘வீட்டுக்கு வரலாமா’ என்று கேட்டார். ‘வாருங்கள்’ என்றேன். என் வீடு அருகேதான் அவரது வீடு.

மறுநாள் அவர் வீட்டுக்கு வந்தார். அவரை அவரது அம்மா கிட்டத்தட்ட சுமந்து வந்தார். அவரை நாற்காலியில் அமரச்செய்தபின் அவரது அம்மா அருகிலேயே நின்று கொண்டார். நான் அவரது அம்மாவிடம் ‘நீங்கள் போகலாம்’ என்றேன். ‘இல்லை நிற்கிறேன்’ என்றார். நான் சற்று கடுமையாக ‘நீங்கள் போகவேண்டும், நான் இவரிடம் பேச வேண்டும்’ என்றேன். தயங்கி தயங்கி சென்றார்.

அதன்பின் அதே கோபத்துடன் அவரிடம் பேசினேன். அவருக்கு என்னதான் பிரச்சினை? கால்கள் கொஞ்சம் பலமில்லாமல் இருக்கின்றன, அவ்வளவுதானே? அதில் என்ன பெரிய சிக்கல் இருக்கிறது? இது உடலை மையமாக்கிய நிலப்பிரபுத்துவ யுகம் அல்ல. இது மூளையை மையமாக்கிய முதலாளித்துவ யுகம். கால்கள் பலமில்லை என்பதற்காக ஒருவன் தகுதிக்குறைந்தவனாக ஆவதில்லை. அவனது மூளையே  அவனை தீர்மானிக்கிறது என்றேன்.

அவருக்கு என்ன பிரச்சினை? கொஞ்சம் கஷ்டப்பட்டு அவரால் நடக்கமுடியும். ஆனால் பிற சராசரிகளை விட அதிகமான மூளைத்திறன் இருக்கிறது. அதைப்பற்றி அவருக்கு கொஞ்சம்கூட கர்வமும் நிறைவும் இல்லையா? மூளையை பெரிதாக நினைத்தமையால்தானே அவர் என்னை தேடி வந்தார்?

அவர் கொஞ்சம் வருந்தினார். நான் அவரை புண்படுத்திவிட்டேன் என்று பட்டாலும் எனக்கு எரிச்சல் இருந்துகொண்டே இருந்தது. உடல்சார்ந்த தன்னிரக்கம் அளவுக்கு நான் வெறுக்கும் எதுவுமே இல்லை. அது முற்றிலும் அகம் சார்ந்து வல்லமையை உணரும் என் இருப்பையே நிராகரிக்கிறது என்பது என் எண்ணம். அதேபோலவே உடல் சார்ந்த வலிமையை எண்ணி பெருமிதம் கொள்வதன்மேலும் எனக்கு உள்ளார்ந்த கசப்பு உண்டு.

சிலநாட்கள் கழித்து அவரை சாலையில் பார்த்தேன். இப்போது அம்மா உதவி இல்லாமல் நடமாடுவதாகச் சொன்னார். நான் சொன்ன சொற்கள் தனக்கு தன்னம்பிக்கை அளித்ததாகவும் மேலும் உத்வேகமாக வாசிப்பதாகவும் சொன்னார். அதன்பின் வாரம் ஒருமுறை என வீட்டுக்கு வருவார். இலக்கியம் குறித்து பேசுவோம். நூல்கள் கொடுப்பேன். உடற்குறை உள்ளவர் என்ற ‘இரக்க’மே இல்லாமல் நான் அவரை நடத்துவது அபாரமான தன்னம்பிக்கையை அளித்தது என்றார்.

ஆங்கில இலக்கியம் இளங்கலை முடித்த பின் என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டிருந்தார். நான் சொன்னேன் ‘பேசாமல் டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்குச் செல்லுங்கள். உலகம் திறக்கட்டும். இந்த கிராமத்து வட்டத்துக்குள் சிக்கிக்கொள்ளக்கூடாது’ என்று. பயத்துடன் ‘தனியாக எப்படிச் செல்வேன்’ என்றார். ‘தனியாகத்தான் போகவேண்டும். தனியாக அலைய வேண்டும்’ என்று நான் வற்புறுத்தினேன்.

அதை ஏற்று ஜவகர்லால்நேரு பல்கலைக்காக முயன்றார். இடம் கிடைக்கவில்லை. ‘அப்படியானால் சென்னைக்கு போங்கள். தனியாக நின்று போராடுங்கள்’ என்றேன். சென்னை கிறித்தவக் கல்லூரியில் சேர தனியாகக் கிளம்பிச் சென்றார். அது அவரது வாழ்க்கையின் முதல் தனிப்பயணம்.

அங்கே அவருக்கு பல வாசல்கள் திறந்தன. சென்னையில் இருந்தும் தொடர்ந்து பேசுவார். அவர் எழுதிய முதல் சிறுகதையை நான் சொல்புதிதில் வெளியிட்டேன். ஆனால் அதன் மீது கடுமையான விமரிசனமும் வைத்து மேலும் எழுதிப்பழகச் சொன்னேன்.

படிப்பு முடித்து வேலைக்குச் சேர்ந்தபின் ஒருநாள் எனக்கு அவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. முதல் ஒலியே சீறும் அழுகை. அதன் பின் தேம்பல்களுடன் ‘வாழவே பிடிக்கவில்லை. எல்லாரும் புழுவாக நடத்துகிறார்கள். என்னை எவருமே மனிதனாக நடத்தவில்லை. புழு போல பார்க்கிறார்கள்’ என்றார்.

அப்போதும் அந்தத் தன்னிரக்கம் எனக்கு ஆத்திரத்தையே கிளப்பியது. ஓர் அறிவுஜீவி என்பவன் சமூகத்தின் அச்சு போல. அவனுக்கு திமிர்தான் அழகு என்பது என் உறுதியான எண்ணம். நான் அவரை கண்டித்தேன். ‘புழு மாதிரி நீங்கள் நடத்தப்பட்டால் நீங்கள் புழு மாதிரி இருக்கிறீர்கள் என்றுதான் பொருள். இந்த ஐந்து வருடத்தில் என்ன படித்தீர்கள்? என்ன எழுதினீர்கள்? உங்களை முதலில் நிரூபியுங்கள். மறுக்க முடியாதபடி உங்கள் ஆளுமையை நிறுவுங்கள் .அதன் பின் மரியாதை தேடிவரும். அனுதாபத்தை எதிர்பார்த்தால் புழுமாதிரித்தான் நடத்தப்படுவீர்கள்’ என்றேன்.

அவர் சொன்னதில் இருந்தே அது பெண் விவகாரம் என்பதைப் புரிந்து கொண்டேன். ‘பெண்களுக்கு ஆணில் முதல் கவற்சி என்பது வலிமைதான். உடல் வலிமை. அதைவிட பண வலிமை. அதை விட அறிவின் வலிமை. இயல்பாகவே பெண்களின் கண்கள் அதிகாரமையத்தை நாடுகின்றன. அறிவின் அதிகாரம் உங்களிடம் இருந்தால் அதன் கவற்சி வேறெதிலும் இல்லை என்பதை நீங்களே உணர முடியும்’ என்றேன்.

அப்போதுதான் நான் மனுஷ்யபுத்திரனைப்பற்றி அவரிடம் சொன்னேன். ‘அவருக்கும் உடல்குறை உள்ளது. ஆனால் கைகால்கள் இருக்கின்றனவா இல்லையா என்பதல்ல அறிவுஜீவியின் அடையாளம். அவரிடம் அறிவதிகாரம் உள்ளது. அதை அவரே ஈட்டினார். அதுதான் உண்மையான சவால். அதை ஈட்டிவிட்டால் காதலெல்லாம் தானாகவே தேடி வரும்…’

பின்பு அவர் என்னைக் கூப்பிட்டார். நான் சொன்னது அப்போது கோபத்தை அளித்தாலும் பிறகு ஊக்கம் ஊட்டுவதாக இருந்தது என்றார். அதி தீவிரமாக எழுதப்போவதாகச் சொன்னார். நான் மனுஷ்யபுத்திரனின் விலாசத்தையும் அவருக்கு அளித்தேன்.

பின்னர் அவரது முதல் நூல், ஜென்கவிதைகளின் மொழியாக்கம் அது, உயிர்மை வெளியீடாக வந்தது. அதில் இவ்விஷயங்களில் பெரும்பாலானவற்றை அவரே சொல்லியிருந்தார். அந்த தகவலை எனக்குச் சொல்லி அந்நூலை மனுஷ்யபுத்திரன்தான் அனுப்பியும் வைத்தார். அவர் மனுஷ்யபுத்திரனுக்கு நெருக்கமானவராக ஆகி உயிர்மையில் எழுத ஆரம்பித்தார்.

சென்ற டிசம்பரில் எனக்கும் மனுஷ்யபுத்திரனுக்கும் மனக்கசப்பு உருவானது. அவரது கவிதைகளைப்பற்றிய விமரிசனத்தில் நான் அவரது தன்னிரக்கக் கவிதைகளை கடுமையாக நிராகரித்திருந்தேன். அந்த தன்னிரக்கமே அவரை புரட்சிகர இயக்கங்களுடன் இணைய முடியாது செய்தது என்றும் அந்த தன்னிரக்கத்தை அவர் ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்வாக விரித்துக்கொண்டமையால் முக்கியமான கவிதைகளை எழுத முடிந்தது என்றும் சொல்லியிருந்தேன்.

அது மனுஷ்யபுத்திரனுக்கு பிடிக்கவில்லை. ஆனால் தன் கசப்பை என்னிடம் அவர் சொல்லவில்லை. அவரது உள்வட்ட நண்பர்களிடம் கொட்டினார். அவர்களில் ஒருவரான சாரு நிவேதிதாவைக் கொண்டு என்னை உயிர்மையின் மேடையில் அவமானப்படுத்தினார். நான் அவரிடமிருந்து விலக முடிவெடுத்தேன்.

அந்தக் கட்டுரை குறித்து  முன்னதாக நான் மனுஷ்யபுத்திரனிடம் நடத்திய தொலைபேசி உரையாடலில் நான் ஓர் அறிவுஜீவி தன்னை உடல்சார்ந்து அடையாளப்படுத்தி தன்னிரக்கம் கொள்வதை எப்படி நிராகரிக்கிறேன் என்று விளக்கி இந்த நண்பரின் உதாரணத்தையும் சொன்னேன். 

அப்போதே மனுஷ்யபுத்திரன் அதைக் குறித்துக்கொண்டிருக்கவேண்டும்.  அடுத்த இதழ் உயிரோசையில் அந்த நண்பர் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில் நான் உடலூனமுற்றவர்களை சிறுமைப்படுத்தும் மனநிலை கொண்டவன் என்று குற்றம்சாட்டி, என் கட்டுரையை பக்கம் பக்கமாக திரித்து பொருள் அளித்து வசைபாடியிருந்தார். கால்கள் இல்லாத ஒருவரை ஊனமுற்றவர் என்று அல்லாமல் வேறு எப்படியும் பார்க்க முடியாத மனக்கோளாறை நான் அக்கட்டுரையில் வெளிப்படுத்துவதாகச் சொல்லியிருந்தார். மனுஷ்யபுத்திரன் கவிஞர் அல்ல ஊனமுற்றவர் என்று நான் சொல்வதாக சொல்லியிருந்தார்.

அக்கட்டுரை எப்படி எழுதப்பட்டது, எப்படி உயிர்மை அலுவலகத்தில் விவாதிக்கப்பட்டு ‘மெருகேற்ற’ப்பட்டது என்றெல்லாம் நான் கேள்விப்பட்டேன்.  உயிர்மையுடன் என் பூசலுக்குப் பின் குறைந்தது இரண்டு வருடங்களுக்கு அவர்கள் என் மீது அவதூறுகளை வெளியிடுவார்கள் என்று நான் எதிர்பார்த்தே இருந்தேன். அதுவே நிகழ்கிறது.

அதில் எனக்கு ஆச்சரியமும் இல்லை, வருத்தமும் இல்லை. அவதூறுகள் என்னை அழிக்குமென்றால் காலச்சுவடு குழுவினர் என்னை பத்துப்பதினைந்துதடவை அழித்திருப்பார்கள். அவதூறுகளை நம்பி என்னை ஒருவர் படிக்கவில்லை என்றால் அந்த முட்டாள் எனக்கு எதிர்காலத்திலும் வாசகனாக இருக்க தகுதியற்றவர்.

ஆனால் இந்த நண்பரின் கட்டுரை எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. நான் எப்போதுமே ஒரு நம்பிக்கைவாதி. மனிதத்தின் மீது, விழுமியங்கள் மீது, இயற்கையின் நன்னோக்கம் மீது ஆழமான நம்பிக்கையையே அத்வைதம் என நான் நம்பியிருக்கிறேன். இக்கட்டுரை மனிதவிழுமியங்கள் மீதான என் நம்பிக்கை மீது விழுந்த அடி.

எனக்கு மிகக் குறைவாகவே இப்படி நிகழ்ந்திருக்கிறது. என் நண்பர்களில் என்னை வெறுத்து விலகிச் சென்றவர்கள் என அனேகமாக எவரும் இல்லை. என் நட்புகளும் உறவுகளும் பள்ளிநாட்களில் இருந்தே நீள்பவை. இந்த நண்பரிடம் இக்கட்டுரைக்கு இரண்டுநாட்கள் முன்பு உரையாடியபோதுகூட எந்த உரசலையும் நான் உணரவில்லை.

அந்த நண்பரின் பெயர் ஆர்.அபிலாஷ். உயிரோசையில் நிறையவே எழுதிவருகிறார். ஓர் எழுத்தாளனாக பொருட்படுத்தத்தக்க எதையும் அவர் எழுதவில்லை என்றே நினைக்கிறேன். ஆனால் உயிர்மையின் உள்வட்டத்திற்குள் நுழைந்துவிட்டிருக்கிறார். உயிர்மையின் ஆசிரியர் குழுவில்  அவரது பெயரைப் பார்த்தேன்.

இந்த விஷயங்களை இப்போது சொல்லக் காரணமே அந்நூலில் அபிலாஷ் அவற்றை பதிவுசெய்ததுதான். அன்று அவர் எதிர்பார்த்திருக்கமாட்டார் இப்படி இவை விவாதத்துக்கு வரும் என. பதிவுசெய்யாமலிருந்திருந்தால் ஒட்டுமொத்தமாக இவற்றை மறுத்திருப்பார் என்று நினைக்கிறேன். இனிமேல் கவனமாக இருக்கலாம் அவர்.

அபிலாஷை இப்போது புரிந்துகொள்ள முடிகிறது. இன்றுவரை உண்மையின் ஒளி கொண்ட ஒரு கட்டுரையை அல்லது கதையை அவரால் எழுத முடிந்ததில்லை. ஆகவே எழுத்தில் கழைக்கூத்தாட்டங்களில் ஈடுபடுகிறார். இது ஆழமான சுயநம்பிக்கையின்மையை உருவாக்குகிறது. இத்தகைய காய்நகர்த்தல்கள் மற்றும் சதிகள் மூலமே கவனத்தையும் இடத்தையும் பெறமுடியும் என நினைக்கிறார்.

ஒரே ஒரு நல்ல கதையை உள்ளுணர்ந்து எழுதியிருந்தாரென்றால் அந்த பெருமிதமே அவருக்கு அபாரமான திமிரை அளித்திருக்கும். இத்தகைய சிறுமைகளிலும் தந்திரங்களிலும் ஈடுபட்டு தன்னை கீழ்மைப்படுத்திக்கொள்ள ஒருபோதும் துணிந்திருக்க மாட்டார். எத்தனை சொல்லி பார்த்தாலும் வெளியே இருந்து அந்த அறிவுத்திமிரை ஒருவருக்குள் செலுத்தமுடியாதென இன்று உணர்கிறேன்.

ஆனால் இன்று இச்செயல் மூலம் தன்னை அந்தரங்கமாக தானே வெறுக்கும்படிச் செய்துகொண்டிருக்கிறார். இந்த சுய இழிவு அவரில் எந்த ஒரு உண்மையான தீவிரமும் கைகூடாதபடி செய்யும். ஓர் எழுத்தாளனிடம் இருந்தாகவேண்டிய நேர்மை, அவனில் அனலை தக்கவைக்கும் அடிப்படை ஆற்றல், இதன் மூலம் அவரிடம் இல்லாமலாகி விட்டிருக்கிறது.

அதன்பின் என்னை சமாதானம் செய்யும்பொருட்டு என்நுடன் வலையுரையாடலுக்கு அபிலாஷ் வந்தார். மேற்கொண்டு என்னை தொடர்பு கொள்ள வேண்டாம், அவர் மீது என் ஆர்வம் முற்றாகவே இல்லாமலாகிவிட்டிருக்கிறது என்று பதில் அளித்தேன். என் இணையத்தொடர்புகளில் இருந்தும் அவரை விலக்கிக்கொண்டேன்.

தாழ்வுணர்ச்சியால், தன்னம்பிக்கை குறைவால் தன் ஆன்மாவை விற்க ஓர் இளம் எழுத்தாளன் தயாராகலாம். வசைபாடும் அடியாளாக தன்னைத்தாழ்த்திக்கொள்ள அவன் முன்வரலாம். ஆனால் இத்தகைய சில்லறைகளை வீசி ஓர் எழுத்தாளனின் ஆன்மாவை விலைக்கு வாங்கும் செயலை இன்னொரு கவிஞன், இதழாசிரியன் செய்யலாமா? அதுதான் இன்னமும் கீழ்மை என்று படுகிறது.

மனுஷ்யபுத்திரன் என்றும் என் பிரியத்திற்குரிய கவிஞர். அவரது இன்றைய தொடர்புகள் என் இயல்புக்கு மாறானவை என்பதே நான் விலக முடிவெடுக்கக் காரணம். இன்றும் எனக்கு அவரிடம் கசப்பு ஏதுமில்லை. ஆனால் இந்தச் செயல் ஒரு அடிநா கசப்பாக எஞ்சவே செய்கிறது. அபிலாஷை நான் மறந்துவிடுவேன். மேற்கொண்டு அவரை பொருட்படுத்த தேவையும் இல்லை. ஆனால் மனுஷ்யபுத்திரனை எண்ணும்போது இந்தக் கசப்பு நெடுநாள் கூடவே வரும் என்று படுகிறது.

ஜெ

முந்தைய கட்டுரைஇழப்பு ![கடிதம்]
அடுத்த கட்டுரைகும்பமேளா – 5