இயந்திரமும் இயற்கையும்

நித்யா குருகுலத்தில் ஓர் ஆயுர்வேத வைத்தியரைப் பார்த்தேன். தாடியும் காவிவேட்டியுமாக அரைச்சாமியராகத்தான் அவரே இருந்தார். நித்யாவிடம் ஆயுர்வேதநுட்பங்களைப் பற்றிய உரையாடல். நான் புத்தகங்களை தேடிக்கொண்டிருந்தேன். பின்னர் அவர் சமையலறைக்குச் சாப்பிட வந்தபோது நானும் சென்றேன்.

 

சூடான புழுங்கலரிசிக் கஞ்சிக்கு பயறுக்கூட்டு. வைத்தியர் அகப்பையால் அள்ளி தட்டில் விட்டுக்கொண்டிருந்தார். நான் அவரிடம் புன்னகைசெய்து ”நமஸ்தே” என்றேன் அவரும் வணக்கம் சொன்னார். நான் ”ஆயுர்வேதமும் ஆன்மீகமும் ஒன்றுதான் என்று சமீபத்தில் ஓர் அறிஞர் சொல்லியிருக்கிறாரே” என்றேன். அவர் முகம் மலர்ந்து ”அப்படியா?” என்றார். ”யார் சொல்லியிருக்கிறார்கள்?” என்று ஆர்வத்துடன் கேட்டார்.

”இடமறுகுதான், தேராளி இதழில் சொல்லியிருக்கிறார்” ஜோச·ப் இடமறுகு கேரளத்தின் மிகப்பெரிய நாத்திகப்பிரச்சாரகர். நித்யாவுக்கு நண்பரும்கூட. வைத்தியர் முகம் மங்கியது. அவர் கவனமாக கஞ்சியை ஊற்றினார். நான் ”ஆன்மீகமும் ஆயுவேதமும் நம்பிக்கை இருந்தால்தான் வேலைசெய்யும் என்று சொல்கிறார்” அவர் ஒன்றும் சொல்லவில்லை.

நான் ”அதாவது இரண்டுக்கும் நம்பிக்கை மட்டும்தான் அடிப்படையாம்” என்றேன். பிளாஸ்டிக் ஸ்பூனால் கஞ்சியை அள்ளி குடித்துக்கொண்டு  வைத்தியர் “குருசரணம்” என்றார். அதன் பின் அவர் கஞ்சியாலேயே மௌனத்தை நிரப்பிக்கொண்டார்

சாயங்காலம் வைத்தியர் ஒரு ஜோல்னாப்பையுடன் செல்வதைக் கண்டேன். நான் அவரிடம் ”நமஸ்காரம்” என்றதும் அவர் ”குருசரணம்” என்று முணுமுணுத்துக்கொண்டு கிட்டத்தட்ட ஓடினார். பஸ் நிற்கிறதா என்று பார்த்தேன். இல்லை

சாயங்காலம் நானும் நித்யாவும் தியாகீஸ்வரன் சாமியும் நடக்கச்சென்றோம். நித்யா ” ஜெயமோகன், நீ ஒரு நல்ல மாணவனாக இருந்தாயா?” என்றார். ”இருந்திருந்தால் ஏன் இங்கே வரப்போகிறேன்?” என்றேன்.

”நல்ல மாணவர்கள் வரலாற்றைக் கற்கிறார்கள். மோசமான மாணவர்கள் வரலாற்றை உருவாக்குகிறார்கள்” என்றார் பின்னால் நடந்து வந்த தியாகீஸ்வரன் ஆங்கிலத்தில். ”அது யார் சொன்னது தியாகி?” என்றார் நித்யா

”அடியேன் சொன்ன பொன்மொழிதான்” என்று பணிவுடன் தியாகீஸ்வரன் சொன்னார். நித்யா சிரித்து ”உனக்கு ஒரு எதிர்காலம் உண்டா என்று தெரியவில்லை. ஆனால் கண்டிப்பாக ஒரு இறந்தகாலம் இருக்கிறது” என்று சொன்னார். இருவரும் சிரித்தார்கள்.

”இந்த குருகுலமும் ஒரு பள்ளிதானே? இங்கே என்ன சிறப்பைக் கண்டாய்?” என்றார் நித்யா. நான் ”இங்கே தேர்வு இல்லை. அதுதான் முதல் விஷயம்” என்றேன். ”அடி இல்லை. பெஞ்சுமேல் ஏறி நிற்க வேண்டியதில்லை. வீட்டுப்பாடம் இல்லை. எல்லாவற்றையும் விட ஆசிரியரை நாம் கிண்டல் செய்யலாம்”

நித்யா சிரித்து ”ஆசை இல்லாமல் இல்லை. அதெல்லாம் செய்ய ஆரம்பித்தால் இங்கே ஒருத்தரும் இருக்க மாட்டார்கள்…” என்றார். ”அடிபட நான் தயார். பரீட்சையென்றால் கொஞ்சம் கஷ்டம்தான்” என்றார் தியாகீஸ்வரன்.”பின்னே ஒரு சௌகரியம், அத்வைதத்தில் என்றால் கேள்விகளையே பதிலாக எழுதிக் கொடுத்துவிடலாம்…”

அருண்மொழி குட்டி அஜிதனுக்கு எப்படி சாப்பாடு போடுவாள் என்று நான் சொன்னேன். அவனுக்கு இட்லி எப்படி ஊட்டினாலும் துப்பிவிடுவான். ஆகவே கூடத்தை பெருக்கி அதன்மீது ஒரு பாயை விரித்து இட்லியை பிய்த்து பரப்பி போடுவாள். ஆர்வமாக பொறுக்கி அவனே சாப்பிட்டுவிடுவான்.

”பள்ளியில் என் வாயில் அவர்கள் இட்லியை திணித்தார்கள்” என்றேன். தியாகீஸ்வரன் ”நம்முடைய பள்ளிகளில் பிள்ளைகள் குரங்கு போல மொத்தக் கல்வியையும் கன்னத்தில் வைத்திருக்கிறார்கள். தொண்டையை தாண்டுவதில்லை” என்றார்.

”நாம் கல்வியை ஒருவருக்கு கொடுக்க முடியாது. நம்முடைய கல்வியாளப்பெருமக்களுக்கு கொஞ்சம்கூட புரியாத விஷயம் இது. கல்வி ஒருவர் தானே பயிலும் விஷயம். அதற்கு வழிகாட்டலாம், உதவலாம். வாயில் அள்ளி ஊட்டமுடியாது” நித்யா சொன்னார். ”உண்மைதான்”என்றேன்

”அப்படியானால் ஒரு தெருவியாபாரி கல்வியை சின்ன மாத்திரைகளில் அடக்கி விற்கிறான் என்றால் நாம் எப்படி அதை எடுத்துக்கொள்வோம்?” என்றார் நித்யா.”அவனைப்பிடித்து ஜெயிலில் போடுவோம். கொஞ்சம் வளரவிட்டால் அவன் அறிவியலாளனாக ஆகிவிடுவான்” என்றார் தியாகீஸ்வரன்.

”சரி, இங்கே சில கல்வியறிவுள்ளவர்கள் அதேபோல ஆரோக்கியத்தை மாத்திரைகளாக விற்கிறார்களே, அதைப்பற்றி நாம் ஏன் ஒன்றும் சொல்வதில்லை?” என்றார் நித்யா. அவர் எங்கிருந்து கிளம்பியிருக்கிறார் என்று புரிந்தது. தப்பி ஓடும்போது வைத்தியர் முகத்தில் ‘நான் ஒண்ணுமே பண்ணலையே’ என்ற பாவம் இருந்ததை நினைவு கூர்ந்தேன்

 

”ஆரோக்கியம் என்பது நம் உடல் அதுவே உருவாக்கிக்கொள்ளும் ஒன்று. ஆரோக்கியம் குறைந்தால் அதை மீட்கவும் உடலுக்கு தெரியும். அதற்கான தடைகளை விலக்குதலும் தூண்டுதலை அளித்தலும் மட்டுமே வைத்தியம் செய்யக்கூடிய பணியாக இருக்க முடியும். ஆனால் ஆரோக்கியத்தை உடலுக்குள் புகுத்திவிடலாம் என்று நம் நவீன மருத்துவர்கள் நினைக்கிறார்கள்” நித்யா சொன்னார் ”ஆகவே அறிவுஜீவிகள் பாவப்பட்ட ஆயுர்வேத வைத்தியர்களை சும்மா விட்டுவிடுவதே நல்லது” நான் சம்மலுடன் தியாகி சாமியைப் பார்த்தேன். அவர் கண்ணடித்தார்.

”நம் அறிவுஜீவிகளுக்குப் புரியாத ஒன்றுண்டு. மனிதனின் பரிணாம வரலாற்றில் கடைசியில் வந்ததுதான் அறிவியலும் அதற்கு அவசியமான அறிவும் எல்லாம். மனம் அதற்கு முன்னரே வந்துவிட்டது. உடல் அதற்கும் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னரே வந்து விட்டது.  ஆகவே புத்திக்கு தெரியாத பல விஷயங்களை மனம் அறியும். மனம் அறியாதவற்றை உடல் அறியும். . ஒரு சாதாரண புண் எப்படி குணமாகிறதென்று பார்த்தாலே தெரியும், நம் அறிவுக்கும் மனதுக்கும் அப்பால் உடலுக்கு அதற்கான அறிவும் மனமும் உண்டு என்று. உடலுக்கு எல்லாம் புரிகிறது. அதற்கான விதிகளும் வழிகளும் உள்ளது. உடல் வெறும் ஒரு இயந்திரமல்ல. அது ஓர் இயற்கை. நம்முடைய மரபு பிரபஞ்சத்தையும் இயற்கையையும் உடலையும் பிரகிருதி என்கிறது. பிரபஞ்சத்திற்கு இயற்கை எப்படியோ அப்படி இயற்கைக்கு உடல். அவற்றை பிரித்துப்பார்க்க முடியாது”

நித்யா பேச ஆரம்பித்தால் படிப்படியாக பேசி முடிப்பார்.” அலோபதிக்கும் ஆயுர்வேதத்துக்கும் இடையே உள்ள வேறுபாடு இதுவே. அலோபதி மேற்குலகில் இயந்திரவியல் ஓர் அலைபோல எழுந்தபோது அதனுடன் சேர்ந்து உருவாகி வளர்ந்து வந்த ஒர் அறிவியல். இயற்கையையும் பிரபஞ்சத்தையும் இயந்திரவியல் விதிகளின்படி ஆராய்ந்த அறிவியல் மானுட உடலையும் ஓர் இயந்திரமாக மட்டுமே பார்த்தது. இயந்திரவாதம் ஒரு தரிசனம். அதை நான் குறைத்துச் சொல்லவில்லை. அந்த தரிசனமே இயற்கையில் உறைந்திருந்த பல்லாயிரம் இயந்திரவிதிகளை நமக்குக் காட்டித்தந்தது. நாம் இன்று அனுபவிக்கும் இயந்திரவசதிகள் அனைத்துமே அதன் ஆக்கங்களே. ஆனால் அதன் எல்லைகளையும் நாம் உணர்ந்தாகவேண்டும்”

”ஆயுர்வேதம் இயற்கையை முன்னுதாரணமாகக் கண்டது. இயற்கை என்பது ஒரு லயம் என்று உணர்ந்தது அது. லயம் என்றால் சமநிலை., அந்த சமநிலையை முதலில் கண்டறிந்தவர்கள் சாங்கிய தரிசனவாதிகள். இயற்கை சத்வ,ரஜொ,தமோ குணங்களின் சமநிலையால் ஆனதாக இருந்தது, அதை இழந்து அந்த சமநிலையை மீண்டும் தேடுகிறது என்று அவர்கள் எண்ணினார்கள். அனைத்து இயற்கை நிகழ்வுகளையும் அவ்வாறு விளக்க முயன்றார்கள்”

”அவர்களில் இருந்து ஆயுர்வேதம் வாதம், பித்தம், கபம் என்ற முக்குணங்களை உருவகித்துக்கொண்டது. உடல் என்ற இயற்கை அந்த மூன்று குணங்களின் பரிபூர்ண சமநிலையை தேடிக்கொண்டே இருக்கிறது என்றார்கள். அந்த சமநிலை அழிவதே நோய், அந்தச் சமநிலையை நோக்கி உடலை நகர்த்துவதே சிகிழ்ச்சை. அலோபதியின் தரிசனத்தில் இருந்து முற்றிலும் வேறுபட்டது இது. அவர்களைப்பொறுத்தவரை உடல் ஒரு புரோட்டீன் இயந்திரம். அதற்கு தனக்கென எந்த திட்டமும் நோக்கமும் இல்லை. அதற்கான எரிபொருளும் இயக்கநோக்கமும் வெளியே இருந்து கொடுக்கப்பட்டால் அது இயங்கும். அதில் ஏதாவது சிக்கல் உருவானால் அதை வெளியே இருந்து தலையீடு செய்யும் ஒரு ஆற்றல் மட்டுமே திருத்தியமைக்க முடியும். மெக்கானிக் என்பவர் இயந்திரத்தின் கடவுள்!”

 

”ஆகவே அலோபதி டாக்டர் தன்னை நோயாளியின் மாஸ்டர் ஆக எண்ணிக்கொள்கிறார். ஆயுர்வேதத்தில் வைத்தியன் உடல் என்னும் மாபெரும் சக்திக்குப் பணிவிடை செய்பவன் மட்டுமே. அலோபதி டாக்டர்களில் நிபுணர்கள் பெரும்பாலும் பெரும் கர்வம் கொண்டவர்களாக , மிதமிஞ்சிய தன்னம்பிக்கை கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஆயுர்வேத மருத்துவர்கள் எந்த அளவுக்கு பெரியவர்களோ அந்த அளவுக்கு எளிமையானவர்களாக இருப்பார்கள்.”

”அலோபதியைப் பொறுத்தவரை உடல் என்ற அமைப்பின் எல்லா ரகசியங்களும் அதற்குள்ளேயே உள்ளன.ஓர் இயந்திரத்தின் எல்லா இயக்கவிதிகளையும் அதைப்பார்த்தே தெரிந்துகொள்ள முடியும் இல்லையா? ஆனால் ஆயுர்வேதத்தைப் பொறுத்தவரை உடல் என்பது தனித்த ஒன்றல்ல. அது இயற்கையின் ஒரு பகுதி. அதை உணவும் மூச்சும் எல்லாம் இயற்கையுடன் பிணைத்திருக்கின்றன என்பது மட்டும் காரணமல்ல. இயற்கையின் ஒட்டுமொத்த இயக்கத்தின் ஒரு பகுதியாகவே அது இயங்குகிறது, இயற்கையின் பெரும் திட்டத்தின் ஒரு துளியே அதன் இயக்கம் என்று ஆயுர்வேதம் நினைக்கிறது. இயற்கையை அறியாமல் உடலை புரிந்துகொள்ள முடியாது என நினைக்கிறது அது. எல்லா பதில்களும் இயற்கையிலேயே உள்ளன என்கிறது அது”

”ஆயுர்வேத சிகிழ்ச்சை என்பது இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையேயான உறவை சரிசெய்தல் என்பதே. ஆகவே ஆயுர்வேதத்தில் மருந்துக்களைவிட பத்தியங்களுக்கே அதிக முக்கியம். எவற்றை விலக்க வேண்டும் என்பதில்தான் உண்மையான ஆயுர்வேத சிகிழ்ச்சை உள்ளது. ஆயுர்வேதத்தில் சிகிழ்ச்சை என்பது ஒரு மாற்று வாழ்க்கைமுறையை உருவாக்கிக் கொள்ளுவதே.  இரண்டாவது விஷயமாகவே மருந்து வருகிறது. இயற்கையில் மனித உடலுக்கு உதவக்கூடிய எவையெல்லாம் உள்ளன என்று கண்டடைந்து அவற்றைப் பயன்படுத்திக்கொள்வது அது. ஆயுர்வேதம் நோயுடன் போராட நோயாளியை தயாரிக்கிறது. திறந்த வாயில் ஆரோக்கியத்தை போட்டு தண்ணீர் ஊற்றுவதில்லை”’

”அலோபதியின் சாதனைகளை நான் மறுக்கவில்லை. நானே மூன்று அறுவைசிகிழ்ச்சை செய்துகொண்டவன். அது நோய்த்தொற்றுகளைச் சரிசெய்யவும் அறுவைசிகிழ்ச்சைகளுக்கும் மிகச்சிறந்தது. ஆனால் அது நோயுற்ற மனிதனைப்பற்றி மட்டுமே நினைக்கிறது. ஒரு வாழ்க்கைமுறையாக அலோபதியை கடைப்பிடிக்க முடியத்து. ஆகவேதான் மாற்று தரிசனங்கள் நமக்கு தேவையாகின்றன” என்றார் நித்யா.

 

”நான் சும்மா ஒரு வேடிக்கைக்காகச் சொன்னேன்…” என்றேன். ”சரி…அறிவுஜீவிகள் எதையும் வேடிக்கை செய்யும் உரிமை பெற்றவர்கள் அல்லவா?” என்றார் நித்யா. ”நீ மலையாளத்தில் சொன்னாயா தமிழிலா?” என்றார் தியாகி சாமி. ”மலையாளத்தில்தான்” என்றேன். ”பரவாயில்லை. தமிழிலே சொல்லியிருந்தால் திருவள்ளுவர் கோபித்துக்கொண்டிருப்பார். நமக்கு இங்கே மலையாளத்தில் வள்ளத்தோள் மாதிரியான புரட்சிக்கவிஞர்கள்தானே இருக்கிறார்கள். அந்த பாவங்களிடம் நாம் சொல்லி சமாளிக்கலாம்” என்றார் தியாகி சாமி. நான் சிரித்தேன்.

முந்தைய கட்டுரைகர்மயோகம் : (16 – 19)
அடுத்த கட்டுரைதூய அறிவு