அன்பு ஜெயமோகன்,
விஷ்ணுபுரத்தில் நான் சந்தித்தவர்களை என்னால் ஞாபகம் வைத்துக் கொள்ள முடியவில்லை. ஆனால், அதனுள் முன்பின்னாகச் சிதறிக்கிடந்த உரையாடல்களில் பலவற்றிலிருந்து மீளவே முடியவில்லை. திரும்ப திரும்பச் சலிப்பை நோக்கியே திரும்பிவிடும் மனதை அவ்வுரையாடல்கள் விதிர்க்கச் செய்து விட்டன. அமைதியாய் இருக்கும் நடுக்கடல் திடீரென பொங்குவதைக் கண்ணுறும் ஒருவனின் கலக்கமும் அதற்கு நேர்ந்தது.
ஒரு ஒழுங்கை முன்வைத்து அதை அடையப் போராடும் சராசரி மனம் குறிப்பிட்ட வடிவத்தை ஏங்கியே அலைபாய்கிறது. அப்போதைக்கு இணக்கமான வடிவத்தில் தன்னைப் பொருத்திக் கொள்ளவும் செய்கிறது. சிறிய கால இடைவெளிக்குப் பின்னர் குறிப்பிட்ட வடிவம் எதுவுமில்லையென்று அது புரிந்து கொள்கிறது. எனினும் அவ்வடிவத்தின் நினைவுகளிலிருந்து வெளிவர முடியாமல் தவிக்கிறது. அவ்வடிவத்தோடு தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டதைப் போல் நடிக்கவும் செய்கிறது; பழுத்திருந்தும் உதிர மறுக்கும் இலை போல தத்தளித்தபடியேயும் இருக்கிறது.
ஒரு மனிதனை உடல், மனம் என்று பாகுபடுத்தினாலும் மனமே மனிதனை அடையாளப்படுத்துகிறது. உடலின் இருப்பை, வாழ்வின் இருப்பை மனமின்றி நம்மால் ஒருபோதும் அறிந்திட இயலாது. என்றாலும், மனதின் குரலை நம்மால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. ஏன்? அங்கு அறிவியல் எவ்வகையிலும் நமக்கு உதவாது என்றே கருதுகிறேன். அறிவியல் மட்டுமன்று; வேறெவையும் உதவா. மனதின் மாயங்கள் பிறப்பிலிருந்தே நம்முடன் இருக்கின்றன. அவற்றைப் புரிந்து கொண்டேயாக வேண்டும் எனக்கிளம்புகிறவனை அது திசைமாற்றி திசைமாற்றி அழைத்துச் சென்றபடியே இருக்கும். பிறகெப்படி மனதை அணுகுவது? எனக்கு நான்தான் யோசிக்க வேண்டும்; உங்களுக்கு நீங்கள்தான் யோசிக்க வேண்டும்.
இருக்கும் ஒரே உலகை அவரவர் மனது பல்வேறு உலகங்களாகக் காணும் விசித்திரம் அவரவர் அகத்தில் நிகழ்கிறது என்பதை நாம் ஒப்புக்கொண்டாக வேண்டும். அப்படியானால், ஒரு ‘புற உலகம்’ பல்வேறு ‘அக உலகங்களாக’ நம்மால் முன்வைக்கப்படுகிறது எனச் சொல்லலாம்தானே? ‘புற உலகம்’ , ‘அக உலகங்கள்’ போன்ற சொற்களை எவ்வாறு புரிந்து கொள்வது? வாருங்கள் விஷ்ணுபுரத்திற்கு. முக்கியமான குறிப்பு ஒன்று. விஷ்ணுபுரம் குறிப்பிட்ட வடிவில் எதையும் நமக்கு அறிமுகப்படுத்தாது. தனக்குள்ளான ‘அக உலகங்களை’ச் சொல்லிச் செல்வதன் மூலம் ‘புற உலகின்’ தொடர் இயக்கத்தை அது நமக்கு நினைவூட்டும்; அத்தோடு, ‘புற உலகின்’ குறிப்பிட்ட கண்ணியை மட்டுமே பிடித்துத் தொங்கும் அபத்தத்தையும் சுட்டிக்காட்டும்.நாம் உலகமாகக்(பிரபஞ்சமாகக்) கருதுவது உலகின்(பிரபஞ்சம்) மிகச்சிறு பகுதியே எனும் உச்சகட்ட வெளிச்சத்தில் அது நம்மை நிறுத்தி விட்டு நகர்ந்து கொள்ளும். அதன்பின் நாமாயிற்று, உலகமாயிற்று.
விஷ்ணுபுரம் ஒரு குறியீடு. அக்குறியீடும் நாம் நினைக்கும் வடிவிலானது அன்று. மேலும் அது குறிப்பிட்ட கோட்பாட்டையோ, மதத்தையோ, வாழ்முறையையோ, குருவையோ சொல்லித் தன்னைக் குறுக்கிக் கொண்டிருக்கவில்லை. எவ்வடிவமும் அதற்குப் பொருந்தியும் விடாது. வேண்டுமானால் இப்படி சொல்ல்லாம். வடிவமற்ற வடிவத்தையே விஷ்ணுபுரம் கொண்டிருக்கிறது. வாசிப்பவன் கொண்டிருப்பதாகச் சொல்லும் ’தெளிவான மனவடிவத்தை’ அது கேள்விக்குள்ளாக்குகிறது. அதில் திகைக்கும் ஒருவனை அவனின் ‘புறத்திலிருந்து’ மீட்டு அவன் ‘அகத்துக்கு’ அழைத்துச் செல்கிறது.
என் அனுபவத்துக்கு வருகிறேன். விஷ்ணுபுரத்துக்குள் நுழைந்த நான் எனக்குள்ளேயே நுழைந்தேன். அங்கு நான் கண்ட காட்சிகள் எல்லாம் எனக்குள் நான் கண்டவையே. அதற்காக விஷ்ணுபுரத்தின் காட்சிகளைப் புறவயமாகப் புரிந்து கொண்டு குழப்பிக்கொள்ளக் கூடாது. எனக்குள் நான் எழுப்பிக் கொண்டிருந்த கேள்விகளே அங்கும் எழுப்பப்பட்டிருந்தன. என்றாலும், என் கேள்விகளுக்கான விடைகள் விஷ்ணுபுரத்தில் இல்லை.
மாறாக கேள்விகளும் பதில்களும் மாறிக்கொண்டே இருப்பவை எனும் சிறுகீற்றை அது முன்வைத்தது. பெருங்கடலை வரைய விரும்பும் சிறுவன் ஒருவனின் அகஉலகத்தில் அது ஏற்கனவே உருகொண்டிருக்கிறது. வரையாவிட்டாலும் அச்சிறுவனுக்கு பெருங்கடல் உள்ளுக்குள் இருப்பது தெரியும். நமக்கும் அப்படியே. என்றாலும், பெருங்கடலை வரையக் கிளம்பும் நாம் வரைந்தே தீர வேண்டும் எனத் தீவிரமாகிறோம். அதனாலேயே சோர்ந்தும் போகிறோம். விஷ்ணுபுரம் நமக்குள் ஏற்கனவே உயிர்கொண்டிருக்கும் அகக்கடலை ஞாபகமூட்டுகிறது; அவ்வளவே.
ஜெயமோகனின் விஷ்ணுபுரம் நமக்கான விஷ்ணுபுரத்தைத் தேடுவதற்கான துவக்கமே. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமானால் விஷ்ணுபுரம் எனும் குறியீடு முக்கியமே அன்று; அதில் நாம் பெறும் தெளிவே முக்கியம்.
முருகவேலன்,
படைவீடு பண்பாட்டு அறக்கட்டளை,
கோபிசெட்டிபாளையம்.