அன்பு ஜெயமோகன்,
அயோத்திதாசரின் மாற்றுப்புராண அழகியல் குறித்து நீங்கள் பேசியதைக் கேட்டேன். புராணங்களைக் குப்பைகள் பிதற்றல்கள் என குற்றஞ்சாட்டும் சிந்தனையாளர்கள் அவ்வுரையைப் புரிந்து கொள்வது மிகக்கடினம். ஏனென்றால், அவர்கள் ஏற்கனவே ஒரு முடிவுக்கு வந்துவிட்டவர்கள். மேலும், இது இப்படித்தான் என உறுதியாக வரலாற்றை முன்வைப்பவரகள். வரலாறுகள் எழுதப்படுபவர்களின் சார்பின்றி அமையாது என்பதை வசதியாக மறந்து விடுகிறவர்களும் கூட.
புராணங்களை புளுகுமூட்டைகள் என்றும், அவை குறிப்பிட்ட வர்க்கத்தின் ஆதிக்கத்தை நிலைநிறுத்த வந்தவை என்றும் தொடர்முழக்கமிடுபவர்கள் அது ஒரு இலக்கிய வகை என்பதை அறிவார்களா? புராணங்களை அணுகுவதற்கான அறிவுசார் முறையிருப்பதையாவது ஒப்புக்கொள்வார்களா? முழுக்க முழுக்க ஐரோப்பிய சிந்தனைகளின் தாக்கதாலேயே தங்களை அடையாளப்படுத்திக் கொண்டிருப்பவர்களுக்கு புராணங்கள் அப்படித் தெரிவதில் வியப்பில்லைதான். புராணங்களைப் புனிதப்படுதுவதோடு நின்று விடும் அடிப்படைவாதிகளுக்கும் இவர்களுக்கும் பைசா வித்தியாசமில்லை என்பது என் கருத்து.
நம் மண்ணுக்கான மரபே புறவயமாய்ச் சிந்திக்கும் ஒருவனின் போதாமையை அகவயத்தில் தெளிவுபடுத்துவதுதான். ’ஒரு தீர்வுதான் உண்டு’ என்பதையோ ‘ஒரு வாழ்வுதான் உண்டு’ என்பதையோ நம் சிந்தனைமரபு தெளிவாக மறுக்கிறது. அப்படியான சிந்தனைமரபுக்கு அடிமையாகிப் போனதுதான் இன்றைய நம் துயரங்களுக்குக் காரணம். ’கிருஷ்ணன்’ என்பவனைக் கொண்டு சொல்லப்பட்டிருக்கும் அவதாரக் கதையில் ‘பல வாழ்வுகள்’ சொல்லப்படுகின்றன. இப்படியாக அதை விளங்கிக்கொள்ளலாம். ‘கிருஷ்ணனுக்குள்’ இருக்கும் ‘பல வாழ்வுகளை’ அவை கதைகளாகச் சொல்கின்றன. அக்கதையை தத்துவத்தளத்திற்கும் விரித்துச் செல்லலாம். ‘கிருஷ்ணன்’ எனும் சொல் முழுமையான அருவத்தைக் குறிக்க ‘பல வாழ்வுகள்’ எனும் சொல் பகுதிகளான உருவங்களைக் குறிக்கின்றன.
புராணங்களை உண்மை வரலாறு என நீங்கள் எங்கும் வலியுறுத்தியது இல்லை. நேர்மாறாக, புராணங்களில் இருக்கும் வரலாறைக் கண்டுகொள்ள முயல்வோம் என்றே சொல்லி வருகிறீர்கள். இன்னும் நுட்பமாக அவற்றில் நம் நவீன வாழ்வுக்கான தேவைகளையும் எழுத முயற்சிக்கிறீர்கள். “புனைவில் வரலாறு இருக்கிறது” என்பது எவ்வளவு உண்மையோ ”வரலாற்றில் புனைவு இருக்கிறது” என்பதும் அவ்வளவு உண்மை. புராணங்கள் என்பதற்காகவே ஒதுக்குவது எவ்வளவு அறிவீனமோ அதைவிட மோசமான அறிவீனம் வரலாறு என்பதற்காக மறுப்பின்றி ஏற்றுக்கொள்வதும்.
”கதைகள் பொய்யென்று தெளிவுறக் கண்டோம்” எனும் பாரதியின் வரியை நாம் ஒப்புக்கொள்ளத் தேவையில்லை. “கதைகள் புனைவென்று தெளிவுறக் கண்டோம்” என நாம் அதைத் திருத்திக் கொள்வோம். அதுவே நம் மண் நமக்களித்திருக்கும் ஆகப்பெரிய கொடை.
முருகவேலன்,
படைவீடு பண்பாட்டு அறக்கட்டளை,
கோபிசெட்டிபாளையம்.