வலியின் தேவதை:கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,
 
பிறரது வலியுடன் அடையாளப்படுத்திக்கொள்வதும்  அதற்கு எதிர்வினையாற்றுவதும் ஒரு உயரிய பண்பாடு. அவ்வகையில் நான் ஒரு பண்படாதவன் என்று சொல்லவேண்டும். பிறரது வலிகளைப்புரிந்துகொள்ளவோ ஆறுதல் சொல்லவோ என்னால் அதிகம் முடிந்ததில்லை, ஒரு கிறித்தவ பாஸ்டரக இருந்தபோதிலும்கூட. சிலசமயம் நான் எண்ணுவதுண்டு வலி அப்படி நுட்பமாக புரிந்துகொள்ளப்படலாகாது, ஒரு அழுகை போல உடனடியாக வெளிப்பாடுகொள்ளவேண்டும் என்று. உங்கள் வலியின்குரல் உரக்கவும் பிறரது வலிகளுடன் அடையாளம் காண்பதாகவும் இருக்கிறது. வலியைப்பற்றிய உங்கள் புரிதல் என்னால் புரிந்ந்துகொள்ளக்கூடியதாகவும் சிந்திக்க வைப்பதாகவும் உள்ளது. நீங்கள் ஒரு தூயவரின் பாதையில் இருக்கிறீர்களா என்ன? ஆனால் அந்த இடம் அத்தனை தொலைவில் இல்லை என நம்புகிறேன்

ரெவெரெண்ட் சாமுவேல் அமிர்தம் அவர்களின் ஒரு பிரார்த்தனை என்னை வெகுவாகச் சிந்திக்கத் தூண்டியிருக்கிறது.புங்கள் அனுபவத்தைப்போல. ஒரு தூயவனின் வலி என்பது பலரை குணப்படுத்தக்கூடியதாகவும் ஆறுதல் அளிக்கக்கூடியதாகவும்  அமையக்கூடும்

தேவனாகிய ஏசுவே
உன் வலியுடன் நட்புகொள் என்கிறது  வேதம்
தீரத்துடன் சகித்துக்கொள் என்கிறான் நண்பன்
அதில் உள்ள நன்மையைப்பார் என்கிறார் போதகர்
மறந்துவிட்டு தைரியத்துடன் செயல்படு என்கிறார் உளஆலோசகர்
அதன் அகரவரிசையை அறிந்துகொள் என்கிறார் மருத்துவர்
அது வாழ்க்கையின் ஒருபகுதி,
விடுபடுபவர் எவருமே இல்லை என்பதறிவேன்
ஆனால் தேவனே,
அதை துயரமில்லாது அறியும் வழியேதுமுளதா என்ன?
நீயே அறிவாய். ஏனென்றால் நீ அதை சிலுவையில் தாங்கிக்கொண்டாய்
ஆமென்

அன்புடன்
காட்சன் சாமுவேல்
பாஸ்டர் ,மும்பை.

[தமிழாக்கம்]

அன்புள்ள காட்சன்,

இப்போது வலி குறைந்துவிட்டிருக்கிறது. ஆனால் நடக்க முடியாது. ஆகவே வீட்டில் இலக்கிய ஓய்வு. மழை இருக்கிறது. மழையில் குமரிமாவட்டம் கொள்ளும் பசுமையும் குளுமையும் இருக்கிறது. தல்ஸ்தோய் ஒரு கதை எழுதியிருக்கிறார். ‘நடனத்துக்குப்பின்’. அந்தக்கதையில் ஒரு முழுமையான கனவானை கதைசொல்லி காண்கிறான். அவர் கலைகளில் தேர்ந்தவர், மென்மையான உரையாடல் நிபுணர், நுண்ணிய நாசூக்குகள் கொண்டவர், அழகர். ஆனால் சிலநாட்கள் கழித்து ஓடிப்போன அடிமை ஒருவனை சேவகர் சாட்டையால் அடிப்பதை அவர் வேடிக்கை பார்ப்பதை கதைசொல்லி காண்கிறார். பிறன் வலியை உணராதவனுக்கு என்ன பண்பாடு இருக்க முடியும், அது ஒரு வேடம் மட்டுமெ என்ற உணர்வெழுச்சிக்கு அவர் ஆளாகிறார். இலக்கியத்துக்கு தல்ஸ்தோய் அளிக்கும் விளக்கமே இதுதான். நான் ஒரு அடிக்குறிப்பைச் சேர்ப்பேன். இலக்கியவாதி பிறன் வலியை உணர்பவன். ஆனால் ஏதோ ஒருவகையில் ஏதும் செய்யமுடியாதவனும்கூட– ஆகவே அவன் எழுதுகிறான். எழுதுபவர்கள் எவருமே தூயோர் அல்ல. அவர்கள் எழுதுவது அதற்குப் பதிலாகவே. புனித அல்போஸா கவிஞராகியிருந்தால் தூயவராகியிருக்கமாட்டார்
ஜெயமோகன்
அன்புள்ள ஜெயமோகன்

வலியின் தேவதை கட்டுரையைப்படித்து மனம் நெகிழ்ந்தேன். அல்போன்ஸா புனிதர் பட்டம் பெற்றதை ஒட்டி நிறைய கட்டுரைகளைப் படித்தேன். ஆனால் இந்த அளவுக்கு ஆன்மீகமான ஒரு கோணத்தில் அவரை எவரும் அறிமுகம் செய்யவில்லை. கிறித்தவ சர்ச் சார்ந்த ஒரு சம்பவமாக மட்டும்தான் நான் புனிதர் பட்ட நிகழ்ச்சியைக் கண்டேன். அதில் மதம் கடந்த ஒரு ஆன்மீக நோக்குக்கு இடமுள்ளது என்பதை அறிந்து மகிழ்ந்தேன்.

சுப்ரமணியம்
கோவை

முந்தைய கட்டுரைஇந்தியா:கடிதங்கள்
அடுத்த கட்டுரைகீதை, கடிதங்கள்