அன்பு ஜெயமோகன்,
1997ல் அகரம் வெளியிட்ட விஷ்ணுபுரம் நாவல் முதல் பதிப்பை வாசிப்புக்காகத் தந்துதவிய பு.மா.சரவணன் அண்ணாவுக்கு முதலில் என் நன்றி. அப்பதிப்பின் முன்னுரையிலிருந்து துவங்குகிறேன். மூன்று பக்கங்கள் மட்டுமே இடம்பெற்றிருக்கும் முன்னுரை உங்களின் பல்லாண்டுகால மனத்திகைப்புகளைத் தெளிவாகச் சொல்கிறது. “வீடு நிரந்தரமாக அந்நியமாயிற்று” எனும் வரியை வாசகர்களான நாங்கள் எளிதில் கடந்துவிடுவோம். ஆனால், அவ்வரியை எழுதும்போதான உங்கள் மனநிலை உன்மத்தமானது என்பதில் சந்தேகம் இருக்க முடியாது.
விடாமல் துரத்தும் படிமத்தைக் கவிமனநிலையிலேயே ஒரு எழுத்தாளன் கண்டுகொள்ள முடியும். பெருங்கனவுகளைக் கவிஞர்களே நமக்கு அறிமுகப்படுத்துகின்றனர். இளமையின் இலட்சியக்கனவுகள் எப்போதும் ஒரு புள்ளியை நோக்கி நம்மை நகர்த்துபவையாக இருக்கும். அதற்காகவே நம் வாழ்வை அர்ப்பணிக்கவும் தூண்டும். இலட்சியங்கள் பெரும்பாலும் பிறரால் நம்மீது திணிக்கப்படுபவை; இறுக்கமானவையும் கூட. பெரும்பாலும் நமக்குள் முகிழ்க்கும் கற்பனைகளே நம்மை இலகுவானவர்களாக்குகின்றன. கற்பனைகள் என்றதுமே அவை புனைவுலகம் சார்ந்தவை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. கற்பனைகளைப் புறவயமாகப் புரிந்துகொள்வதிலிருந்து விலகி அகவயத்தில் அவற்றைக் கொண்டாடுவது எளிதன்று. மேலும், சிறுவயதில் புனைவுலகில் இருந்ததால்தான் மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தோம் என்பதையும் மறந்துவிட வேண்டாம். கையில் வைத்திருக்கும் நாய் பொம்மையை நாயாகவே கருதியது போன்ற எளிய புனைவுகளிலிருந்து நாம் விடுபடத் துவங்கியபோதுதான் சிக்கல்கள் தோன்றின. இன்னும் சொல்லப்போனால் நம் முன்னோர்களின் வரலாறும் அழகிய புனைவுகளாகவே நமக்கு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன. புனைவு என்றாலே வெற்றுக்கற்பனை எனப் புரிந்து கொள்ளும் அவலம் நம்மிடையே இருக்கிறது. இருக்கின்ற அல்லது இருந்த ஒன்றைக் குறித்த உயர்வுநவிற்சியான கதையாடலையே புனைவாகச் சொல்லலாம்.
கூட்டமாய் இருக்கும்போது நம்மை ஆக்கிரமிக்கும் இலட்சியவாதக் குரல் தனிமையில் அமைதியாகி விடுவதை ஒவ்வொருவரும் உணர்ந்தே இருப்போம். கூட்டத்திலிருந்தாலும் நான் தனி என்பதைப் புரிந்து கொள்கிறவனின் வாழ்வு பிறழ்வுகளின் தொகுப்பைப் போன்றே இருக்கும். அவனுக்குள் எழும் கேள்விகள் அவனைத் துரத்தியபடியே இருக்கும். ஓடிக்கொண்டே இருக்கும் அவன் பதில்களைத் தேடித்தேடிச் சோர்வுறும் பொழுதொன்றில் திரும்பவும் அவனுக்கு சிறுவயதின் புனைவுலகம் கட்டாயமாக நினைவுக்கு வரும். புனைவுலகின் வழியாக மீண்டும் தன்னை மீட்டெடுத்துக் கொள்ள இலக்கியத்திற்குள்ளும், கலைகளுக்குள்ளும் நுழைகிறான். ஒவ்வொருவர் வாழ்விலும் ஒரு நிகழ்வு அல்லது குறியீடு அதற்கு அடிப்படையாய் அமையும். புரண்டு படுக்கும் ஆதிகேசவனைப் பற்றிய ஒரு குரல் உங்கள் வாழ்வில் அப்படியான இடத்தை வகித்திருக்கிறது. பலவிதமான அலைக்கழிப்புகளுக்குப் பிறகு “வேறு யாருக்காகவும் இல்லாவிடினும் எனக்காவது இதை எழுதிவிட வேண்டும்” எனும் முடிவுக்கு வருகிறீர்கள். என்னைப்பொறுத்தவரை அதுதான் விஷ்ணுபுரத்துக்கான முதல் நிலைக்கல்.
”வாழ்வைச் சித்தரிப்பதல்ல விஷ்ணுபுரம். அதன் அடிப்படைகளை ஆராய்வது” எனும் வாக்கியம் மிக முக்கியமானது. பொதுவாக நாவலுக்குச் சொல்லப்படும் இலக்கணம் எதுவுமில்லாப் பிரதி அது. ஒரு நாவல் எப்படி இருக்க வேண்டும் எனும் இலக்கணப்புத்தியில் உறைந்து போனவர்களால் ஒருபோதும் விஷ்ணுபுரத்திற்குள் நுழைய முடியாது. வாசிப்பவன் கொண்டிருக்கும் முன்தீர்மானங்களைத் தவிடுபொடியாக்கி அகத்தில் நிகழும் தத்துவக் கூச்சல்களைக் காட்சிகளாக விரித்துக் கொண்டே செல்லும் அதன் நடை பித்தின் உச்சம். காலங்களையும், நிகழ்வுகளையும் மாற்றி மாற்றிப்போட்டு தாண்டவமாடிய உங்கள் வாழ்வின் ஒரு பகுதியே விஷ்ணுபுரம். என்றாலும், அது எங்களைப் போன்றவர்களின் வாசிப்பாலேயே தன்னை நிறுவிக் கொள்கிறது.
முருகவேலன்,
படைவீடு பண்பாட்டு அறக்கட்டளை,
கோபிசெட்டிபாளையம்.